பொதுமக்களை தாக்கும் வனவிலங்குகளை சுட்டுக்கொல்ல அவசர சட்டம் கேரள அமைச்சரவை ஒப்புதல்
குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை தாக்கிகொலை செய்யும் அல்லது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற எந்தவொரு காட்டு விலங்கையும் சுட்டுக்கொல்ல அனுமதி தரும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தலைமை வனவிலங்கு காப்பாளருக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான வனவிலங்கு பாதுகாப்பு (திருத்தம்) மசோதா 2025 என்ற (The draft legislation, Wildlife Protection (Amendment) Bill 2025,) இந்த வரைவு சட்டமானது, 1972-இன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மனிதர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என பாராப்பட்டு வருகிறது.
கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கூறுகையில், தற்போது ஒன்றிய அரசின் சட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளால் (SOPs) நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் தற்போது கொண்டுவரப்படுள்ள மசோதாவின் விதிகளானது அத்தகைய நடைமுறைகளை அகற்றும். மேலும் ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மனித உயிர்களை சமரசம் செய்யாமல், அவசர காலங்களில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள அது உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த வரைவு மசோதா திங்கள்கிழமை துவங்க உள்ள கேரள மாநில சட்டமன்ற அமர்வில் விவாதத்திற்கு வர உள்ளது.
மசோதா சொல்வதென்ன ?
வரைவு மசோதாவின்படி, ஒரு நபர் காட்டு விலங்கின் தாக்குதலால் கடுமையான காயமடைந்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை வனப் பாதுகாவலர் சம்பவம் குறித்து தலைமை வனவிலங்கு காப்பாளருக்குத் தெரிவிக்கலாம். அதன் பிறகு, தலைமை வனவிலங்கு காப்பாளருக்கு, நடைமுறை தாமதங்களால் பாதிக்கப்படாமல், விலங்கைக் கொல்வது உட்பட உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.
மேலும், இரண்டாம் அட்டவணையில் உள்ள காட்டு விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்பாடில்லாமல் அதிகரித்தால், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது போன்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவும், அவை நோய்களை பரப்பும் பட்சத்தில் “நோய்கள் பரப்பும் விலங்கு” (vermin) என அறிவிக்கவும் மாநில அரசுக்கு இந்த வரைவு மசோதா அதிகாரம் அளிக்கிறது. (இந்த அதிகாரம் தற்போது ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது)
மசோதாவின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு இனி ஒன்றிய அரசின் முன் அனுமதி கேட்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காட்டுப் பன்றியை “நோய் பரப்பும் விலங்கு” என அறிவிக்க வேண்டும் என கேரள அரசு பலமுறை ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் சட்டம் என்ன சொல்கிறது?
ஒன்றிய அரசின் சட்டத்தின் பிரிவு 11(1)(a)-ன் கீழ், ஆபத்தான காட்டு விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன், அதை உயிருடன் பிடிக்கவோ, மயக்க ஊசி செலுத்தவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ முடியாது என்பதை தலைமை வனவிலங்கு காப்பாளர் உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த முடிவுகளுக்கான காரணங்கள் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், பிடிக்கப்பட்ட எந்தவொரு காட்டு விலங்கையும் சிறைப்பிடித்து வைக்கவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது. இதேபோல், முதல் அட்டவணையில் உள்ள ஒரு காட்டு விலங்கை, மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த பின்னரே, கடைசி முயற்சியாகக் கொல்லலாம்.
மத்திய அரசு விதித்துள்ள இத்தகைய நடைமுறைக்கு சாத்தியமில்லாத முக்கிய விதிகள், அவசர காலங்களில் கூட ஆபத்தான காட்டு விலங்கைக் கொல்வதைத் தடுக்கின்றன.
இந்த விதிகளால் ஏற்படும் சவால்களுக்கு மகாராஷ்டிராவில் நடந்த ‘அவ்னி’ என்ற பெண் புலியின் வழக்கு ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது என்று கேரள அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 2018 இல், 13 பேரைக் கொன்றதாக ஒரு பெண் புலியைக் கண்டதும் சுட மகாராஷ்டிரா தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும், நாக்பூரில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றக் கிளை, ‘அவ்னி’ ஒரு நரமாமிச உண்ணி என்பதை நிரூபிக்க விரிவான ஆதாரங்களைக் கோரியது. அந்த வழக்கின் சட்ட நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.
இத்தகைய சூழலில் தான் கேரளா கொண்டு வந்துள்ள இந்த மசோதா, நடைமுறைக்கு ஒவ்வாத சட்டத் தடைகளை நீக்கும் வகையிலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவானது அவசர காலங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும், அதே நேரத்தில் முக்கிய வனவிலங்கு இனங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்” என்று வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறியுள்ளார்.