ஷ்டிராவுஸ்வாதியாக இளம் ஏங்கெல்ஸ்..
காரல் மார்க்சின் தளபதி என்று அழைக்கப்படும் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் அவர்களின் 201-வது பிறந்தநாள் இன்று. 1820 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி எட்டாம் நாள் பிரஷ்யாவின் ரெயின்லாந்து மாகாணத்தில் பிறந்தார். அவரது குடும்பம் பழமைவாத கிறிஸ்தவ குடும்பம் ஆகும்.அதே போது அவருடைய தந்தை தீவிர மதவாதியாகவும் கொடுமைக்காரராகவும் இருந்து வந்தார். அவரது குடும்பம் பெரும் ஆலைத் தொழிலையும் நடத்தி வந்தது. அவருடைய தந்தை பெரிய ஆலை முதலாளியாகவும் திகழ்ந்து வந்தார். பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஏங்கெல்சின் இளமைக்காலத்தில் ஜெர்மனி குறிப்பாக ரெயின்லாந்த் மாகாணம் முதலாளித்துவத்தை நோக்கி வளர்ந்துக்கொண்டிருந்தது. பிரெஞ்சு புரட்சியின் தாக்கம் செலுத்திய பகுதியாக இருந்த ரெயின்லாந் மாகானத்தில் நிலபிரபுத்துவ பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டு அன்றை காலத்தில் மிகவும் முற்போக்கான சட்டம் என்று கருதப்பட்ட நெப்போலியன் சட்ட தொகுப்பு அமல்படுத்தப்பட்டது.
பழமைவாத கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த ஏங்கெல்சை தனது குடும்பத் தொழிலை கவனித்துக் கொள்ளும் பொருட்டு தொழிலதிபராக வளர்க்க அவர் தந்தை ஆசைப்பட்டார். இதனால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஏங்கெல்சை மேற்படிப்பை தொடர விடாமல் தனது அலுவலகத்தில் வேலை செய்து கற்றுக் கொள்ளுமாறு கூறி வேலைக்கு அனுப்பி விட்டார் பின்னர் பார்மெனில் உள்ள ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பினார்.
இளம்வயது ஏங்கெல்ஸ் வளர்ந்த ரைன்லாந்த் மாகாணமானது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வேகமாக மாறி வந்து கொண்டிருந்தது. அங்கே புதியதாக தோன்றிய பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தையும், கூடவே பட்டறைத் தொழிலாளர்கள், விவசாயிகள், குட்டி முதலாளித்துவவாதிகள் எல்லோரும் திவாலாவதும் என இவற்றையெல்லாம் கண்டு வளர்ந்த ஏங்கெல்ஸ் தனது 19ஆம் வயதில் எழுதிய ஒரு கட்டுரையில் ஆலைத் தொழிலாளர்களின் வேதனைகளை குறிப்பிடுகிறார். இளம்வயதிலேயே முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படுத்திய கொடுமைகளை புரிந்துகொண்ட ஏங்கெல்ஸ் தனது தந்தையின் வற்புறுத்தலால் வணிக நிறுவனத்தில் மனம் ஒப்பாமல் வேலைக்கு சேர்ந்தார்.
பள்ளி காலத்தில் படிப்பிலும், விளையாட்டிலும், கத்திச்சண்டை பயிற்சியிலும், பல மொழிகள் கற்றுக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டிய எங்கெல்ஸ். பாடபுத்தகம் மட்டுமல்லாமல் நூலகத்திலிருந்து நூல்களை எடுத்து வந்து தந்தைக்கு தெரியாமல் படிக்கும் பழக்கமும் வைத்திருந்தார். அப்படியான ஒரு நூலை அவர் தந்தை கண்டுபிடித்ததை குறித்து தனது மனைவிக்கு -ஏங்கெல்சின் தாய்க்கு- எழுதிய ஒரு கடிதத்தில் அவருடைய தந்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்;
வெளிப்பார்வைக்கு உனக்குத் தெரிந்த படி அவன் நல்லகுணம் உள்ளவனாக இருக்கிறான் முன்பு அவன் என்னிடம் நிறைய தண்டனை பெற்றிருந்த போதும் இப்போது தண்டனை கிடைக்கப் போகிறது என்று பயம் காட்டினாலும் அவன் கீழ்ப்படிய மறுக்கிறான். இன்று அவனுடைய பெட்டியில் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஆபாச புத்தகம் ஒன்றை மீண்டும் கண்டு திடுக்கிட்டேன் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபு வம்ச வீரர்களை பற்றிய நவீனம் அது.. கடவுள் அவனை காப்பாற்றட்டும்….!
இப்படியான முரட்டு தந்தையின் வற்புறுத்தலுக்கு இணங்கி வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் எங்கெல்ஸ். ஆனால் தொழிலதிபர் ஆகவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் அவருக்கு இருக்கவில்லை. எனவே தனது ஓய்வு நேரங்களில் நூல்கள் படிப்பதற்கு செலவிட்டார். வர்த்தக நகரமான பார்மெனில் ஆங்கிலேய, டச்சு, பிரஞ்சு பத்திரிகைகள் அவருக்கு நிறைய கிடைத்தது. தனது ஓய்வு நேரத்தை படிப்பதில் கவனம் செலுத்திய ஏங்கெல்ஸ் அறிவார்ந்தவராக தன்னை உயர்த்திக் கொண்டார்..
பொறுப்பில்லாமல் இருக்கும் தனது மகனைக் கண்டு கோபமடைந்த அவரது தந்தை தனது மகனுக்கு ஆன்மிகத்தை கற்றுக் கொடுக்கும் விதமாக பார்மன் நகர பாதிரி ஒருவரின் வீட்டில் குடியமர்த்தினார். ஆனால் அங்கே குடி சென்ற பிறகுதான் கிறித்துவத்தின் மீதான நம்பிக்கைகளில் இருந்து முற்றிலுமாக ஏங்கெல்ஸ் வெளியேறினார். அந்த காலகட்டத்தில் தான் படித்த டேவிட் ஸ்ட்ராவுஸ் எழுதிய ”இயேசுவின் வாழ்க்கை” என்னும் நூல் குறித்து, அது தன்னை எப்படி மாற்றியது என்பது குறித்து தனது நண்பனான வில்ஹெம் கிரேபருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் ஓ! வில்ஹெல்ம் இந்த நூலை வாசித்ததில் இருந்து நான் ஒரு ஷ்டிராவுஸ்வாதியாக மாறிப்போனேன், ஷ்டிராவுசின் செல்வாக்கினால் மத நம்பிக்கை, “ஓட்டைகள் நிறைந்த கடற்பஞ்சு போல் ஆகிவிடுகிறது” என்று ஏங்கல்ஸ் அந்த கடிதத்தில் குறிப்பிடுகிறார்.. எங்கெல்ஸ்சின் அந்த சுவை மிகுந்த எழுத்தின் மூலத்தை ஆங்கிலத்தில் அப்படியே கீழே தருகிறேன் நீங்களும் படித்து ஏங்கெல்ஸ் அந்த நிமிடத்தில் எவ்வளவு உற்சாகமாக இருந்திருப்பார் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்..
O Wilhelm, Wilhelm, Wilhelm! So at last we are hearing from
you. Now, manikin, now you’re going to hear something: I am
now an enthusiastic Straussian. Just you come here, I have now
got arms, shield and helmet; now I am secure, just you come here
and I’ll give you such a drubbing, despite all your theologia, that
you won’t know where to run. Yes, Guillermo, jacta est alea? I am
now a Straussian; I, a poor, miserable poet, have crept under the
wing of the genius David Friedrich Strauss. Just hear what a fellow
he is! There lie the four gospels in a crisp and colourful chaos;
mysticism lies in front of them and adores them — and behold, in
comes David Strauss like a young god and brings the chaos out
into the light of day and — Adios faith! It is as full of holes as a
sponge.
இப்படியாக ஏங்கல்ஸ் நாத்திகவாதியாக மாறியபோது அவருடைய வயது 19. அவர் நாத்திகவாதியாக மாறியிருந்தாலும் தொழிலாளர்களின் வாழ்க்கையை குறித்து அதிகம் கவனித்து வந்தார்.1839 ல் அவர் எழுதிய கட்டுரையில்-உப்பெர்தல் கடிதங்கள்– பார்மென்,எல்பெர்பெல்து நகரங்களின் தொழிலாளர்களின் நிலைமையை குறித்து மிக துல்லியமாக எழுதியுள்ளார்.19 வயதிலேயே தொழிலாளர்களின் துன்பங்களை பற்றி அறிந்துக்கொண்ட ஏங்கெல்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காகவே வாழ்ந்து வந்தார். கிருத்துவ மத நம்பிக்கையில் இருந்து விடுபட்ட ஏங்கெல்ஸ் தீவிரமான தத்துவார்த்த நூல்களை வாசிக்க தொடங்கினார். அயல்நாட்டு இலக்கியங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஏங்கெல்ஸ் அதன் மூலம் தனது உலகக் கண்ணோட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டார். அது அவரை ஹெகலிடம் கொண்டு சென்றது. அயல் மொழி இலக்கியங்களை வாசித்த காரணத்தால் அவர் 25 மொழிகளை கற்றுத்தேர்ந்தார். தனது தங்கைக்கு எழுதிய கடிதத்தில் தன்னால் 25 மொழிகளை படிக்க இயலும் என்று குறிப்பிட்டிருந்தார்.பல மொழிகளை கற்று தேர்ந்தாலும் தாய்மொழியின் மீது தீராத பற்று கொண்டவராகவே ஏங்கெல்ஸ் கடைசிவரை வாழ்ந்து வந்தார்.