Tamil Marx

இந்தியா

தலைமை தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?-சுதிர்

தலைமை தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?-சுதிர்
  • PublishedOctober 13, 2026

ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி நடைபெற்று வரும் உக்கிரமான போராட்டங்களின் நடுவே இந்த தகவலை நாம் தெரிந்து கொள்வோம்.

தலைமை தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. அவர் தானாகவே ராஜினாமா செய்ய விரும்பினால், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகிவிடலாம். இல்லையெனில், அவரை நீக்குவதற்கு அரசியலமைப்புச் சட்டம் மிகக் கடுமையான நடைமுறைகளை வகுத்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

குடியரசுத் தலைவரால்தான் தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுகிறார். ஆனால் அதற்கு முன், மூன்று பேர் கொண்ட குழு ஒரு பெயரைப் பரிந்துரைக்கும். தொடக்கத்தில் அந்தக் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆகியோர் இருந்தனர்.

ஆனால் 2023 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் சேர்க்கப்பட்டார். இதனால் குழுவில் பாஜக  அரசாங்கத்திற்கு பெரும்பான்மை கிடைத்தது. இந்த மாற்றத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஞானேஷ் குமாரின் நியமனத்தின்போது, ராகுல் காந்தி இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தேர்வு முறை மீதான உச்சநீதிமன்ற விசாரணை முடியும் வரை இந்த நியமனத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினார். இருப்பினும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் 2025 பிப்ரவரி 19, முதல் அமலுக்கு வரும் வகையில் ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பதவி நீக்கம் செய்யும் முறை

அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு தலைமை தேர்தல் ஆணையருக்கு பதவி நீக்கத்திற்கு எதிரான உயரிய பாதுகாப்பை வழங்குகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்குப் பின்பற்றப்படும் அதே காரணங்கள் மற்றும் அதே நடைமுறைகளின் கீழ் மட்டுமே இவரையும் நீக்க முடியும்.

அதற்கான அடிப்படைக் காரணங்கள்;

  • நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை (Proven Misbehaviour)
  • திறமையின்மை / இயலாமை (Incapacity)

இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

‘நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தின்’ கீழ், மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்.பி-க்களின் கையொப்பமும், அல்லது மாநிலங்களவையில் குறைந்தபட்சம் 50 எம்.பி-க்களின் கையொப்பமும் தேவை.

மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் இந்தத் தீர்மானத்தை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஏற்கப்பட்டால், குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த விசாரணையின் போது தலைமை தேர்தல் ஆணையருக்கு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

அக்குழு குற்றச்சாட்டை உறுதி செய்தால், அந்த அறிக்கை அவையில் சமர்ப்பிக்கப்படும்.பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு (2/3) சிறப்புப் பெரும்பான்மையுடன் (Special Majority) ஒரே கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகே குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவர் உத்தரவின் பேரில் பதவி நீக்கம் செய்யப்படுவார்.

ஞானேஷ் குமார் விவகாரத்தில் என்ன நடந்தது?

மார்ச் 12, 2026 அன்று, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இரு அவைகளிலும் பதவி நீக்க நோட்டீஸ்களை சமர்ப்பித்தனர். ஆனால் ஏப்ரல் 6 அன்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதனை நிராகரித்தனர். குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், ஏப்ரல் 24 அன்று, 73 மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் “நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை” தொடர்பான 9 குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் ஒரு புதிய பதவி நீக்க நோட்டீஸை தாக்கல் செய்தனர். அந்த நோட்டீஸ் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது.

எது எப்படி இருப்பினும் மக்களின் முன் மண்டியிட்டே தீர வேண்டும் என்பது பாஜகவுக்கு தெரியும். அது நடக்கும், நடக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம்.

 

சுதிர்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *