Tamil Marx

இளைஞர்களும் இடதுசாரிகளும்

மற்றவர்களின் வலிகளை புரிந்து கொள்ள கம்யூனிசம் கற்றுக்கொடுத்து-உமா மகேஸ்வரி 

மற்றவர்களின் வலிகளை புரிந்து கொள்ள கம்யூனிசம் கற்றுக்கொடுத்து-உமா மகேஸ்வரி 
  • PublishedMarch 21, 2025

வணக்கம், என் பெயர் உமா மகேஸ்வரி

நான் நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவள். மலைப்பகுதிக்கு அருகாமை கிராமம். இங்கு மூட நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் அதிகம்.

தமிழ் சமூகத்தில் ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுவாளோ அப்படியே சிறப்பாக வளர்க்கப்பட்டேன். ஆகையால் எனக்கு சமூக விழிப்புணர்வோ அரசியல் அறிவோ எதுவும் சுத்தமாக அப்பொழுது இல்லை.

பள்ளிப்படிப்பை மிக சிறப்பாக படித்து முடித்தேன். மற்றவர்கள் பிரச்சனை எதிலும் மூக்கை நுழைக்காமல், நான் உண்டு என் வேலை உண்டு என்று தான் இருந்தேன். பள்ளிப் படிப்பு முடித்த பின்பு தான் உணர்ந்தேன் பாடப் புத்தகங்களை நன்றாக படிப்பது மட்டுமே சமூகத்தில் ஒரு நல்ல மனிதனை உருவாக்கி விடாது . புத்தகங்களை தாண்டியும் ஒரு சில விஷயங்கள் தேவை என்று.

நான் பள்ளி முடித்து கோயம்புத்தூரில் சட்ட கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் ஊரில் இருந்து கோயமுத்தூர் தொலைவு என்பதாலோ என்னவோ மூடநம்பிக்கைகளும் தொலைவாய் போகும் சூழல் உருவானது.

கோவைக்கு சென்ற பிறகு ஒரு தோழரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தோழரின் மூலமாகத்தான் எனக்கு கம்யூனிசம் என்பதன் அறிமுகமே கிடைத்தது. அறிமுக மட்டுமல்லாது அதனுடைய பல கொள்கைகளையும் கோணங்களையும் எனக்கு கற்றுத் தந்தார். அவர் இல்லாவிட்டால் எனக்கு கம்யூனிசம் பற்றி எதுவுமே தெரியாது.

நான் கல்லூரி முடிந்ததும் மாலை நேரங்களில் பகுதி நேரமாக ஒரு கடையில் வேலை செய்கிறேன். எனக்காக நான் உழைப்பதே எனக்கு கடினமாக இருக்கும். மற்றவர்களுக்காக உழைக்கும் இந்த இடதுசாரி தோழர்களை பார்க்கும்பொழுது, அவர்களின் தியாகம் எவ்வளவு பெரியது.

நான் சட்டம் பயில்கிறேன். எங்களுடைய கல்லூரியின் நுழைவாயிலில் “”சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்””.என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் சட்டம் அவர்களை சமமாக கருதுகிறதோ இல்லையோ ?

அவர்களை கம்யூனிசம் சமமாக கருதுகிறது.

பிறகு அந்தத் தோழர் உடனான சில பயணங்கள் பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தது. நானாகவும் கற்றுக்கொள்ள முற்பட்டேன். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் நாம் ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படும் வரை அந்தப் பிரச்சினை எவ்வாறு மற்றவர்களை பாதித்திருக்க கூடும் என்பதை நாம் அறிய வாய்ப்பே இல்லை.

மற்றவர்களின் பிரச்சனைகளையும் வலிகளையும் எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்ததே கம்யூனிசம் தான்.

இப்பொழுது நான் பல போராட்டங்களுக்கு செல்கிறேன். பலருக்கு ஆறுதல் சொல்கிறேன். பலருடைய பிரச்சனையில் உடன் நிற்கிறேன். எங்கள் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன்.

இடதுசாரி அரசியலை பிடிக்க சில காரணங்களை சொல்கிறேன்.

இன்று மனிதர்களிடையே வேறுபாடுகளை கற்பிக்கக் கூடிய சாதி மதம் இனம் மொழி பாலினம் இவை எதுவுமே கம்யூனிசத்தில் இல்லை. ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகம்.

வர்க்க விடுதலையில் தான் இந்த சமூகத்தில் விடுதலை இருக்கிறது என மார்க்சியம் வழிகாட்டுகின்றது. இதற்கு இணங்க பாலின சமத்துவ நடை, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம், சர்வதேச உழைக்கும் மகளிர் தினம், சிவப்பு புத்தக தினம். இவையெல்லாம் ஒரு பெண்ணாக எனக்கு கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு கொள்ள காரணம்.

மேலும் மற்ற எந்த கட்சிகளும் செய்யாத ஒரு விஷயம் , மாணவர்களை அரசியல்படுத்துவதை முழுக்க முழுக்க முன்னெடுப்பது இடதுசாரி கட்சிகள் மட்டுமே. மாணவர்களை அரசியல் ரீதியாகவும் போராட்ட ரீதியாகவும் வளர்த்தெடுப்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு இணை கம்யூனிஸ்டுகளே.மேலும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே.

எனக்குள் ஒரு கேள்வி எழும், இந்திய மாணவர் சங்கம் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் கூட ஒரு போராட்டத்தை மேற்கொள்வர். இந்த போராட்டங்கள் எல்லாம் அந்த அளவுக்கு களத்தில் பேசப்படுவதில்லையே ஏன் என்ற கேள்வி எனக்குள் எப்பொழுதும் இருக்கும்.

அதன் பிறகு நான் பல போராட்டங்களில் கலந்து கொண்டேன். அப்போது தான் மாணவர்களிடையே ஒருங்கிணைப்பையும் போராட்ட குணத்தை வளர்தத்தெடுப்பதற்காகவே இந்த சிறு சிறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன்.

அடித்தட்டு மக்களிடையே பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காத பிரச்சனைகளுக்கு கூட சட்டப் போராட்டத்தின் மூலம் அவர்களுக்கு தீர்வை வாங்கி கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் இந்த எதிர்கால போராட்டத்தில் நானும் இடதுசாரி அமைப்புகளோடு சேர்ந்து பயணிப்பேன்.

 

தோழர் உமா மகேஸ்வரி

கோவை சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *