“வேலையின்மை, வறுமை, குற்றங்கள் அல்லது அரசின் தோல்விக்கு எந்தவொரு ஆப்பிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதனும் பொறுப்பல்ல.”
– கானாவின் சோசலிச இயக்கம், ஆப்பிரிக்க விடுதலை நாள் 2026.
முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதிலும், பொதுவான பொருளாதார நலன்களுக்காக ஒன்றுபடக்கூடிய தொழிலாளர்களைப் பிரிப்பதற்காக, ஆளும் வர்க்கம் தொடர்ந்து அந்நிய வெறுப்பையே (xenophobia) நம்பியுள்ளனர். ஊதிய உயர்வு இல்லாத போது, வேலையின்மை அதிகரிக்கும்போது அல்லது சமூக நெருக்கடி அதிகரிக்கும் போது, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட்ட வர்க்கத்தினர் பொதுமக்களின் கோபத்தைப் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராகச் செல்லவிடாமல், குடியேறியவர்கள், சிறுபான்மையினர் அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களை நோக்கித் திசைதிருப்புகிறார்கள்.
இந்த உத்தி பழமையானது, தீவிரமானது மற்றும் உலகளாவியதாகும். ஒரே மாதிரியான சுரண்டல் நிலைமைகளைப் எதிர் கொள்ளும் தொழிலாளர்கள், ஒருவரையொருவர் கூட்டாளிகளாகப் பார்க்காமல், வேலைகள், வீட்டுவசதி மற்றும் பாதுகாப்பிற்காகப் போட்டியிடும் எதிரிகளாகப் பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
எனவே, அன்னிய வெறுப்பு என்பது வெறும் தவறான பிரச்சாரமாக (prejudice) மட்டும் செயல்படுவதில்லை, மாறாக அது ஓர் அரசியல் ஆயுதமாகச் செயல்படுகிறது. இந்த அந்நிய வெறுப்பை தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்தப் முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள், அரசாங்கங்கள் தேசிய உணர்வைத் தூண்டப் பயன்படுத்துகின்றன, மற்றும் தீவிர வலதுசாரி இயக்கங்கள் இனம், இனம்சார் அடையாளம், மதம் மற்றும் குடியுரிமை ஆகியவற்றைக் கடந்து தொழிலாளர்களின் ஒற்றுமையை உடைக்க இதைப் பயன்படுத்துகின்றன.
இருப்பினும், தொழிலாளர்கள் இந்த யுக்திகளை முறியடித்து ஒன்றாகப் போராடிய வரலாற்றுத் அனுபவங்களும் நமக்கு உண்டு. அந்தத் தருணங்கள் நமக்கு நினைவூட்டுவது என்னவென்றால், அந்நிய வெறுப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல; அது திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது, அதைத் தோற்கடிக்கவும் முடியும்.
முதலாளித்துவமும் பிரிவினை பிரச்சாரமும்
நவீன முதலாளித்துவம் பெருமளவில் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களைச் (labour migration) சார்ந்தே உள்ளது. வளர்ச்சியடைந்த பிராந்தியங்களுக்கும் தொழில்துறைகளுக்கும், குறைந்த ஊதியம் கொண்ட ஆபத்தான அல்லது தற்காலிக வேலைகளைச் செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் தான் பயிர்களை அறுவடை செய்கிறார்கள், லாரிகளை ஓட்டுகிறார்கள், சுத்தம் செய்கிறார்கள், முதியவர்களைப் பராமரிக்கிறார்கள், கட்டடங்களைக் கட்டுகிறார்கள் மற்றும் கிடங்குகளில் வேலை செய்கிறார்கள்.
