2000 ரூபாய் நோட்டு தடைக்கு பின் என்ன இருக்கிறது?
கருப்பு பணம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்த வெளிப்படையான நிர்வாகம் வேண்டுமே தவிர பணமதிப்பு நீக்கம் அல்ல!
மே 19ஆம் தேதி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேரடியாக அறிவித்தது. 2000 ரூபாய் தாள்கள் செல்லும் என்றும் அந்த தாள்களை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த கெடு மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2000 தாள்களை டெபாசிட் செய்வது அல்லது அதற்கு இணையாக பிற தாள்களை வாங்கிக் கொள்வது என்ற அவசர நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் பணம் செல்லும் என்றாலும் பரிவர்த்தனைக்கு யாரும் அந்த தாள்களை வாங்கும் முன் வராதது பிரச்சினையாக உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த நடவடிக்கை சிறுகுறி முதலாளிகள் மற்றும் வணிகர்களை நேரடியாக பாதிக்கிறது ஏற்கனவே பணமதிப்பு நீக்கத்தால் நலிவடைந்த சிறு குறு நிறுவனங்கள் மேலும் பாதிப்பை சந்திக்கும்.
இந்த நடவடிக்கைக்கு 2000 ரூபாய் தாள்கள் பொதுவாக பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவதில்லை அச்சடிக்கப்பட்ட தாள்களில் ஆயுட்காலம் நாலு முதல் ஐந்து ஆண்டுகளே என்பது போன்ற ரிசர்வ் வங்கியின் விளக்கங்கள் ஏற்கும்படியாக இல்லை. அதிக மதிப்பு கொண்ட பணத்தாள்கள் பரிவர்த்தனையை எளிமையாக கொண்டு செல்ல உதவும் என்பது எதார்த்தத்தில் உண்மைதான் குறிப்பாக இந்தியாவில் பணப்பரிமாற்றம் பணத்தாள்களில் தான் நடைபெற்று வருகிறது 6 கோடி சிறுகுறு நிறுவனங்கள் மற்றும் 11 கோடி விவசாயிகள் இந்தியாவில் பணத்தை மூலனமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் நடுத்தர குடும்பங்கள் சில அவசர தேவைகளை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக பணத்தை சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.
இதுபோல 2000 ரூபாய் நோட்டுகள் நியாயமான முறையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் கருப்பு பணமாக பயிற்சிக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 10 கோடிக்கு வைத்திருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது இந்தியாவில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் தாள்களில் 3.6 லட்சம் கோடி மதிப்பிற்கான தாள்கள் தற்போது புழக்கத்தில் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. இதை 10 கோடியாக பிரித்தாலும் 36,000 பேரிடம் மட்டுமே பதுக்கி வைக்கப்பட்ட 2000 ரூபாய் தாள்கள் இருக்க முடியும். இந்த சில ஆயிரம் பேரிடம் இருக்கும் பதுக்கப்பட்ட தாள்களை பிடிப்பதற்காக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பானது ஒட்டுமொத்த 140 கோடி மக்களையும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை பெருமளவு பாதிக்கிறது.
2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் என்பது 31 மார்ச் 2018 பிறகு வெகுவாக குறைந்து தற்போது சரிபாதி தாள்களே புழக்கத்தில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி பணம் அச்சடிப்பதை நிறுத்தும்போது இது மேலும் குறையும். எனவே தற்போது 2000 ரூபாய் தாள்களை திரும்ப பெறுவது பொருளாதாரத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது.
இயல்பாகவே 2000 ரூபாய் தாள்கள் பரிவர்த்தனையை எளிதாக்குகிறது. சில ஊழல் பேர்வழிகளால் பதுக்கப்பட்டு புழக்கத்தில் குறையும் போது அதை பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுகிறோம் என்பது மிகவும் தவறான வாதமாகும். குறிப்பாக இந்த 2000 ரூபாய் தாள்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும் ஆனால் பாதியிலேயே அதை திரும்ப பெறுவதற்கு சொல்லும் காரணங்களில் ஒன்று அச்சடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பது ஏற்க தகுந்த தல்ல.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாக பார்த்தோமேயானால் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான கோஷமாக 40% கமிஷன் அரசாங்கம் என பாஜக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முக்கிய பிரச்சாரமாக எதிர்கட்சிகள் முன்னெடுத்தன. தாங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாக எடுப்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்க பண மதிப்பு நீக்கத்தை முன்னெடுத்தது போல இந்த நடவடிக்கையும் பாஜக எடுத்துள்ளது என கூறலாம். ஏனென்றால் பண மதிப்பு நீக்கத்தின் போது அதை புரட்சிகரமான நடவடிக்கையாக நடிகர்கள் உட்பட பலர் புகழ்ந்தார்கள்.( அவர்கள் யாரும் தற்போது எந்த கருத்தையும் கூறவில்லை என்பதும் அப்போது கூட ஏழை எளிய மக்கள் பலர் அந்த கருத்தாக்கத்தை நம்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது)
பாஜகவின்அந்த நடவடிக்கையில் கருப்பு பணம் எதையும் மீட்கவில்லை இனியும் அந்த முறை பயன் தராது என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல கோடிக்கணக்கான சிறுகுறி தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களே பெருமளவு பாதிக்கும் ஏனெனில் இவர்கள் பணம் தாள்களையே பரிவர்த்தனைக்கு பயன்படுத்துகிறார்கள்.வங்கி மற்றும் இணைய பரிவர்த்தனை செய்யும் பெரு நிறுவனங்களை இந்த நடவடிக்கை பாதிக்காது.
அதேபோல சாதாரண உழைக்கும் மக்களில் சேமிப்பாக 2000 ரூபாய் பணத்தாளர்கள் வைத்திருப்பது சிலரே அவர்கள் தவிர பிறருக்கு பெரும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை.ஆனால் அவர்கள் உயரப்போகும் வேலை வாய்ப்பின்மை வருமான இழப்பு முதலியவற்றால் நேரடியாக பாதிப்பை சந்திப்பார்கள். 40% கமிஷனும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.
கருப்பு பணம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்த வெளிப்படையான நிர்வாகம் வேண்டுமே தவிர பணமதிப்பு நீக்கம் அல்ல!
(JNU வணிகவியல் துறையின் முன்னாள் பேராசிரியர் அருண்குமார் the wire இணையதளத்தில் எழுதிய கட்டுரை.)
தமிழாக்கம்: சேதுசிவன்