Tamil Marx

உக்ரைன்-ரஷ்யா போர் சர்வதேசம்

அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்புத் துறையும் உக்ரைன் கனிம வளக்கொள்ளையும்

அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்புத் துறையும்  உக்ரைன் கனிம வளக்கொள்ளையும்
  • PublishedFebruary 18, 2025

அமெரிக்கா தனது சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவனம் (USAID) மூலம் பல நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. ஆனால், தற்போது இந்த உதவி நிறுத்தப்பட்டுள்ளது.. உக்ரைன் நாட்டில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆயுத உதவி வழங்கியதற்கு பிரதிபலனாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்கா கோரியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

ஜனவரி 20 அன்று, அமெரிக்க ஜனாதிபதி சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவனம்  மூலம் வழங்கப்படும் உதவியை நிறுத்த உத்தரவிட்டார். இதன் பிறகு, ஜனவரி 25 அன்று வங்கதேசத்தில் இந்த நிதியுதவியின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நிறுத்த அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 2023 ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்கா சுமார் 72 பில்லியன் டாலர்களை சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவனத்துக்கு ஒதுக்கியது. இதில் இருந்து வங்கதேசத்திற்கு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கப்பட்டது. உணவுப் பாதுகாப்பு, உள்நாட்டு கல்வித் துறை மேம்பாடு, பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வங்கதேசம் இந்த நிதியையே நம்பியுள்ளது. இந்த உதவி நிறுத்தப்பட்டதால், அந்நாட்டில் உள்நாட்டு நெருக்கடி தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி நிறுத்தப்பட்ட பிறகு, நிதி உதவி பெற்று வந்த பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ள உள்ளன. அமெரிக்க நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் நாட்டில் பல திட்டங்கள் முடங்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், நிதி நிறுத்தப்பட்டதால் தடைபட்டுள்ள திட்டங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இடதுசாரி ஆட்சிகளைக் கவிழ்க்க  

USAID சோவியத்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பனிப்போர் காலத்தில், 1961 இல் தொடங்கப்பட்டது. ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளில் சோவியத் கம்யூனிஸ்ட் அரசு ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுக்க ஜான் எஃப் கென்னடி ஜனாதிபதியாக இருந்தபோது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதன்மையான வேலை, அமெரிக்காவிற்கு ஆதரவாக இல்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகள் மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஆதரவு ஆட்சியை நிறுவுவதுதான். அதாவது அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சிகளை கலைக்கும் ஆட்சிக்கவிழ்புத் துறையாக செயல்படுகின்றது

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவனத்தை அமெரிக்கா பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி, கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஜார்ஜியா, உக்ரைன் போன்ற முன்னாள் சோவியத் நாடுகளில் ஆட்சியை கவிழ்க்கவும் இவ்வமைப்பை அமெரிக்கா பயன்படுத்தியது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இந்த அமெரிக்க நிறுவனம்  மூலம் நிதி உதவி பெறும் ஜுவான் குவைடோ, லியோபோல்டோ லோபஸ் மற்றும் ஹென்ரிக் கேப்ரைல்ஸ் போன்ற அமெரிக்க ஆதரவுடைய வெனிசுலா நாட்டின் தீவிர வலதுசாரி தலைவர்களைக் கண்டித்துள்ளார். வெனிசுலாவுக்கு எதிராகவும் தற்போதைய ஆட்சியை கவிழ்ப்பதற்காகவும் இந்நிறுவனம் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை குவைடோ என்ற தீவிர வலதுசாரி தலைவர்களுக்கு வழங்கியதாக மதுரோ குற்றம் சாட்டினார்.

உதவியின் பெயரால் உருவாக்கப்படும் குழப்பம்

அமெரிக்கா எந்த நாட்டில் ஆட்சியை கவிழ்க்க அல்லது குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிடுகிறதோ, அந்நாடுகளில் மனிதாபிமான உதவிகள், பொருளாதார மேம்பாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்க நிதியை வாரி இறைக்கும். அங்குள்ள அரசு சாரா நிறுவனங்களுக்கு (NGO) நிதி உதவி செய்வதுடன், அதன் மூலம் அரசுக்கு எதிரான குழுக்களுக்கு நிதி உதவி கொடுத்து அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடும். இதற்காகவே அமெரிக்கா இந்த அமைப்பின் மூலமாக ஒவ்வொரு வருடமும் பில்லியன் கணக்கான டாலர்களுக்கு அதிகமான பணத்தைச் செலவு செய்து வருகின்றது.

ரஷ்ய உதாரணம்

20 ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவிற்குள் குழப்பத்தை உருவாக்க தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், அரசுக்கு எதிரான குழுக்களுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 மில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனம் (USAID ) வழங்கி வந்தது. சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பாக இருந்த கோலோஸ் என்ற அமைப்பின் மூலமாக ரஷ்ய அரசுக்கு எதிரான போலிக் கதைகளை உருவாக்குவதற்காக அமெரிக்கா அந்நிறுவனத்திற்கு பணம் கொடுத்தது. மேலும், ரஷ்யாவிற்குள் இருந்த பல பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்து பண உதவியை செய்தது. இதே போல, அமெரிக்காவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் ஆதரவான பிரச்சாரம் செய்வதற்காக ரஷ்யாவில் இருந்த சுதந்திர ஊடகங்களுக்கும் அமெரிக்கா பண உதவி கொடுத்தது.

இதனைத் தெளிவாக அடையாளம் கண்டுகொண்ட ரஷ்யா, அமெரிக்க அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெறுவதைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதற்காக 2012 இல் வெளிநாட்டு முகவர்கள் சட்டத்தில் புடின் கையெழுத்திட்டார். இது வெளிநாட்டு நிதியைப் பெறும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களையும் (NGO) “வெளிநாட்டு முகவர்கள்” என்று பதிவு செய்ய உத்தரவிட்டது.

கொள்ளையடிக்கப்படும் உக்ரைன்

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவன நிதியின் மூலம் ஆரஞ்சு புரட்சி என்ற பெயரில் 2004 இல் உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவர் விக்டர் யுஷ்செங்கோவை ஜனாதிபதியாக மாற்ற அமெரிக்கா அனைத்து வேலைகளையும் செய்தது. செர்பியா, ஜார்ஜியா, உக்ரைன் ஆகிய முன்னாள் சோவியத் நாடுகளில் அமெரிக்கா இந்த முறையில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியிருந்தது.

உக்ரைன் அறிய கனிம வளங்கள் நிறைந்த நாடாகும். இன்று சர்வதேச சந்தையில் முக்கிய விற்பனைப் பொருட்களாக உள்ள மின்னணு பொருட்களைத் தரமாகவும் மலிவான விலையிலும் விற்பனை செய்வதற்குத் தேவையான கனிமங்கள் உக்ரைனில் நிறைந்துள்ளன.

அமெரிக்கா தனக்குத் தேவையான கனிமங்களுக்குப் பெரிதளவு இறக்குமதியைத்தான் சார்ந்துள்ளது. அவற்றில் பல கனிமங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போரில், சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு கனிமங்களுக்கான மாற்றுத் தேவை.

முக்கியமான கனிமங்கள் என வகைப்படுத்தப்பட்ட 50 கனிமங்களில் 12 கனிமங்களுக்கு அமெரிக்கா முழுமையாக இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. மேலும், இன்னும் பிற 16 வகையான கனிமங்களுக்காக 50 சதவீதம் வரை இறக்குமதியை நம்பியுள்ளது என அமெரிக்க அரசு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, உக்ரைன் அரசுத் தகவலின்படி, இந்த 50 முக்கியமான கனிமங்களில் சுமார் 22 கனிமங்கள் உக்ரைனில் உள்ளன.

உலகப் பொருளாதார மன்ற தகவலின் படி டைட்டானியம், லித்தியம், பெரிலியம், மாங்கனீசு, காலியம், யுரேனியம், சிர்கோனியம், கிராஃபைட், அபாடைட், ஃவுளூரைட் மற்றும் நிக்கல் உள்ளிட்ட கனிமங்கள் உக்ரைனில் உள்ளன. உக்ரைனின் மொத்த கனிம வளங்களில் தற்போது 40 ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் போர் முடிந்த பிறகு, உக்ரைனின் பொருளாதார மீட்சிக்கு இந்தக் கனிமங்கள் ஒரு முக்கியமான படி என்பதுடன், ‘உலகளாவிய வினியோகச் சங்கிலி பிரச்சினைகளை அமெரிக்கா கையாளுவதற்கான ஒரு வாய்ப்பு” என 2014 முதல் 2019 வரை உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருந்த காட்ஸர்-புச்கோவ்ஸ்கா பேசியதில் இருந்து, உக்ரைனின் கனிம வளங்களின் முக்கியத்துவமும், அதனை கைப்பற்ற USAID மூலமாக அமெரிக்க செய்த செலவுகளும், அமெரிக்காவின் உலக பொருளாதார மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திட்டத்தைக் காட்டும்.

தற்போது, அந்தக் கனிமங்கள் அனைத்தையும் கொள்ளையடிப்பதற்கான வேலையைத்தான் அமெரிக்கா செய்து வருகின்றது. இதன் வெளிப்பாடாகத்தான், உக்ரைன் தன்னுடைய கனிமங்களை அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் ஜெர்மன் நாட்டின் மியூனிச் நகரில் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிகாரிகள் 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அமெரிக்காவுக்கு உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவீதத்தை கொடுக்க வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்தித்தனர். ஆனால் ஜெலன்ஸ்கி இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாமல் மறுத்து விட்டார்.அந்த ஒப்பந்தத்தை படிக்க கூட ஜெலன்ஸ்கிக்கு நேரம் கொடுக்கப்பட வில்லை என்பது முக்கிய தகவல்.

உக்ரைன் தனது பொருளாதாரத்திற்கும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் முழுக்க முழுக்க அமெரிக்காவை மட்டுமே சார்ந்துள்ள நிலையில், USAID நிதியுதவியை நிறுத்தியிருப்பது அந்நாட்டில் மேலும் நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.

இவ்வாறு முழுக்க முழுக்க உக்ரைன் தனது பொருளாதாரத்திற்கு அமெரிக்காவை மட்டுமே சார்ந்துள்ள நிலையில் இதன் மூலம் உக்ரைனின் கனிம வளங்களை பெருமளவு தனது லாபத்திற்காக கொள்ளையடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

-சேது சிவன்

Sources :-

  1. Ukraine’s mineral riches have long been eyed by its allies. Now they may be Trump’s price for military aid, CNN.
  2. President Maduro Denounces USAID-Backed Far-Right Politicians, teleSUR.
  3. Washington Has Used USAID to Destabilize Governments Around the World, teleSUR.
  4. What are Ukraine’s rare earths and why does Trump want them?, Reuters.
  5. The future of critical raw materials: How Ukraine plays a strategic role in global supply chains, The World Economic Forum
Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *