Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

செம்படையில் இனச் சிறுபான்மை வீரர்கள்-அ.பாக்கியம்

செம்படையில் இனச் சிறுபான்மை வீரர்கள்-அ.பாக்கியம்
  • PublishedOctober 21, 2026

இனச் சிறுபான்மை மக்களை சீனப் புரட்சியின் ஒரு பகுதியாக இணைப்பதற்கு அவர்களிடையே வீரர்களை தேர்வு செய்யும் முடிவை எடுத்தனர். ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தக்கூடிய தலைவர் களையும், வீரர்களையும், பணியாளர்களையும் உருவாக்கு வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டது. இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பணியாளர்களின் அளவையும், எண்ணிக்கையும் அதிகப்படுத்த வேண்டும் என்று முடிவாக்கப்பட்டது. மேலும் வலுவான போராட்ட உணர்வையும் புரட்சியில் பங்கேற்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்திய ஏராளமான சிறுபான்மை இனக்குழுக்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சிறுபான்மை இன மக்கள் தங்கள் சொந்த சமூகங்களுக்குள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதற்கும் வழி நடத்துவதற்குமான திறமையானவர்களை உருவாக்க கூடிய வேலைகளை செய்ய வேண்டும் என்று கட்சி முன்மொழிந்தது.

சிறுபான்மை மக்களிடம் இத்திட்டத்தை அமுலாக்குவதற்கான களத்தில் செம்படை இறங்கியது. 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் செம்படையின் இரண்டாம் படைப்பிரிவும், ஆறாம் படைப்பிரிவும் தங்களது கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த இடமாற்றத்தை செய்வதற்கு முன்பாக சில நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஹுனான்-ஹுபே-சிச்சுவான்-குய்சோ புரட்சிகர இராணுவ ஆணையம் நன்யாவோஜியில் ஒரு அரசியல் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தது. இதில் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

1935 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்ட செம்படை பல்கலைக்கழகம் சீன கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை இறங்கியது. இதன் ஒரு வடிவமாக இந்த பல்கலைக்கழகத்தில் இன சிறுபான்மை பணியாளர்கள் உட்பட ஏராளமான ராணுவத்தினருக்கும். அரசியல் தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. கெலதேஷா அரசாங்கம் மற்றும் போபா போன்ற பகுதிகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதலில் இன தன்னாட்சி அரசுகள் அமைக்கப்பட்டன. இங்கு இன விவகாரப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல அதிக எண்ணிக்கையிலான இனச் சிறுபான்மையைச் சேர்ந்த பணியாளர்களின் அவசரத் தேவை ஏற்பட்டது.

இவற்றை நிவர்த்தி செய்வதற்காக செம்படை திபெத்தியர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்து அமலாக்கியது. இவற்றில் ராணுவத்தில் பணியாற்றுவதற்கும், தன்னாட்சி மக்கள் அரசாங்கத்தில் பணி புரிவதற்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மாவோ கவுண்டி, சுய்ஜிங் மற்றும் காங்பெய் பகுதியில் கெலதேஷா பள்ளி, அத்துடன் ஓய்வுக் காலத்தில் டான்பாவில் நிறுவப்பட்ட லெனின் பள்ளி போன்ற பள்ளிகளும் இனச் சிறுபான்மை வீரர்களையும் பணியாளர்களையும் உருவாக்கியது. இந்த முயற்சிகள், வெகுஜனப் பணிகள், மொழிபெயர்ப்பு, தளவாடங்கள் மற்றும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்ட இளம் திபெத்தியப் பணியாளர்களின் ஒரு முக்கியக் குழுவை வளர்த் தெடுத்தன. கார்சே கவுண்டி போபா அரசாங்கம் ஒரு பணியாளர் பள்ளியை நிறுவ செம்படை உதவியது.

இன சிறுபான்மைப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க திபெத்திய ஆசிரியர்களைப் பணியமர்த்தியது. இந்த கார்சே திபெத்திய கேடர் பள்ளி 230 க்கும் மேற்பட்ட இன சிறுபான்மை ஆர்வலர்கள் மற்றும் கேடர்களுக்கு பயிற்சி அளித்தது. செம்படையின் நீண்ட அணிவகுப்பின் போது *டோங்சி* (மொழிபெயர்ப்பாளர்கள் /தொடர்பாளர்கள்) இருந்தனர். இந்த மொழிபெயர்ப்பாளர்கள் இனச் சிறுபான்மை மக்களின் விவசாயத்தை முன்னுரிமையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். ஓரளவு சிறப்பு பிரிவினராக கருதப்பட்டார்கள். செம்படையின் அணுகு முறையால் இந்த மொழிபெயர்ப்பாளர்களில் பலரும் புரட்சியின் போது செம்படையில் இணைந்து சிறுபான்மை இன வீரர்களாக உருவெடுத்தார்கள். செம்படையின் நீண்ட பயணத்தின் போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்ட சிறுபான்மையினப் பணியாளர்களின் குழு, விடுதலைப் போரின் போதும், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னரும், சிறுபான்மையினப் பகுதிகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பணிகளை மேற்கொள்வதற்கான அமைப்பு ரீதியான அடித்தளத்தை அமைத்தது.

பொருளாதார மேம்பாட்டில் செம்படை

செம்படையின் நீண்ட அணி வகுப்பின் போது சிறுபான்மை இன மக்களுக்காக இரண்டு அம்சங்களை உள்ளடக்கிய பொருளாதார கொள்கைகளை கட்சி உருவாக்கி இருந்தது ஒன்று அனைத்து இனக்குழுக்களுக்கும் இடையே பொருளாதார சமத்துவம் கொண்டு வருவது இதற்காக இனச் சிறுபான்மை மக்களுக்கு உறுதியான உதவியை வழங்குதல். இந்த பொதுவான வழிகாட்டுதலில் இருந்து குறிப்பான விஷயத்தை வரையறுத்தார்கள். எட்டு மணி நேர வேலை நாளை ஏற்றுக்கொள்ள வைப்பது. தொழிலாளர்களுக்கான ஊதிய அளவை உயர்த்துவது. விவசாயிகளுக்கு வரிகள் வாடகை நில உரிமையாளருக்கு செலுத்த வேண்டிய கடன் ஆகியவற்றிலிருந்து விளக்கு அழிப்பது. அதே நேரத்தில் நில உரிமையாளர்களின் நிலத்தை விவசாயிகளுக்கு மறுபியோகம் செய்வதற்காக பறிமுதல் செய்வது.

முதலாளித்துவ வளர்ச்சிக்கு இடமளித்து தடையற்ற வர்த்தகத்தை அனுமதிப்பதுடன் சுரண்டலை மையமாகக் கொண்ட வரிகளுக்கு மாறாக முற்போக்கு வரிகளை விதிப்பது. நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும் கந்து வட்டியை தடை செய்ய வேண்டும். செம்படையின் நீண்ட அணி வகுப்பு துவங்குவதற்கு முன்பு சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பொருளாதார கொள்கைகளில் இருந்து இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளவை கூட்டத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றன. இந்த அறிவிப்புகள் சிறுபான்மை இன மக்களின் புரட்சிகர ஆர்வத்தை திரட்டுவதிலும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விரிவு படுத்துவதிலும் ஒரு சாதகமான பங்கை உருவாக்கும் என்று திட்டமிட்டு நடைமுறையில் இறங்கினார்கள்.

வேளாண்மையில், செம்படை சிறுபான்மையின சமூகங்கள் பயிர்களை விரைவாக நடவு செய்யவும் அறுவடை செய்யவும் உதவியது, இதன் மூலம் விவசாயப் பருவம் தவறவிடப்படாமல் இருப்பதை உறுதி செய்தது 1936ஆம் ஆண்டு வசந்த காலத்தில், செம்படை திபெத்திய பகுதியான தாவோஃபுவை அடைந்தபோது, உள்ளூர் மக்கள் குவோமின்தாங்கின் தவறான பிரச்சாரத்தால் அஞ்சி, மலைகளுக்கும் காடுகளுக்கும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பெரும்பாலான நிலங்கள் கைவிடப்பட்டு, வசந்தகால உழவுப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலைமையைச் சமாளிக்கச் செம்படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது செம்படைத் தலைவர்கள் உள்ளூர் மக்களை மலைகளில் இருந்து திரும்பி வருமாறு அழைத்தனர். “நிலத்தை காலியாக விடக்கூடாது” என்ற கொள்கையுடன், வசந்தகால உழவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். செம்படை வீரர்கள் மக்களுடன் இணைந்து உழவுப் பணிகளில் ஈடுபட்டனர். உதாரணமாக, லூஹோ மாவட்டத்தில், செம்படை உள்ளூர் மக்களுக்கு 40,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை உழவு செய்ய உதவியது, இது அம்மாவட்டத்தின் மொத்த உழவு நிலத்தில் 70% ஆகும்.

பணியில் குறைவு உள்ள குடும்பங்களுக்கு உதவ “தாய் உழவுக் குழுக்கள்” அமைக்கப்பட்டன. தாவோஃபு மாவட்டத்தில், விதை இல்லாத மக்களுக்கு செம்படை இலவசமாக விதைகளை வழங்கியது. செம்படை உள்ளூர் போபா – திபெத்திய மக்கள்) அரசாங்கத்தை நிறுவ உதவியது. 1936 ஏப்ரல் 15-16 அன்று நடந்த முதல் மாநாட்டில், உழவு, நிலம் மற்றும் உணவுப் பிரச்சினைகள் முக்கிய விவாதப் பொருள்களாக இருந்தன. உழவுப் பணிகளை உறுதி செய்வதற்கான திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்பட்டன. ஆரம்பத்தில் மக்கள் அச்சத்தால் வெளியேறியதால் உழவுப் பணிகள் பாதிக்கப்பட்டாலும், செம்படை உடனடியாகத் தலையிட்டு, உள்ளூர் மக்களைத் திரும்ப அழைத்து, நேரடியாக உழவில் உதவி, வளங்கள் வழங்கி, புதிய அரசாங்கத்தை உருவாக்கி சிக்கலைச் சமாளித்தது. இந்த முயற்சிகள் பின்னர் உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்று, உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவின.

தொழில்துறை துறையில், செம்படை அனைத்து இனக்குழுக் களையும் சேர்ந்த மக்களை தொழிற்சாலைகளை நிறுவ ஊக்குவித்தது மற்றும் உதவியது. தியான்குவான் கவுண்டியில் உள்ள யான்ஜிங்கோவில், செம்படை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் இணைந்து ஒரு உப்பு ஆலையை உருவாக்கியது, 1935 ஆம் ஆண்டில், குவோமின்தாங்கின் தடை மற்றும் பொருளாதார முற்றுகை காரணமாக, செம்படைக்கு உப்பு கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. இந்த பிரச்சனையை தீர்க்க, செம்படை உள்ளூர் மக்களுடன் இணைந்து உப்பு உற்பத்தியை தொடங்க முடிவு செய்தது. செம்படை வீரர்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து, இரண்டு அடுப்பு வரிசைகள் அமைத்து, எட்டு பெரிய பாத்திரங்களை பொருத்தி இந்த ஆலையை நிறுவினர்.

உள்ளூர் மூன்று உப்பு தயாரிப்பு நிபுணர்கள் தொழில்நுட்ப வழிகாட்டுதல் அளித்தனர். இந்த ஆலை தினமும் சுமார் 700 முதல் 800 ஜின் (ஏறத்தாழ 350-400 கிலோ) “பனிப்பொழிவு உப்பை” உற்பத்தி செய்தது. 1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பத்திரிகைக் கட்டுரையின்படி, இந்த பகுதியில் பல உப்பு கிணறுகள் இருந்தன. 1935 ஆம் ஆண்டில் செம்படை இந்த பகுதியில் தங்கியிருந்தபோது, இந்த உப்பு கிணறுகளை மீண்டும் திறந்து, இராணுவத்திற்கும் மக்களுக்கும் தேவையான உப்பை உற்பத்தி செய்தது. இந்த உப்பு ஆலை செம்படை மற்றும் உள்ளூர் மக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது, மேலும் அக்காலத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இது ஒரு முக்கிய படியாக இருந்தது.

லுஷான் கவுண்டிக்குள் நுழைந்தவுடன், செம்படை உள்ளூர் கைவினைஞர்களை ஒருங்கிணைத்து இராணுவப் பொருட்களுக்கான ஒரு தொழிற்சாலையை நிறுவியது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட இந்த ஆலையில், துப்பாக்கிகளைப் பழுதுபார்த்தல் மற்றும் ஆடைகளைத் தைத்தல் போன்ற பணிகளில் செம்படைக்கு உதவுவதற்காக தையல், தச்சு மற்றும் கொல்லர் பிரிவுகள் இருந்தன. செம்படை, வெடிபொருள் தொழிற்சாலைகள், நாணயச் சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் காலணிப் பட்டறைகள் போன்ற வசதிகளை உள்ளூர் மக்கள் அமைக்கவும் உதவியது. இதன் மூலம், சிறுபான்மை இனப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் அது பங்களித்தது.

வர்த்தகத்தைப் பொறுத்தவரை, “சிறு மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களைப் பாதுகாப்பதையும்” வர்த்தகர்களின் இயல்பான செயல்பாடுகளைப் பாதுகாப்பதையும் செம்படை வலியுறுத்தியது. அன்றாடத் தேவைகளை விற்பனை செய்வதற்காக, “ஏழை விவசாயிகளின் கூட்டுறவுச் சங்கங்கள்” மற்றும் “தொழிலாளி-விவசாயி கூட்டுறவுச் சங்கங்கள்” போன்ற கூட்டுறவு முறைமையிலான கடைகளை அவர்கள் நிறுவினர். தியான்சுவான் (Tianquan) மற்றும் பெய்சுவான் (Beichuan) மாவட்டங்களில், உள்ளூர் மக்களுக்குத் தினமும் உணவளிப்பதற்காகச் செம்படை “தொழிலாளி-விவசாயி உணவகங்களையும்” திறந்தது. நீண்ட அணிவகுப்பின் போது, இனச் சிறுபான்மையினர் தங்கள் உற்பத்தியை மீட்டெடுக்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் செம்படை உதவியது. இது இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியது மற்றும் அப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியது மட்டுமல்லாமல், செம்படையின் சொந்தப் பொருட்கள் பற்றாக்குறையையும் தணித்தது.

அ.பாக்கியம் அடுத்த தொடர் அக்.28 புதனன்று வெளியாகும்…

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *