மே தினம் அறிவோம்!
முதலாம் அகிலம் கலைக்கப்பட்டு சோஷலிச மற்றும் தொழிலாளர் கட்சிகளால் இரண்டாம் அகிலம் தோற்றுவிக்கப்பட்டது. 1891-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் அகிலத்தின் தீர்மானம் படி மே 1-ம் நாள் சிகாகோ போராட்டத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் சர்வதேச தொழிலாளர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.
இன்றைக்கு பொதுவாக இளம் தலைமுறையினருக்கு மே தினம் என்றால் உழைப்பாளர் தினம் என்பதும் அரசு விடுமுறை நாள் என்று தான் பெரிதும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மே தினம் எனபது உலகில் பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் உதிரம் சிந்தி வேலை நேரம் குறைப்பிற்காக போராடி பெற்றார்கள். அந்த போராட்டத்தின் தொடர்ச்சியே மே தினம் ஆகும் அப்படியான தொழிலாளர்கள் வர்க்கப்போரட்ட வரலாற்றை சுருக்கமாக காண்போம்.
முதன்முதலில் தொழிற்சங்கம்
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்திய தொழிலாளர்களின் போராட்டமே மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. 1806-ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தின் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட போதுதான் தொழிலாளர்களின் கஷ்டங்களும் அவர்களின் உழைப்பின் மீதான சுரண்டலும் உலகுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்த நகரின் இயந்திரத் தொழிலாளர்கள் ஆரம்பித்த சங்கம்தான் உலகின் முதல் தொழிலாளர் சங்கம் என்கிறது வரலாறு. தொழிற்சங்கம் அமைவதற்கு அடிப்படையான காரணங்கள் ஊதிய உயர்வு என்பதாக இருந்தாலும் கூட வேலை நேரம் குறைப்பு என்பதும் ஒரு கோரிக்கையாகவே முன் வைக்கபட்டது பத்து மணி நேர வேலை நாள் என்ற கோரிக்கையை முதன் முதலாக வைத்த பெருமை இச்சங்கத்துக்கே உண்டு.
பத்து மணி நேர வேலைப்போராட்டம்
1820 மற்றும் 30-களில் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று பல வேலைநிறுத்தங்கள் நடந்தன. பத்து மணி நேர வேலைநாள் என்ற கோரிக்கை பல தொழில் மையங்களில் முன் வைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் தொழிலாளர்கள் பதினெட்டில் இருந்து இருபது மணிநேரம் வரை வேலை வாங்கபட்டார்கள் என்பதை வொர்கர்ஸ் மேன் அட்வகேட் எனும் பத்திரிக்கை வெளியிட்டது.
இதனால் பத்துமணி நேர வேலை நாளுக்கான இப்போராட்டங்கள் விரைவிலேயே ஒரு இயக்கமாக உருவெடுத்தன. 1837-ல் ஏற்பட்ட நெருக்கடி ஒரு தடையாக இருந்தபோதிலும் வேன் பியுரன் தலைமையிலான அரசாங்கம், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பத்து மணி நேர வேலைநாள் அறிவித்தது. எல்லாருக்கும் பத்து மணி நேர வேலை நாள் என்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அநேக தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைந்தது.
எட்டு மணி நேர வேலைக்கான போராட்டம்
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்து கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து இயங்கவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை குலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிகாகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
1866, ஆகஸ்டு 20-ஆம் நாள் பால்டிமோர் என்னுமிடத்தில் தேசிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இதன் தலைவராக வில்லியம் எச். சில்விஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார், இளைஞரான இவரது தலைமையில் தேசிய தொழிற்சங்க இயக்கம் கீழ்கண்ட 8 மணி வேலை நேரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
“அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட தீர்மானிக்கிறோம்”.
1868-ல் அமெரிக்க காங்கிரசும் இதே போன்ற ஒரு சட்டத்தை இயற்றியது.
சிகாகோ தொழிலாளர்கள் தியாகமும், மேதினமும்
மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டன கூட்டத்தை நடத்தினர். ஆனால், அரசும் முதலாளிகளும் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கவில்லை. வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து அரசின் அடக்குமுறையைக் கண்டித்து மே 4-ம் தேதி, ஹே மார்க்கெட் (Hay market) சதுக்கத்தில் கண்டன கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.
அமைதியாக கூடிய மக்கள், தலைவர்களின் பேச்சுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். வன்முறை நடக்க வாய்ப்பேயில்லை என அங்கிருந்தவர்கள் நம்பிக்கொண்டிருக்க எங்கிருந்தோ எறியப்பட்ட குண்டு ஒன்று ராணுவ அதிகாரி ஒருவரை கொன்றது. யார் இதை செய்தது என்பதைக் கூட விசாரிக்காமல் காவலர்கள் கூட்டத்தினரை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். இதில் பதினைந்து தொழிலாளர்கள் பலியானார்கள். நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் மிகமுக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் எட்டுமணி நேர வேலைக்கான் போராட்டம்
பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்தியாவில் 1862 ஆம் ஆண்டு ஹவுரா ரயில்வே தொழிற்சங்கம் வேலை நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க கோரி மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை செய்தது. வேலை நேரம் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற முதல் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுதான். சோவியத் புரட்சிக்கு பிறகு அதனால் உந்தப்பட்ட தோழர் சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளால், மெட்ராஸ் லேபர் யூனியன் 1918-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலக தொழிலாளர் அமைப்பு உருவானது.
