அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் படுகொலை-விஜய் பிரசாத்
அமெரிக்கா நடத்தும் போர்களால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் படுகொலையாவது போலவே பிற நாடுகள் மீது அமெரிக்கா விதிக்கும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளால் ஆண்டு தோறும் 5 லட்சம் மக்கள் பலியாகி வருகிறார்கள் என ‘தி லான்செட்’ (The Lancet) மருத்துவ இதழில் வெளியான ஆய்வு ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
போர் நடக்காத, பொருளாதாரத் தடைகளால் மூச்சுத்திணறும் நாடுகளில் வாழாதவர்களுக்கு தங்களைச் சுற்றி நடக்கும் எதுவும் விசித்திரமானதாகத் தெரிவதில்லை. போர்களைப் பற்றிப் படிக்கும்போது, அவை நம் வாழ்விலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகவே தான் உணர்கிறோம். ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் துயரங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்பதற்கு கூட பலரும் விரும்புவதில்லை.
வெடிகுண்டுகளும், வங்கிகளின் கடனும் இந்த உலகத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும்போது, கல்வியாளர்களின் நுட்பமான ஆய்வுகளும், ராஜதந்திரிகளின் மெல்லிய குரல்களும் கேட்காமல் போகின்றன.
ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு – வரலாற்றின் கருப்பு பக்கம்
1945 ஆகஸ்ட் 6 அன்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் ஜப்பானின் ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச ஒப்புதல் கொடுத்த பிறகு, வானொலியில் இவ்வாறு அறிவித்தார், “ஜப்பானியர்கள் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கவில்லையென்றால், இதற்கு முன் இந்த உலகத்தில் அவர்கள் வானத்தில் பார்க்காத அழிவின் (குண்டு) மழையை இனி எதிர்பார்க்கலாம்” என்றார்.
ஹிரோஷிமா ஒரு ராணுவத் தளம் என்று பொய் சொல்லி ‘லிட்டில் பாய்’ என்ற கொடூரமான அணுகுண்டை வீசி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் அதனை நியாயப்படுத்தினார். ஆனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலையானதைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. அணுகுண்டு வீச்சுக்குப் பিறகு வீசிய கதிர்வீச்சு விஷத்தன்மையின் மிகக் கடுமையான விளைவுகள் பெருமளவு குறைந்த பிறகு, 1945 டிசம்பர் மாத இறுதியில் தான் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,40,000 என்று ஹிரோஷிமா நகர அதिகாரிகளால் மதிப்பிடப்பட்டது. அந்த நேரத்தில் ஹிரோஷிமாவின் மொத்த மக்கள் தொகையே 3,50,000 தான். அதாவது குண்டு வீசப்பட்ட ஐந்தே மாதத்தில் அந்நகரின் 40 சதவீத மக்கள் பலியாகிவிட்டனர்.
தி லான்செட் ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் மிக முக்கியமான இதழ்களில் ஒன்றான ‘தி லான்செட்டில்’ ஃபிரான்சிஸ்கோ ரோட்ரிகஸ், சில்வியோ ரெண்டன் மற்றும் மார்க் வெயிஸ்ப்ரோட் ஆகியோர் ‘சர்வதேசத் தடைகள் குறிப்பிட்ட வயது பிரிவினரின் இறப்பு விகிதத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள்: ஒரு பன்முகத் தேசிய தரவு பகுப்பாய்வு’ என்ற அறிவியல் பூர்வமான தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தனர். இந்தக் கட்டுரையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. (UN) விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தடைகளின் உண்மை முகம்
இந்த நடவடிக்கையை ‘சர்வதேசத் தடைகள்’ என்று சொன்னால் கூட இவை உண்மையில் சர்வதேச தன்மைக் கொண்டவை அல்ல. ஐ.நா. சாசனத்தின் ஐந்தாவது அத்தியாயம், இத்தடை நடவடிக்கைகள் ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் மூலம் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இது பின்பற்றப்படுவதில்லை. அதற்கு மாறாக, சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளான அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், மனித நாகரிகத்தின் எல்லைகளை எல்லாம் மீறி, சட்டவிரோதமான, ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை பிற நாடுகளின் மீது விதிக்கின்றனர்.
சர்வதேச தடைகள் குறித்தான தரவுகள் இணைய பக்கத்தின் (Global Sanctions Database) படி, உலகில் உள்ள மொத்த நாடுகளில் 25 சதவீத நாடுகளின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால் அமெரிக்கா மட்டும் ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒருதலைப்பட்சமாக உலகம் முழுவதும் 40 சதவீத நாடுகளின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
1960களில், உலகில் 8 சதவீத நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மிக அதிக நாடுகளின் மீது விதிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் 1919-இல் லீக் ஆஃப் நேஷன்ஸ் உருவானபோது “பொருளாதாரத் தடைகள் போரை விடவும் பயங்கரமானவை” என குறிப்பிட்டதைப் போல, நேட்டோ ராணுவக் கூட்டணி உலக நாடுகளின் மீது குண்டு வீசாமல் (பொருளாதார) போர் தொடுப்பதை வழக்கமாக்கிவிட்டதைக் காட்டுவதின் வெளிப்பாடாகும்.
இராக்கில் பொருளாதாரத் தடைகளின் கொடூரம்
சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான மையத்தின் (Centre for Economic and Social Rights) நிபுணர் குழு ஈராக்கிற்குச் சென்று சில தரவுகளை ஆய்வு செய்து பார்த்த போது, ஈராக் மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக 1990 முதல் 1996 வரை, ‘ஐந்து வயதுக்குட்பட்ட 5,00,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்’ பலியாகி இருக்கும் அதிர்ச்சியான உண்மை வெளி வந்தது. இது ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகள் மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.
ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதரின் பதில்
சிபிஎஸ் தொலைக்காட்சியின் ’60 நிமிட’ நிகழ்ச்சியில், பத்திரிகையாளர் லெஸ்லி ஸ்டால், ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் ஆல்பிரைட்டிடம் இந்த ஆய்வு குறித்து ஒரு நேர்மையான கேள்வி எழுப்பினார்.
கேள்வி: ‘ஐந்து லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இது ஹிரோஷிமாவில் இறந்த குழந்தைகளை விட அதிகம். இந்த இழப்பு நியாயமானது தானா?’
ஆல்பிரைட் அந்த அறிக்கையைப் படிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றோ அல்லது சதாம் உசேனின் கொள்கைகள் மீது பழியைப் போட்டு போயிருக்கலாம். ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா?
“இது ஒரு கடினமான தேர்வுதான், ஆனால் இந்த இழப்பு நியாயமானது என்று நாங்கள் நினைக்கிறோம்” என்று ஒரு பதிலை கொடுத்தார்.
இன்னும் தெளிவாகச் சொன்னால், சதாம் உசேன் தலைமையிலான இராக் அரசாங்கத்தை கவிழ்க்க செய்ய ஐந்து லட்சம் குழந்தைகளைக் கொன்றது நியாயமானது என்று தான் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்தத் தடைகளால் சதாம் உசேன் அரசாங்கம் கவிழ்க்கப்படவில்லை. மாறாக, மக்கள் தான் மேலும் ஏழு ஆண்டுகளுக்கு துன்பப்பட்டனர். அதன் பிறகு நடந்த மரணங்கள் குறித்து ஒப்பிடக்கூடிய வகையிலான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் ஒப்புதல் இல்லாமல் இராக் மீது அமெரிக்கா சட்டவிரோதமாக நடத்திய மிகப்பெரிய போர் தான் இறுதியாக சதாம் உசேன் அரசாங்கத்தைக் கவிழ்த்தது.
வெனிசுலா மீதான தடைகள்
பொருளாதாரத் தடைகள் மூலம் பிற நாட்டை முடக்கும் நாடுகளுக்கு, தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நன்கு தெரியும். ஆல்பிரைட் பேட்டியில் சொன்ன தனது கருத்து ‘முட்டாள்தனமானது’ என்று பின்பு ஒருமுறை சொன்னார். ஆனால் அந்தக் கொள்கை தவறு என்று சொல்லவே இல்லை.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து தங்கள் மக்களை பாதுகாக்க வெனிசுலா போராடி வருகின்றது. வெனிசுலா மீதான தடைகள் காரணமாக 2017 ஜனவரி முதல் 2024 டிசம்பருக்கு இடையே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 213 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டது. அதாவது மொத்தம் 226 பில்லியன் டாலர்கள், அப்படியென்றால் நாளொன்றுக்கு 77 மில்லியன் டாலர்களை பொருளாதார தடைகளால் அந்த நாடு இழந்துள்ளது.
2019 இல், அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் மாட் லீ, அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் போம்பியோவிடம் வெனிசுலா மீது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் குறித்து கேள்வி கேட்டபோது, அவர், ‘எந்த விஷயமும் வேகமாக நடந்திருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதுமே விரும்புகிறோம். நெருக்கடி மேலும் அதிகரித்து வருகிறது. மனிதாபிமான நெருக்கடி ஒவ்வொரு மணி நேரமும் அதிகரிக்கிறது. வெனிசுலா மக்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் வலியையும் நீங்கள் பார்க்க முடியும்’ என்று பதிலளித்தார். போம்பியோவின் இந்தக் கருத்து உண்மையானது தான். சட்டவிரோதமான பொருளாதாரத் தடைகள் வலியையும் துன்பத்தையும் உருவாக்குகின்றன.
லான்செட் கட்டுரை முக்கிய புள்ளிவிவரங்கள்:
- 1971 முதல் 2021 வரை, ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள் ஒவ்வொரு ஆண்டும் 5,64,258 நபர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளது.
- பொருளாதாரத் தடைகளால் பலியாகும் மக்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் போரில் நேரடியாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையான 1,06,000-ஐ விட அதிகமாகும். அதே நேரத்தில் இப்போர்களால் ஏற்படும் பொதுமக்களின் மரணங்களையும் சேர்த்தால் 5 லட்சமாக இருக்கும். இந்த எண்ணிக்கையானது பொருளாதார தடைகளால் பலியாகும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக உள்ளது.
- ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தான் பொருளாதார தடைகளால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களாக உள்ளனர். 1970 முதல் 2021 வரை பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அளவு 51 சதவீதமாக இருந்துள்ளது.
- அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகள், ஐ.நா. தடைகளை விட மிகவும் ஆபத்தானவை. ஐ.நா. தடைகளை விட ‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் பொருளாதாரத் தடைகளே அதிக மக்கள் பலியாவதற்கு காரணமாக உள்ளது’.
- இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எந்த நாட்டைக் குறிவைத்து பொருளாதார தடைகளை விதிக்கின்றனவோ அந்நாட்டு மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
- சர்வதேச வங்கி பரிவர்த்தனைகளிலும், உலக நாடுகளின் கையிருப்பு நாணயங்களாகவும் அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக அமெரிக்காவின் தடைகள் அந்நிய நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இதனால் தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- ‘பொருளாதார தடைகளின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுகள் ஆக ஆக அதிகரித்து, நீண்ட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் அது உயிரிழப்புகளை மேலும் அதிகப்படுத்துகின்றன’ என இந்த பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
- “உரிமைகள்” அடிப்படையில் பார்க்கும்போது, இந்தக் கண்டுபிடிப்புகளின் படி, பொருளாதாரத் தடைகளால் மக்கள் பலியாகிறார்கள் என்ற ஆதாரமே அத்தடைகளை நிறுத்துவதற்கு போதுமான காரணமாக இருக்க வேண்டும்’ என்று அந்த ஆய்வு முடிவு செய்கிறது.
பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 31 ஆவது செய்தி மடல்