அழிவை ஏற்படுத்துபவருக்கு அமைதிக்கான நோபல்!
2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசானது வெனிசுலா நாட்டை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு தான் நோபல் வேண்டும் என கேட்ட டிரம்புக்கு கிடைக்கவில்லை என நையாண்டி ஒரு புறமும் இரும்புப் பெண்மணி, போராளிக்கு நோபல் கொடுக்கப்பட்டது என மற்றொரு புறமும் பேசப்படுகிறது.
உண்மையில் இந்த நோபல் பரிசு அறிவிப்பானது ஒரு கேலிக்கூத்து. தனக்கு கிடைத்த நோபலை டிரம்ப்புக்கு மச்சாடோ அர்ப்பணித்துள்ளார். வரும் நாட்களில் நேரில் சென்று இவரே தன்கையால் அந்த பரிசை டிரம்ப்புக்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் வெனிசுலாவில் இடதுசாரிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பல்வேறு சதி வேலைகளில் அமெரிக்காவின் துணையுடன் கடந்த பல ஆண்டுகளாக செயல்படும் எஃகு தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த நபர் தான் மச்சாடோ.
தென்னமெரிக்க நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்களைச் சூறையாட வேண்டும் என பல ஆண்டுகளாக ஆட்சிக்கவிழ்ப்புகள், ஆக்கிரமிப்புகள், பொருளாதாரச் சுரண்டல்களை அமெரிக்க அரங்கேற்றி வருகிறது. இந்த திட்டங்களுக்கு தென்னமெரிக்காவில் அமெரிக்காவுக்கு விசுவாசமாக உள்ள இரு முக்கிய அடிமைகளில் ஒருவர் தற்போதைய அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலெய். மற்றொருவர் வெனிசுலா எதிர்க்கட்சித்தலைவராக உள்ள மரியா கொரினா மச்சாடோ.
சாவேஸ் ஆட்சியில் இருந்த போதிலிருந்தே இவர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் ஆதரவுடன் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு பல ஊடகங்கள் இரும்புப் பெண்மணி என பட்டம் கொடுப்பதுடன் வெனிசுலாவில் சர்வதிகார ஆட்சி நடப்பதாகவும் பொய்களை கட்டமைக்கின்றன.
மச்சாடோ இதயமற்ற, இரக்கமற்ற, அதிகார வெறியும் கொலைவெறியும் பிடித்த நபர் என்பதே எதார்த்தம்.
ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கப் பணம்
2000 இல் அலெஜாண்ட்ரோ பிளாஸ் என்பவருடன் மச்சாடோ ஒரு அவசரத் திட்டம் தீட்டி சுமேட் (Sumate) என்ற ஒரு என்ஜிஓ-வை துவங்கினார். இந்த அமைப்பின் ரகசியத் திட்டம் என்னவென்றால் ஆயுதங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டையே ஆயுதமாக பயன்படுத்தி தேர்தல் வழியில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதாகும். சாவேஸ் ஆட்சியின் போதே இந்த முயற்சில் அவர்கள் இறங்கினார்கள்.
இந்த முயற்சிக்கு அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியம் பல கோடி நிதி உதவி செய்தது. இந்த முயற்சியை கண்டறிந்த வெனிசுலா அதிகாரிகள் மச்சாடோ மீது தேசத்துரோக சதி வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்தச் சூழலில் மச்சோடாவை பாதுகாக்க, சாவேஸ் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாக உடனடியாக அமெரிக்கா கூவியது. இந்த குரலை தான் இன்றும் டிரம்ப், மதுரோவுக்கு எதிராகக் கூறி வருகிறார்.
2002 ஆம் ஆண்டு சில மணிநேரம் அவரால் சாவேஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்த சில மணி நேரத்திலேயே அந்நாட்டின் அரசில் அமைப்பை சிதைத்து மச்சாடோ கையெழுத்து போட்டார். அது மட்டுமல்ல, மக்களின் சொத்துக்களாக இருந்து அவர்களுக்கு வேலை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாத்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒரே இரவில் கலைத்த கார்மோனா ஆணையில் கையெழுத்து போட்டார்.
வலதுசாரிகளுடன் உறவு
2020 ஆம் ஆண்டு மச்சாடோ தனது வெண்டே வெனிசுலா கட்சி சார்பில் இஸ்ரேலின் தீவிர வலதுசாரி கட்சியான நேதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் ஒரு அதிகாரப்பூர்வ கூட்டணியையும் ஒப்பந்தத்தையும் உருவாக்கினார்.
இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை அப்படியே தங்கள் நாட்டின் அமல்படுத்துவதுதான். அவர்களின் சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் உதவி செய்வது தான் இவரது அடிப்படைக் கொள்கை. லிகுட் கட்சியானது இனப்படுகொலையை தீவிரமாக ஆதரிக்கும் கட்சி. அவர்களுடன் கைகோர்த்தது மட்டுமல்ல, அவர்களது இனப்படுகொலைக்கு தனது ஆதரவையும் கொடுத்த கொடூரமான சிந்தனை கொண்டவர்தான் இவர். தான் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலுடனான உறவை மீட்டெடுப்பேன் என்றும், வெனிசுலா தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகருக்கு மாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
2024 பிப்ரவரி மாதம் ஸ்பெயினின் மான்ட்ரிட் நகரில் தங்களை “ஐரோப்பாவிற்கான தேசபக்தர்கள்” எனக் கூறிக்கொண்டுள்ள ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் இணைந்து ஒரு கூட்டத்தை நடத்தின. இதில் மச்சாடோவும் இஸ்ரேலின் லிகுட் கட்சியும் பங்கேற்றன.இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் தீவிர இஸ்லாமிய, சீன, புலம்பெயர்ந்தோர் மீதானா வெறுப்புப் பிரச்சாரத்தையும், வன்முறையையும் கட்டமைத்து வருகின்றவர்கள். இவர்களோடு ஓரணியில், ஒரே சிந்தனையில் வன்முறைகளுக்கு ஆதரவாக இணைந்து நின்றவர் மச்சாடோ.

சொந்த மக்களுக்கு எதிரானவர்
வெனிசுலாவில் வறுமை மற்றும் ஒடுக்கு முறையால் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வறுமைக்கு காரணம் அமெரிக்கா வெனிசுலாவின் மீதும் அந்நாட்டின் பிரதான தொழிலான எண்ணெய் நிறுவனங்களின் மீதும் விதித்த தடை தான். இந்த தடைகள் அனைத்தும் அந்நாட்டில் வறுமையை உருவாக்கி மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்ப வேண்டும் என்ற திட்டத்தின் பின்னணியில் போடப்பட்டவை.
இந்தத் தடைகள் அனைத்தையும் மகிழ்ச்சியாக வரவேற்று மேலும் தடைகள் கேட்கும் வெனிசுலாவை சேர்ந்த ஒரு நபர் இருப்பாரேயானால் அது மச்சாடோ மட்டுமே. அவர் வெனிசுலாவை “முழுமையான நிதி முடக்கம்” செய்ய வேண்டும் என அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்தார்.
அது மட்டுமல்ல இந்த வறுமை காரணமாக வெனிசுலா மக்கள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்வதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா?
மதுரோ அரசு தான் மேற்குலக நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க, பலவீனப்படுத்த திட்டமிட்டு இவ்வாறு சதி செய்கிறது எனச் சொல்லி மிக கேவலமான முறையில் ஸ்பெயினில் தான் பங்கேற்ற கூடத்தில் பிரச்சாரம் செய்தார்.
வெனிசுலாவை அழிக்க அழைப்பு

2018 இல் மச்சாடோ இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் சொன்னது என்ன தெரியுமா? உங்கள் அதிகாரத்தின் மூலமாக வெனிசுலாவில் தலையீடு செய்ய வேண்டும் என கேட்டார். அதாவது அந்த இனப்படுகொலையாளர்கள் வெனிசுலா மீது போர் தொடுத்து ஆட்சி மாற்றத்திற்கு உதவ வேண்டும் என எழுதினார். இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்காவும் தனது சொந்த நாட்டை ஆக்கிரமிக்க வேண்டும் என கேட்டவர்.
கடந்த வெனிசுலா தேர்தலில் மதுரோ வெற்றி பெற்ற பிறகு மச்சாடோவின் தொலைபேசி உரையாடல் ஒன்று கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் மதுரோவை ஆட்சியில் இருந்து அகற்ற மச்சாடோவுக்கு உதவ விரும்புவதாக அமெரிக்க அரசு கூறியதாக அவர் தெரிவித்தார்.
தற்போது வெனிசுலா அரசு போதைப்பொருளை கடத்துவதாக ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்நாட்டின் கடல் எல்லையில் தனது ராணுவக் கப்பல்களை நிறுத்தி வெனிசுலா கப்பல்கள் மீது குண்டு வீசி வருகிறது அமெரிக்கா. இந்த தாக்குதலில் மீனவர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர் என வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கையை வரவேற்றவரும் மச்சாடோ தான்.
இந்த நடவடிக்கைகள் தன் மக்களை கொன்று குவிக்கும் என தெரிந்துமே இவற்றையெல்லாம் அவர் வரவேற்கிறார். இப்படி அழிவுகளை தன் மக்களுக்கு கொடுப்பவருக்குத்தான் அமைதிக்கான விருது கொடுத்து நோபல் கமிட்டியும், உண்மைக்கு மாறாக அவரை புகழ்ந்து எழுத்து ஊடகங்களும் உண்மையான அமைதியை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளன.
வலதுசாரிகளின் திட்டம்
பொதுவாக அமைதிக்கான நோபல் “பரிசு” என்பது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நபர்களுக்கும் தீவிர இடதுசாரி எதிர்ப்பாளர்களுக்குமே காலங்காலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இதே நடைமுறையைத்தான் நோபல் கமிட்டி பின்பற்றியுள்ளது.
அதுமட்டுமல்ல தற்போது வெனிசுலா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தீவிரமாகச் செயல்படும் அமெரிக்கா தனது சதித்திட்டத்திற்கும், சர்வதேச அளவில் தீவிர வலதுசாரிகளுக்கும் உற்சாகமூட்டும் வகையிலும் குறிப்பாக வெனிசுலாவில் மதுரோ தலைமையிலான ஆட்சி ஒரு சர்வதிகார ஆட்சி என உலகளவில் அனைவரையும் நம்ப வைத்து தீவிர வலதுசாரியாகவும், இடதுசாரி எதிர்ப்பாளராகவும் உள்ள மச்சாடோவுக்கு ஆதரவை அதிகரிக்கவும் திட்டமிட்டே நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசயத்தில் நோபல் கமிட்டியின் அறிவிப்பு மிக அபத்தமானது. மச்சாடோவுக்கு பரிசு அறிவித்த அவர்கள் வெளியிட்ட ட்விட்டர் எக்ஸ்தள குறிப்பில் மச்சாடோ, வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகளாக உழைத்துள்ளார். வெனிசுலாவில் மக்கள் மீது ஒடுக்குமுறை நடக்கிறது, சுதந்திர ஊடகங்கள் மௌனமாக்கப்படுகின்றன, விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அமெரிக்காவின் ஆட்சிக்கவிழ்ப்பு அரசியலுக்கு ஆதரவான குரலையே எதிரொலித்துள்ளது.
உண்மையில் மச்சாடோவின் அரசியல் வன்முறையில் ஊறியது. பிரிவினை வாதத்தை ஊக்குவிப்பது, வெனிசுலாவின் இறையாண்மையையும் அம்மக்களின் கண்ணியமான வாழ்க்கையையும் அழிக்கும் திட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. தன் சொந்த நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்க வேண்டும் என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
இப்படிப்பட்ட நபருக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. வலது சாரிகளின் கொள்கைப்படி அனைவருக்கும் நல்வாழ்வு கொடுப்பதற்கு பதிலாக குண்டுகளை வீசியும், வறுமையை உருவாக்கியும் ஏழை எளிய மக்களை சாவில் தள்ளி மவுனமாக்குவதே அமைதி. அந்த அமைதியை வெனிசுலாவில் ஏற்ப்படுத்தவே மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு.
– சேது சிவன்