Tamil Marx

கட்டுரைகள்

அனைவருக்குமான கல்வி

  • PublishedSeptember 25, 2023

– தோழர் K.முகேஷ்

ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிப்பது அவர்களுக்கு தரப்படும் கல்வி.அது அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும் என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.(சோசலிசம் எதற்காக கட்டுரை )


புராண கதையில் பரசுராமர் அந்தணர்களுக்கு மட்டுமே கலைகளை கற்பித்தார், துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாக கேட்டார்,வேதம் படித்ததால் சம்புகனின் தலை வெட்டப்பட்டது கல்வி எல்லோருக்குமானதாக கதைகளில் கூட இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை. இன்றைய இந்தியாவில் கட்டைவிரலை காணிக்கையாக கேட்க வேண்டியதில்லை, தலையை வெட்ட வேண்டியதில்லை.மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கையும் , போட்டித் தேர்வுகளுமே மாணவச் செல்வங்களின் கல்விக்கனவையும், உயிர்களையும் காவு வாங்கி விடுகிறது.

மன்னராட்சி காலத்தில் அரசுகள் பிராமணர்களுக்கு மட்டும் கல்விச்செலவை ஏற்றுக் கொண்டனர். “அனைவருக்கும் கல்வி” என்ற சமண மத கோட்பாட்டை அரசர்கள் ஏற்க விடாமல் பிராமணர்கள் பார்த்துக் கொண்டனர். பிராமணிய மேலாதிக்க காலகட்டத்தில் கல்வி எல்லோருக்கும் சென்றடையாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு உரிய ஒன்றாக மட்டுமே இருந்தது. பிறகு பிரிட்டிஷ் காலனி ஆட்சி காலத்தில் கல்வி ஓரளவு பரவலாக சென்றடைந்தது.

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி

தமிழகத்தில் சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி, ஆசிவக பள்ளி, அந்தணர் பள்ளி, அறவோர் பள்ளி, சான்றோர் பள்ளி என பல்வகை பள்ளிகள் இருந்துள்ளதை வரலாற்று செய்திகளின் வழியாக அறிய முடிகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடியாக தொடங்கப்பட்ட சென்னை உயர்நிலைப் பள்ளியில் 1855 வரை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. 1851ல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பயிலலாம் என்று அனுமதி வழங்கப்பட்ட போது அதை எதிர்த்து ஒரு இந்து உறுப்பினர் ராஜினாமா செய்தார் . 1855இல் சென்னை உயர்நிலைப் பள்ளியில் தகுதி கான் பட்டயம் பெற்ற 30 பேரில் 20 பேர் பிராமணர்கள். இவ்வாறு கல்வி பரவாலாக தொடங்கிய காலகட்டத்திலும் பிராமணரல்லாத சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வி கற்பது என்பது ஒப்பீட்டளவில் மிக குறைவாகவே இருந்தது.

சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராய் டேவிட் ஹேர் என்னும் பிரிட்டன் கல்வியாளரோடு இணைந்து இந்தியாவின் முதல் பொதுப் பள்ளியான ஆங்கில இந்து பள்ளியையும், ஒரு கல்லூரியையும் தொடங்கினார். பிரம்ம சமாஜம் எனும் தனது அமைப்பின் மூலம் பிராமணர் அல்லாதவர்களையும் புரோகிதர் ஆக்கினார். பிரம்ம சமாஜம் அனைத்து மதத்தினருக்குமா கல்வி சங்கமாக இருந்தது. ராஜாராம் மோகன் ராய் உருவாக்கிய கல்கத்தா ஆங்கிலோ இந்து பள்ளியில் சாதி பேதம் எதுவும் இல்லை, பெண்கள் சமமாக கல்வி கற்றனர். மூன்று மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல், தர்க்கம் ஆகிவற்றை பாடமாக போதித்தார்கள்.

இந்தியாவின் கல்வி வளர்ச்சி

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே 1849இல் ஆதரவற்ற பெண்களுக்கான கல்வி கற்கும் பாடசாலையை தொடங்கினார். அந்தப் பெண்களுக்கு கல்வியோடு சுயத்தொழில்களையும் கற்றுக் கொடுத்தார்.1854இல் அவரது கல்விச்சாலையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கல்வி கற்றனர். ஆதரவற்ற உயர் சாதி இந்து பெண்களும் சாவித்திரிபாயிடம் கல்வி கற்றனர் .பெண்களின் கல்விக்காகவும் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்து செயல்பட்டு வந்தார் சாவித்திரிபாய் பூலே.

பாரபட்சமான கல்வி

நாடு விடுதலை அடைந்த போது 20 பல்கலைக்கழகங்கள் இருந்தன 1951 கராத்தூரில் ஐஐடி தொடங்கப்பட்டது.தற்போது 23 நகரங்களில் ஐஐடி உள்ளது. 31 என்ஐடிகள் உள்ளன. ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கையில் மூன்று சதவீதம் தான். ஆனால், உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதம் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கே செலவிடப்படுகின்றன.மீதி உள்ள பணமே 97 சதவீதம் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை என்ன என்பதை நாம் அறிவோம். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களின் நிலைமை என்பதும் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. உயர்சாதி இந்துக்களின் கட்டுப்பாட்டிலே இவை போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் இன்று வரை இருந்து வருகின்றன. சாமானிய குடும்பப் பின்னணியில் இருந்து செல்லக்கூடிய மாணவர்கள் அங்கு நிலவக்கூடிய சாதிய பாகுபாட்டால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.

1976இல் கல்வி மாநில பட்டியலில் இருந்து இந்திய அரசமைப்பின் 42வது சட்ட திருத்தத்தின்படி மத்திய மாநில அரசுகளின் ஒத்திசைவு பட்டியலுக்கு மாற்றப்பட்டது பட்டியலின் இடுகை 25 ன் படி பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையை ஏற்படுத்தியது. மாநில அரசுகளின் தன்னிச்சையான கல்வி செயல்பாட்டினை பாதித்தது.

கோத்தாரி கமிஷன்

1964இல் அமைக்கப்பட்ட டி.எஸ்.கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் ஆறு முதல் 14 வயது வரையான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கு பரிந்துரைத்தது.மிக முக்கியமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கிட கோத்தாரி குழு பரிந்துரைத்தது. 1989-90இல் ஜிடிபி-யில் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டது.1997-98ல் 3.49% ஒதுக்கப்பட்டது.ஆனால்,2023 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கப்பட்டது என்பது வெறும் 2.9% மட்டும் தான்.

விடுதலை அடைந்து 62 ஆண்டுகளுக்கு பிறகு 2009 கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமை என்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, 86வது சட்ட திருத்தத்தில் 45 வது கூறு திருத்தப்பட்டு கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. கல்வி உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னும் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்ய முடியவில்லை. பள்ளிப்படிப்பை முடித்து உயர்வு உயர்கல்வி பயில்வதற்கு செல்வோர் விகிதமும் குறைவாக உள்ளது.

தாராளமய யுகத்தில் கல்வியின் நிலை

1991 ஆம் ஆண்டு முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளால் கல்வியில் வணிகமயம் என்பது வேகம் எடுத்தது. அரசு கல்லூரிகளுக்கு இணையான அளவில் தனியார் கல்லூரிகள் உருவாகின. இன்று உயர்கல்வியில் அரசு கல்லூரிகளை விட தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிக்கட்டி பறக்கிறது.தமிழகத்தில் 570 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.ஆனால், இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் முழுமையடையாமல் உள்ளது. பொறியியல் படிப்பின் மீதான மோகத்தால் உருவான இந்த கல்லூரிகளில் பலவும் பின்நாட்களில் செல்வாக்கு இழந்து மண்டபங்களாக மாறக்கூடிய அவல நிலை உருவானது. எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் பெருகி இருந்தாலும் அனைவருக்குமான கல்வி என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.

மதவாதம் திணிக்கப்பட்ட கல்விமுறை

கல்வியில் மதவாதத்தை புகுத்தும் செயல்பாடு 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த உடன் துவங்கியது. உலகப் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர்களான ரொமிலா தாப்பர், ஆர்.எஸ்.சர்மா, சர்வபள்ளி கோபால், பீபன் சந்திரா போன்றோர் எழுதிய நூல்களின் மீது அவர்கள் கேள்வியை எழுப்பினர். வரலாற்றை ஆய்வு செய்வதற்கு உருவாக்கப்பட்ட அறிவியல் பூர்வமான கோட்பாடுகளை மேலைநாட்டு தத்துவம் என்று சொல்லி கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கினர். அதனுடைய உச்சமாக இன்று பாடபுத்தகங்களில் தங்களுடைய மதவாத கருத்துக்களை தீவிரமாக புகுத்தக்கூடிய வேலையை நரேந்திர மோடி அரசாங்கம் துவக்கி இருக்கிறது. அறிவியல் பூர்வமான கருத்துக்களின் மீதான அவர்களது ஒவ்வாமையை இது . வெளிப்படுத்துகிறது. கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை, தனிம வரிசை அட்டவணை நீக்கம் என ஜனநாயக விழுமியங்களையும், அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் பாடத்திட்டங்களில் இருந்து நீக்கக்கூடிய வேலையை இப்போது உள்ள அரசு செய்து வருகிறது. அறிவாளிகளை மட்டுமல்லாமல் அறிவைக் கண்டே அஞ்சக்கூடியவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

மருத்துவக் கல்வியின் அவலநிலை

மருத்துவ படிப்பிற்காக கொண்டுவரப்பட்ட பொது நுழைவுத் தேர்வான நீட் வந்த பிறகு தமிழகத்தில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ படிப்பிற்காக உள்ள 90,000 இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் உள்ளன. மாநில பாடத்திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையால் தங்களுடைய கல்விக் கனவையும் இழந்து, உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் ,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வரக்கூடிய மாணவர்களில் இதுவரை 23 பேர் தற்கொலை செய்துள்ளனர் ( 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும்) அதேப்போல புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி,என்ஐடி, ஐஐஎம் போன்றவற்றில் தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் நுழைந்தாலும் அங்கு நிலவக்கூடிய சாதிய பாகுபாட்டால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அனைவருக்கும் சமமான கல்வி என்பது கிடைப்பதில்லை.ஆனால் போட்டித் தேர்வுகள் மட்டும் ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றது.போட்டி தேர்வுகள் பயிற்சி நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு தான் வழி வகுத்துள்ளது.

சோசலிச மாடல் கல்வி

சோசலிச நாடான கியூபா கல்வித் தரத்தில் உலகின் முன்னணியில் உள்ளது. 1961இல் செயல்படுத்தப்பட்ட மக்கள் எழுத்தறிவு இயக்கம் மிகப் பெரும் வெற்றியை பெற்றது.‘புரட்சி என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல அனைத்து மக்களுக்குமான சமமான வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை ஏற்படுத்தும் வரை தொடரும் மக்கள் செயல்பாடு’  என்ற சே குவேராவின் வார்த்தைகளோடு துவங்கப்பட்ட கல்வித் துறையின் சீர்திருத்தம் இன்று உலகமே வியக்கும் வண்ணம் உருவாகியுள்ளது.

போர்க்காலத்திலும், பேரிடர் காலத்திலும், கொரோனா போன்ற பெரும் தொற்று காலத்திலும் கியூபா தன்னுடைய மருத்துவர்களை உலகின் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி உதவி செய்து முன்மாதிரியாக இருந்தது. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளும் தங்கள் அருகாமை நாடுகளை கூட கண்டுகொள்ளாமல் இருந்தபோது கியூபா தன்னுடைய சோசலிஸ்ட் கல்வி முறையால் இவை அனைத்தையும் சாதித்தது. சோவியத் யூனியன் இருந்தவரை உலக நாடுகளுக்கு புத்தகங்களை அச்சிட்டு வழங்கி அறிவை பரப்பியது.

இந்திய நாட்டில் தொடக்க காலத்தில் வர்ணாசிரம தர்மத்தின் பெயரால் சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது. நவீன காலத்திலும் உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டு உள்ளனர். போட்டி தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிக்க முடியாத மாணவர்கள் தங்கள் கல்விக் கனவை இழந்து வருகின்றனர். அனைவருக்குமான கல்வியை உறுதி செய்வதற்கு மிக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.

தோழர் K.முகேஷ்

இந்திய மாணவர் சங்கம்
மாநில துணைத் தலைவர்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *