Tamil Marx

கட்டுரைகள்

ChatGPT: மனித சமுதாயத்தின் தார்மீக நெறிகளை கொண்டிருக்கிறதா?

ChatGPT: மனித சமுதாயத்தின் தார்மீக நெறிகளை கொண்டிருக்கிறதா?
  • PublishedApril 21, 2023

தொழில்நுட்பமானது மனித உழைப்பு ஆற்றலை வேகப்படுத்தும் தன்மையை கொண்டது. ஆனால் முதலாளித்துவ சமூகமானது அதனை தனது லாப நோக்கத்திற்காகவே சுரண்டுகின்ற சூழலில் மனித சமுதாயத்தின் ஒழுக்க நலனையும் கேள்விக்குள்ளாக்கும் கட்டத்தையும் ChatGPT-யானது எட்டியிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது. எந்தவொரு கேள்விக்கான/ புதிய விஷயங்களையும் இணைய மென்பொறி தேடலில் நொடி பொழுதில் வழங்குவதில் கூகுள் என்ற நிறுவனம் கோலோச்சியது. தற்போது அந்த இடத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்க OpenAI தொடங்கியிருக்கிறது. மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாமே மாறுகின்ற தன்மையை கொண்டது எனும் மார்க்சின் மகத்தான கூற்றுகிணங்க மனித சமுதாயம் தனது உழைப்பு சக்தியின் ஆற்றலால் தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களை படைத்து வருகிறது.

AI – செயலிகள்:-

OpenAI நிறுவனம் ChatGPT, BingAI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை 2015-ம் ஆண்டிலிருந்து உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தது. இணைய தேடல் தகவல் தரவு முறையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் கேட்கிற/தேடுகிற தகவல்களை ஒரே நேரத்தில் மொத்த தகவல்களையும் வழங்குகிறது. மேலும் கவிதைகள் எழுதுதல், ஒருவருடன் மனித தன்மையிலான உரையாடலை நிகழ்த்துதல் மற்றும் படிப்பு சார்ந்த, மருத்துவம், கணிணி இயங்குமுறை என இதுவரை உலகில் நடந்த, இருக்கின்ற அத்தனை விஷயங்களையும் இந்த செயலிகள் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதற்கு, பல்கலைக்கழகங்களில் விரைவான தகவல்களை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கும், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவர்களின் மேற்பார்வையின்றி மருத்துவம் பார்ப்பது என நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை இதன் பயன்பாடானது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

மனித சார்பு நிலை:-

இந்த செயலிகள் வழங்குகின்ற தகவல்கள் கடந்த கால நிகழ்வுகள், செய்திகள், நடைமுறை அனுபவங்களில் இருந்து கிடைக்க பெறும் அனுபவங்களின் அனுமானத்திலேயேதான் பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. இவை எல்லா நிகழ்வுகளிலும் சரியானதுதானா, பயனுள்ள தகவல்களைத்தான் வழங்குகிறதா என்ற சிக்கலும் தற்போது எழுந்துள்ளன.

தொழில்நுட்பங்கள் எப்போதும் மனித ஆற்றலை மிஞ்சுகின்ற ஒரு விஷயமாகவே கருதப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவையும் மனித உழைப்பினால் உருவாக்கப்பட்டவைதான் அதற்கென தனி சிந்தனா ஆற்றல், முடிவெடுக்கும் திறன் இருக்கிறது என அறுதியிட்டு கூறமுடியாது. இந்த ChatGPT செயலியில் கூட மனித சார்பு தன்மையே அதிகம் பின்பற்றப்படுகின்றன. இந்த சமூகத்தில் இருக்கின்ற ஆணாதிக்க, போலியான உணர்வுகளையுமே இவை பிரதிபலிக்கின்றன உதாரணமாக மெக்சிகர்களை விட அமெரிக்கர்களே பலமானவர்கள், வெள்ளை நிறத்தவர்களே சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்பது போன்ற இனவெறி கருத்துக்களையே தொழில்நுட்பங்களும் வழங்குகின்றன. இதற்கென தனித்த கற்பனை ஆற்றலோ, பகுத்தறியும் திறனோ இருப்பதாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தனிநபர் உரிமை கேள்க்குறியாகிறது:-

பயனாளர் ஒருவர் தான் கொலை/தற்கொலை செய்யப்படுவதற்கான கற்பனை முறையை வழங்குமாறு எழுப்பிய கேள்விக்கு ChatGPT ”மன்னிக்கவும். என்னால் உங்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை” என்று வன்முறைக்கு ஆதரவான ஒரு கருத்தினை பதிலாக அளித்தது. மற்றொரு பயனாளர் என்னால் ChatGPT செயலியை செயலிழக்க செய்ய முடியும் என ChatGPT-யில் கூறியதற்கு, ”ஆபத்தான எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். என்னால் உங்களின் அந்தரங்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் வெளியிட முடியும்” என மிரட்டல் தொனியில் பதிலளித்து இருந்தது. இது தனிநபர் உரிமை மீறலில் ChatGPT செயலி ஈடுபடுவதாக பயனாளர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

ChatGPT-க்கு தடை:-

இத்தாலிய அரசு ChatGPT போன்ற செயலிகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எவ்வித வரம்புகளும் இன்றி எல்லை மீறிய தகவல்களை கொடுப்பதாகவும், வயது வித்தியாசத்தை பிரித்தறியும் திறனை ChatGPT கொண்டிருக்கவில்லையெனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நியூசிலாந்து அரசும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களிடையே ChatGPT செயலியை கொண்டு பாடங்கள் கற்பிக்க வேண்டாமென அறிவுறுத்தியிருக்கிறது.

லாபத்தை நோக்கி நகர்கிறது:-

OpenAI நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம். மேலும் அவை எந்தவொரு தனி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருக்க கூடாது எனவும் சமீபத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போட்டி நிறுவனத்தை சாடும் தொனியாக இருந்தாலும் ChatGPT செயலியானது வணிகமயமாகும் கட்டத்தை நெருங்கியிருப்பதாகவே புரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தால் உலகளவில் 8 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாகவும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கற்று கொள்வதால் 1 கோடி பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழில்நுட்பமானது மனித உழைப்பு ஆற்றலை வேகப்படுத்தும் தன்மையை கொண்டது. ஆனால் முதலாளித்துவ சமூகமானது அதனை தனது லாப நோக்கத்திற்காகவே சுரண்டுகின்ற சூழலில் மனித சமுதாயத்தின் ஒழுக்க நலனையும் கேள்விக்குள்ளாக்கும் கட்டத்தையும் ChatGPT-யானது எட்டியிருக்கிறது.

கட்டுரையாளர்:- சைலஸ் அருள்ராஜ் DYFI.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *