கிரேட் குஜராத்? விளக்கும் பிபிசியின் ஆவணப்படத்திற்கு ஏன் எதிர்ப்பு!
“குஜராத்தில் நடந்தவை குறித்து நான் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் நாங்கள் செய்ததை நினைத்து சந்தோசப்படுகிறேன்”.
மோடி குஜராத் 2002 கலவரத்தின்போது பத்திரிகையாளரிடம் இவ்வாறு பேட்டியளித்தருந்தார்.
உலகம் முழுவதும் இயங்கி வருகின்ற சர்வதேச ஊடகமான பிபிசி. அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படும் படுகொலைகள் குறித்து பல்வேறு ஆவணப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் 2002-ல் நடந்த கோத்ரா, குஜராத் கலவரம் குறித்தான ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க மோடிக்கு எதிரான பிரசாரம், கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என ஆளும் பாஜக தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளியுறவு துறையும் பிபிசியின் ஆவணப்படத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி கடும் எதிர்வினை ஆற்றி இருக்கிறது.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இம்ரான் தாவூத்தின் குடும்பத்தினை மையமாக வைத்து 2002-ல் குஜராத்தில் நடந்த படுகொலை சம்பவத்தை அலசி ஆராய்கிறது. தாவூத்தின் குடும்பத்தில் உள்ள 10 பேர் வன்முறையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். “நாங்கள் செய்த குற்றம் ஒன்றுதான், முஸ்லீமாக பிறந்ததுதான்” என சிந்திய கண்ணீருடன் ததும்பும் தாவூத்தின் குரல் நம் காதுகளில் அந்த கோர சம்பவத்தை உணர செய்கிறது. இது எதோ சாதாரண எளிய குடும்பத்தின் முஸ்லீம் முதல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த இர்பான் ஜாப்ரி என அனைவரையும் வேட்டையாடியது வெறி கும்பல். ஜாப்ரி உதவிக்காக பலரையும் அழைத்தபோது யாரும் உதவிக்கு வரவில்லை. காங்கிரசாரும் வரவில்லை, காவல்துறையும் வரவல்லை. இறுதி நம்பிக்கையாக அன்றைய குஜராத் முதல்வர் மோடியிடம் உதவி கேட்ட ஜாப்ரி, மோடி காட்டிய கடுமையால் நம்பிக்கை இழந்து போனார் என பதிவு செய்கிறது இந்த ஆவணப்படம்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இந்து யாத்ரீகர்கள் இறந்த பிறகு குஜராத்தின் சூழல் மிகவும் மோசமடைந்த்தை காட்சிகள் காண்பிக்கின்றன. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் முஸ்லீம் பகுதிகளில் ஏவப்பட்டுள்ளன. இந்து பெரும்பான்மை வாதத்தில் ஊறிய விஹெச்பி (விஸ்வ ஹிந்த் பரிஷத்) என்ற அமைப்பு மத நம்பிக்கையில்லாதவர்களின் தலையை சீவ வேண்டியது நம் கடமை என வெறியாட்டத்தை ஆரம்பித்து வைத்ததை அம்பலப்படுத்துகிறது பிபிசியின் ஆவணப்படம். முஸ்லீம்கள் வணிகம் செய்யும் பகுதிகள், அதிகமாக வாழும் இந்துக்கள் பகுதிகளையே குறிவைத்து சூறையாடி இருக்கிறது வன்முறை கும்பல்.
இதனை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததையும், வன்முறையாளர்களை வரவேற்ற நிகழ்ச்சிகளையும் தொகுக்கிறது இந்தப்படம். கலவரத்திற்கு முந்தைய நாள் உயர் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தும் மோடி, இந்துக்களின் உணர்வுகளில் காவல்துறை தலையிட கூடாது என கட்டளையிட்டதாக அதில் கலந்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய உள்துறை அமைச்சரான ஹரி பாண்ட்யாவும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். “என்ன நடந்தது என்பவையெல்லாம் நாங்கள் அறிந்ததுதான்…” என கூறயதற்காக அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதோடு சில காலம் கழித்து மர்மநபர்களால் கொலையும் செய்யப்பட்டிருந்தார். ஹரி பாண்ட்யா விஹெச்பியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.
கலவரத்தில் முஸ்லீம் பெண்கள் அதிகமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், இந்த கலவரம் அரசியல் ரீதியாக ஏற்படுத்தப்பட்டிருகிறது. இதன் நோக்கம் முஸ்லீம்களை இன அழத்தொழிப்பு செய்வதையே கொண்டிருந்த்தாக அன்றைய பிரிட்டன் வெளியுறவு துறையின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து தேசியவாதிகளின் வெறிக்கு அப்பாவி மக்கள் பலரும் அகதிகளாக வெளியேறினர். பலர் காணாமல் ஆக்கப்பட்டும், கொலையும் செய்யப்பட்டனர். இதற்கெல்லாம் அன்றைய முதல்வர் நரேந்திர மோடிதான் முழு பொறுப்பு எனவும் அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொலை செய்த பஜ்ரங் என்பவரை கைது செய்து மாஜிஸ்திரேட்டிம் ஆஜர்ப்படுத்தியபோது, மோடியே நேரடியாக தலையீட்டு பஜ்ரங்கை விடுதலை செய்து காப்பாற்றிய அதிர்ச்சிகர தகவலை அவரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே ஆவணப்படம் காண்பிக்கின்றது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத மோடி எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் பிரசாரம் இது. இந்துக்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். அமைதி காருங்கள். என வெளிப்படையாக கலவரகாரர்களுக்காக வாதாடினார். 72 மணி நேரத்தில் கலவரத்தை ஒடுக்கவிட்டோம். காவல்துறை தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தது என்றார் முதல்வர் மோடி.
ஆனால் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீ குமார் பின்னாளில் கலவரகாரர்களை கட்டுப்படுத்தி இந்துக்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். கண்டுகொள்ளாமல் விடுங்கள் என்று மோடி கூறியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதே போலவே ஐபிஎஸ் சஞ்சீவ் பட்டும் மோடி எதிரான வாக்குமூலத்தை அளித்திருந்தார். சிறப்பு விசாரணை பிரிவோ மோடிக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என கைவிரித்தது. ஆனால் இவர்கள் இருவருமே இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஐரோப்பிய யூனியன் விசாரணை செய்தது. அமெரிக்கா மோடியை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்தது. ஆனால் சொந்த நாட்டிற்குள்ளும், குஜராத்திலும் மோடிக்கான செல்வாக்கு என்பது இதன்பிறகு பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது என்பதையும் ஆவணப்படம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வம்சாவழி எம்.பி. பிரிட்டன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, இதுமாதிரியான சம்பவங்களை நாங்கள் ஏற்கப்போவதில்லை. ஆனால் அதே சமயத்தில் ஒரு நல்ல மனிதரை சிறுமைப்படுத்துவதை பொறுத்து கொள்ள முடியாது என பிரதமர் ரிஷி சுனக் மோடிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஆவணப்படத்தில் குஜராத்தில் நடந்தவை குறித்து முழுமையான நீதி விசாரணை வேண்டுமென முன்னாள் பிரிட்டன் வெளியுறவுத்துறை அதிகாரி ஜேக் கோரியுள்ளார். இதற்கு இந்திய வெளியுறவித்துறை உங்கள் காலனிய மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள் இப்போது ஆள்வது நீங்கள் இல்லை. விசாரணை செய்ய கோர நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியுள்ளது.
இறுதியில் “எங்களுக்கான நீதி இங்கே கிடைக்காது அதற்கு வாய்ப்பில்லை” என்ற தாவூத்தின் ஏக்கத்துடன் படம் முடிகிறது. தற்போதைய நிலைமையும் இந்தியாவில் அப்படித்தான் இருக்கிறது. குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களை மோடி அரசாங்கம் விடுதலை செய்திருக்கிறது.