பெண்ணின் சமூக நிலையும், சுருங்கும் பொதுவெளியும் – ஆர்.பத்ரி
நமது அரசியல் சாசனத்தின் 15ஆவது பிரிவு . “எந்தவொரு தனிநபரையும் அவரின் மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் அவர் பிறந்த இடம் ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகவோ அல்லது இவற்றில் ஏதோ ஒன்றினை அடிப்படையாகக் கொண்டோ, அவருக்கு எதிராக எவ்விதத்திலும் பாகுபாடு காட்டப்படக்கூடாது” என அறுதியிட்டுச் சொல்கிறது. ஆனால் அரசியல் சாசனத்தின் இத்தகைய உறுதிமொழி எந்தளவு அமலாக்கத்தில் உள்ளது என்பதும் நடைமுறையில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்பதெல்லாம் ஒரு கேள்விக்குறியே. மத, இன, சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறையென்பது இன்னமும் இங்கு தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகளில் மத, சாதிய, இன ஒடுக்குமுறை கள் குறித்த விவாதங்கள் முன்னுக்கு வருவதோடு, இவற்றிற்கு எதிரான போராட்டங்களும் ஆங்காங்கே பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் சமூகத்தில் நிலவுகிற பாலின பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறை குறித்த விவாதங்களோ அல்லது எதிர்ப்பியக்கங்களோ ஒப்பீட்டளவில் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது. இதர ஒடுக்குமுறைக ளுக்கு எதிராகப் போராடுகிறவர்கள் கூட இத்தகைய பாலின பிரச்சனைகளுக்கான போராட்டங்களுக்கு உரிய அழுத்தம் தருவதில்லை. பாலின பாகுபாடு அல்லது பாலின ஒடுக்குமுறை போன்ற பிரச்சனை களில் பெண்கள் அமைப்புகள் மட்டுமே பெரும்பா லும் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடு கின்றன. பாலின பாகுபாடு அல்லது பாலின ஒடுக்கு முறை பெண்களுக்கான பிரத்யேக பிரச்சனைகள் மட்டுமே அல்ல. மாறாக அதுவும் ஒரு சமூகப் பிரச்ச னையே எனும் புரிதல் மேம்படும் போதுதான் இப் பிரச்சனைகளில் அனைத்துத் தரப்பினரையும் ஈடுபடுத்துதல் என்பது சாத்தியமானதாகும்.
முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மேற்கட்டுமானத்தில், பொதுவாக நிலவுகிற பல்வேறு வடிவங்களிலான சமூக ஒடுக்குமுறைகளில் ஒன்றே பாலின ஒடுக்குமுறையும், சமூகத்தில் நிலவுகிற அனைத்து வித ஒடுக்குமுறைகளையும் நீக்குவ தற்கான கூட்டுப்போராட்டங்கள் வலுவடையாமல், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஒடுக்குமுறையை மட்டும் எளிதில் ஒழித்து விடமுடியாது. முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக்கூறுகள் செல்வாக்கு செலுத்துகிற இச்சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களும், பாலின ஒடுக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதானிருக்கி றது. இச்சமூகம் சந்திக்கிற மிகப்பிரதானமான பிரச்ச னைகளான சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வு, வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, சமூக வன்முறைகள், போர்ப் பதற்றம் உள்ளிட்ட அரசியல் பிரச்சனைகள் என இவை அனைத்திலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். பின்வரும் அம்சங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன. உலகம் முழுவதிலும் 73.6 மில்லியன் பெண்கள் (அதாவது ஏழரை கோடி) ஏதேனும் ஒரு வகையில் தங்கள் வாழ்விணையர் மூலமாகவோ, அல்லது இதரர்கள் மூலமாகவோ வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய தாக்குதல் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இயல்பானதொரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், உலகம் முழுவதி லும் 142.6 மில்லியன் பெண்கள் (14 கோடி பேர்) காணாமல் போயுள்ளனர். 1970 ஆண்டுவாக்கில் இதன் எண்ணிக்கை 61 மில்லியன் என்பதிலிருந்து தற்போது அது இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதில் இந்தியாவின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் என்பது கவனிக்கத்தக்கது.
2018ஆம் ஆண்டில் உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு, ஊதியம், பொதுவெளியில் பெண்களுக்கான இடம் ஆகிய அம்சங்களைக் கணக்கில் கொண்டால், பாலின இடைவெளி விகிதம் முதலாளித்துவ நாடுகளில் பெருமளவில் அதிக ரித்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. அந்த நாடுகளில் ஒரே விதமான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தில் இடைவெளி நீண்டகால மாக நீடிப்பதாகவும், அது மேலும் அதிகரிப்பதாகவும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பணித்தன்மைகளில் ஒயிட் காலர் பணி, புளூ காலர் பணி என பல பிரிவு களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கிடை யிலான ஊதிய விகிதங்களில் ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. ஒயிட் காலர், புளூ காலர் என பலவகை யான பணித்தன்மைகளுக்கு இடையேயான பல்வேறு முரண்பாடுகள் ஒருபுறம் நீடிக்கும் அதே சமயம், அனைத்து பணித்தன்மைகளிலும் கண்ணுக்கு தெரியாமல் பெண்களுக்கான “பிங்க் காலர்” என ஒரு வகையிலான பாலின பாகுபாடும் கூடவே ஒளிந்து கொண்டிருக்கிறது. அதாவது உயர் பொறுப்போ அல்லது கடைநிலைப் பணியோ அது பெண்கள் பணியாற்றுகிற இடங்களாக இருந்தால் அது இரண்டாம் பட்சமாகத்தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறைக ளில் பாலியல் வன்மம் என்பது ஒரு பிரதானமான ஆயுதமாக தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டே வருகிறது. தற்போது சமூக ஊடகங்களின் மெய்நிகர் தளத்திலான (Violences on Virtual Space) பாலியல் வன்மமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை நேரடியாகத் தொடாமலேயே அல்லது பார்க்காமலேயே கூட இத்தகைய மெய்நிகர் தளங்களின் மூலம், பாலியல் வன்மத்தை தொடுக்கவும், அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கச் செய்யவும் முடியும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் கூடுதலாக இணைந்தவர்க ளில் பெண்களின் எண்ணிக்கையே பிரதானமாக உள்ளது. அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் 47 மில்லியன் (4.7 கோடி) பெண்கள் இப்பட்டிய லில் புதிதாக இணைந்துள்ளனர். அதாவது உலக அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளுப்படுவர்க ளின் எண்ணிக்கையில் பெண்களே மிக அதிகமான வர்கள் எனவும், வறுமை என்பது பெண்மயமாக்கப் படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக 40 சதவீதம் பெண்கள் தங்கள் பேறு காலத்தில் ரத்தச் சோகை நோய்க்கு ஆளாவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 810 பெண்கள் பேறு காலத்தில் உயிரிழப்பதாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆயிரம் மரணங்களிலும் 5 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளில் இறப்பு விகிதம் என்பது 13.5 சதவீதம் எனும் அளவில் உள்ளது. சாதிய பிற்போக்குத்தனம் மற்றும் பெண்ணடிமைத் தனம் நிறைந்திருக்கும் இன்றைய சமூகப்பின்னணி யில் பெண் சிசுக்கொலைகளும், ஆணவப் படு கொலைகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே யிருக்கிறது.
இதைப்போன்ற பட்டியலும், தரவுகளும் ஏராள மாக உள்ளன. இத்தகைய அவலங்களுக்கு எதிராக பொதுவாகவும் ஒவ்வொரு பிரச்சனையிலும் குறிப் பாகவும் கண்டனக்குரலையும், எதிர்ப்பியக்கங்களை யும் வலுப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று. ஆயினும் அதே சமயத்தில் மற்றொரு அம்சத்தையும் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டி யிருக்கிறது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை வலுப்படுத்துவதோடு, அவற்றை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் பழமைச் சிந்தனை மற்றும் முதலாளித்து வத்தின் நவீன பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களோடும் இணைப்பதும் மிக மிக அவசியமானது. ஏனெனில், அனைத்து வித மான சமூக ஒடுக்குமுறைகளையும் முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அது சமத்துவ சமுதாயத்தில் மட்டுமே சாத்தியமாகும். எனவே சிறியதும், பெரியது மான ஒவ்வொரு ஆறும் கடலில் சங்கமிப்பதைப் போல, தற்போது நடைபெறும் சமகாலப் பிரச்சனைக ளுக்கெதிரான ஒவ்வொரு தனித்த போராட்டமும், சமூக மாற்றத்திற்கான பெரும் போராட்டங்களோடு சங்க மிக்கிறபோதுதான் அனைத்து சமூக ஒடுக்குமுறைக ளுக்கும் முற்றாக முற்றுப்புள்ளி வைக்க இயலும்.