Tamil Marx

தமிழ் நாடு

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பு ஆதரவும் எதிர்ப்பும்

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பு ஆதரவும் எதிர்ப்பும்
  • PublishedJune 9, 2023

திராவிடர் என்னும் பெயரிலேயே கட்சியின் பெயரைக் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு ஆதிதிராவிடர் என்கிற பதத்தை இழிவானது என்று கூறுபவர்களின் கருத்தை ஏற்பது வினோதமானது.

ஆதி திராவிடர் நலப் பள்ளிகைளை பள்ளிக் கல்வித் துறையுடன் தமிழ்நாடு அரசு இணைத்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், தலித் அமைப்புகள், மனித உரிமை செயல் பாட்டாளர்கள் என பல தரப்பினர் மத்தியில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் உருவாகியிருக்கின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை யின் கீழ் ஆரம்பப் பள்ளிகள். நடுநிலைப்பள்ளிகள். உயர்நிலைப் பள்ளிகள் என 1138 பள்ளிக் கூடங்களும், 1324 விடுதிகளும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 95,013 பேர் கல்வி பயில்கிறார்கள். விடுதிகளில் 98,509 பேர் தங்கிப் படிக்கிறார்கள். கல்வித் தரத்தை உயர்த்தவே இந் நடவடிக்கை என்கிறது தமிழக அரசு.

ஆதரவுக் குரல்கள்:

விசிக பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார். கல்வியாளர் வசந்திதேவி. எழுத்தாளர் அழகிய பெரியவன் உள்ளிட்ட பலர் இதனை ஆதரிக்கிறார்கள்.

நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே 2021 இல் வெளியிடப்பட்டது. இது 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கற்றல் தரம் நகர்ப்புறத்தை விட குறைவாக இருப்பதும், ஆதிதிராவிட மாணவர்களின் கற்றல் திறன் அதைவிட குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் 5 ம் வகுப்பு வரை தரமான கல்வியாகவும், அதற்குப் பிறகு கல்வித் தரம் பின்தங்கி இருப்பதையும் ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு பிரதான காரணம் பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்கிறார்கள். ஆனால் நலப் பள்ளிகளை பாடத்திட்டத்தோடு தொடர்பற்ற வருவாய்துறை அதிகாரிகளே ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வினால் கல்வித் தரத்தை மேம்படுத்திட முடியாது. உயர்கல்வி பிரச்சனைகள் தமிழ்நாட்டில் +2 தேர்ச்சி பெற்ற கமார் 2 லட்சம் பேர் உயர்கல்விக்குச் செல்ல முடிவ தில்லை. இதற்கு உயர்கல்வி இடங்களின் பற்றாக்குறையே காரணம். இவ்வாறு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறகிறவர் களில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் ஆதிதிராவிடர் மாணர்கள் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் படிக்கிற ஆதி திராவிட மாணவர்கள் பெறுகிற மதிப் பெண்களை விட நலப்பள்ளிகளில் படிக்கிற மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனால் மருத்துவ கல்விக்கான 7.5S நலப்ள்ளி மாணவர்களால் இடஒதுக்கீட்டில் தேர்வாகமுடிவதில்லை என்பதே இதற்கு சான்று.

சாதிப் பெயர்கள்:

ஆதிதிராவிடர் நலப்பள்ளி, கள்ளர் சீரமைப்பு பள்ளி என சாதி வாரியாக பள்ளிக்கூடங்கள் நடத்துவதில் பல பிரச்சனைகள் இருப்பதாக இணைப்பை ஆதரிப்பவர்களின் கருத்தாக உள்ளது. இங்கு மற்ற மாணவர் படிக்க முன்வருவ தில்லை. அதற்கு இந்தப் பெயர்களே காரணமாக அமைந்து விடுகின்றன என்கின்றனர்.

பொதுப் பள்ளியில் பயிலும் பெரும்பான்மை மாணவர்கள்:

ஆதிதிராவிடர், பழங்குடி இன மாணவர்கள் மிகப் பெரும்பாலானோர் கல்வித்துறை நடத்தும் பள்ளிகள் மற்றும் பலவகைப்பட்ட பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தான் படிக்கிறார்கள். அனைத்து வகைப்பட்ட பள்ளிகளிலும் படிக்கும் மொத்த எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் 31,1 லட்சம் .இதில் ஒரு சிறு பகுதி, அதாவது ஒரு லட்சம் பேர் தான் இப்பள்ளிகளில் பயில்கிறார்கள். அதாவது எஸ்சி/எஸ்டி மாணவர்களில் நான்கு சதத்திற்கும் குறைவாகவே ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் பயில்கிறார்கள்..

பள்ளிகளில் தீண்டாமை – கற்றல் வாய்ப்பு:

ஆதிதிராவிடர், பழங்குடியினர், கள்ளர் சீர் மரபினர் ஆகிய பிரிவினருக்கு கற்றல் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதன் காரணமாகத்தான் இப்பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பொதுப்பள்ளிகளை பயன்படுத்த சாதியம், தீண்டாமை, சமூக ஒதுக்கல், பாகுபாடு போன்ற ஒடுக்கு முறைகள் காரணமாக இருந்தன. ஆனால் இன்று மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாதிய ஒதுக்கலும் தீண்டாமை யும் இன்று பள்ளிகளில் முற்றிலும் இல்லை எனக் கூறிவிட முடியாது தான். இதற்கெதிராக, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே ஒழிய இம்மாணவர் களை தனிப் பள்ளிகளில் படிக்கவைப்பது தீர்வாக இருக்கமுடியாது. தனிப்பள்ளி களில் அவர்கள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள். பொது நீரோட்டத்துடன் அம்மாணவர்களை இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை.

இந்த இணைப்பு நலப்பள்ளிகளை நரகத்திலிருந்து மீட்டு சொர்க்கத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சி அல்ல என்கின்றார் இணைப்பை ஆதரிக்கிற கல்வியாளர் வசந்திதேவி. ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் ஏராளமான அவலங்கள் இருக்கின்றன. மேலும் இணைப்பு என்று அறிவித்திருக்கிற அரசு இது குறித்து இதர விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

எதிர்ப்புக் குரல்கள்:

கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, கவிஞர் சுகிர்தராணி, ஊடகவியலாளர் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

பூர்த்தியடையாத இலக்கு:

பாராமை, அணுகாமை, தொடாமை ஆகிய சாதிய பாரபட்சங்கள் கொடூரமாக நிலைபெற்றிருந்த காலத்தில் அயோத்திதாச பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் அழுத்தத்தால் பஞ்சமர் பள்ளிகள் உதித்தன. வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வு இது. இதன் தொடர்ச்சியே தற்போதைய நலப்பள்ளிகள். 100 ஆண்டுகளைக் கடந்த பின்னும் நலப்பள்ளிகளின் தேவை இன்றளவும் இருப்பது அவமானமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த கள நிலவத்தைக் குறித்து ஆசிரியர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களைக் கூட கேட்காமல் அரசு தன்னிச்சையாக இப்படி நலத்துறை பள்ளிகளை இணைத்திருப்பது ஏற்புடையதல்ல.

நலப் பள்ளிகளின் சொத்துக்கள்:

நலப்பள்ளிகளின் சொத்துக்கள் பல்லாயிரம் கோடிகளைக் தொடும். இவையெல்லாம் ஆதிதிராவிடர் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. இணைப்பினால் இச்சொத்துக்கள் பள்ளிக் கல்வித்துறையின் வசமாகிறது. இவைகள் இனிமேல் ஆதிதிராவிடர் நலனுக்கு என்பதாக மட்டும் இருக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கையின் நீட்சி:

தேசிய கல்விக் கொள்கை 2020 அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என இரண்டு வகைகளில் மட்டுமே பள்ளிகளை வகைப்படுத்துகின்றன. வளாகப் பள்ளிகள் என்கிற பெயரால் தனியார் அல்லது அரசுப் பள்ளிகளுடன் பலவீனமான பள்ளிகளை இணைப்பது என்று அக்கொள்கை கூறுகிறது.

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் என்கிற தனியான கட்டமைப்பு வளாகப் பள்ளிகள் என்கிற புதிய கல்விக் கொள்கையின் ‘ வரைமுறைக்கு எதிராக இருக்கிறது. எனவேதான் நலப்பள்ளிகள் பொதுப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டன என்று எதிர்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.56 இடஒதுக்கீடு இருப்பதைப் போல், நலப்பள்ளி மாணவர்களுக்கும் 2.5% இடஒதுக்கீடு தனியாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் நலப்பள்ளிகளிலிருந்து மருத்துவர்கள் வரவில்லை என்பது சரியானதல்ல என்கிறார்கள்.

செலவினங்களைக் குறைப்பது:

இந்த இணைப்பின் பிரதான நோக்கமே அரசு செலவினங்களைக் குறைப்பதுதான். இது தேசியக் கல்விக் கொள்கையின் விருப்பமான தனியாரிடம் கல்வி செல்வதற்கே வழிவகுக்கும். ஆதிதிராவிடர் என்பது இழிவா?

ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் என்று அழைப்பது ஒருவிதமான இழிவைக் கற்பிக்கிறது. எனவே இணைத்தோம் என்பது மிக மோசமானது.

திராவிடர் என்னும் பெயரிலேயே கட்சியின் பெயரைக் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு ஆதிதிராவிடர் என்கிற பதத்தை இழிவானது என்று கூறுபவர்களின் கருத்தை ஏற்பது வினோதமானது.

மாணவர்களை தரம் பிரிக்கும் அரசு:

பள்ளிக்கல்வித்துறையின் பள்ளிகளில் சிறந்த மாணவர்களை தனியே பிரித்து தகைசால் பள்ளிகள், சீர்மைப் பள்ளிகள், மாதிரிப்பள்ளிகள் என்கிற பெயர்களில் தனிப்பள்ளிகளை உருவாக்கி அனைத்து வசதிகளுடன் அவர்களுக்கு பயிற்சி அளித்து பிரகாசமான உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது இதர மாணவர்களின் உளவியலை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும். தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே அவர்களிடம் தோல்வி மனப்பான்மையை உருவாக்கும் மிகக் குறைவு. என்பதைப் பற்றி அரசு சிறிதும் கவலை கொள்ளவில்லை. இந்த அவலத்தில் இருக்கிற பள்ளிகளுடன் தான் தற்போது நலப்பள்ளிகள் இணைக்கப்பட்டிருக் கின்றன என்றால் இணைக்கப்பட்ட நலப்பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும்?

பெயர் மாற்றினால் பாகுபாடுகள் ஒழியுமா?

ஆசிரியர் நியமனத்தில் பாரபட்சம் 833 ஆதிதிராவிடர் தலத்துறை தொடக்கப் பள்ளிகளில் 40,000 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகள் அனைத்தும் ஆதிதிராவிடக் குடியிருப்புப் பகுதிகளுக்குள்தான் இருக்கின்றன. இப்பள்ளிகள் பொதுப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் மட்டும் தலித் அல்லாத மாணவர்கள் இப்பளிகளுக்கு வருவார்கள் என்பது சரியான நிர்ணயிப்பு அல்ல,

அதேபோல், மலை கிராமங்களில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளிலும் இதர மாணவர்களின் சேர்க்கை நடைபெறப் போவதில்லை. இவ்வாறு இணைக்கப்பட்ட முந்தைய தலப்பள்ளிகளுக்கு பணிமாறுதல் பெற்று வருகிற தலித் அல்லாத ஆசிரியர்கள் அம்மாணவர்களிடம் பாகுபாடு இல்லாமல் நடந்துகொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

இதரப் பிரச்சனைகள்:

குறைவான மாணவர் சேர்க்கை காரணமாக பொதுப்பள்ளிகள் மூடப்பட்டதுபோல் நலப்பள்ளிகள் மூடப்பட்டதில்லை. இவ்வாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பொதுப்பள்ளி களில் படித்த 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது கவலை அளிக்கிற உண்மை. இதனோடு ஒப்பிடுகையில் நலப்பள்ளிகளில் 12 ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் மிகவும் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் பொதுப்பள்ளிகளில் ஆகிநிராவிடர் மாணவர்களின் இடைநிற்றல் மிக அதிகமாக இருக்கிறது.

ஆதிதிராவிட நல்ல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பதால் அவற்றை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஆதிதிராவிட நலத்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் கடந்து 2013ஆம் ஆண்டிலும். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் 2014 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் மட்டுமே நடைபெற்ற சூழலில் ஆசிரியர் பற்றாக்குறைக்கான பொறுப்பை அரசு தட்டிக் கழிப்பதுடன் தன்னுடைய நிர்வாகத்திலேயே இருக்கிற நலத்துறையின் மீது பொறுப்பை கமத்துவது என்பது வினோதமானது.

மேலும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்பட்டு உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அளிக்கப்பட்டு அதன் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மாறாக, ஆதிதிராவிட நலத்துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருந்துவிட்டு தன்னுடைய தவறை மறைத்து பள்ளிக் கல்வித் துறையில் இணைப்பது அரசமைப்பின் மீதான நம்பிக்கையை அரசே தகர்ப்பதாக அமைகிறது.

சிறப்புத் திட்டங்கள் ரத்தாகும்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலப் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நான்கு சீருடைகள் வழங்கப்படுகிறது.மேலும் பொதுத் தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிப் புத்தகங்கள். வழங்கப்படுகிறது. இங்கு சாரணர் இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ரூபாய் 55,000 அளிக்கப்படுகிறது பொதுத் தேர்வு எழுதுகின்ற 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சுற்றுலாத் திட்டத்தின் கீழ் ரூபாய் ரூ.25000 வீதம் ஒவ்வொரு பள்ளிக்கும் அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்பட்டால் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

ஆசிரியர்களுக்கு பாதிப்பு:

இணைக்கப்படும் போது ஆசிரியர்கள் பணிமூப்பு, பதவி உயர்வு குறித்து எவ்வித விளக்கமும் அரசு அளிக்கவில்லை. தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகிற வாய்ப்பு பலருக்கு இல்லாமல் போகும்.

நிறைவாக, நலப்பள்ளிகள் பொதுப்பள்ளிகளுடன் இணைப்பு என்பது போதுமான ஆய்வுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆதி திராவிடர் நலப்பள்ளிகளின் தற்போதைய கையறுநிலையை, குறிப்பாக கற்றல்திறன். மதிப்பெண் பெறுவது, மருத்துவம் மற்றும் உயர்கல்வியில் குறைவான மாணவர் சேர்க்கை. ஆசிரியர் பற்றாக்குறை. கட்டமைப்பு வசதிகள், ஆதிதிராவிடர் பெயர் அடையாளம் ஆகியவற்றை எல்லாம் காரணம் காட்டி இந்த இணைப்பு சரியானது என்று அரசு வாதிடுகிறது. அரசிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரு கேள்வி மட்டுமே இருக்கிறது. நலப்பள்ளிகள் என்று தனியாக பிரித்துவைத்துவிட்டு இதுவரை நலப்பள்ளிகளுக்கு என்று எந்த நலனையும் செய்யாமல இருந்துவிட்டு சிறப்பு சலுகைகளோ, சிறப்பு நிதிஒதுக்கீடோ செய்யாமல் இருந்துவிட்டு இவைகள் போதுமான தரத்துடன் இல்லை என்று சொல்வதற்கு அரசுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது என்பதே அக்கேள்வி.

நலப்பள்ளிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததே அரசின் அக்கறையற்ற தன்மைதான். ஈராயிரம் ஆண்டுகாலமாக சாதியின் விஷப்பற்களால் தீண்டப்பட்டு புறக்கணிக்கப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக உயர்த்திட வேண்டும் என்கிற உறுதிப்பாடு அரசிடம் இருந்திருக்கும் என்று சொன்னால் இப்போது நலப்பள்ளிகள் இணைக்கப்ட்டதற்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை தமிழகம் கண்டிருக்கும். செய்யவேண்டிய எதையும் செய்யாமல் பலகீனப்படுத்திவிட்டு நாங்கள் சிறந்த கல்வியைத் தருவதற்காக இணைத்தோம் என்று சொல்கிற வெற்றுப் பெருமிதம் வேடிக்கையான வினோதம் தான்.

கட்டுரை அணையா வெண்மனி இதழிலிருந்து…

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *