Tamil Marx

கட்டுரைகள்

(நீதி)மன்றங்கள் யாருக்கானது..?

(நீதி)மன்றங்கள் யாருக்கானது..?
  • PublishedSeptember 1, 2022

⏱️~ 5 நிமிட வாசிப்பு

“வரலாறு நீண்ட நெடியது. ஆனால் அது நீதியை நோக்கி வளைவது” என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை பேரா. விஜய் பிரசாத் குஜராத் கலவரம் தொடர்பான நிகழ்வுகளில் குறிப்பிட்டு குஜராத்தில் மட்டும் நீதியானது அதிகார வர்க்கத்தினரை நோக்கி வளைகிறது என்றார். அது தற்போது இந்தியா முழுவதும் வளைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினாலும், அதன் அமைப்புகளாலும் 2002-ம் ஆண்டு குஜராத்தில் வேட்டையாடப்பட்ட சிறுபான்மை மக்களின் நீதிக்கான போராட்டமென்பது இன்றுவரை தொடர்கிறது. கலவரத்தில் தன் குழந்தை, குடும்ப உறவுகளை இழந்த பில்கிஸ் பானுவுக்கு குஜராத் மாநில அரசின் நீதிபரிபாலணை மீண்டுமொருமுறை அதிர்ச்சியில் உறைய வைத்தருக்கிறது.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் காவல்துறை அதிகாரிகள் முதல் நீதித்துறை வரை சாட்சியங்களை வளைத்து அழிக்க முயன்றதால், இச்சம்பவம் சரிவர விசாரிக்கப்படவில்லை எனவே வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டு, மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இப்படியொரு வழக்கின் இறுதி முடிவை மாநில அரசே தீர்மானிக்கலாம் என கூறியது விசித்திரமானதுதான். இவ்வழக்கினை விசாரணை செய்த காவல்துறையினர் முதல் உடற்கூராய்வு செய்த மருத்துவர் வரை குற்றவாளிகளுக்கும், ஆளும் வர்க்கத்திற்குமே சேவகம் செய்தனர். இறுதியில் சிபிஐ விசாரணையில் அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தண்டைக்குள்ளாகினர். இப்படியான வழக்கின் குற்றவாளிகளைத்தான் குஜராத் அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் -உச்சநீதிமன்றம்-குடியரசு தலைவர் என மாறி மாறி தட்டிக்கழித்த வந்த நீதித்துறை, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு கோரிக்கையினை 1992-ம் ஆண்டு நிவாரண கொள்கைகளின் கீழ் விரைந்து மாநில அரசு முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. மாநில அரசாங்கமோ புயல் வேகத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக்குழு அமைத்து அதன் அறிக்கையின் பேரில் நன்னடத்தை விதிகளை காரணங்காட்டி கலவரக்காரர்களை விடுவித்திருக்கிறது. இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் ஆலோசனைக்குழுவில் உள்ள 10 பேரில் 5 பேர் ஆளும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள்.

இந்திய சுதந்திரத்தின் மைல்கல்லான 75-வது ஆண்டில் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை தகர்க்கும் வேலைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதனை காக்க வேண்டிய நாடாளுமன்றமோ செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களோ உடனடி தலையீட வேண்டிய அவசர வழக்குகளில் கால விரயம் செய்து வருகிறது. காஷ்மீர் 370 பிரிவு நீக்கம், தேர்தல் பத்திரங்கள், குடியுரிமை திருத்தச்சட்டம் என நாட்டின் பன்முகத்தன்மைக்கே ஊறுவிளைவித்துள்ள வழக்குகள் நிலுவையில் இருக்க “இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு உலக நாடுகளுக்கு செல்வேன் என பிரதமர் கூறிய”, பாலியல் வன்கொடுமை வழக்கின் தண்டனை குறைப்பில் நீதிமன்றம் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தியது ஏன்?

ஆளும் பா.ஜனதா கட்சியின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சிக்கும், எதிர்த்தும் போராடும் அரசியல் செயற்பாட்டாளர்களை UAPA எனும் ஆள்தூக்கி சட்டத்தின் மூலமும், NIA மூலமும் மிரட்டி வருகிறது ஒன்றிய அரசாங்கம். பீமா கோரேகான், குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை கைதிகளாகவே வருடக்கணக்காக சிறையிலடைத்து பிணை கூட வழங்க மறுத்துள்ளனர். உத்தரபிரேதசம் ஹத்ராசில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தினை செய்தி சேகரிக்க சென்ற மூத்த பத்திரிகையாளர் சித்திக் காப்பானை சட்ட ஒழுங்கினை சீர்குலைத்ததாக வழக்கினை தொடுத்து 2 வருடங்களாக பிணையும் வழங்காமல் சட்டவிரோதமாக சிறையிலடைத்து வைத்திருக்கிறது உ.பி. அரசும், உயர்நீதிமன்றமும்… பாதிரியார் ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ், வரவரராவ் என மக்களுக்காக குரல் கொடுத்தவர்களின் குரல்வளையை நசுக்கியிருக்கிறது அரசு இயந்திரம். இப்படி தனிநபர் சுதந்திரத்தை பறிக்கின்ற வழக்குகளையெல்லாம் நீதிமன்றங்கள் துரிதப்படுத்தாதது ஏன்?

நாட்டின் குடியுரிமையை பறித்து இஸ்லாமியனரை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, டெல்லியின் ஷாஹீன்பாக்கில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் வெறுப்பு பேச்சுக்களையும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசி கலவரத்தை ஏற்படுத்தியதாக உமர் காலித் என்ற செயற்பாட்டாளரை எவ்வித ஆதாரமுமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். உமர் பிணை கேட்டு பலமுறை முறையீட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள், சாட்சியம் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படாத நிலையிலும் சிறைவாசம் அனுபவிக்கிறார். இதே நீதித்துறை தான் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதற்கான வலுவான காரணங்கள் இருந்தும், போலீஸ் விசாரணை கூட முடியாத நிலையில் மருத்துவ அறிக்கைகளை சுட்டிக்காட்டி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதோடு இது கொலையல்ல தற்கொலை என வழக்கினையே முடிக்குமளவிற்கு தீவிரம் காட்டியிருக்கிறது. அதிகார மையத்தினால் எந்தளவிற்கு நீதி தேவதையின் தராசு முள் அநீதியின் பக்கம் அப்பட்டமாக சாய்க்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்துவரும் சூழலில் பாலியல் வழக்குகள் மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வு குறித்து நெறிமுறைகளை வழங்க வேண்டிய நீதிமன்றங்களே இவை குறித்தான முற்போக்கான பார்வையை கொண்டிருக்கவில்லை. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், பெண் ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு உட்படுத்துவது அவரது கணவராக இருப்பாரெனில் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படாது என்று தீர்ப்பளித்திருக்கிறது. தந்தையே மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சூழல் நிலவுகையில் இம்மாதிரியான தீர்ப்புகள் சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், அவை நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நீதிமன்றத்திற்கே முதன்மையானது.

கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில், மகள் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு புகாரளிக்க சென்ற தாயை காவல்துறை அதிகாரி ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தில் ஈடுப்பட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறை சிறைப்படுத்தியிருக்கிறது. இதில் பலரும் அப்பாவி ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள், தலித்துகள். போட்டித்தேர்வு எழுதிவிட்டு கலவரம் நடந்த பகுதி வழியாக வீடு திரும்பிய சிசிடிவி காட்சியினை வைத்து இரண்டு பேரை வன்முறையில் ஈடுபட்டவர்கள் என கைது செய்திருக்கிறது. இதுதான் நீதி விசாரணை செய்ய வேண்டிய காவல்துறையின் லட்சணம். ஒருபக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவசர அவசரமாக புலன் விசாரணை கூட முடியாத நிலையில் ஜாமீன் வழங்கி விடுவித்திருக்கிறது நீதிமன்றம். மறுபக்கம் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இவர்கள் யார் பக்கம்? அதிகார மையத்தின் பக்கத்தூண்களாக செயல்பட தொடங்கியிருக்கிறார்களோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழ தொடங்கியிருக்கிறது.

நாட்டின் அரசியலமைப்பு தொடங்கி மாநில உரிமைகள், தனிநபர் சுதந்திரம் என பல்வேறு வகையான தாக்குதல்களை இந்தியாவின் குடிமக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யவேண்டிய நீதிமன்றம் தனது பொறுப்பை தட்டி கழிக்காமல், உரிய நேரத்தில் நியாயத்தின் பக்கம் நின்று அதிகார வர்க்கத்தினரை நோக்கி கேள்வி கணைகளை தொடுக்க வேண்டிய அவசியமான காலமிது.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *