அரசுகள் மீது நம்பிக்கை இழக்கும் இளைஞர்கள் – சேது சிவன்
பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி, அல்பேனியா, அர்ஜென்டினா, இந்தோனேசியா என ஐரோப்பாவிலிருந்து தென்னமெரிக்கா, ஆசியா வரை போராட்டத் தீ பரவி வருகிறது. உலகம் ஒரு மாபெரும் வரலாற்றுக் கொந்தளிப்பின் முன்னால் நிற்கிறது.
கல்விக்கு அதிக நிதி வேண்டும், போதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், கல்வி நிலையங்களின் கட்டமைப்பு மேம்பட வேண்டும் எனக் கோரி மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆசிரியர்களும் தொழிலாளர்களும் களமிறங்கியுள்ளனர். ஊதிய உயர்வு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, மக்கள் நலத்திட்டங்களுக்கு வெட்டு கூடாது என்பவை இவர்களின் கோரிக்கைகள்.
இளைஞர்கள் எதிர்காலம் பறிக்கப்பு
உலகெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஒரே கனவுதான். தங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் அரசுகள் அந்தக் கனவைக் கிள்ளி எறிகின்றன. படித்த படிப்புக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லை. விலைவாசி மட்டும் உயர்கிறது. கல்வி, சுகாதாரத்துக்கான நிதி வெட்டப்படுகிறது.
அதே நேரத்தில் போர்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் அள்ளிக் கொட்டப்படுகின்றன. எவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடி வந்தாலும் பெருநிறுவனங்களின் லாபம் மட்டும் குறைவதில்லை. அரசுகளே முன்னின்று அதை உறுதி செய்கின்றன. வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றன, வரிகளைக் குறைக்கின்றன, நாட்டின் வளங்களை அவர்களுக்குத் தாரை வார்க்கின்றன.
ஒருபுறம் தங்கள் எதிர்காலம் கண்முன்னே அழிவதைப் பார்த்து இளைஞர்கள் துடிக்கிறார்கள். மறுபுறம் அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையிலான கள்ளக்கூட்டணியைக் கண்டு கொதிக்கிறார்கள். “எங்கள் வரிப்பணம் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கும் போர்களுக்கும் போகிறது?” என்று கேட்கிறார்கள். இந்த நியாயமான கேள்விக்குப் பேச்சுவார்த்தை மூலம் பதில் சொல்லாமல், அரசுகள் அடக்குமுறையை ஏவுகின்றன.
அந்த அடக்கு முறைகள் இன்று கலவரங்களாக மாறியுள்ளன. கலவரங்கள் ஒருபோதும் சரியான தீர்வை தராது; மாறாக நியாயமான கோரிக்கைகளை அதுமழுங்க செய்துவிடும். எனவே தான் நியாயமான போராட்டங்கள் மீது இந்த ஆளும் அரசுகள் வன்முறைகளை ஏவி கலவரங்களாக மாற்றுகின்றன.
ஒவ்வொரு போராட்டத்தின் பின்னாலும் ஒரே வேர்
ஊடகங்கள் ஒவ்வொரு நாட்டுப் போராட்டத்தையும் தனித்தனிச் செய்தியாகவே காட்டுகின்றன. ஆனால் இவை அனைத்துக்கும் ஒரே வேர் உண்டு. “சந்தையைத் திறந்துவிட்டால் நாடு வளரும்” என்று இத்தனை ஆண்டுகளாகச் சொல்லப்பட்ட நவதாராளமயப் பொருளாதாரத்தின் தோல்விதான் அது. இந்தக் கொள்கை பெருநிறுவனங்களை மட்டுமே வாழ வைக்கிறது. சாமானிய மக்கள் மறைமுக வரிகளையும் வாடகை, வாழ்க்கைச் செலவு உயர்வையும் சுமக்கிறார்கள். “நம் அரசுகள் நம் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சேவை செய்கின்றன” என்ற கோபமே இன்று எரிமலையாக வெடிக்கிறது.
நாடு நாடாக நடக்கும் போராட்டங்கள்
போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் உள்ளிட்ட நகரங்களில் 2017-க்குப் பிறகு வீட்டு விலையும் வாடகையும் இருமடங்குக்கு மேல் உயர்ந்துள்ளன. ஊதியம் தேங்கிவிட்டது. பல இடங்களில் வாடகையே மாத வருமானத்தில் பாதிக்கு மேல் போய்விடுகிறது. போராட்டத்தில் பங்கேற்ற ஆராய்ச்சி மாணவி ஒருவர், “புதிய வாடகை ஒப்பந்தத்தால் வீட்டையே இழக்கும் அபாயத்தில் இருக்கிறேன். எங்கள் சொற்ப உதவித்தொகை வாடகைக்குக்கூடப் போதவில்லை” என்றார்.
அல்பேனியா நாட்டில் மோசமான பல்கலைக்கழகக் கட்டமைப்பு, அதிகக் கல்விக் கட்டணம், வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம், இன்று “பிளமிங்கோ புரட்சி” என உருவெடுத்துள்ளது. பேராசிரியர்களும் இதில் இணைந்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் அங்கு சொகுசு சுற்றுலா விடுதி கட்டவுள்ளார். அதற்காகக் கடற்கரைப் பகுதிகளையும் பறவைகள் சரணாலயங்களையும் அரசு தாரைவார்த்துள்ளது. “நாட்டின் வளம் மக்களுக்கே, கோடீஸ்வரர்களின் லாபத்துக்கு அல்ல. அல்பேனியா விற்பனைக்கு அல்ல” என்பது மக்களின் முழக்கமாக உள்ளது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
பெல்ஜியத்தில் பல்கலைக்கழகப் பதிவுக் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளனர். இத்தாலியில் ஊதிய உயர்வு இல்லாத நிலையில் அன்றாடச் செலவுகள் கட்டுக்கடங்காமல் போனதால் பொது வேலைநிறுத்தங்களும் பேரணிகளும் நடக்கின்றன.
அர்ஜென்டினாவில் தீவிர வலதுசாரி அதிபர் ஜேவியர் மிலேய் “சிக்கனம்” என்ற பெயரில் அரசுப் பல்கலைக்கழக நிதியை வெட்டினார். பல்கலைக்கழகங்கள் மூடப்படும் நிலை வந்ததால், பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து தொடர் பேரணிகளை நடத்துகின்றனர். அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிகாரக் குவிப்புக்கு எதிராக “மன்னர்கள் வேண்டாம்” (No Kings) இயக்கம் பல நகரங்களில் குரல் எழுப்புகிறது.
இந்தோனேசியாவில் விலைவாசியும் ஊழலும் அதிகரித்துவிட்டன. குறைந்த வருமானத்தில் கல்வி, மருத்துவச் செலவைச் சமாளிக்க முடியாமல் மக்கள் வீதிகளில் திரண்டுள்ளனர். பெருநிறுவனங்கள் காடுகளைச் சூறையாடுவதால் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு, நாடே மூச்சுத் திணறுகிறது.
பிரான்ஸ்: போராட்டத்தின் மையப்புள்ளி
ஐரோப்பாவில் அதிக வரி செலுத்தும் நாடுகளில் ஒன்று பிரான்ஸ். ஆனால் அந்த வரிக்குரிய சேவைகளை மக்ரோன் அரசு வழங்கவில்லை. இப்போது மாணவர் விடுதிகள், பள்ளிகளின் மோசமான நிலை, ஆசிரியர் பற்றாக்குறை, கல்வி நிதி வெட்டு ஆகியவற்றை எதிர்த்து ஆசிரியர்களும் மாணவர்களும் தொடங்கிய போராட்டம், எரிபொருள், உணவுப் பொருள் விலை உயர்வுக்கு எதிரான பெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. நாடு முழுவதும் 5.5 லட்சம் பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். “வாழ்வதற்காக அல்ல, உயிர் பிழைப்பதற்காகவே போராட வேண்டியிருக்கிறது” என்கிறார்கள் மாணவர்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றது, ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அந்தச் சூழலைப் பயன்படுத்தி, லிபரல் கட்சிகளின் ஆதரவுடன் மக்ரோன் ஆட்சியில் நீடித்தார். பிறகு நவதாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமலாக்கினார். கல்வி, சுகாதாரத்துக்கு நிதியை வெட்டினார், போருக்கு அதிகம் செலவிட்டார். மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்பதற்குப் பதிலாக, போராட்டங்களுக்கும் வன்முறைக்கும் இடதுசாரிகளே காரணம் என்று அவதூறு பரப்புகிறார்.
போர்ச் செலவு: நெருக்கடியின் இன்னொரு பெரும் சுமை
ஐரோப்பாவில் நெருக்கடி தீவிரமடைய நவதாராளமயத்துடன் போர்ச் செலவும் முக்கியக் காரணம். சமீபத்திய நேட்டோ மாநாடு, ஒவ்வொரு உறுப்பு நாடும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை பாதுகாப்புக்குச் செலவிட வேண்டும் என முடிவு செய்தது. முற்போக்குக் கட்சிகள் ஆளும் ஸ்பெயின் போன்ற சில நாடுகளைத் தவிர, பல நாடுகள் இதை அமலாக்கி வருகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இங்கிலாந்துடன் இணைந்து உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி செய்கின்றன. இதனுடன் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், உக்ரைன்-ரஷ்யா போர், ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்தும் போர் போன்ற ஏகாதிபத்தியப் போட்டிகளும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன. போருக்கு லட்சக்கணக்கான கோடிகளைக் கொட்டும் அரசுகள், கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும் “நிதியில்லை” என்கின்றன.
இந்தப் போராட்டங்கள் தனிநபர்களின் தவறால் உருவானவை அல்ல. இவை முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாட்டின் வெளிப்பாடு. செல்வம் சிலர் கையில் குவிகிறது, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். “சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” என்ற நவதாராளமயம், சமூக நலத் திட்டங்களையும் பொதுச் சேவைகளையும் சிதைத்துவிட்டது.
மக்களின் கோபத்தை அறுவடை செய்யத் துடிக்கும் வலதுசாரிகள்
பிரான்சின் முன்னணித் தொழிற்சங்கமான சி.ஜி.டி-யும், ஜீன்-லூக் மெலன்சோன் தலைமையிலான இடதுசாரி அமைப்புகளும் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு அளிக்கின்றன. இத்தாலியின் தொழிற்சங்கங்களும் அர்ஜென்டினாவின் மாணவர் அமைப்புகளும் இதை வர்க்கப் போராட்டமாகவே பார்க்கின்றன. இவர்களின் கோரிக்கைகள் ஒன்றுதான் பொதுத்துறையைப் பாதுகாக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும், தொழிலாளர் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.
மறுபுறம், தீவிர வலதுசாரிகள் (பிரான்சில் மரீன் லு பென்னின் தேசியப் பேரணி, அமெரிக்காவில் டிரம்ப், இத்தாலியில் மெலோனி, ஜெர்மனியில் ஏ.எஃப்.டி) மக்களின் கோபத்தைத் தங்கள் அரசியல் வெற்றிக்காக அறுவடை செய்யச் சூழ்ச்சி செய்கின்றனர். “பொருளாதார வீழ்ச்சிக்கும் வேலையின்மைக்கும் காரணம் முதலாளித்துவக் கொள்கைகள் காரணம் அல்ல, புலம்பெயர்ந்து வந்த மக்களே” என்று பழி போடுகின்றனர். “பிரான்ஸ் முஸ்லிம் நாடாகிவிடும்” என்று டிரம்ப் போன்றோர் முஸ்லிம் வெறுப்பைப் பரப்புகின்றனர். இதன் நோக்கம் தெளிவானது. தொழிலாளர்களின் கோபம் முதலாளித்துவத்தை நோக்கித் திரும்பாமல், இனம், மதம் என்று அவர்களைப் பிளவுபடுத்தி, தேசியவாத மாயைக்குள் தள்ளுவதே அது.
இவர்கள் ஏதோ மக்களை மீட்க வந்த ரட்சகர்கள் போலப் பேசுகிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு இத்தாலிப் பிரதமர் மெலோனியே சாட்சி. தேர்தலுக்கு முன், போரை ஆதரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பதாகவும், ஏழைகள் பக்கம் நிற்பதாகவும் முழங்கினார். பதவிக்கு வந்ததும் தொழிலாளர் உரிமைகளைப் பறித்தார். நேட்டோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமுதலாளிகளுக்கும் அடிபணிந்தார்.தற்போது போராடும் மாணவர்களை 5 ஆண்டுகள் சிறையில் அடைப்பேன், தடுப்பு மையங்களில் அடைத்து வைப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
“கெட்டவரா, மோசமான கெட்டவரா?” தாராளவாதிகளின் அரசியல்
வலதுசாரிகளை மட்டுமல்ல, மக்ரோன் போன்ற தாராளவாத மையவாதக் கட்சிகளையும் நாம் விமர்சிக்க வேண்டும். இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்கள் விரோதக் கொள்கைகளை அமலாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கிறார்கள். தேர்தல் வந்ததும், “நாங்கள் இல்லாவிட்டால் பாசிஸ்டுகள் வந்துவிடுவார்கள், வேறு வழியில்லை, எங்களுக்கே வாக்களியுங்கள்” என்று பயம் காட்டுகிறார்கள். இதுவே உலகெங்கும் நடக்கிறது. “கெட்டவரா, இல்லை மோசமான கெட்டவரா” என்ற இரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் முதலாளித்துவ அரசியலின் எல்லைக்குள்ளேயே சிறைவைக்கப்படுகிறார்கள்.
இதன் விளைவை இன்று கண்முன்னே பார்க்கிறோம். மக்ரோன் அரசின் அடக்குமுறையாலும் விலைவாசியாலும் மக்கள் விரக்தியடைந்திருக்கும் வேளையில், லு பென் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார். வலதுசாரிகளின் வளர்ச்சியைப் பற்றி லிபரல்களுக்குத் துளியும் கவலையில்லை. மக்ரோனோ “இடதுசாரிகள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்” என அவதூறு பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார். தாராளவாதிகளின் தோல்வியே தீவிர வலதுசாரிகளுக்கு உரமாகிறது.
ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலியில் அடுத்த ஆண்டு தேர்தல்கள் வரவுள்ளன. இந்தப் போராட்டங்கள் ஆளும் அரசுகளுக்கு, குறிப்பாக மக்ரோனின் மையவாதக் கட்சிகளுக்குப் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளன. மக்கள் மையவாதத்தை விட்டு விலகி, இரு துருவங்களை நோக்கிச் செல்கின்றனர்.
பிரான்ஸில் தீவிர வலதுசாரிக் கட்சியான மரீன் லு பென்னின் தேசியப் பேரணிக்கும், இடதுசாரிக் கட்சியான மெலன்சோனின் “பிரான்ஸ் அன்பௌவ்டு” (France Unbowed) கட்சிக்கும் ஆதரவு பெருகுகிறது.
ஜெர்மனியில் தீவிர வலதுசாரி ஏ.எஃப்.டி (Alternative für Deutschland) கட்சியை நோக்கியும், இடதுசாரி டை லிங்கே (Die Linke) கட்சியை நோக்கியும் மக்கள் திரும்புகின்றனர்.
கடந்த வார இறுதியில் போராட்டங்கள் வெடித்த இத்தாலியில், வலதுசாரிப் பிரதமர் மெலோனிக்கு அவரைவிடத் தீவிர வலதுசாரி நிலைப்பாடு கொண்ட ராபர்டோ வன்னாட்சி (Roberto Vannacci) தேர்தலில் சவாலாக நிற்கிறார்.
இதில் ஆபத்து என்னவென்றால், இந்த அதிருப்தியைப் பயன்படுத்த இடதுசாரிகள் மட்டுமல்ல, பணபலமும் ஊடகபலமும் கொண்ட வலதுசாரிகளும் களத்தில் உள்ளனர். எலான் மஸ்க் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசி வருகிறார். ஐரோப்பியத் தலைவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் இணையவழிப் பிரச்சாரம் செய்வதாக, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜான்-நோயல் பாரோ கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) கருத்துக் கணிப்பு இதையே காட்டுகிறது. ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக அது தெரிவிக்கிறது. பிரான்சில் 69%, ஸ்பெயினில் 68%, இத்தாலியில் 62%, அமெரிக்காவில் 69% பேர் இவ்வாறு கூறியுள்ளனர்.
இதே கருத்தை ஒரு தாராளவாதப் பொருளாதார அறிஞரும் ஒப்புக்கொள்கிறார். 2024 இல் பொருளாதார நோபல் பரிசு பெற்ற டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), தாராளவாத ஜனநாயகம் சாதாரண மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்கிறார். “தாராளமயம் மீண்டும் எழ வேண்டுமென்றால், அது தொழிலாள வர்க்கத்தை மையமாகக் கொண்டே அமைய வேண்டும்” என்றும் கூறியுள்ளார். அதாவது, தொழிலாளர்களின் நலனைப் புறக்கணிக்கும் எந்த அரசும் நிலைக்காது என்பதைத் தாராளவாத முகாமே ஒப்புக்கொள்கிறது.
மக்கள் கேட்பது மிகச் சிறியதே
போருக்குச் செலவிடாமல், இளைஞர்களின் எதிர்காலத்தில் அரசுகள் முதலீடு செய்ய வேண்டும் என்பதே உலகெங்கும் போராடும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு. உழைப்புக்கேற்ற கண்ணியமான ஊதியம், இலவசமான தரமான கல்வியும் மருத்துவமும், வணிகமாக்கப்படாத மலிவு வாடகை வீடுகள், சமூகப் பாதுகாப்பு, கட்டுக்குள் இருக்கும் விலைவாசி ஆகியவையே அவர்களின் கோரிக்கை. மக்களைச் சூறையாடும் கார்ப்பரேட் ஆதிக்கம் கூடாது என்பதும் அதில் அடக்கம். இவ்வளவுதான் அவர்கள் கேட்பது.
ஆனால் அரசுகள் செவி சாய்ப்பதில்லை. குறைந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கல்விக்கும் மருத்துவத்துக்கும் அதிகம் செலவிட வேண்டிய நிலையில், இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படிக் கட்டியெழுப்புவார்கள்? குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவார்கள்? இந்தக் கேள்விகளோடு அவர்கள் தவிக்கும்போது, அரசு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் பணத்தை வாரி வழங்குகிறது. இந்த எதார்த்தத்தை அவர்கள் உணரும்போது அரசின் மீதான நம்பிக்கை மறைந்துபோகிறது. உள்ளுக்குள் அடங்கிக் கிடந்த கோபம், ஒரு புள்ளியில் போராட்டமாக வெடிக்கிறது
இந்தச் சூழலில் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பாசிசத்தையும் தீவிர வலதுசாரிகளையும் வீழ்த்தவும் வேண்டுமானால், அவற்றுக்குத் தீனி போடும் முதலாளித்துவப் பொருளாதாரக் கட்டமைப்பையே வீழ்த்த வேண்டும். முதலாளித்துவ அமைப்புக்குள் நின்று செய்யும் சிறு சமரசங்களாலோ, தாராளவாத அரசுகளைக் காப்பாற்றுவதாலோ உழைக்கும் வர்க்கத்துக்கு விடிவு வராது.
எனவே மக்களும் மாணவர்களும் முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகளின் பின்னால் அணிவகுக்கக் கூடாது. இடதுசாரிகளின் பின்னால் அணிதிரண்டு, தங்களுக்கென ஒரு சுதந்திரமான வர்க்க அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும். லாபத்தை முன்னிறுத்தும் முதலாளித்துவத்தைத் தகர்த்து, மக்களின் தேவையை முன்னிறுத்தும் சோசலிசப் பொருளாதாரத்தை அமைப்பதே இந்த உலகளாவிய நெருக்கடிக்கான வரலாற்றுத் தீர்வு.
-சேது சிவன்
22 அன்று தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்