Tamil Marx

தொழிலாளர் போராட்டங்கள்

வர்க்க போராட்டங்களே தேர்தல் வெற்றிகளை குவிக்கும்

வர்க்க போராட்டங்களே தேர்தல் வெற்றிகளை குவிக்கும்
  • PublishedJuly 22, 2024

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் விவசாயிகளின் பேரழுச்சி போராட்டம் முக்கியப் பேசு பொருளாக இருந்தது . இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்கு ஆற்றியுள்ளதை மற்றவர்களும்  அங்கீகரித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் மூளையும் முதுகெலும்பும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தான் என 
இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஒருவரே  பாராட்டியுள்ளார். பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா  உள்ளிட்டு 38 தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்ததன் பின்னணியில் விவசாயிகள் போராட்டம் இருந்தது என்பதே உண்மை!


வர்க்கப் போராட்டத்தால் உருவான பாஜக  எதிர்ப்பு

இந்தத் தேர்தல்களில் சம தளமான போட்டி இல்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து மறுபுறம், பாஜக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிட்டது. பஞ்சாப்பில் நடந்தது என்ன? பல கிராமங்களுக்குள் நுழைய முடியாமல் பாஜக திணறியது, பல கிராமங்களில் மக்கள் கறுப்புக் கொடி காட்டி பாஜகவை விரட்டி அடித்தனர்.

இதனால் பாஜகவில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்ல முடியவில்லை.  வேறெங்கும் இல்லாத வகையில்  பாஜக ஆட்கள், ‘எங்களுக்கு சமமான போட்டி இல்லை’ என்று தேர்தல் ஆணையத்திடம் போய் கதறியது சம்பவம் பஞ்சாப்பில் நடந்தது. அந்த  கதிக்கு அவர்களை கொண்டு நிறுத்தியது விவசாயிகள் போராட்டம் தான்.  

தொழிலாளர்களுக்காக களம் காணப்போகும் விவசாயிகள்

இப்போது மீண்டும் மோடி ஆட்சி பதவியேறியுள்ள நிலையில் விவசாயிகள் கூட்டுப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அடுத்த போராட்ட அறிவிப்போடு களத்தில் இறங்கி விட்டது. அவர்கள் இப்போது தங்களது கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கையான ‘புதிய தொழிலாளர் சட்டங்கள் நான்கையும் தூக்கிப் போடு’ என்ற கோரிக்கையை யும் உயர்த்திப் பிடித்து வீதியில் இறங்கிவிட்டனர். 

வர்க்கப் போராட்டங்களே முக்கியம். எத்தனைக்கு எத்தனை வீரஞ்செறிந்த வர்க்கப் போராட்டங்களைக் களத்தில் நாம் முன்னெடுக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை தேர்தல் வெற்றிகள் தாமாக நம் பக்கம் வந்து குவியும். சோர்வின்றி மக்கள் நலனுக்கான போராட்டங்களைத் தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டும்.


போராட்டத்தில் இருந்து தத்துவத்தை கற்றுக்கொடுங்கள்

உணர்வுப்பூர்வமான இயக்கப் பங்கேற்பு முக்கியமானது. நமது தத்துவார்த்தப் பயிற்சி  (அ) நேரடியான தத்துவப் புத்தகங்களை விடவும் போராட்டக் களங்கள் மற்றும் போராட்ட வரலாறுகள்  வழியே நாம் இன்னும் நெருக்கமாகச் சென்றடைய முடியும். 


கேரளத்தில் ஆண்டு தோறும் விவசாயி கள் சங்க உறுப்பினர் சேர்ப்பு, சேலம் சிறைத் தியாகிகள் நாளில் தான் தொடங்கப்படுகிறது. வாச்சாத்தி தீர்ப்பை பிரதியெடுத்து நாடு நெடுகிலும் எண்ணற்ற மக்களுக்கு விவசாய சங்கம் எடுத்துச் செல்கிறது . பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கே இந்தச் செய்திகள் புதிதாக இருப்பதையும் ஆர்வத்தோடு அவர்கள் அறிந்து சிலிர்ப்பதையும் பார்க்க முடிகிறது. 


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மாற்றிய வர்க்கப்போராட்டம்


இந்தத் தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்வைத்த தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுகளையும் சில ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் பரவலாக சிலாகித்துப் பேசினர்.அவர்களது அறிக்கையும் பேச்சுக்களும் கவனத்தை ஈர்த்தது உண்மை தான்.

அந்த ஈர்ப்புக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?  

காங்கிரஸின் மக்கள் விரோத அறிக்கை

2019 தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் முன் வைத்த வாக்குறுதிகள் என்ன?

விவசாயி உற்பத்தி சந்தைக் குழுக்களை கலைத்து விடுவோம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை ரத்து செய்வோம் என்றெல்லாம் அவர்கள் சொன்னவை தான், பின்னாளில் பாஜக ஆட்சியில் வேளாண் சட்டங்களாகக் கொண்டு வரப்பட்டன. அது மட்டுமல்ல, நாங்கள் கொண்டு வந்த புதிய தாராளமய சீர்திருத்தங்களை 2014-2019 ஐந்தாண்டு மோடி ஆட்சி மிகவும் மந்த கதியில் தான் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது, எங்களைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் அவற்றை வேகமாக அமல்படுத்துவோம் என்றும் சொன்னது காங்கிரஸ் கட்சி. 

ஆனால், நடந்து முடித்த தேர்தல்களில் அவர்களது, செயல்பாடுகள் மாறி இருக்கிறது. தேர்தல் அறிக்கையின் தன்மையே வேறாக இருக்கிறது. அதன் பொருள் என்ன, நமது வர்க்க போராட்டங்களின் வீச்சும், அவற்றிலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகளின் அழுத்தமும் தான் அவர்களது, குரலை மாற்றி இருக்கிறது.

போராட்டக் களங்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சுவதில்லை. அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் கவலைப்படாது நாம் தான் மக்கள் நலனில் போராட்டங்களில் இறங்குகிறோம். மகாகவி பாரதி சொன்னதுபோல ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பது இல்லையே’ என்று! அதன் வழி துணிந்து போராட்டக் களம் காண்கிறோம்.


நாம் வெல்வோம்!

தோழர் பி.ஆர். பரமேஸ்வரன், ஓர் எளிய தையல் தொழிலாளியாக இருந்து பொதுவுடைமை இயக்கத் தத்துவ ஆசிரியராக, இயக்கத்தைக் கட்டி வளர்ப்பவராக, பெரும் போராட்டங்களை வழி நடத்துபவராக உயர்ந்தார். தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் அவர்களும் பள்ளிக் கல்வியை முழுமையாகப் பெற இயலாத சூழலில் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அசாத்தியமான போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியவர், எண்ணற்ற தோழர்களை இயக்கத்திற்கு ஈர்த்தவர்.

கேரள முதல்வராக ஆனவர். தோழர்  ஏ.கே. கோபாலன் நாடாளுமன்ற உறுப்பின ராகச் சிறப்பாக இயங்கியவர். அவரது ஆங்கிலம் இலக்கண சுத்தமாக எல்லாம் இருக்காது. அப்போது அதை எதிர்ப்பக்கம் எள்ளி நகையாடி இருக்கின்றனர் சிலர். அதற்கு தோழர் ஏ.கே. கோபாலன், ‘ எனது ஆங்கிலம் வேண்டுமானால் உடைந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் கைக்கொண்டிருக்கும் உயர்ந்த தத்துவம் ஒரு போதும் உடையாது. வலிமையானது’ என்று பதில் சொன்னார்.

இப்படியான தலைவர்களின் பங்களிப்பும், செயல்பாடுகளும் நம்மை முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்தும். நாம் வெல்வோம்.   பேசினார். இந்நிகழ்ச்சியில் தீக்கதிருக்கு வளர்ச்சி நிதி ரூ. 25 ஆயிரம் விஜூ கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

தோழர்  விஜூ கிருஷ்ணன்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர்களுள் ஒருவரான தோழர்  விஜூ கிருஷ்ணன் சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய உரை.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *