உலகத்தை வாரிச்சுருட்டி வாயில் போடும் முதலாளிகள்
சமீபத்தில் உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையானது ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், கோடீஸ்வர பணக்காரர்கள் மேலும் பெரும் கோடீஸ்வரர்களாகவும் உருவாகிய உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் வெறும் 0.001% பேர், அதாவது 59 ஆயிரத்து சொச்சம் பேர் நமது பூமியில் வாழும் சுமார் 50% மக்கள் வைத்திருக்கும் சொத்துபத்தை விட மூன்று மடங்கு அதிகமான பணத்தையும் சொத்தையும் குவித்து வைத்துள்ளார்கள்.
ஏழைகளுக்கும் கோடீஸ்வர பணக்காரர்களுக்கும் இடையிலான இந்த பொருளாதார இடைவெளியானது ஏணிப்படியில் அல்ல ஜெட் விமானத்தில் சென்றால் கூட எட்ட முடியாத அளவுக்கு உள்ளது.
அதிக வருமானம் ஈட்டும் (உழைத்துச் சம்பாதிப்பவர்கள் அல்ல, மக்களைச் சுரண்டி லாபம் பார்க்கும் கார்ப்பரேட் முதலாளிகள்) முதல் 10% பேர், இந்த உலகில் உள்ள பிற 90% மக்கள் அனைவரும் சேர்ந்து சம்பாதிப்பதை விட அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். அதே நேரத்தில் சாதாரணமாக மாத வருமானம், நாள் கூலி பெறக்கூடிய மக்கள், மொத்த உலக வருமானத்தில் 10%-க்கும் குறைவாகவே பெறுகிறார்கள்.
அதேபோல உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களாக உள்ள 10% பேர் இந்த உலகத்தில் உள்ள 75% சொத்தை வைத்துள்ளனர். அதே சமயம் மாத ஊதியம் வாங்கும் 50% நடுத்தர உயர் நடுத்தர மக்கள் வெறும் 2% சொத்தை மட்டுமே வைத்துள்ளனர்.
1% பணக்காரர்களிடம் 90 சதவிகித மக்களைவிட அதிகச் செல்வம்
அதாவது நாம் மகிழ்ச்சியாக நோய், நொடி, வறுமை இன்றி வாழ்வதற்கு தேவையான சொத்தை அந்த 59,000 சொச்சம் பேர் வாரிச் சுருட்டி வாயில் போட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
நம் நாட்டில் உள்ள அம்பானி, அதானி போல ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டிலும், முதல் 1% பணக்காரர்கள், அந்நாட்டின் 90% மக்களை விட அதிகச் செல்வத்தை குவித்து வைத்திருக்கிறார்கள்.
பாரிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸைச் சேர்ந்த ரிக்கார்டோ கோம்ஸ்-கரேரா, தாமஸ் பிக்கெட்டி ஆகிய பேராசிரியர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில் இவ்வாறு சொல்கிறார்கள். உலகம் முழுவதும் அதிகரித்துள்ள சமத்துவமின்மையின் விளைவாக, ஒரு சிறிய சிறுபான்மைக் குழு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக நிதி அதிகாரத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் அடிப்படையான, அத்தியாவசியப் பொருளாதாரப் பாதுகாப்பு கூட கிடைக்காத நிலையில் உள்ளனர்.
1995 இல் முதல் 0.001% பேர் உலகளாவிய செல்வத்தை வைத்திருந்த அளவானது 4% ஆக இருந்தது. அது இப்போது 6%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கோடீஸ்வரர்களின் செல்வம் 1990-களுக்குப் பிறகு ஆண்டுதோறும் சுமார் 8% என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது. இது மாத ஊதியம் வாங்குகிற நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கமாக உள்ள 50% மக்களின் வளர்ச்சியை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். இதற்கு காரணம் நவதாராள பொருளாதாரமும், அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக கொள்ளையடிப்பதும் தான்.
சமத்துவமின்மையில் இந்தியா மிக மோசம்
இந்தியா உலகின் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலைமை மாறவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் அதிக ஊதியம்/வருமானம் ஈட்டும் 10% பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் சுமார் 58% ஐப் பெறுகிறார்கள். அதேசமயம் மாத ஊதியம் வாங்குபவர்களில் 50% பேரின் மொத்த ஊதியம்/வருமானம் வெறும் 15% மட்டுமே.
சொத்துகள் வைத்துள்ள அளவை ஒப்பிட்டால் சமத்துவமின்மை இதைவிட அதிகமாக உள்ளது. மிகப்பெரிய இந்தியப் பணக்காரர்களான 10% பேர் மொத்த சொத்தில் சுமார் 65%-ஐ வைத்திருக்கிறார்கள். இதில், முதல் 1% பேர் மட்டுமே சுமார் 40% சொத்தை வைத்திருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஒரு முக்கிய விசயமாக சமத்துவமின்மையில் உலகிலேயே மோசமான நிலையில் இந்தியா உள்ளது என அந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
பெண்கள் ஆண்களை விட அதிகமாக உழைக்கிறார்கள், ஆனால் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். சம்பளம் வாங்காமல் செய்யும் வேலைகளான வீட்டு வேலை உள்ளிட்டவற்றை தவிர்த்து, பெண்கள் ஒரு மணி நேரம் செய்யும் வேலைக்கு ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தை விட குறைவாக சராசரியாக 61% மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஊதியம் இல்லாத உழைப்பையும் சேர்த்தால், அந்த எண்ணிக்கை வெறும் 32% ஆகவே உள்ளது.
அதேபோல தற்போது அதிகரித்து வரும் கால நிலை மாற்றத்தின் தாக்கத்திற்கு பசுமை இல்ல வாயுக்கள்வெளியேற்றம், புதைபடிவ எரிபொருள் பயன்பாடு ஆகியவை மிக முக்கியக் காரணமாக உள்ளது. இதனால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தில் சுமார் 77% வெளியேற்றத்திற்கு 10% சதவிகித கோடீஸ்வரர்களே காரணமாக உள்ளனர். வெறும் 3% கார்பன் வெளியேற்றத்திற்கு மட்டுமே 50 சதவிகித மக்கள் காரணமாக உள்ளனர்.
இத்தகைய பொருளாதார சமத்துவமியைச் சரி செய்ய வேண்டும். குறைந்த நபர்களிடம் அதிக செல்வம் சேருவதை தடுக்க அவேண்டும். “இது வெறும் நியாயத்தைப் பற்றியது மட்டுமல்ல, உலக நாடுகளில் பொருளாதார நெகிழ்ச்சி, முதலாளிகளுக்கு மட்டுமே அதிக சலுகைகள் கொடுக்காமல் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்திற்கும் ஜனநாயகத்தை உறுதி செய்யும் நிலைத்தன்மை மற்றும் நமது பூமியின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதது” என்று நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் என்ற பொருளாதார வல்லுநர் கூறியுள்ளார்.
செல்வம் செலுத்தும் அதிகாரம்
இது சாதாரண வார்த்தைகள் அல்ல. அரசும் புரட்சியும் நூலில் அரசு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவி என்ற தலைப்பில் தோழர் லெனின் இவ்வாறு சொல்கிறார். “ஐனநாயகக் குடியரசில் செல்வமானது மறைமுகமாய், ஆனால் முன்னிலும் உறுதியாக அதிகாரம் செலத்துகிறது”.
முதலாவதாக நேரடியாய் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலமும் இரண்டாவதாக ‘அரசாங்கத்தைப் பங்கு மார்க்கெட்டுடன் கூட்டு சேரச் செய்வதன்’ மூலமும் அது அதிகாரம் செலுத்துகிறது. எல்லா வகையான ஜனநாயகக் குடியரசுகளிலும் தற்போது ஏகாதிபத்தியமும் வங்கிகளுடைய ஆதிக்கமும், செல்வத்தின் வரம்பில்லா அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும் செயல்படுத்துவதற்குமான இவ்விரு வழிகளையும் தனிப் பெருங்கலையாய் வளரச் செய்துவிட்டன” என குறிப்பிடுகிறார்.
ஏழை எளிய நாடுகளுக்கு உதவி செய்ய வேண்டிய சர்வதேச நாணய நிதியம், ஆசியன் வங்கி போன்றவை பணக்கார நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு அவைகளுக்கு உதவுவதற்காக ஏழை எளிய நாடுகளைச் சுரண்டும் வேலையையே செய்கின்றன.
சமத்துவமின்மையைச் சரி சரிசெய்ய….
தற்போது இந்த உலக சமத்துவமின்மையை சரிசெய்ய வேண்டும் என்றால் பெரும் பில்லியனர்கள் மற்றும் செண்டிமில்லியனர்களுக்கு வரி விதிக்க வேண்டும். அதைத்தான் அந்த அறிக்கையும் சுட்டிக்காட்டுகிறது.
100,000-க்கும் குறைவான செண்டிமில்லியனர்கள் (Centi-millionaires) மற்றும் பில்லியனர்கள் மீது விதிக்கப்படும் 3% உலகளாவிய வரி மூலம் ஒரு வருடத்திற்கு 750 பில்லியன் டாலர்கள் திரட்ட முடியும். இது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த கல்வி வரவுசெலவுத் திட்டத்தை பூர்த்தி செய்யலாம். அதனால் அவர்கள் வாழ்க்கை வளம் பெரும்.
ஆனால் நிலைமை இதற்கு எதிராக உள்ளது. பணக்காரர்கள் மீதான வரிவிதிப்பு இந்தியா உட்பட உலகம் முழுவதும் குறைந்து வருகிறது. அவர்களுக்கு வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடி என அரசுகள் தாராளம் காட்டுகின்றன. அதே நேரத்தில் ஏழை எளிய மக்கள், உயர் நடுத்தர குடும்பத்தினருக்கு வருமான வரி விகிதங்கள் தொடர்ந்து உயர்கின்றன. சொல்லப்போனால் பெரும் பணக்கார்களை விட இவர்களே அதிக வரி செலுத்துகிறார்கள்.
இந்தச் சூழலில் தான் இந்தியா உள்ளிட்ட உலகளாவிய பெரும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மற்றும் வகையில் ஐடி துறை முதல் கிக் பிரிவு என இந்தியாவின் அனைத்து தொழிலாளிகளையும் சுரண்ட பாஜக அரசு தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றியுள்ளது.
– சேது சிவன்