பொருளாதார சுழற்சிக்கு இந்தத் தொழிலாளர்கள் எவ்வளவு மையமானவர்கள் என்பதை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அரசியல் உரையாடல்கள் பலவும் அவர்களை ஆபத்தானவர்களாகவே சித்தரிக்கின்றன. இந்த முரண்பாடு ஒரு முக்கியமான நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வேலையின்மை அல்லது ஊதியக் குறைவுக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்களை குற்றம் சாட்டினால், மோசமடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளுக்குக் காரணமான பெருநிறுவனங்களுக்கும் அவர்களின் கொள்கைகளுக்கும் மக்கள் சவால் விடுவது குறைந்துவிடும். அன்னிய வெறுப்பு என்பது கட்டமைப்பு ரீதியான பொருளாதாரப் பிரச்சினைகளைக் கலாச்சார அல்லது தேசிய மோதல்களாக மாற்றுகிறது.
இந்தச் செயல்கள் முறை நமக்கு நன்கு தெரிந்தவை தான், குறிப்பாக ஏழை நாடுகளில். பன்னாட்டு நிறுவனங்கள் வளங்களை திருடி, ஊதியங்களை குறைத்து, தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துகின்றன, மேலும் தற்காலிக ஒப்பந்தங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன; அரசாங்கங்கள் சிக்கனக் கொள்கைகள் மூலம் பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கின்றன; பின்னர், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களால் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்றும், அவர்கள் வேலைகளைத் திருடுகிறார்கள் என்றும் அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். இதன் விளைவாக, ஒரே சுரண்டல் முறையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள், ஒருவரையொருவர் பார்த்து பயப்படவும் வெறுக்கவும் ஆளும் வர்க்கத்தால் தூண்டிவிடப்பட்டு பிரித்துவிடப்படுகிறார்கள்.
தொழிற்சாலைப் பாலைவனங்கள்
அந்நிய வெறுப்பு என்பது வடக்குலக நாடுகளில் (Global North) உழைக்கும் வர்க்க மக்களைப் பிரிப்பதற்கும், பொது மக்களின் கோபத்தை சமத்துவமின்மையில் இருந்து திசைதிருப்புவதற்கும் ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதாரக் கருவியாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில், இனம் சார்ந்த உழைப்புப் ஏற்றத்தாழ்வுகள் அடிமைமுறை மூலம் நிறுவப்பட்டு, பின்னர் புலம்பெயர் தொழிலாளர் அரசியல் மூலம் வலுப்படுத்தப்பட்டன. பொருளாதார நெருக்கடிகளின் போது, கார்ப்பரேட்களின் அதிகாரம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் உந்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களே பாதுகாப்பின்மைக்கு ஆழமான காரணங்களாக இருந்தபோதிலும், வேலையின்மை, ஊதியக் குறைவு மற்றும் சமூக உறுதியின்மைக்குக் புலம்பெயர் தொழிலாளர்களே அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்த வெறுப்பு பிரச்சாரம் டொனால்டு டிரம்பின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் தீவிரமடைந்தது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அத்தொழிலாளர்களை நாட்டிற்கு எதிரானவர்களாகவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்காமல் போனதற்கு காரணமாகவும் சித்தரித்தன. அதே நேரத்தில் சமத்துவமின்மையை உருவாக்குவதில் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் பங்கையும் மூடிமறைத்தது.
ஐரோப்பா முழுவதும், பொருளாதார மறுசீரமைப்பு, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்டப் பாதுகாப்பு உதவிகளின் வீழ்ச்சி ஆகியவற்றோடு அந்நிய வெறுப்பும் அதிகரித்தது. பிரான்சில், ‘நேஷ்னல் ரேலி’ (National Rally) கட்சி, வேலையின்மை மற்றும் நவதாராளவாத பொருளாதார கொள்கை சீர்திருத்தங்களால் ஏற்பட்ட அதிருப்தியைத் திசைதிருப்ப, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்பிரச்சாரத்தையும் அவர்கள் பற்றிய பயத்தையும் உருவாக்கி அணிதிரட்டியது. ஜெர்மனியில், ‘ஜெர்மனிக்கான மாற்று’ (AfD) கட்சியின் வளர்ச்சி, குறிப்பாக 2015 அகதிகள் நெருக்கடி ஏற்பட்ட பிறகு, புலம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை குறித்த பிரச்சனைகளை பேசியது. இத்தாலி, ஹங்கேரி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் குடியேறியவர்களையும் அகதிகளையும் கலாச்சார அடையாளம், பொதுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கட்டமைக்கும் தேசியவாத இயக்கங்களின் வளர்ச்சியைக் கண்டன.
ஐரோப்பிய நாடுகள் விவசாயம், கட்டுமானம், தளவாடங்கள் (logistics) மற்றும் பராமரிப்புப் பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்களை எவ்வளவு சார்ந்துள்ளன என்பதை இந்த வாதங்கள் ஏற்க மறுத்தன. அதே நேரத்தில் தனியார்மயமாக்கல், ஊதிய உயர்வின்மை, பெருநிறுவனங்களின் சொத்து குவிப்பு ஆகிய பிரச்சனைகளை மற்றும் வட அட்லாண்டிக் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு ஐரோப்பாவின் நலனை காவுகொடுத்தது மூலமாக கவனத்தைத் திசைதிருப்பின.
பிரிட்டனில், தொழில்துறை அழிப்பு (deindustrialisation), தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் பல உழைக்கும் வர்க்கத்தை சீரழித்தன, இருப்பினும் மக்கள் மத்தியில் இந்த விவாதம் சமூக வீழ்ச்சிக்குக் காரணமான பொருளாதாரக் கொள்கைகளைக் காட்டிலும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதே அதிக கவனம் செலுத்தியது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மேற்காசியாவில் இருந்து வந்த அகதிகளும் வீடு, ஊதியம் மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பான நெருக்கடிக்குக் காரணமாக குற்றம் சாட்டப்பட்டனர், இருப்பினும் விவசாயம், போக்குவரத்து, பராமரிப்புப் பணி மற்றும் தளவாடங்கள் போன்ற துறைகளுக்குக் அத்தொழிலாளர்களின் உழைப்பே மையமாக இருந்தது.
கோபத்தைப் பெருநிறுவன மறுசீரமைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளை அந்த நாட்டை ஆளும் அரசியலை நோக்கிச் திருப்பாமல், புலம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கித் திசைதிருப்பியது, இது சர்வதேச உழைக்கும் வர்க்க ஒற்றுமையை பலவீனப்படுத்தும் அதே வேளையில் தேசியவாதத்தை வலுப்படுத்தியது. எனவே, வடக்குலக நாடுகள் முழுவதும், அந்நிய வெறுப்பு என்பது வெறும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரமாக மட்டும் செயல்படாமல், ஆழமாக வேரூன்றிய பொருளாதார அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கும், மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களை சிதறடிப்பதற்கும் ஒரு செயல்பாட்டு யுக்தியாகவே இருந்துள்ளது.
ஆப்பிரிக்க வெறுப்பு
சமகால தெற்குலக நாடுகளில் தொழிலாளர்களைப் பிரிக்க அந்நிய வெறுப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்குத் தென்னாப்பிரிக்கா மிகத் தெளிவான உதாரணங்களில் ஒன்றை வழங்குகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தது. சமூக சமத்துவமின்மையில் எந்தவொரு உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பெருமளவிலான வேலையின்மை, போதிய வீட்டுவசதியின்மை மற்றும் சீரழிந்து வரும் பொதுச் சேவைகள் ஆகியவை உழைக்கும் வர்க்க மக்களிடையே பெரும் விரக்தியை உருவாக்கியுள்ளன.
இந்தச் சூழலில், கானா, மலாவி, மொசாம்பிக், சோமாலியா, ஜிம்பாப்வே மற்றும் பிற இடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்த மக்கள் மீண்டும் மீண்டும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். அந்நிய வெறுப்பு மூலம் அம்மக்கள் மீதான தாக்குதல்கள் 2008, 2015 மற்றும் சமீபத்திய ஆண்டுகளிலும் வெடித்தன. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தென்னாப்பிரிக்கர்களின் வேலைகளைப் பறிப்பதாக அரசியல்வாதிகளும் குடியேற்ற எதிர்ப்பு குழுக்களும் வாதிட்டனர்.
ஆனால் அப்படி புலம்பெயர்ந்து வந்தவர்கள் தென்னாப்பிரிக்காவின் நெருக்கடிக்கு காரணமில்லை. அதன் வேர்கள் வேலையின்மை, தனியார்மயமாக்கல், ஊழல் மற்றும் பெருநிறுவனங்களின் கைகளில் செல்வம் குவிந்திருப்பதில் தான் உள்ளன. லாரி போக்குவரத்து (trucking), விவசாயம், சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் உள்ள முதலாளிகள் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களையே வேலைக்கு வைக்க விரும்புகிறார்கள், ஏனெனில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இந்தத் தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்க முடியும், அவர்களால் சுரண்டலை எதிர்த்துப் போராடவும் முடியாது.
உதாரணமாக, தென்னாப்பிரிக்க லாரி போக்குவரத்தில் ‘சுமை தூக்கும் கட்டணம்’ (pay per load) அணுகுமுறை, புலம்பெயர் தொழிலாளர்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது, அவர்களுக்குக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது மற்றும் குறைந்தபட்ச சலுகைகளே கிடைக்கின்றன. லாரி போக்குவரத்துத் துறை 2018க்குப் பிறகு அந்நிய வெறுப்புப் பிரச்சாரத்தின் முக்கியப் போர்க்களமாக மாறியது. சில குழுக்கள் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரின, மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (ஓட்டுநர்கள்) மீதான தாக்குதல்களும் அதிகரித்தன.
தொழிலாளர் அமைப்பாளர்களும் தொழிலாளர் கூட்டமைப்புகளும் இந்த பிரித்தாளும் அரசியலுக்கு எதிராகப் பெருமளவு போராடின. உண்மையான பிரச்சனை யார் இந்த நாட்டு மக்கள் என்பதல்ல, மாறாகத் தொழிலாளர் சட்டங்களின் தளர்வும் (deregulation), அனைவரின் ஊதியத்தையும் குறைப்பதற்காகத் தற்காலிகக் குடியேற்ற உழைப்பைப் பயன்படுத்துவதும் தான் என்று அவர்கள் வாதிட்டனர்.
தென்னாப்பிரிக்காவின் உதாரணமானது ஒற்றுமை மிகவும் தேவைப்படும் நேரத்தில் அந்நிய வெறுப்பு எவ்வாறு உழைக்கும் வர்க்கத்தைச் சிதறடிக்கிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தப் பிரிவினையிலிருந்து மூலதனம் எவ்வாறு பயனடைகிறது என்பதைத் தொழிலாளர்கள் உணரும்போது, ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தையும் அது வெளிப்படுத்துகிறது. வியக்கத்தக்க வகையில், இந்த பிரித்தாளும் அரசியல் தொழிலாளர்களின் மட்டத்திலேயே நீடிக்கிறது: வெளிநாட்டு மூலதனத்திற்கு எதிராக இந்த அந்நிய வெறுப்புப் பிரச்சாரப் பேச்சுகள் எதுவும் இல்லை. எனவே, இதை ‘ஆப்பிரிக்க வெறுப்பு’ (Afrophobia) என்று அழைப்பதே மிகவும் சரியானது. அதாவது கண்டத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் மீதான பயம்.
