Tamil Marx

இந்தியா

இந்திய விவசாயத்தில் பெண் விவசாயிகளின் நிலை-ஜி.ராணி

இந்திய விவசாயத்தில் பெண் விவசாயிகளின் நிலை-ஜி.ராணி
  • PublishedAugust 31, 2026

ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டை “பெண் விவசாயிகளின் சர்வதேச ஆண்டு” (International Year of the Woman Farmer) என அறிவித்துள்ளது. உலகளவில் பெண் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்கவும் கவனம் செலுத்தும் ஆண்டாக இது கருதப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு பெண் விவசாயிகளின் நிலைமையை ஆராய்வது மிகவும் பொருத்தமானதாகும்.

விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு

இந்தியாவில் உள்ள விவசாயத் தொழிலாளர்களில் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் பெண்களே. நடவு செய்தல், களை எடுத்தல், அறுவடை, கால்நடை பராமரிப்பு போன்ற அனைத்து முக்கிய பணிகளிலும் அவர்கள் முன்னணியில் இருக்கின்றனர். இன்னும் துல்லியமாகச் சொன்னால், மொத்த விவசாயப் பணியாளர்களில் பெண்களின் பங்கு சுமார் 64 சதவீதம் ஆகும். எனினும், இந்த மகத்தான பங்களிப்புக்கு உரிய அங்கீகாரமோ, பொருளாதார பலன் அப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

நில உரிமை

விவசாய நிலங்களின் மீதான பாரம்பரிய உரிமை ஆண்களுக்கே செல்கிறது. பெண்களின் பெயரில் வெறும் 13 முதல் 14 சதவீத விவசாய நிலங்கள் மட்டுமே உள்ளன. பெண்களால் பயிரிடப்படும் நிலத்தின் பங்கு 11.7 சதவீதம் தான். மேலும், குடும்பப் பண்ணைகளில் ஊதியம் பெறாத உதவியாளர்களாகப் வேலை செய்யும் பெண்களின் பங்கு 47.7 சதவீதம் என்றிருக்க, அதே பிரிவில் ஆண்களின் பங்கு 20.2 சதவீதமே.

இதன் பொருள் என்னவெனில், பெண்கள் விவசாயத்தில் உழைத்தாலும், “விவசாயி” என்ற அங்கீகாரமோ, நிலத்தின் மீதான உரிமையோ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. குடும்பத்தலைவர் பெயரிலேயே பெரும்பாலான பதிவுகள் இருப்பதால், இவர்கள் அதிகாரப்பூர்வமாக விவசாயிகளாக அங்கீகரிக்கப்படாத நிலை நீடிக்கிறது.

நில உரிமை இல்லாததன் விளைவாக, வங்கிக் கடன், விவசாயத்திற்கு தேவையான கருவிகள், அரசு திட்டங்கள், பயிற்சிகள் ஆகியவை போதிய அளவில் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான பெண் விவசாயிகள் விவசாயத்திற்கான பணத்திற்காக நுண்நிதி நிறுவனங்களையோ, சுயஉதவிக் குழுக்களையோ (SHG) சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கூலி வேறுபாடு

நம் நாட்டில் விவசாயத்தில் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மொத்தத் தொழிலாளர்களில் 64% பேர் பெண்களாக உள்ளனர். ஆனால், நாட்டின் மொத்த விளைநிலங்களில் வெறும் 11.7% நிலமே பெண்கள் பெயரில் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் உழைப்புக்கான அங்கீகாரம் போதிய அளவில் கிடைக்கவில்லை.

இந்தியாவில் விவசாயத் துறையில் ஆண் தொழிலாளிக்கும் பெண் தொழிலாளிக்கும் இடையே சராசரியாக 20 முதல் 30 சதவீதம் வரை கூலி வேறுபாடு நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் ஆணுக்கு ரூபாய் 300 முதல் 400 வரை கூலி கிடைக்கிறது. அதே வேலையைச் செய்யும் பெண்ணுக்கு ரூபாய் 200 முதல் 250 மட்டுமே கிடைக்கும் நிலை தொடர்கிறது.

வங்கிக் கடன்கள், விதைகள், உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் அரசு உதவிகள் எளிதில் கிடைப்பதில்லை. அதில் சமத்துவமின்மை உள்ளது, இதன் காரணமாகவே ஆண்களின் விவசாய உற்பத்தியை விட பெண்களின் உற்பத்தித்திறன் 24% குறைவாக உள்ளது.

ஆண்களை போல ஒரே மாதிரியான விவசாய வேலை செய்தாலும், ஒரு ஆணுக்கு விவசாயப் பணியில் ₹100-க்கு, ஊதியம் கிடைத்தால் பெண்ணுக்கு ₹82 மட்டுமே கிடைக்கிறது.

சொந்தக் குடும்ப நிலங்களில் வேலை செய்யும் பெண்களில் 47.7% பேர் ஊதியம் பெறாத உதவியாளர்களாகவே கருதப்படுகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை இந்த அளவு 20.2% மட்டுமே உள்ளது.

வங்கிக் கடன்கள், விதைகள், உரங்கள் போன்ற இடுபொருட்கள் மற்றும் அரசு உதவிகள் எளிதில் கிடைப்பதில்லை. அதில் சமத்துவமின்மை உள்ளது, இதன் காரணமாகவே ஆண்களின் விவசாய உற்பத்தியை விட பெண்களின் உற்பத்தித்திறன் 24% குறைவாக உள்ளது.

வேலைப்பிரிவினையே இந்த வேறுபாட்டுக்கு முக்கியக் காரணமாகும். நடவு செய்தல், களை எடுத்தல் போன்றவை “பெண்கள் வேலை” எனவும், உழுவது, உரம் போடுவது போன்றவை “ஆண்கள் செய்யும் வேலை” எனவும் பிரிக்கப்பட்டு, ஆண்கள் செய்யும் வேலைக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. சம ஊதியச் சட்டம் (Equal Remuneration Act) இருந்தாலும், அமைப்புசாரா (unorganized) துறையில் இது சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை.

இதற்கு நேர்மாறாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டப்படி (MGNREGA) ஆண்/பெண் இருவருக்கும் சம கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலைப் பிரிவினை இல்லாமல் ஒரே வேலைக்கு ஒரே கூலி என்ற கொள்கையில் இது அமைந்துள்ளது.

பெண்களுக்குச் சரியான நில உரிமை, கடன் உதவி மற்றும் வளங்கள் கிடைக்காத இந்தச் சமத்துவமின்மை காரணமாக, இந்தியாவின் விவசாயத் துறைக்கு ஆண்டிற்கு ₹1.2 லட்சம் கோடி முதல் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. இது மொத்த விவசாய உற்பத்தியில் 2.5% – 4% ஆகும்.

தமிழகத்தில் 1944-இல் தொடங்கிய முத்தரப்புக் கூட்ட ஒப்பந்தங்கள் மூலம் விவசாயக் கூலி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 28.10.1999 முதல் ஆண்களுக்கு 6 மணிநேரம், பெண்களுக்கு 5 மணிநேரம் என வேலை நேரமே வேறுபடுத்தப்பட்டது. இதுவே கூலி வேறுபாட்டுக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.

உற்பத்தித் திறனில் இடைவெளி ஏன்? 

கடன், விவசாயத்திற்கு தேவையான பிற முதலீடுகள், குறைந்த உதவிகள் காரணமாக, பெண் விவசாயிகளின் உற்பத்தித் திறன் ஆண்களை விட 24 சதவீதம் பின்தங்கியுள்ளது. இதற்கு அர்த்தம் ஆணை விட பெண் ஆற்றல் குறைவானவர் என்பதல்ல. விவசாயம் செய்ய பெண்களுக்கு போதிய உதவிகள் உரிமைகள் கிடைக்காததால் ஏற்படும் கட்டமைப்பு ரீதியான பின்னடைவாகும்.

இரட்டைச் சுமையும் முடிவெடுக்கும் அதிகாரமின்மையும்

வயல் வேலை, வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு என மூன்று சுமைகளையும் பெண் விவசாயிகள் ஒரே நேரத்தில் சுமக்க வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, பயிர்களை தேர்வு செய்வது, விற்பனை செய்வது, சந்தைப் பேரம் நடத்துவது போன்ற முக்கிய முடிவுகளில் பெண்களின் கருத்து குறைவாகவே கேட்கப்படுகிறது. மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் உரங்கள் போன்ற வேதிப்பொருட்கள் கையாளுதல், நீண்ட நேர உடலுழைப்பு ஆகியவற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வும் போதிய அளவு வழங்கப்படுவதில்லை.

தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள்

தமிழ்நாடு அரசு பெண் விவசாயிகளுக்காக 2026-27 வேளாண் பட்ஜெட்டில் சில திட்டங்களை அறிவித்துள்ளது:

  • இலவச கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் திட்டம் – கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த ₹167 கோடி நிதி ஒதுக்கீடு.
  • – வீட்டுத் தோட்ட ஆதரவுத் திட்டம் – மாடித்தோட்டம், காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைப்பதற்கு ₹10 கோடி.
  • – மண்ணின் மகள் திட்டம் – SC/ST பெண் விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதே இதன் நோக்கம்.
  • – அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் – உயர்மதிப்புத் திட்டங்களில் 20% கூடுதல் மானியம்.

தமிழகத்தில் கிராமப்புற பெண் தொழிலாளர் பங்களிப்பு 35.1 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம். எனினும், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு இவ்வளவு கணிசமாக இருந்தும், அதற்கு உரிய முறையில் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம்.

பெண் விவசாயிகள் இந்திய வேளாண் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தும், நில உரிமை, சம்பளத்தில் சமத்துவம், முடிவெடுக்கும் அதிகாரம், சுகாதார பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளில் அவர்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர்.

இத்தகைய சூழலில் அரசின் திட்டங்கள் பெண் விவசாயிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்றால் 2026-ஆம் ஆண்டு “பெண் விவசாயிகளின் சர்வதேச ஆண்டாக” கடைப்பிடிக்கப்படும் இந்த வேளையில், வெறும் அங்கீகாரம் மட்டுமல்லாமல், நில உரிமை மறுசீரமைப்பு, சம கூலிச் சட்ட அமலாக்கம், மற்றும் தொழில்நுட்ப உதவியை உறுதி செய்யும் கொள்கை மாற்றங்களை அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதுவே உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும்.

 

கட்டுரையாளர் – ஜி.ராணி மாநில பொருளாளர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்…

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *