Tamil Marx

சர்வதேசம் தொழிலாளர் பிரச்சனைகள்

அமெரிக்காவில் வலுவடையும் தொழிற்சங்கங்கள்

அமெரிக்காவில் வலுவடையும் தொழிற்சங்கங்கள்
  • PublishedMay 25, 2023

அமெரிக்காவில் தற்போது உரிமைகளை பெற நினைக்கக்கூடிய ஒவ்வொரு தொழிலாளியும் தொழிற்சங்கத்தை தேடி சென்று இணைவதை தரவுகளின் மூலமாக நம்மால் காண முடிகிறது.

அமெரிக்காவில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை தேடி வந்து இணையும் நிகழ்வு தவிர்க்க முடியாதவையாக உருவாகியுள்ளது.இது சிறப்பான வளர்ச்சி எனினும் சங்கங்கள் செல்ல வேண்டிய பாதை இன்னும் வெகுதூரம் உள்ளது.

அமெரிக்காவில் தொழிற்சங்கங்களின் நிலை எதார்த்தத்தை விட ஊதி பெரிதாக்கபடுகிறதா? அமெரிக்க தொழிற்சங்கங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என பல கட்டுரைகள் 2022 ல் வெளிவந்தது.இந்த சந்தேகம் பல்வேறு தொழிற்சங்க தலைவர்களுக்கே உள்ளது.அமெரிக்க தொழிற்சங்கங்களின் செயல்பாட்டை உயர்மட்டத்தில் உள்ள பல்வேறு நபர்கள் புதிதாகவும் முக்கியமான செயல்பாடாகவும் பார்த்து வருகிறார்கள்.

உண்மையில் நிலைமை இந்த கட்டுரைகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாறாக (வளர்ச்சியை நோக்கி) உள்ளது என தரவுகள் கூறுகின்றன.எனவே புதிய மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் சங்கங்கள் தம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

1970 களுக்கு பிறகு அமெரிக்காவில் 2018ல் கல்வியாளர்கள் நடத்திய மாகாணம் தழுவிய வேலை நிறுத்தமே மிகப்பெரிய வேலை நிறுத்தமாகும். இது மில்லியன் கணக்கான மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கல்வி நிலைய ஊழியர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2018ல் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தம் 1980 இன் நடுப் பகுதியில் இருந்து மிக உச்சத்தை தொட்ட வேலை நிறுத்தமாக இருந்தது.மேலும் 2019 ல் இதன் வேகம் நீல நகரங்கள் என அழைக்கப்படுகிற லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நகரங்களுக்கு பரவியதால் இதன் உச்சம் மேலும் அதிகரித்தது.

ரெட் ஸ்டேட் ரிவோல்ட் என்று அழைக்கப்படுகிற இந்த வேலை நிறுத்தம் மாகாணங்கள் முழுவதும் கிளர்ச்சிகளை கொண்டதாக இருந்தது. அவர்கள் கோரிக்கை மூலம் நேரடியான தாக்குதலை தொடுத்து போராட்டத்தின் முடிவாக வெற்றியை கண்டனர் ( ரொனால்ட் ரீகனின் ஆட்சி காலத்திற்கு பிறகு இவ்வாறு வளர்ச்சி கண்டது) அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அலுவலக தரவுபடி கடந்தாண்டு தொழிற்சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 2,73,000.வேலை வாய்ப்புகள் உயர்ந்த போதும் இந்த கால கட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 10.3% இருந்து 10.1% குறைத்தது. இதனால் 1930 களில் தொழிற்சங்கங்கள் கண்ட எழுச்சியை போல தற்போது இல்லை என்று பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது இதை நாம் சற்று நிதானமாக ஆய்வு செய்ய வேண்டும்

தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் தொழிற்சங்கங்கள் தரமானதாக இருக்க சில முக்கிய காரணங்களும் இருக்கிறது. 1.1 மில்லியன் தொழிலாளர்கள் கொண்டு எண்ணிக்கையில் அமேசான் நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. இதே போல ஸ்டார் பக்ஸ் எட்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது. இதுபோன்ற பெரும் மூலதனம் கொண்ட நிறுவனங்களில் தொழிற்சங்கம் பெற்றுள்ள வெற்றி பெரும் வளர்ச்சிக்கு கைகொடுக்கிறது இந்த வெற்றி உறுப்பினர்கள் எண்ணிக்கையால் கிடைத்துவிடவில்லை.

கடந்த சில பத்து ஆண்டுகளாகவே பெரும் மூலதனம் கொண்ட பெரு நிறுவனங்களை தோற்கடிக்க முடியாது என நியாயமற்ற முறையில் தொழிற்சங்கங்கள் நம்பிக்கொண்டிருந்தன. எனவே இத்தகைய நிறுவனங்களில் யூனியன் தேர்தல் நடத்த அழுத்தம் கொடுக்க சங்கங்கள் முன் வரவில்லை.

1955 ல் அமெரிக்காவில் பார்ச்சூன் 500 எனப்பட்டியலிடப்பட்ட 500 பெரு நிறுவனங்களில் சங்கமே கிடையாது. ஆனால் 2021-ல் 3 , 2022-ல் 8 என சங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது பார்ட்டியூன் 500 நிறுவனங்களை குறிவைத்து தொழிற்சங்கங்கள் யூனியன் தேர்தல் நடத்த அழுத்தம் கொடுத்து வென்று வருகின்றன.இது வரலாற்று வளர்ச்சியாக பார்க்கப்பட வேண்டிய விசயம்.

இந்த நிறுவனங்களில் உருவான தொழிற்சங்கங்கள்
Do it yourself என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு இருக்ககூடிய பொதுவான கோபங்கள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான மனநிலைகளில் இருந்து அவர்களாக ஒன்றிணைந்து உருவான சங்கங்களாக உள்ளன.அதாவது தொழிலாளர்கள் அமைப்பாக மாறுவதில் தற்போது சிறப்பானதொரு மாற்றம் உருவாகியுள்ளது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தேடிச் சென்று அமைப்பாக்கும் இது Top to Down Approach நடைமுறை.தற்போது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கமாக உருவாகி சங்கத்திற்கு வழிகாட்ட தொழிற்சங்கத்தை அழைத்துக் கொள்கின்றனர்.இது ஒரு ஆக்கபூர்வமான தலைகீழ் மாற்றம் ஆகும்.

இதை தொழிற்சங்க விரோதிகளும் நன்கு அறிந்த விசயமே.2002-ல் லிட்டர் மெண்டல்சன் எனும் தொழிற்சங்கத்தை உடைக்கும் அமைப்பு தொழிற்சங்க எதிர்ப்பாளர்கள் மத்தியில் இது குறித்தான அபாய ஒலியை எழுப்பி முதலாளிகளுக்கு விசுவாசத்தை காட்டியது‌

தற்போது வரலாற்று வெற்றியை கண்டு வரும் இந்த தொழிற்சங்கங்கள் அமேசான், ஸ்டார் பக்ஸ், ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட மிகப்பெரும் கார்ப்ரேட்களிடம் தமது முதல் ஒப்பந்தத்தை வென்றெடுக்கவே நீண்ட காலம் ஆகலாம்.அதற்கு ஏற்கனவே உருவாகியுள்ள தொழிற்சங்கத்தின் அரணும் ஆதரவும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும். பெரும் மூலதனம் கொண்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பொதுவான கோரிக்கையை வென்றெடுப்பது என்ற விசயம் இனி நடக்காத காரியமாக இருக்காது.

மேலும் மிக பலம் வாய்ந்த பொருளாதாரத்தை எதிர்த்து வெற்றி பெற்ற தொழிற்சங்கங்களின் இயக்கங்கள் 2022 இல் தொழிற்சங்கங்கள் குறித்தான செய்திகள் ஊடகங்களில் அதிகளவு வெளிவர காரணமாகியது. ஊடகங்களும் தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கு ஒரு பகுதியாக உள்ளன.

அரக்கன் கோலியாத்தை வீழ்த்திய பிறகு தாவீது பிரபலமானதை போல அமெரிக்காவில் தொழிற்சங்கம் பிரலமாகிவிட்டது.மற்றும் தொழிற்சங்கத்தை உடைக்கும் செயல்பாடு முதலாளித்துவ அமெரிக்காவின் மேல் மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.மற்றும் சாதாரண தொழிலாளர்கள் பல மில்லியனுக்கு சொந்தமான CEO க்களை தோற்கடித்த செய்தி ஊடகங்கள் வாயிலாக பலரைக் கவர்ந்து அவர்களுக்கும் தூண்டுகோலாக அமைந்தது மற்றும் சட்டத்திற்கு புறம்பாக நிர்வாகத்தால் சங்கம் உடைக்கப்படும் செய்தி அவர்களின் பிராண்டுகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. அது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது.

சமூக ஊடகங்களும் தொழிற்சங்க சார்பு‌ உணர்வுகளை தூண்டுவிட்டு வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.ரெட்டிட் என்ற குழு சமூக வலைதளத்தின் வாயிலாக தொழிலாளர்களின் வேலை நிலைமையும் அவர்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் விரோதப் போக்கையும் அம்பலப்படுத்தி வருகிறது. 2020இல் 80 ஆயிரம் என்ற அளவில் இருந்த இவர்களின் பாளோயர்கள் 2022-ல் 2.3 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

இதே போல தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இருக்கக்கூடிய இந்த தி பெர்ஃபெக்ட் யூனியன் தன் யூடியூப் இல் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களை காரணம் இன்றி வேலை நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம் செய்த வீடியோவை தங்களது பக்கத்தில் வெளியிட்டு உலகிற்கு காட்டினர். இதன் மூலம் பெயரளவில் முற்போக்கு பேசக்கூடிய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் உலகின் முன் அம்பலப்பட்டு நின்றது. இதன் காரணமாகவே ஸ்டர்பக்ஸ் நிறுவனத்தில் அதிக முதலீடு செய்துள்ள மற்றும் அதன் துணைத் தலைவராக இருக்கும் ரிசோர்சஸ் சமூக ஊடகங்களை முடக்க வேண்டும் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

ஊடகங்கள் தன்னிச்சையாக தொழிலாளர்களுக்காக எதுவும் செய்துவிடாதுதான். ஆனால் அமெரிக்க அரசியலில் மீண்டும் மீண்டும் தொழிலாளர் பிரச்சினையை பற்றி விவாதிக்க வைக்க கூடிய வேலையை ஊடகங்கள் செய்து வருகின்றன. தொழிற்சங்கம் இல்லாத நிறுவனங்களிலும் சங்கம் அமைக்க முடியும் அதற்கு தங்களது பங்களிப்பை தர முடியும் என்று தொழிலாளர்களை சமூக ஊடகங்கள் உணர வைத்துள்ளது.

தொழிற்சங்கம் என்பது நிலக்கரி சுரங்க தொழிலாளர்களுக்கு மட்டுமே நமக்கானது இல்லை என்பது போன்ற அனுமானத்தை முதலில் அனைவரும் விட வேண்டும். கூகுளில் அதிகளவு தொழிற்சங்கம் அமைப்பது எப்படி என்ற தேடல் 2018க்கு பிறகு அதிகரித்துள்ளது.குறிப்பாக 2022-ல் அதிகளவில் இது குறித்து தேடப்பட்டுள்ளது

அமெரிக்காவில் தற்போது உரிமைகளை பெற நினைக்கக்கூடிய ஒவ்வொரு தொழிலாளியும் தொழிற்சங்கத்தை தேடி சென்று இணைவதை தரவுகளின் மூலமாக நம்மால் காண முடிகிறது.

முதலில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தேடிப்போய் சங்கம் வளர்த்த சூழல் மாறி தற்போது தொழிலாளர்களே அதிக ஊதியம், முறையான சலுகைகள்,மற்றும் உரிமைகளை பெறுவதற்காக சங்கத்தை நோக்கி வர துவங்கி உள்ளனர். தொழிலாளர்களுக்கு எதிராக பலமான பொருளாதாரம் கொண்ட பெரு நிறுவனங்கள் இருந்தும் இன்று தொழிலாளர்கள் உரிமையை வென்றெடுக்க தைரியமாக தொழிற்சங்கத்தை தேடி வருகிறார்கள் அவர்களைப் போலவே பின்பற்றி சங்கங்களும் தைரியமாக முன்னேற வேண்டும்.

(அமெரிக்க தொழிற்சங்கங்களின் வளர்ச்சி குறித்து சமீபத்தில் ஜேக்கோபின் இதழில் 17/05/2023 அன்று வெளிவந்த கட்டுரை)

மொழிபெயர்ப்பு: சேதுசிவன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *