Tamil Marx

அரசியல் விமர்சனம் இந்தியா

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!
  • PublishedMay 7, 2023

இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை கூர்மையாக்கியிருக்கிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை தீர்த்து அமைதியை நிலை நாட்டி இருப்பதாக பிரதமர் மோடியும், அவரது பரிவாரங்களும் வானாளவு குதித்து புளங்காகிதம் அடைந்தனர். ஆனால் அம்மாநிலங்களின் நிலைமையோ எந்தவிதத்திலும் சரிசெய்யப்படாமல் வேறுவிதமான புதிய பிரச்சனைகளைத்தான் சந்தித்திருக்கிறது.

“ஏழு சகோதரிகள்” என்று அழைக்கப்படக்கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். நாட்டின் இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை கூர்மையாக்கியிருக்கிறது.

பாஜகவின் வகுப்புவாத அரசியல்:-

மணிப்பூர் மாநிலம் சமவெளிப்பகுதிகளை விட மலைப்பகுதிகளை அதிகமாக கொண்டது. ஆனால் மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி-நாகா பழங்குடியின மக்கள் தொகையை விட சமவெளியில் வாழும் மெய்டாஸ் மக்களின் எண்ணிக்கை அதிகம். ஏறத்தாழ 51 விழுக்காடு மெய்டாஸ் இன மக்கள் பெரும்பான்மயானோர் இந்துக்கள். பழங்குடியினர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள். குக்கி-நாகா இன மக்கள் நீண்டகால பழங்குடியின பாரம்பரியத்தை பின்பற்றி வருபவர்கள். இந்த இரு சமூக மக்களும் சந்தித்து வந்த முரண்பாடுகளோடு, மாநில பாஜக அரசாங்கம் செய்துவந்த வகுப்புவாத நிகழ்வுகளே தற்போது பெரும்பூதாகரமாக வெடித்து சிதற காரணமாகியிருக்கிறது.

பட்டியல் பழங்குடியின இட ஒதுக்கீடு சர்ச்சை:

பிற்படுத்தப்பட்ட – பட்டியிலன வகுப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மெய்டாஸ் இன மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க கோரி விடுத்த கோரிக்கை தொடர்பான வழக்கில் மாநில அரசிற்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு குக்கி-நாகா மற்றும் இதர பழங்குடியின மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மலைப்பகுதி மாவட்டங்களில் பல இடங்களில் பழங்குடியின அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர்.

அனைத்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் என்ற அமைப்பானது எல்லா பழங்குடியின சமூக மக்களையும் ஒருங்கிணைத்து பழங்குடியினர் உரிமைகளை மீட்டெடுக்க வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. இந்நிலையில் மே 3-ந்தேதி ”பழங்குடிகள் ஒற்றுமை பேரணி” ஒன்றை நடத்தியது. மணிப்பூர் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணி அமைதியாகத்தான் பல இடங்களில் தொடர்ந்தது. மியான்மர் எல்லையையொட்டிய சந்திரசதன்பூர் என்ற மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியது.

அமைதி பேரணியில் கலவரம்:-

பேரணியில் புகுந்து கலவரத்தை தோற்றுவித்த கும்பலானது, 1917-1919-ம் ஆண்டில் பழங்குடிகளின் நில உரிமைக்காக பிரிட்டிஷ் படையை எதிர்த்து மரணமடைந்த பழங்குடியின வீரர்களின் நினைவு சின்னத்தை (ANGLO-KUKHI WAR) சேதப்படுத்தியது. இந்த செய்தி பிற பழங்குடியின மலைப்பகுதிகளுக்கும் பரவவே பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடங்க ஆரம்பித்தன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட தாக்குதல்கள் தீவிரமாகி அப்பாவி மக்கள் மற்றும் அவர்களது குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளானது பழங்குடியின மக்களின் பகுதிகள்தான். இந்த வன்முறையில் 54 பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவரும் இந்த கலவரத்தில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.

பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கை:-

இத்தனை வன்முறை சம்பவங்களுக்கு பிறகே மாநில பாஜக அரசாங்கம் இராணுவத்தின் துணையோடு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. அதிலும் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நீண்ட நாட்களாகவே மாநிலத்தில் அசாம்பாவித சம்பங்கள் நடப்பதற்கான சூழல்கள் உருவாகி வந்ததாகவும், மாநில அரசு அதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததும் தற்போது அம்பலமாகியிருக்கிறது. எங்களது மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் சம்பவங்கள் கவலையளிக்கின்றது. இது பழங்குடிகளுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையிலே நடக்கும் பிரச்சனை அல்ல. மேலும் இது குறித்து தவறான பிரச்சாரம் தொடர்ச்சியாக டெல்லி வரை மேற்கொள்ளப்படுகிறது. இது பிரச்சனையை தீர்க்காமல் மேலும் சிக்கலைத்தான் உண்டாக்கும்’’ என உள்ளூர் நாளிதழான சங்கை எக்ஸ்பிரஸின் தலையங்கம் தெரிவிக்கின்றது. மெய்டாஸ் இனத்தவரை பழங்குடிகள் இட ஒதுக்கீட்டில் கொண்டு வருவதாக எடுத்த முடிவானது, மரவுவழி பழங்குடியின மக்களுக்கு எதிரானதாக அமைந்ததே காரணம் எனவும் அதில் கூறியிருக்கிறது.

அரசியல், பொருளாதார ரீதியில் ஆதிக்கம்:-

பழங்குடியின மக்களுக்கான உரிமைகளை நசுக்காதீர்கள்! பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையும், மலைவாழ் மக்களின் நில உரிமைகளை பறிக்காதீர்கள்! அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள்! இதுவே பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியின் முழக்கங்கள். மேலும் மாநிலத்தில் பெரும்பான்மையான மெய்டாஸ் சமூகத்தினர் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பலம் படைத்தவர்கள். மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களை கொண்ட சமூகத்தினரை, ஏன்? பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இப்படியான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதிகமான மலை நிலங்களை கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் காட்டுப்பகுதிகளில் நிலங்கள் வாங்குவதற்கு பழங்குடிகளை தவிர (அதாவது ST பிரிவினர்) வேறு யாருக்கும் அனுமதியில்லை. சமவெளியில் அதிகம் வசிக்கும் மெய்டாஸ் மக்களை (ST) பிரிவில் சேர்த்தால் எங்களது காடுகளுக்கும், பகுதிகளுக்கும் எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற குரல் குக்கி-நாகா மக்களிடையே ஒங்கி ஒலிக்கின்றது. இதற்கிடையில் மாநில பாஜக அரசாங்கம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிவித்து பழங்குடி பகுதிகளையும், கிறிஸ்தவ தேவாலயஙகளையும் வனப்பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் வேளைகளில் இறங்கியிருந்தது. இந்நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாநில அரசாங்கத்தை எச்சரித்திருந்தன. சமீபத்தில் மணிப்பூருக்கு வருகை தந்த ஒன்றிய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், வனப்பகுதிகளானது எப்போதும் அரசாங்ககளிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் அவை பாதுகாப்பாக இருக்கும் என எரியும் தீயீல் எண்ணெய்யை ஊற்றினார்.

இந்துத்துவ கும்பலின் வகுப்புவாத மோதல்:-

இந்த சம்பவங்களுக்கு இடையில் பெங்களூருவில் உள்ள மணிப்பூர் மாணவர்களுகான அமைப்பானது, போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கொண்டு குக்கி ஆயுதக்குழுக்கள் இந்து கிராமங்களில் (மெய்டாஸ் பகுதிகள்) உள்ள அப்பாவி மக்களை தாக்குகின்றனர் என புரளியை கிளப்பியது. மாநில அரசாங்கமும் பர்மீய போதை கும்பலுடன் இணைந்து கொண்டு நிலங்களை ஆக்கிரமித்து கஞ்சா செடி வளர்ப்பில் சமூக விரோதிகள் ஈடுபடுகிறார்கள் என பழங்குடி தேவாலயங்கள் அகற்றப்பட்டதற்க்கான காரணத்தை நியாயப்படுத்தியது.

மாநிலத்தில் வகுப்புவாத பிளவை ஏற்படுத்துவிதமாக இந்துக்கள்-கிறிஸ்தவர்கள் மற்றும் பெரும்பான்மை-சிறுபான்மை என்றொரு கோணத்தில் இருதரப்பு பிரச்சனையை மத மோதலாக இந்துத்துவ கும்பல்கள் தூபம் போட்டு வளர்த்தன. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அனைத்து தரப்பு மக்களுக்குமானவர்கள் என காட்டி கொண்டு விட்டு, அரியனை ஏறிய பிறகு பெரும்பான்மைவாதத்தை தூண்டிவிடும் வழக்கமான செயலையே மணிப்பூரிலும் செய்தது.

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் பாஜகவினர்:-

மெய்டாஸ் சமூகத்தை சேர்ந்த முதல்வர் பிரேண் சிங் பழங்குடியின பகுதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்த்ததோடு, குக்கி-நாகா இன ஆயுதக்குழுக்களுடன் 2016-ல் இந்திய அரசு செய்திருந்த அமைதி ஒப்பந்தத்தையும் ரத்து செய்தார். அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதென்பது மீண்டும் அரசுடனான மோதலுக்கே இட்டு செல்லும். இது தற்கொலைக்கு சமமானது என பழங்குடியினர் அல்லாதவர்கள் அரசாங்கத்தினையும், முதல்வரையும் விமர்சித்திருந்தனர். சொந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களுமே மாநில முதல்வர் மீதான அதிருப்தியை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவித்திருந்தனர். ஆனாலும் அடங்காத முதலமைச்சர் பழங்குடியின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

இரட்டை என்ஜீனில் கோளாறு?

இன்றைக்கு இந்தளவிற்கு மணிப்பூர் மாநிலத்தில் அசாதாரண சூழல் நிலவுவதற்கு காரணம் பாஜக முதல்வரும், இந்துத்துவ கும்பலின் வகுப்புவாத நடவடிக்கைகளுமே. இரட்டை என்ஜீன் அரசாங்கம் என தம்பட்டம் அடித்து கொள்ளும் பிரதமர் மோடி தங்கள் கட்சி ஆளும் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து வாய் திறக்காமல் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மலர் மழைகளில் நனைந்து கொண்டிருக்கிறார். மணிப்பூர் கலவரத்தினால் உள்துறை அமைச்சர் கர்நாடக தேர்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளை ரத்து செய்துவிட்டதாக வட இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அமித்ஷாவோ தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டதாக சில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மணிப்பூர் பற்றி எரிகிறது! எங்கள் மாநிலத்தை காப்பாற்றுங்கள் என குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கண்ணீர் மல்க பிரமருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். நாட்டின் பல அரசியல் கட்சிகளும் அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் மாநிலத்தில் அமைதி திரும்ப செய்யுமாறு கூறியிருக்கின்றன.

கட்டுரையாளர்:- சைலஸ் அருள்ராஜ் (திருநெல்வேலி DYFI மாவட்ட பொருளாளர்)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *