உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை-ஐ.நா.
உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுவதாக ஐ.நா. அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் சிறுமிகளுக்கு வீடு கூட ஆபத்தான இடமாக மாறிவிட்டது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
முதலாளித்துவ உற்பத்தி உலகில் பெண்களை சக மனிதராக பார்க்கப்படுவதில்லை, வெறும் பொருளாகவும் ஆணாதிக்க மனநிலை கொண்டவர்களின் சுரண்டலுக்கும் வன் முறைக்கும் உள்ளாகும் நபர்களாக உள்ளனர்.
குறிப்பாக குடும்ப உறவுகள் ஒரு மோசமான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
அதன் வெளிப்பாடாகவும் பெண்களையும் குடும்ப உறவுகளையும் பாதுக்காக்கும் வலுவான சட்டங்கள் இல்லாததாலும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று ஐ.நா., அவை வெளியிட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுகிறாள் என அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்ற ஒன்றிணைவோம் என்ற கோசத்தின் அடிப்படையில் நவம்பர் 25 அன்று துவங்குகிற இந்த தினம் 16 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பிரச்சாரம் உள்ளிட்ட பல வடிவங்களில் நடைபெற்று சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று முடிவடையும்.
திங்களன்று ( நவ 25 ) ஐ.நா., பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 இல் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 73.6 கோடி பெண்களில் மூன்றில் ஒரு பெண் தங்களது பெற்றோர், கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர் மூலமாக உடல் அல்லது பாலியல் ரீதியான அல்லது இரண்டு கொடுமைகளையும் அனுபவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
2020 இல் உலகளவில் கடத்தப்படும் மனிதர்களில் 10 நபர்களில் நான்கு பேர் வயது வந்த பெண்களாகவும், இரண்டு பேர் பதின்பருவ பெண்களாகவும் உள்ளனர். குறிப்பாக பாலியல் சுரண்டலுக்காக கடத்தப்பட்டவர்களில் 90 சதவீதம் பெண்கள் எனவும் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு கூட மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் தங்களது கணவர், காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 51,100 பெண்கள், சிறுமிகளின் படுகொலைக்கு கணவர்,காதலர் அல்லது உறவினர் காரணமாக இருந்துள்ளனர். இந்த படுகொலைகள் 2022 இல் 48,800 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் வேலை செய்யும் இடங்கள் துவங்கி சமூக ஊடகங்கள் வரை அவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து விட்டது. காலநிலை மாற்றம், போர்கள் ஆகியவற்றால் பெண்களுக்கு எதிரான வன்முறை முன்பை விட அதிகமாக தீவிரமடைந்துள்ளது என அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்காவில் 2023 இல் 21,700 பேர் தங்களது கணவர், காதலர் பெற்றோர் உள்ளிட்ட உறவினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா மக்கள்தொகையின் அளவோடு ஒப்பிடும்போது பாதிக்கப்பட்ட பெண்களின் சதவீதம் அதிகமாகும். அதாவது 1 லட்சம் ஆப்பிரிக்க பெண்களில் 2.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1 லட்சம் பெண்களில் 1.6 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2024 க்கான பிரச்சாரம், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம். எந்த சமரசமும் இல்லை ( #NoExcuse) என்ற கோசங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள், மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்து வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.