சாம்சங் தொழிலாளர் பிரச்சினைகளும் விளக்கமும் – தோழர் ஏ.சொந்தரராஜன் நேர்காணல்
தொழிற்சங்க பதிவு என்னும் பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்! – அ.சௌந்தரராஜன், CITU மாநில தலைவர்.
தொழிலாளர்கள் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19(1) வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்காகவே போராடி வருகின்றனர்.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் CITU உடன் இணைந்து தொழிற்சங்க பதிவு மற்றும் சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடத்தி வரும் இந்த வேலைநிறுத்தம் அக்டோபர் 08 அன்று 30வது நாளை எட்டியுள்ளது. அக்டோபர் 7-ல் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக பொய் செய்திகள் பரப்புகிறார்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும்.
தமிழ்நாடு அரசு SIWU நடத்தும் இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என்கிறது. எது சட்ட விரோதம்? வேலைநிறுத்தத்தை துவங்குவதற்கு 14 நாட்களுக்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 19 அன்றே சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரிடம் சட்டப்பூர்வமாக போராட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட போராட்டத்தில் பங்கேற்காத ஒரு சிலருடன் ‘தொழிலாளர்களின் பிரதிநிதிகள்’ என்ற பெயரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் தமிழ்நாடின் அமைச்சர்கள். “இது அமைச்சர்களும் அரசும் கார்ப்பரேட்க்கு ஆதரவாக சாம்சங் நிர்வாத்தின் பிரதிநிதியாக செய்லபடுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது” என அ.சௌந்தரராஜன் தெரித்துள்ளார்.
Q: சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது எப்படி?
சாம்சங்கில் தொழிற்சங்கம் உருவாக்கி தன் ஆதிக்கத்தை செலுத்த தான் CITU வேலை செய்வதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை விரும்பினார்கள். சங்கத்தை தொடங்கிய பின்னர் அச்சங்கத்தை CITU உடன் இணைத்து தலைமையேற்குமாறு எங்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இவ்வாறாக தான் CITU இதில் தலையீடு செய்தது. இதை அரசு தவறாகப் விளக்கி வருகிறது. தொழிலாளர்கள் ஒன்றும் ஆட்டு மந்தைகள் அல்ல. சம்பளத்தை இழக்க நேரிடும், காவல்துறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் பணிநீக்கம் செய்யப்படலாம் என்பவை அனைத்தையும் தெரிந்து தான் அவர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
Q: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங்கைச் சுற்றியுள்ள பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் உள்ளன. SIWU தொழிற்சங்கத்தை உருவாக்கும் போது இருக்கும் புதிய சவால்கள் தோன்றியுள்ளன என்ன? தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளித்துள்ளது?
இது போன்ற பிரச்சனைகளை CITU நிறைய சந்தித்துள்ளோம். பல நிறுவனங்கள் CITU அல்லது மற்ற தொழிற்சங்கங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். சாம்சங் நிறுவனத்தின் ‘தொழிற்சங்க மறுப்பு கொள்கைகள்’ உலகளவில் அறியப்பட்டவை. தென் கொரியாவில் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அவர்கள் உடைக்க முயன்றனர். ஆனால், தொழிலாளர்கள் தான் வெற்றி பெற்று தொழிற்சங்கத் தை அமைத்தனர். இந்தியாவில் சாம்சங் இரண்டு தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. ஒன்று நொய்டாவிலும் மற்றொன்று சென்னையிலும் உள்ளது. ஆனால், சாம்சங் இங்கே தொழிற்சங்கம் அமைப்பதை தடுக்க தொடர்ந்த முயல்கின்றனர். அதற்கு அவர்கள் பல அடுக்குமுறைகளை கையிலெடுக்கிறார்கள்.
Q: சாம்சங் தனது பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்துவதையும், SIWU இன் தலைவர் பணியாளராக இல்லாததையும் எதிர்க்கிறது. உங்கள் கருத்துகள் என்ன?
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் சில விதிவிலக்குகளுடன் நிறுவனத்தின் பெயர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நிறுவனங்கள் பிராண்ட் உரிமையைக் கோரலாம், ஆனால் அதிலும் சில முன்னுதாரணங்களும் உள்ளது. கர்நாடகாவில், SBI தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதை நிறுவனம் எதிர்த்தபோது, நீதிமன்றம் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ‘தொழிலாளர்கள் வங்கியுடன் போட்டியிடுகிறீர்களா?’ என்று நீதிமன்றம் SBIக்கு கேள்விகளை எழுப்பியது.
இந்த வழக்கை நாங்கள் மேற்கோள் காட்டியுள்ளோம். இது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தால், “ஸ்ரீபெரும்புதூர் எலக்ட்ரானிக் இண்டஸ்ட்ரீஸ் யூனியன்” என பெயரை கூட மாற்றுவோம். நாங்கள் ஈகோவால் பாதிக்கப்பட்டு சற்றுபவர்கள் அல்ல.
பணியாளர் அல்லாத வெளிநபரை தொழிற்சங்கம் கொண்டிருப்பது என்பது 98 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து நடைமுறையிலிருக்கும் தொழிற்சங்க சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைகளின் போது நிறுவனம் நிபுணர்களை பயன்படுத்துவார்கள். ஆனால், குறைந்த பட்ச படிப்பறிவை மட்டும் கொண்டுள்ள தொழிலாளர்கள் அவர்களுக்கு சரிநிகராக வாதிட முடியுமா என்ன? தொழிலாளர்கள் விவகாரங்களில் நிபுணர்த்துவம் வாய்ந்த நபரை தொழிலாளர்கள் விரும்பும்பட்ஞத்தில் அதனை அவர்கள் ஆதரிக்க தானே வேண்டும். தொழிற்சங்க சட்டமே தொழிற்சங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகிகள் வெளி சங்கத்தினர் இருக்கலாம் என்கிறது. தொழிலாளர்கள் விரும்புகிற வரையில் நாங்கள் அவர்களோடு இருப்போம்.
Q: ஒன்றிய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக கொண்டுவந்துள்ளது. இது “அடிப்படை உரிமைகளை நிராகரிப்பதாக இருக்கிறது” என்று CITU குறிப்பிட்டுள்ளது. இது தொழிலாளர் இயக்கங்களில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
எடுத்துகாட்டாக, தற்போதுள்ள படி, 100 தொழிலாளர்களை கொண்ட ஒரு நிறுவனம் மூடப்பட்டாலோ, ஆட்குறைப்பு, பணிநீக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டாலோ தொழிலாளர் நலத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். மோடியின் இந்த சட்டங்கள் இந்த எண்ணிக்கையை 300 ஆக உயர்த்துகிறது.
இந்நகரத்தின் 100 சிறு நிறுவனங்கள் இதை மீறி செயல்படுகின்றனர். முதலாளிகள் இதை கண்டுக் கொள்ளாமல் விடப்படுகிறார்கள். 400 தொழிலாளர்களை உடைய நிறுவனம் இந்த சட்டத்திலுருந்து விடுபட ஷிப்ட் பிரிக்கும் நிலையும் உருவாகும். இது முற்றிலும் நியாயமற்ற செயல்.
Q: சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் பரந்த தமிழ்நாடு தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
சாம்சங் தொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19(1) வழங்கியுள்ள அடிப்படை உரிமையை பெறுவதற்கான போராட்டம். ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் இருந்தாலும் பிரதானமாக இது இந்த தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமைக்கான போராட்டம். ஆனால், இந்த அரசு சட்டத்தின் படி செயல்படாமல் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தைகளின் போது சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போன்று அமைச்சர்கள் பேசுவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தொழிற்சங்க பதிவு என்பது வாடிக்கையாக பல நிறுவனங்களில் நடைபெறும் ஒன்று தான். ஆனால், பதிவுக்கு கொடுக்கப்பட்ட பின் சாம்சங் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கும், தொழிலாளர் நல துறைக்கு கொடுத்திருக்கும் தொடர் அழுத்தத்தின் காரணமாக SIWU சங்கத்தின் பதிவு என்பது தொடர்ச்சியாக தடைபட்டே வருகிறது. 45 நாட்களுக்கு தொழிற்சங்கத்தை பதிவு செய்திட வேண்டும். ஆனால், அது மேலும் தாமதம் ஆகிறது. 60 நாட்களுக்கு பிறகு அரசு நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருக்கலாம், பின் நிறுவனம் அதை மறுத்திருக்கலாம் எனவும் நாங்கள் சந்தேகிக்கிறோம். இது மேலும் அதிகரிக்க கூடாது.
திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் ஆளுநர் ரவியின் செயல்களின் கண்ணாடி பிரதிபலிப்பாகவே தெரிகிறது. சட்டமன்றத்தின் மசோதாக்களை ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்புவது போல் இருக்கிறது. அரசு போட்டி சங்கம் (Yes-Men) உருவாக்க நிர்வாகத்திற்கு நேரம் அளித்திருக்கிறார்கள். மேலும், செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் உடன்பாடு எட்டப்பட்டதாக போலி செய்திகளை அரசு பரப்பியும் வருகிறது. 14 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதெல்லாம் வெறும் நாடகமே தவிர போராடும் தொழிலாளர்களை அல்லாமல் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ஒரு குழுவுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பிரச்சனைக்கு தீர்வு கண்டதாக பேசி வருகின்றனர். தொழிற்சங்க பதிவு விவகாரம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என திசை திருப்பிவிடுகின்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் அழைக்கப்படுவோம் என்று கூறினார்கள். மாறாக, அவர்கள் எங்களை “பிரதிநிதித்துவப்படுத்த” வேறு சில தொழிலாளர்களை ஏற்பாடு செய்தனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்து, விளம்பரப்படுத்தி கையெழுத்துப் பெற்று விளம்பரம் செய்துகொண்டனர். இது வெளிப்படைத்தன்மை இல்லாத செயல். எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு தந்திரமாகத் தோன்றுகிறது.
எங்கள் பிரதான கோரிக்கையான தொழிற்சங்க பதிவை நிறைவேற்றினால் நாங்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுவோம். மற்ற கோரிக்கைகள் பின்னர் நிர்வாகத்துடன் விவாதிக்கப்படும்.
நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் ரூ.5,000 வெறும் ஊக்கத் தொகையே தவிர, ஊதிய உயர்வு அல்ல. ஊதிய உயர்வு, AC பேருந்துகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் 14 கோரிக்கைகள் கடந்த காலங்களில் அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதற்கான உதாரணமே ஆகும்.
அமைச்சர்களும் அரசும் 516 சங்கம் சேராத தொழிலாளர்களை அழைத்து பேசுகிறார்கள். 1300 தொழிலாளர்கழை அவர்கள் அவமதிக்கிறார்கள். ஆனால், ஜனநாயகம் என்பது பெரும்பான்மை கருத்துக்கு ஒத்துழைப்பதே ஆகும்.
Q.திமுக அரசின் தொழிற்சங்கமான LPF சாம்சங் தொழிலாளர்களையும் CITU-வையும் ஆதரிக்கிறது.பிறகு திமுக அரசு தொழிற்சங்க பதிவை மறுப்பதின் காரணம் என்ன?
திமுகவின் LPF எங்களை ஆதரிக்கிறது மற்றும் தொழிலாளர் வர்க்க பிரச்சனைகளை ஒப்புக்கொள்கிறது. ஆனால் சில அரசியல் காரணங்களுக்காக, அவர்கள் தங்கள் கட்சிக்கு வெளிப்படையாக சவால் விட முடியாது.
Q: செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்தில் ரூ.7,000 கோடி மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சாம்சங் தொழிலாளர்களின் எதிர்ப்பு அத்தகைய முதலீடுகளைத் தடுக்கலாம் என்று சில விமர்சனர்கள் எழுகின்றன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
முதலாளிகள் முதலீடு செய்வதற்கு முன் சாத்தியமான இலாபங்கள், மானியங்கள் மற்றும் தொழிலாளர் ஒழுக்கத்தை கணக்கிடுகின்றனர். இதற்கெல்லாம் தகுதியான இடம் தமிழ்நாடு. தொழில்கள் வர வேண்டும், ஆனால் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
வேலைநிறுத்தங்கள் நிறுவனங்களை பயமுறுத்துகின்றன என்று கூறும் விமர்சனங்களிடம், நான் கேட்கிறேன், இந்த நிறுவனங்களின் சொந்த நாடுகளில் தொழிற்சங்கங்கள் இல்லையா? பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளிலும் வலுவான தொழிற்சங்கங்கள் உள்ளன. தொழிற்சங்கங்கள் இல்லாத நாடு உண்டா? எலிக்கு பயந்து யாரும் வீட்டை எரிப்பதில்லை.
வரி கட்ட முடியாது என நோக்கியா சென்னையை விட்டு வெளியேறியது. இதனால் 15,000 தொழிலாளர்கள் வேலைகயை இழந்தனர். தொழிற்சங்கங்களைத் தடுப்பதுதான் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான ஒரே வழி என்றால், நிறுவனங்களுக்கு வரி விதிப்பதை ஏன் நிறுத்தக்கூடாது? அது சாத்தியமா?
ஒரு அரசாங்கம் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அது வரிவிதிப்பு, தொழிற்சங்கப் பதிவு என எதுவாக வேண்டாமானாலும் இருக்கலாம்.
Q: சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்ததை தொடர்ந்து CITU-வின் அடுத்த கட்ட நகர்வு என்ன?
தொழிற்சங்கம் அமைக்கும் வரை ஓயமாட்டோம். தொழிற்சங்க அமைப்பு என்பது தொழிலார்களின் உரிமை. தொழிலாளர்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் உறுதியாக நின்றால், நினைவில் கொள்ளுங்கள், யமஹா தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்தை உருவாக்க 63 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.சாம்சங் இறுதியில் தொழிற்சங்கத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
உழைப்பு இல்லாமல் உற்பத்தி இல்லை. உற்பத்தி இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியாது. போட்டியாளர்கள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. இந்த வேலைநிறுத்தம் நிறுவனத்தால் ஏற்படும் தொழிலாளர்களின் கடுமையான மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது. இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
Frontline பத்திரிக்கையாளர் சித்தார் முரளிதரன் நடத்திய நேர்காணல்.இந்த நேர்காணல் முதலில் frontline இதழிலில் ஆங்கிலத்தில் வெளியானது.
தமிழில் – தோழர் M.E.நிருபன்