1920-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அகில இந்திய தொழிலாளர் காங்கிரஸ் உருவானது. 1921-ல் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான தொழிற்சங்கங்கள் சுமார் 400 வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டன. 1924 தொழிற்சங்கத்தினரின் மாபெரும் வேலை நிறுத்தங்கள், தொடர் போராட்டங்கள் டாங்கே,எம்.என்.ராய் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களால் தலைமையேற்று நடத்தப்பட்டது. இப்போராட்டங்களில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வகை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் உயிரை இழந்தார்கள்.
இறுதியில், தொழிலாளர்களின் போராட்டம் வென்றது.
பிரிட்டிஷ் அரசு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிசெய்ய “தொழிற்சங்க சட்டத்தை” 1926 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. 1928 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகளால் நடத்தப்பட்ட தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் மிகப்பெரிய பலனை தந்தது. கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டத்தை அடுத்து, பிரிட்டிஷ் அரசு, தொழிலாளர்களின் பணி நிலையில் எழும் தகராறுகளை தீர்ப்பதற்காக 1929 ஆம் ஆண்டு The Trade Disputes Act என்ற சட்டத்தை கொண்டுவந்தது. இந்த சட்டத்தின்படி, தொழிலாளர்களின் வேலை நீக்கம் உட்பட பல்வேறு பிரச்சனைகளை நீதிமன்ற விசாரணை மூலம், தீர்வுகான வழிவகுத்தது.
மெட்ராஸ் அரசாங்க அச்சகத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஊதியமில்லாத கட்டாய மிகை நேரப்பணியை எதிர்த்து,மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை 1903 ஆம் ஆண்டு தொழிலாளர்கள் நடத்தினார்கள். சுமார் 6 மாத காலம் நீடித்தது.
இவ்வாறு பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும், இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள், தொழிலாளர்கள் தலைமையில் எழுந்த கப்பற்படை எழுச்சியின் பின்னணியில், இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய சூழலில் இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் இறுதிசெய்வதற்கு முன்பாகவே, 1947 ல் தொழிற்தகராறு சட்டமும், 1948 ல் 8 மணி நேர வேலையை நிர்ணயம் செய்த “தொழிற்சாலைகள் சட்டமும்” கொண்டுவரப்பட்டது. 8 மணி நேர வேலையை உறுதிசெய்ய அரசியலமைப்பு சட்டத்தில் வழிகாட்டுதல் நெறிமுறைகளிலும் இணைக்கப்பட்டது.
இந்தியாவில் மே தினம்
இந்தியாவில் முதன் முதலில் 1923-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடி தோழர் சிங்காரவேலர்தான் மெட்ராஸ் மாகாணத்தில் மெரினா கடற்கரையில் செங்கொடி ஏற்றி மேதினம் கொண்டாடினார். இந்த நாளின் நினைவாக மெரினாவில் அண்ணா சதுக்கத்தின் எதிரில் இருக்கும் உழைப்பாளிகள் சிலை 1959-ம் ஆண்டு எழுப்பப்பட்டது. 1957-ல் கேரளாவில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர் இ.எம்.எஸ் தலைமையிலான் அரசு சர்வதேச தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு விடுமுறை நாளாக மே முதல் நாளை அறிவித்தது
மேதினத்தை போராட்டத்துடன் கொண்டாடுவோம் .
எண்ணற்ற தொழிலாளர் தோழர்களின் உயிரை குடித்து பெறப்பட்ட உரிமை 8 மணி நேர வேலை ! இன்று மீண்டும் 12 மணி நேர வேலைக்கான முன்மொழிவுகள் மத்திய அரசின் கார்பரேட் ஆதரவு கொள்கையால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்தவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் 6 மணி நேர வேலை, 4 ஷிப்ட் முறை என்ற கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எழும் இந்த காலத்தில், நம் உரிமைகளை பறித்து 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ள மோடி அரசு முயற்சி செய்கிறது.ஏதோ எளிதாக கிடைத்துவிடவில்லை 8 மணி நேர வேலை உத்தரவாதம்.
அதை காத்திட இந்த மே தினத்தில் உரிமை ஏற்போம்! போராட்டத்தில் பிறந்த மேதினத்தை போராட்டதுடன் கொண்டடுவோம்.
கட்டுரையாளர்: தௌ.சம்சீர் அகமது (SFI தமிழ்நாடு துணைத்தலைவர்)