யெச்சூரியிடம் ஒன்றை மட்டும் கற்க வேண்டாம்
‘படி போராடு” என்ற இந்திய மாணவர் சங்க முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கலகக்காரன் சீத்தாராம் யெச்சூரியின் மாணவப் பருவமிருந்தது.
1952 ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் அரசு ஊழியரின் மகனாக அவர் பிறந்தார்
1969 இல் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் வென்றார்.
அவர் தனது முதுகலைப் படிப்புக்கு டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை விட புதிதாக நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார்.
Made in SFI
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இயக்கமே யெச்சூரியை மார்க்சிஸ்டாக ஆக்கியது.
படிப்பை முதன்மைபடுத்திய மாணவர்சங்கத்தின் முன்னோடி பிரகாஷ் காரத்துடன் சேர்ந்து, ஒரு அசைக்க முடியாத ஜனநாயக அரசியலின் இடதுசாரி கோட்டையாக ஜவர்லால் நேரு பல்கலை கழகத்தை மாற்றுவதில் யெச்சூரி முக்கிய பங்கு வகித்தார்.
அன்று பிரதமர் பதவியை இழந்த இந்திரா காந்தியை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய இந்திய மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் யெச்சூரி தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
பதவி விலக கோறும் தீர்மாணத்தை இந்திரகாந்தியிடம் யெச்சூரி கொடுத்தார்.
பல்கலைக்கழகத்தையே நடத்தி காட்டியவர்
அதோடு அப்போதைய துணைவேந்தர் பி.டி.நாக் சவுத்ரியை வளாகத்திற்குள் நுழைய மாணவர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பல்கலைக்கழகத்தை மூட அரசு உத்தரவிட்டது. ஆனால் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படுவதை உறுதி செய்தனர்.
நூலகம் 24 மணி நேரமும் திறந்திருந்தது, அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன, மெஸ் இயங்கியது. இப்படியே சுமார் 40 நாட்கள் சென்றன. “பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு பணம் சேகரிக்க மாணவர்களை சரோஜினி நகர் சந்தை மற்றும் கன்னாட் பிளேஸுக்கு ‘பல்கலைக்கழகம் செயல்படுகிறது, துணைவேந்தர் வேலைநிறுத்தத்தில் இருக்கிறார்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை கழுத்தில் கட்டிக்கொண்டு நிதி வசூல் செய்ததை” அவர் இந்து இதழின் நேர்காணலில் நினைவு கூர்ந்தார். யெச்சூரி மார்க்சியத்தை அறிவுலக மேதைகள் முன்னால் விளக்குவதில் மட்டுமல்ல பாமர மக்கள் புரியும்படி நகைச்சுவையோடு பேசுபவர்.
நாடாளுமன்றவாதி
ராஜ்யசபாவில் அவரது பங்களிப்பு பாட்டாளிவர்க்க அரசியலுக்கு எடுத்துக்காட்டு. சிறந்த கிளர்ச்சி பிரச்சாரகர். சித்தாந்த போரின் அரசியல் முனையில் இந்திய தத்துவ தேடல். பாரம்பரியத்திலிருந்து கம்யூனிச இயக்கத்தின் கூறுகளை பாமரர்களும் புரிகிற முறையில் விளக்குவதில் வல்லவர்.
கழிக்க வேண்டிய பழமையை பேணுகிற இந்துத்துவா மூடத்தனங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பதில் சிறந்து விளங்கினார்.
சிபிஎம் பொதுச் செயலாளர் ஆகும் முன் சர்வதேச அரங்கில் பிற நாட்டு மார்க்சிஸ்ட் கட்சிகளோடு கலந்துரையாடுவது அவரது முக்கிய பணியாக இருந்தது.
இன்று கட்சி நாடாளுமன்ற சந்தர்ப்ப வாதத்தை எதிர்த்து போரடிக் கொண்டிருக்கிற நேரத்தில் அவர் மறைவு பேரிழப்பாகும் , அவரது எழுத்துக்கள் புதிய தலைமுறையை சிந்தித்து செயல்படவைக்கும்.
அவரிடமிருந்து கற்பதற்கு ஏராளமுண்டு. ஒன்றைத் தவிற புகை பிடிக்கும் பழக்கம்.
தோழர் மீனாட்சி சுந்தரம் தீக்கதிர் முன்னாள் ஆசிரியர்.