இந்துத்துவா மேலாதிக்கம்
இந்தியாவில், தொழிலாளர்களுக்கிடையேயான பிரிவினைகள் அந்நிய வெறுப்பாக மட்டுமல்லாமல், வகுப்புவாதம் (மிகத் துல்லியமாக, முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரம்) மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான விரோத போக்கு களாகவும் இருக்கின்றன. பீகார் அல்லது உத்தரபிரதேசம் போன்ற ஏழை மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் பெரும்பாலும் வளர்ந்த மாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
இந்துத்துவ தேசியவாத அரசியல் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான விரோதமாக மாற்றுகிறது. நவீன வரலாற்றின் மிகப்பெரிய வெகுஜன அணிதிரட்டல்களில் ஒன்றான 2020-21 ஆம் ஆண்டின் விவசாயிகளின் போராட்டத்தின் போது இந்த உத்தி மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
விவசாயச் சீர்திருத்தங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் தீவிரமான எதிர் பிரச்சாரங்களை எதிர்கொண்டனர். சீக்கியப் போராட்டக்காரர்கள் பிரிவினைவாதிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு ‘தேசவிரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டனர். போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றது சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் வலதுசாரி ஊடகங்கள் அந்த இயக்கத்திற்கு வகுப்புவாத வண்ணத்தை பூச முயன்றன. இதன் நோக்கம் தெளிவாக தெரிந்தது. அதாவது விவசாயத்தின் மீதான கார்ப்பரேட் கட்டுப்பாட்டிற்கு எதிரான ஒரு கூட்டுப் போராட்டத்தை அனுமதிக்காமல், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மதம் மற்றும் பிராந்திய ரீதியாகப் பிரிப்பதுதான்.
ஆனால் அந்த இயக்கம் விழிப்புணர்வுடன் கூடிய ஒற்றுமையின் மூலம் எதிர் பிரச்சார முயற்சிகளைத் தோற்கடித்தது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக இணைந்து கூட்டாகச் செயல்பட்டனர். சீக்கிய அமைப்புகள் லங்கர் (langar) முறை மூலம் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கின. அதே நேரத்தில் முஸ்லிம்களின் குழுக்கள் வகுப்புவாத பிரச்சனைகள் கிளப்பிவிடப்பட்ட போது சீக்கியப் போராட்டக்காரர்களைப் பாதுகாத்தன.
விவசாயிகளுக்கு ஆதரவாகத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன. கடன்கள், தனியார்மயமாக்கல், பாதுகாப்பற்ற வாழ்க்கை சூழல் மற்றும் விவசாயத்தின் மீதான கார்ப்பரேட் ஆதிக்கம் போன்ற தங்களின் பொதுவான பொருளாதார நிலைமைகளின் மீது கவனத்தைத் திருப்பியதாலும், இந்துத்துவ மேலாதிக்கத்தின் வெறுப்புணர்வுக்கு நேரடியாகச் சவால் விடுத்ததாலும் அந்த இயக்கம் வெற்றியடைந்தது.
இதன் அடிப்படையில், விவசாயிகளின் போராட்டமானது வகுப்புவாத அரசியலுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் சவாலாகும். தொழிலாளர்களும் விவசாயிகளும் மத அடையாளம் பொருளாதார ஒற்றுமையை மீறி மேலே எழுவதை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்த சமகாலப் போராட்டங்கள் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துகின்றன. தொழிலாளர்கள் சிதறிப்போயும் பாதுகாப்பற்ற நிலையிலும் இருக்கும்போதுதான் அந்நிய வெறுப்பு வளர்கிறது. ஆனால் தங்களின் பாதுகாப்பின்மை புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களால் அல்ல, மாறாக முதலாளிகளாலும் பொருளாதார அமைப்புகளாலும் தான் உருவாக்கப்படுகிறது என்பதைத் தொழிலாளர்கள் உணரும்போது அவர்களுக்கிடையிலான ஒற்றுமை சாத்தியமாகிறது.
வர்க்கப் போராட்டம்
தென்னாப்பிரிக்காவில், தொழிலாளின் ஊதியத்தைக் முதலாளிகள் குறைப்பதற்கும் தொழிலாளர்களிடையே மோதல்களை ஊக்குவிப்பதற்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்தினர். இந்தியாவில், வகுப்புவாதம் பொருளாதாரக் நெருக்கடிகளை மத மோதலாக மாற்ற முயன்றது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஆளும் வர்க்கத்தினர் தொழிலாளர்கள் சிதறிக்கிடந்ததால் சிதறலால் பயனடைந்தனர். இருப்பினும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடியும் என்ற சாத்தியத்தை நிரூபித்தனர்.
லாரி ஓட்டுநர்கள், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் தேசிய, இன மற்றும் மத எல்லைகளைக் கடந்து பொதுவான நலன்களை அடையாளம் காணத் தொடங்கினர். இந்த பாடம் இன்று மிகவும் முக்கியமானது, ஏனெனில் முதலாளித்துவமே இன்று ஆழமான சர்வதேசத் தன்மையைக் கொண்டுள்ளது. விநியோகச் சங்கிலிகள் (supply chains) கண்டங்கள் முழுவதும் நீண்டுள்ளன. தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிகழ்வுகள் ஒட்டுமொத்த நாடுகளின் பொருளாதாரத்தையும் உலகளாவிய பெரு நிறுவனங்களையும் வடிவமைக்கிறது. .
எனவே தொழிலாளர்கள் தங்களின் நலன்களை வெறும் தேசியவாதத்தின் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியாது. ஆளும் வர்க்கத்தினர் இதை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் அவர்கள் புலம்பெயர்ந்து வந்தவர்கள், அகதிகள், சிறுபான்மையினர் மீதான அச்சத்தைத் (வெறுப்பை) தொடர்ந்து விதைக்கிறார்கள். அந்நிய வெறுப்பு என்பது சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிரான கோபத்தைத் திசைதிருப்புகிறது. அது தொழிலாளர் அமைப்புகளை பலவீனப்படுத்தி, தொழிலாளர்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பைச் சிதறடிக்கிறது.
ஆனால் தொழிலாளர் வர்க்கத்தின் இந்த பிளவுகள் இயற்கையானவையோ அல்லது நிரந்தரமானவையோ அல்ல என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் காட்டுகிறது. தொழிலாளர்கள் தங்களின் பொதுவான பிரச்சனைகளையும் நிலைமைகளையும் பொதுவான எதிரிகளையும் அங்கீகரிக்கும் போது இந்த பிளவுகளை மீண்டும் மீண்டும் முறியடித்துள்ளனர்.
அந்நிய வெறுப்பிற்கு எதிராக வெறும் தார்மீக (கொள்கை ரீதியான) நிலைப்பாட்டை மட்டும் எடுப்பது, தொழிலாளர்கள் மீதான ஆளும் வர்க்கத்தின் விரோதப் போக்கையே மீண்டும் ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் தொழிலாளர்களின் நிலைகள் முதலாளித்துவ கட்டமைப்புகளால் வடிவமைக்கப்படுபவையே தவிர, உழைக்கும் வர்க்க சமூகங்களின் உள்ளார்ந்த குணத்தால் அல்ல. அந்நிய வெறுப்பு பிரச்சாரத்தை எதிர்கொள்ளும் போது தார்மீக ரீதியாக மட்டும் பேசுவதென்பது, தங்களுக்குப் பயனளிக்கும் இந்தக் கட்டமைப்பே இந்த அவலத்தை உருவாக்குகிறது என்பதை அங்கீகரிக்க விரும்பாத தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் (liberal bourgeoisie) வெற்றுப் பெருமூச்சாகும் (குணமாகும்) .
எனவே இன்றுள்ள சவால், அந்நிய வெறுப்பைத் தார்மீக ரீதியாக எதிர்ப்பது மட்டுமல்ல, உலகளாவிய முதலாளித்துவத்தையே எதிர்கொள்ள கூடிய அளவிலான சர்வதேச ஒற்றுமையின் வடிவங்களை மீண்டும் கட்டியெழுப்புவதுதான். அத்தகைய ஒற்றுமை இல்லாவிட்டால், தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் எதிராகப் பிரிந்தே இருப்பார்கள். ஒற்றுமையின் வடிவங்கள் இருந்தால், அவர்கள் தங்களின் கூட்டுச் சக்தியை மீண்டும் கண்டறியத் தொடங்குவார்கள்.
பேரா. விஜய் பிரசாத்
அடுத்த தொடர் ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமை வெளியாகும்.