2024 சூப்பர் தேர்தல் ஆண்டு தீவிர வலதுசாரிகள் வசம் செல்கிறதா உலகம்?
இந்த 2024 ஆம் ஆண்டு உலகின் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் மூன்றில் இரண்டு பங்கு தேர்தல்களின் முடிவுகள் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதை அந்நாட்டு தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
சர்வதேச அரசியல் பார்வையாளர்களால் “சூப்பர் தேர்தல் ஆண்டு” என்று வர்ணிக்கப்படும் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிகள் கணிசமான வளர்ச்சியை கண்டிருந்தாலும் உலகளவில் பல நாடுகளின் பாரம்பரியமான ஆளுங்கட்சிகள் குறிப்பிடத்தக்க பின்னடைவையும் சந்தித்திருக்கிறது.
ஆளுங்கட்சிகள் பின்னடைவிற்கு காரணமாக அகதிகள் குடியேற்றம், பணவீக்கம் போன்ற சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் மிகமுக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த மாறுதல்கள் ஒவ்வொரு தனி நாட்டின் உள்நாட்டு அரசியலிலும் உலக அரசியலிலும் நிச்சயமற்ற தன்மையை சேர்ப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆளுங்கட்சிகளின் பின்னடைவு
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சிகளும் தேர்தலின் போதிருந்த ஆளுங்கட்சியின் கூட்டணிகளும் தங்களது பலத்தை கணிசமாக இழந்துள்ளன.
இந்தியாவில் ஆளும் கட்சியான பா.ஜ.க வெற்றி பெற போவதாக கூறி வந்த இடங்களுக்கும் குறைவாகவே வென்றிருக்கிறது. இது அந்த கட்சியின் தனிப்பெரும்பான்யை குறைத்து அவர்களின் அதிகாரத்தை குறைத்திருக்கிறது என்பதை ஜூன் 05 அன்று வெளியான இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் அம்பலமானது.
பா.ஜ.க தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அமைத்திருக்கும் புதிய அரசு, நரேந்திர மோடியின் ஆட்சிக்கு புதுப்புது சவால்களை அமைத்து தந்திருக்கிறது.
அதே போல், ஜூன் மாதம் வெளியான தென்னாப்பிரிக்கா தேர்தல் முடிவுகளும் அதன் சரிவை காட்டுகிறது.தென்னாப்பிரிக்காவில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி (ANC) நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வென்றாலும் ஆட்சி அமைக்கும் தனிப் பெரும்பான்மையை பெறவில்லை.
30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்த அக்கட்சி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் 50% க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
அதே போல் பிரான்ஸின் அரசியலில் இடதுசாரி, வலதுசாரி, மத்தியவாதி ( centrist ) ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரான் அந்நாட்டு நாடாளுமன்றத்தை களைத்துவிட்டு, உடனடி தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஜூலையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகளில் மத்தியவாத ஆளுங்கட்சி இடதுசாரிகளுடன் நடத்திய பலமான பிரச்சாரம் மற்றும் மாபெரும் பேரணியால் வலதுசாரிகள் நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பதை வெற்றிகரமாக தடுத்திருக்கிறது.
( முதல் கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரியான லீ பென்னின் National rally கட்சி முன்னணியில் வந்த நிலையில் இடதுசாரிகளின் New popular front கூட்டணியும், மக்ரோனின் Resemble கட்சியும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இரண்டாம் கட்ட தேர்தலில் இந்த இரு கட்சிகளில் வேட்பாளர்களில் யார் வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை மற்ற கட்சி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டனர்.
உதாரணமாக இடதுசாரி கூட்டணி வேட்பாளர் இரண்டாம் இடத்தில் இருந்தால் அவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கக்கூடிய மக்ரோனி கட்சி வேட்பாளர் வாபஸ் வாங்கிக் கொள்வார். இதன் மூலம் வாக்குகள் சிதறடிக்கப்படுவது குறைந்து இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு உருவானது. இவ்வாறு தீவிர வலதுசாரிகளின் வெற்றியை இடதுசாரிகள் கூட்டணி தடுத்தது. எனினும் மக்ரோனின் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் வாபஸ் வாங்காதது குறிப்பிடத்தக்கது. )
இந்த தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதனால் அந்நாட்டின் அரசியல் நிலை நிரந்தரமற்றதாகவே இருக்கிறது.
அதேபோல பிரிட்டனிலும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அவரது கட்சிக்கு குறைந்து வரும் செல்வாக்கை சரிசெய்ய விரைவான தேர்தலுக்கு கடந்த மே மாதம் அழைப்புவிடுத்தார். கடந்த 14 ஆண்டுகளாக அதிகாரத்திலிருந்த பழமைவாத கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியாக இருந்த பிரிட்டன் தொழிலாளர் கட்சி வாக்காளர்களிடமிருந்த அதிருப்தி மற்றும் பழமைவாதிகள் எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.
ஆட்சி மாற்றத்திற்கு பொருளாதாரமும் வாழ்வாதாரமுமே மூல காரணங்கள்
ஆளும் கட்சிகளின் வீழ்ச்சி அந்நாடுகளின் வாக்காளர்கள் மத்தியில் உள்நாட்டு பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த பிரச்சனைகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடியை தான் இத்தேர்தல்களின் முடிவுகளுக்கு மூலக்காரணங்கள் என்பதும் அம்பலமாகிறது.
உலகளவில் உக்ரைன்-ரஷ்யா மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்களால் ஏற்பட்ட பதட்டத்தினால் உலக நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிகள் சீர்குலைந்துள்ளன. உணவு மற்றும் எரிபொருள்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்தியாவில் ஆளுங்கட்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததற்கு நாட்டின் சீரற்ற பொருளாதார வளர்ச்சியும் முக்கிய பங்காக திகழ்கிறது. இந்தியாவின் வேலையின்மை விகிதம் அதிகரித்து வருவதும், உழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையுயான செல்வ இடைவெளி மேலும் அதிகரித்து வருதும் பிற முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
பாரிஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் (Paris School of Economics) என்னும் ஆய்வு நிறுவனத்தின் உலக சமத்துவமின்மை ஆய்வகம் (World Inequality Lab) 2023ல் நடத்திய ஆய்வின் அறிக்கைப்படி, இந்தியா மக்கள்தொகையின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 40.1% குவித்துவைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 1961லிருந்து இது கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் 1994ல் ANC கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் 5% வளர்ந்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2022ல் அந்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் வேகம் 1.9% சதவீதத்திலிருந்து 2023ல் 0.6% குறைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வேலையின்மையுடன் மிக பலமாக பிண்ணப்பட்டிருக்கிறது. மின்சார பற்றாக்குறை , பொருளாதார சமத்துவமின்மை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு ஆகியவை ANC கட்சி தனக்கிருந்த ஆதரவை இழப்பதற்கான முக்கியமான காரணங்களாகும்.
ஐரோப்பிய நாடுகளில் உருவான சில பிரச்சனைகளால் உலகின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா நாடுகளில் உள்ள மக்களுக்கு அரசுகளின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை என்பது ஐரோப்பிய பொருளாதாரத்திற்கான எச்சரிக்கையாக வெளிப்பட்டிருக்கிறது.
பிரிட்டனை மையப்படுத்தி ஃபோகல்டேட்டா (FocalData) என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பின் முடிவுகள் மூலம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் ‘மோசமடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது’ என்பதே வாக்காளர்களின் முக்கிய கவலையாக இருந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பின்னணியில் மக்களின் பிரதான அதிருப்திகள் மூலம் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரிகள் தங்களது வாக்குவங்கியை வெற்றிகரமாக விரிபடுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வலதுசாரி கட்சிகளின் வளர்ச்சி போக்கு
உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை கண்டுள்ளது தெளிவாகிறது.
“மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில் பிரதான ஆளுங்கட்சிகள் தோல்வியடைந்திருப்பதாகவும், வலதுசாரி கட்சிகளின் வளர்ச்சிக்கு பிரதான ஆளுங்கட்சிகளின் மீதான ‘ஏமாற்றம்’ காரணமாக இருக்கலாம்” என்று S.ராஜரத்தினம் சர்வதேச படிப்புகளுக்கான பள்ளியின் மூத்த ஆய்வாளர் காளிச்சரன் வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் மத்திய-வலதுசாரிகளின் ஐரோப்பிய மக்கள் கட்சி மற்றும் மத்திய-இடதுசாரிகள், சோசலிஸ்டுகள் மற்றும் ஜனநாயகவாதிகளை உள்ளடக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை முதல் மற்றும் இரண்டாவது பெரிய அணிகளாக தங்களை தக்கவைத்துள்ளன. தீவிர வலதுசாரி சக்திகளின் செல்வாக்கும் உயர்ந்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் தீவிர வலதுசாரி கட்சிகள் அங்குள்ள ஆளுங்கட்சிகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. வலதுசாரிகள் ஐரோப்பாவின் அரசியல் களத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
பொலிடிக்கோ (Politico)-ன் தகவல் படி, அகதிகள் குடியேற்றம் மீதான ஐரோப்பிய மக்களின் வெறுப்புணர்வு ஐரோப்பிய தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தாக்கத்தின் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
‘ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அகதிகள் மீதான வெறுப்புணர்வை தூண்டி தங்களுக்கான ஆதரவாக தீவிர-வலதுசாரிகள் மாற்றிக்கொள்கிறார்கள்.
வலதுசாரி சக்திகளின் இந்த எதிர்பாராத வளர்ச்சி ‘ஏதோ ஒரே இரவில் நடந்துவில்லை’ எனவும், “ஐரோப்பிய தேர்தல்களில் தேசியவாத பேரணி (கட்சி)யின் வெற்றியானது, வாக்காளர்களின் வலுவான நம்பிக்கையையும், புதியவர்களை கவர்வதற்காக அக்கட்சி இயல்பாக்கப்பட்டதையும் காட்டுகிறது” என்றும் கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மார்டா லோரிமர் தெரிவித்திருக்கிறார்.
வலதுசாரிகளின் இந்த எழுச்சி ஐரோப்பிய அரசியல் களத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் ஆதரவு, மக்கள்தொகை மற்றும் பசுமையான சூழல் ஆகியவற்றிற்கான திட்டங்கள் மீது புதிய அல்லது அதிக நிச்சயமற்ற தன்மையை அறிமுகம் செய்யும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
World Insights: “Super election year” refelects new trends in global politics this is the orginal Article from Xinhua news Agency
தமிழில் – தோழர் M .E .நிருபன்