தெற்குலக நாடுகளில் (Global South) இடதுசாரிகள் என்ற கருத்தாக்கத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளாகவோ அல்லது காலனித்துவத்துக்கு பிந்தைய (postcolonial) அரசுகளில் எஞ்சியிருக்கும் சோசலிச முழக்கங்களாகவோ மட்டும் சுருக்கிவிட முடியாது. தெற்குலக நாடுகளில் உள்ள இடதுசார அமைப்புகள் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம், இன்னும் முழுமையடையாத அவர்களின் நாட்டு விடுதலை மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சமகாலத்தில் நடத்தி வருகின்ற போராட்டம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாம் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உருவாக்கப்பட்ட அரசியல் கோட்பாடுகளுக்கு சென்று, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் உலக அமைப்பின் தீவுக் கோட்பாட்டில் உள்ள உண்மையான அரசியல் நிலப்பரப்பை ஆராய வேண்டும்.
நமது காலனியாதிக்க எதிர்ப்பு வேர்கள்
தெற்குலக நாடுகளில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளிலிருந்து மட்டும் இடதுசாரிகள் உருவாகவில்லை, காலனியாதிக்கம், ஏகாதிபத்தியத்தின் வன்முறையிலிருந்தும் தான் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள். இந்த வேறுபாடு மிகவும் தீர்க்கமானது. ஐரோப்பாவில், பாரம்பரிய இடதுசாரிகள் முக்கியமாகத் தொழில் துறை வர்க்கப் போராட்டத்தின் மூலமே உருவானார்கள். அதாவது மூலதனத்திற்கு எதிராக தொழிலாளர்கள். ஆனால் காலனியாக இருந்த நாடுகளில் வர்க்கப் போராட்டமானது அந்நாட்டின் தேசிய விடுதலையோடு பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், பூர்வகுடி மக்கள், தீவிரமான (Radical) அறிவுஜீவிகள், முதன்மையாகக் காலனித்துவ அரசையும், ஏகாதிபத்தியப் படைகளையும், இவற்றுடன் அவர்களுக்குத் துணையாக இருந்த உள்நாட்டு உயர் வர்க்கத்தினரையும் எதிர்த்துப் போராடினர். இதனால் தெற்குலக நாடுகளில் இடதுசாரிகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிசம் என இருமுனைத் தன்மையையும் கொண்டிருந்தனர்.
விளாடிமிர் லெனின் (1870-1924), ஜவஹர்லால் நேரு (1889-1964), ஹோ சி மின் (1890-1969), ஜோஸ் கார்லோஸ் மரியா இருதெகி (1894-1930), கிளாடியா ஜோன்ஸ் (1915-1964), அமில்கார் கப்ரால் (1924-1973), பிடல் காஸ்ட்ரோ (1926-2016) மற்றும் தாமஸ் சங்கரா (1949-1987) என பல்வேறு பின்னணிகளைக் கொண்ட முக்கியத் தலைவர்கள், தங்களுக்குள் பெரும் கருத்தியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், தெற்குலக நாடுகளின் இடதுசாரி மரபுக்குள்ளேயே வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட உலகில் இறையாண்மை என்ற சிக்கலை எதிர்கொண்டனர்.
1955 ஆம் ஆண்டின் பாண்டுங் மாநாடு (Bandung Conference) இந்த அரசியல் எல்லையின் மிகத் தெளிவான வெளிப்பாடாக அமைந்தது. புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டின் சொந்த எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை நிலைநாட்ட இந்தோனேசியாவில் கூடினர். பாண்டுங் என்பது வெறும் தூதரக ரீதியிலான நாடகம் அல்ல. அம்மாநாடு அரசியல் சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதிக்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது. பொருளாதார இறையாண்மை இல்லாத அரசியல் சுதந்திரம் வெறும் போலி சுதந்திரத்தையே தரும் என்பதை பாண்டுங் மாநாட்டிற்குள் இருந்த இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் வைத்திருந்தனர். இந்த முரண்பாடு இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது.
சமூக அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துதல்
இன்று தெற்குலக நாடுகள் புதிய வகை ஏகாதிபத்தியத்தை எதிர் கொள்கின்றன. கடன், நிதி மூலதனம், பன்னாட்டு நிறுவனங்கள், ராணுவக் கூட்டணிகள் மற்றும் தொழில்நுட்ப ஏகபோகங்கள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் புதிய கட்டத்தை அந்நாடுகள் எதிர்கொள்கின்றன. 1980கள் மற்றும் 1990களில் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) திணிக்கப்பட்ட கட்டமைப்புச் சீரமைப்புத் திட்டங்கள் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்தன. ஒட்டுமொத்த நாடுகளும் சிக்கன-முதலாளித்துவத்திற்குள் (austerity-capitalism) கட்டுப்படுத்தப்பட்டன. அதன் விளைவுகள் இன்றும் நம் முன்னே தெரிகின்றன. தனியார்மயமாக்கப்பட்ட சுகாதாரத்துறைகள், பலவீனமடைந்த தொழிலாளர் இயக்கங்கள், உணவுக்கு கையேந்தும் நிலை, வேலையின்மை அதிகரிப்பு மற்றும் அரசியல் ரீதியாக பிரிந்திருப்பது.
இன்றைய காலகட்டத்தில், வட அட்லாண்டிக் நாடுகள் மந்தமான பொருளாதார வளர்ச்சியால் தடுமாறும்போது, அவை தங்களின் ராணுவ மற்றும் தகவல் ஆற்றலைப் (ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு) பயன்படுத்தி தங்களின் மேலாதிக்கத்தைச் செலுத்த முயல்கின்றன. இதைத்தான் Tricontinental: Institute for Social Research அமைப்பு ‘அதிதீவிர ஏகாதிபத்தியம்’ (hyper-imperialism) என்று அழைக்கிறது. உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளி ஆசியாவிற்கு நகர்ந்துள்ளதே அதிதீவிர ஏகாதிபத்தியம் ஒருங்கிணைக்கப்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா தலைமையிலான வட அட்லாண்டிக் நாடுகள் (நேட்டோ) காசாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலைக்குத் துணையாக நின்று, ஈரானுக்கு எதிராக சட்டவிரோதப் போரைத் தொடங்கி, கியூபா மீதான சட்டவிரோத முற்றுகையை அதிகரித்துள்ளன. ஏமாற்றமும் விரக்தியும் அடைந்த வட அட்லாண்டிக் நாடுகளின் தலைவர்கள் ஆபத்தானவர்களாகவும் வீழ்ச்சியடைபவர்களாகவும் மாறியுள்ளனர். கோடிக்கணக்கான உலக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு திட்டத்தைக் கூட அவர்களால் முன்வைக்க முடியவில்லை.
தடுமாற்றத்துடன் இருந்தாலும், வெவ்வேறான தன்மைகளைக் கொண்ட அரசுகளைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்புகள் புதிய வர்த்தக முறைகளையும் புதிய தூதரகக் குழுக்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளன (இதில் BRICS+ மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை அடங்கும்). உலக ஒழுங்கில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு நிலையான புதிய சூழல் உருவாகவில்லை.
இந்தச் சூழ்நிலையில், இடதுசாரிகளைப் பற்றிப் பேசுவதன் பொருள் என்ன?
முதல் சவால் கருத்தியல் சார்ந்தது. இன்றைய அரசியல் உரையாடல்கள் பலவும் இடதுசாரி அரசியலையும், தாராளவாத அரசியலையும் (liberalism) ஒன்றாகக் குழப்பிக்கொள்கின்றன. ஆனால் தெற்குலக நாடுகளில் தாராளமயம் என்பது பெரும்பாலும் சர்வதேச மூலதனத்துடன் பிணைக்கப்பட்ட கம்ப்ராடோர் என்ற உயரடுக்கினரின் கருத்தியலாகவே செயல்பட்டுள்ளது. [Comprador elites என்றால் வெளிநாட்டுச் முதலாளிகளுக்கு தரகர்களாகச் செயல்படும் உள்ளூர் செல்வந்தர்கள் என்று பொருள் ] தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கிக் கொண்டும், பொதுச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கிக் கொண்டும், வெறும் தேர்தல் ஜனநாயகத்தை மட்டும் ஊக்குவிக்கும் ஒரு அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறது என்பதற்காக மட்டுமேஅதனை ஒரு இடதுசாரி அரசாங்கம் என கூற முடியாது. பரந்த முதலாளித்துவ எதிர்ப்புப் பார்வையும், ஏகாதிபத்திய அமைப்புகளுடன் எந்தவொரு கட்டமைப்பு ரீதியான தொடர்பும் இல்லாதிருப்பதே தங்களை இடதுசாரிகளாக நிலைநிறுத்திக் கொள்ளும் சக்திகளின் அடிப்படைத் தகுதியாக இருக்க வேண்டும்.
அடிப்படையில், இடதுசாரிகள் சமூக அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள். நிலம், பணம், தொழில்கள், எரிசக்தி , உணவு உற்பத்தி அமைப்புகள், தகவல் தொடர்பு மற்றும் உழைப்பு ஆகியவற்றை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை அது எழுப்புகிறது. மனிதர்கள் செய்யும் உற்பத்தியைச் சமூகத் தேவைக்காக பயன்படுத்துகிறார்களா அல்லது தனிநபரின் லாபக் குவிப்புக்காகவா [சொத்துமதிப்பை உயர்த்துவதற்காகவா] என்று அது கேட்கிறது. கலாச்சார விவாதங்கள் அல்லது தேர்தல் கால வேடிக்கைகளால் இக்கேள்விகள் மறைக்கப்பட்டாலும், இன்றும் இவை தான் மையமானவையாகவே இருக்கின்றன.
அதே நேரத்தில், தெற்குலக நாடுகளில் உள்ள இடதுசாரிகள் இருபதாம் நூற்றாண்டின் சோசலிசத் திட்டங்களின் மீதான வெறும் கடந்தகால ஏக்கத்துடன் (nostalgia) மட்டுமே அமைப்பை முன்னோக்கி கொண்டு சென்று விட முடியாது. அத்தகைய திட்டங்கள் பலவும் எழுத்தறிவு, சுகாதாரம், பெண்கள் விடுதலை. இனவெறி எதிர்ப்புப் போராட்டங்களில் அசாதாரணமான சாதனைகளைச் செய்துள்ளன. கியூபாவின் சர்வதேச மருத்துவக் குழுக்கள் நவீன அரசியலின் மிகச்சிறந்த அறநெறிச் சாதனைகளில் ஒன்றாகும். வியட்நாமோ காலனியாதிக்கத்தைத் தோற்கடித்து, பேரழிவிற்குள்ளான ஒரு தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பியது. இந்தியாவில் உள்ள கேரளா பல ஆண்டுகால இடதுசாரிகள் தலைமையிலான ஆட்சியின் மூலம் வலிமையான அரசுப் பொது நிறுவனங்களை உருவாக்கியது. இவோ மொராலெஸின் தலைமையிலான பொலிவிய அரசு, சில சக்திவாய்ந்த மனிதர்கள் மட்டும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டின் பூர்வகுடி மக்களின் இறையாண்மையை நிலைநாட்டியது. இருப்பினும் அங்கு சில தோல்விகளும் இருந்தன. அதாவது அரசு அதிகாரிகளின் அதிகாரத்துவம் (bureaucratisation), போதிய ஜனநாயகமின்மை , ஊழல், சர்வாதிகாரப் போக்குகள், பல நேரங்களில், உலகளாவிய வர்த்தகச் சந்தைகளின் (கச்சாப் பொருட்கள் சந்தையின்) மீதானச் சார்பு நிலையைக் கடந்து அடுத்த கட்டத்திற்கு [சொந்த உற்பத்தி வளர்ச்சியை நோக்கிய பயணம்] மாற முடியாமல் போகும் இயலாமை”ஆகியவற்றின் காரணமாக இந்த தோல்விகள் அமைந்தன . தீவிரமான இடதுசாரிப் பகுப்பாய்விற்குப் பாராட்டோ அல்லது கண்டனமோ தேவையில்லை, மாறாக இயக்கவியல் மதிப்பீடு (dialectical assessment) தான் தேவை.
இன்றுள்ள மையப் பிரச்சினைகளில் ஒன்று முற்போக்குச் சக்திகளின் சிதறலாகும். தெற்குலக நாடுகள் முழுவதும், முற்போக்கு இயக்கங்கள் பெரும்பாலும் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், பெண்ணிய இயக்கங்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், பூர்வகுடி இயக்கங்கள், மாணவர் குழுக்கள், முறைசாரா தொழிலாளர் சங்கங்கள், இனவெறி எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மற்றும் சோசலிசக் கட்சிகள் என சிதறிய வடிவங்களிலேயே உள்ளன. இந்தச் சக்திகள் பெரும்பாலும் உள்நாட்டில் உள்ள மேம்பட்ட [முதலாளித்துவ] வர்க்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ள நிதி மூலதனம் என்ற ஒரே எதிரியைத்தான் எதிர்கொள்கின்றன. ஆனால் அவற்றுக்கு இடையே அமைப்பு ரீதியிலான ஒற்றுமை இல்லை.
இதற்கு பிரேசில் ஒரு சிறந்த உதாரணம். அந்நாட்டில் ஆட்சியில் உள்ள தொழிலாளர் கட்சியானது (PT) தொழிற்சங்கங்கள், தீவிர மதகுருமார்கள், நிலமற்றோர் இயக்கங்கள் மற்றும் சோசலிச அறிவுஜீவிகள் ஆகியோரின் வலுவான கூட்டணியிலிருந்து உருவானது. பிடி (PT) கட்சியின் ஜனாதிபதி லூலா டி சில்வா தலைமையின் கீழ், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பரந்த அளவிலான அரசு முன்முயற்சி மூலம் லட்சக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர். இருப்பினும் பிரேசில் இடதுசாரிகளும் உலகளாவிய நிதி மற்றும் உள்நாட்டு மேம்பட்ட [முதலாளித்துவ] வர்க்கத்தினராலும் விதிக்கப்பட்ட எல்லைகளை எதிர்கொண்டனர்.
தில்மா ரூசெஃபிற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் லூலாவை சிறையில் அடைத்த நிகழ்வுகள், நாட்டின் செல்வத்தை மிகக் குறைந்த அளவில் மறுபகிர்வு [மக்களுக்கு பிரித்துக்கொடுத்தல்] செய்வதைக் கண்டாலே ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் எவ்வளவு இரக்கமற்றதாக மாறும் என்பதை வெளிப்படுத்தின. பல்வேறு கருத்து வேறுபாடுகளால் இடதுசாரிகளின் ஒற்றுமை குலைந்தது. மேலும் உள்நாட்டில் தேர்தல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான உத்தியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. பிரேசிலின் கூட்டாட்சி செனட் மற்றும் அதன் தேசிய காங்கிரஸில் வலதுசாரிகளே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அதேபோல, தென்னாப்பிரிக்காவில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்றின் காரணமாக அந்நாட்டில் பெரும் அதிகாரத்தைப் பெற்றது. ஆனால் நிறவெறிக்குப் பிந்தைய நவதாராளவாதக் கொள்கைகள் இனவாத முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டமைப்பைப் பாதுகாத்தன. பொருளாதார மாற்றமில்லாத அந்த அரசியல் விடுதலை பெரும் ஏமாற்றத்தையே தந்தது. முற்போக்குச் சக்திகள் குறிப்பாகத் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் இன்றும் அந்நாட்டில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் மூன்று தரப்பும் இணையும் கூட்டணி தொடர்பான கடுமையான அமைப்பு ரீதியிலான மற்றும் கருத்தியல் ரீதியிலான நெருக்கடிகளை இடதுசாரிகள் எதிர்கொள்கின்றனர். மேலும் தொழிற்சங்க இயக்கம் போட்டி அமைப்புகளாக உடைந்து சிதறியதும், தற்காலிக [நிரந்தரமற்ற] வேலை முறைகளால் உழைக்கும் வர்க்கம் பலவீனமடைந்ததும் இந்த நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மற்றொரு முரண்பாடு முன்வருகிறது. நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் கணிசமாகப் பலவீனமடைந்துள்ளனர். இருப்பினும் விவசாயிகளின் போராட்டங்கள், சாதி எதிர்ப்பு இயக்கங்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் தொழிலாளர் போராட்டங்களில் முற்போக்கு சிந்தனையின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கின்றது. 2020-21 ஆம் ஆண்டு நடந்த பிரம்மாண்டமான விவசாயிகள் போராட்டமானது, அதிகரித்து வரும் சர்வாதிகாரச் சூழலிலும் கூட்டுப் போராட்டங்கள் சாத்தியம் தான் என்பதை நிரூபித்தது. வாழ்வாதாரம், கண்ணியமான வாழ்க்கை சார்ந்த ஒரு பொருளாதார திட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டே, மாநிலங்கள், மதங்கள் மற்றும் [சாதி] சமூக அடுக்குகளைக் கடந்து பரந்த கூட்டணிகளை உருவாக்கியதால் இந்தப் போராட்டங்கள் வெற்றியடைந்தன. இருப்பினும், ஐம்பது ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் எந்தவொரு மாநிலச் சட்டமன்றத்திலும் இடதுசாரிகளின் ஆட்சி இல்லை (கேரளாவில் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு).
ஒருங்கிணைந்த இடதுசாரி அமைப்புகள் இல்லாமல், முற்போக்கு சக்திகளால் மேலாதிக்கம் செலுத்திவிட முடியுமா?
“ஆளும் வர்க்கம் வன்முறையால் மட்டுமல்ல, மக்களின் சம்மதத்தைப் (consent) பெறுவதன் மூலமும் ஆட்சி செய்கிறது” என்ற அந்தோணியோ கிராம்ஷியின் கருத்து இன்றும் பொருத்தமானதாக உள்ளது.
சமகால முதலாளித்துவம் ஒரு சக்திவாய்ந்த கருத்தியல் ஒழுங்கை உருவாக்கியுள்ளது. இதில் சந்தை தர்க்கம் [சந்தைக்கான அடிப்படைக் கொள்கைகள்] இயற்கையானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் தோன்றுகிறது. ஏழை மக்களின் ஒரு பகுதியினர் கூட அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தைவிட தனிநபர்களாக சொத்தை குவிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். பிளவுபடுவதை சமூக ஊடகங்கள் தீவிரப்படுத்தி, நீண்டகால அரசியல் அமைப்பை பலவீனப்படுத்துகின்றன. இதற்கிடையில், ஒரு காலத்தில் காலனியாதிக்க எதிர்ப்பு என்ற அடிப்படியில் தேசியவாதம் இருந்த இடத்தை வலதுசாரி சக்திகள் கைப்பற்றி வருகின்றன. பல நாடுகளில், பிற்போக்கு இயக்கங்கள் நாட்டின் இறையாண்மை பற்றி பேசிக்கொண்டே முதலாளித்துவச் ஆதரவு போக்கை தீவிரப்படுத்தி வருகின்றன. உலகமயமாக்கலுக்கு எதிரான நியாயமான கோபத்தை அவை வெளிநாட்டினர் மீதான வெறுப்பு (xenophobia), இனவாதம் (chauvinism) அல்லது மதப் பெரும்பான்மைவாதமாக மாற்றுகின்றன.
எனவே இடதுசாரிகள் இரண்டு சவால்களை எதிர்கொள்கின்றனர். ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், தங்கள் உள்நாட்டுக்குள் ஜனநாயகத்தையும் சமூக மாற்றத்தையும் தீவிரப்படுத்த வேண்டும். ஏனெனில் சமூக நீதி இல்லாத ஏகாதிபத்திய எதிர்ப்பு உயர்குடித் தேசியவாதமாக சீரழிந்துவிடும். அதேபோல ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லாத சமூக ஜனநாயகம் உலகளாவிய மூலதனத்துடன் சமரசம் செய்துகொள்வதில் போய் முடியும்.
அதிகாரத்தில் சோசலிசத் திட்டங்கள்
சமீபத்திய ஆண்டுகளில், அரசு வளர்ச்சித் திட்டங்களின் மூலமாக சோசலிச நாடுகள் முழுவதும் நவதாராளவாத முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்குச் சவால் விடுத்து மாற்று வழிகளை நிரூபிக்கும் வகையிலான முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளன. சீனாவும் வியட்நாமும் இந்த முன்னேற்றங்களில் முன்னணியில் நிற்கின்றன. அவை சோசலிசத் திட்டமிடலை உலகப் பொருளாதாரத்தில் திட்டமிட்டு இணைக்கின்றன. சீனாவில், தீவிர வறுமை ஒழிப்பு, பொது உள்கட்டமைப்புகளின் விரிவாக்கம், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பெரும் முதலீடுகள் ஆகியவை பொது மக்கள் நலனுக்காக நாட்டின் வளங்களைத் திரட்டும் சோசலிச அமைப்புகளின் தொடர்ச்சியான திறனை விளக்குகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசு, முக்கியத் துறைகளின் மீது பொதுக் [அரசு] கட்டுப்பாட்டை வலுப்படுத்தியதோடு, பெல்ட் அண்டு ரோடு (Belt and Road Initiative) மற்றும் சுற்றுச்சூழல் நவீனமயமாக்கல் கொள்கைகள் போன்ற முன்முயற்சிகள் மூலம் நீண்டகாலத் திட்டமிடலை மேற்கொண்டு வருகிறது.
வியட்நாம், அதன் சோசலிச சார்பு சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் நாட்டின் வறுமை குறைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் இறையாண்மையைத் தக்க வைத்துக் கொண்டே, விரைவான பொருளாதார மாற்றத்தை வழி நடத்தி, சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளது.
பிற இடங்களில் தாராளமயப் பொருளாதார கொள்கையின் மறுசீரமைப்பின் கீழ் ஏற்பட்ட கடுமையான சமூகச் சீர்குலைவுகளை இரு நாடுகளும் எதிர்த்து நின்றதன் மூலம், உலகளாவிய நெருக்கடிச் சூழல்களில் சோசலிச ஆட்சியின் மீள்திறனை நிரூபித்துள்ளன. அவர்களின் அனுபவங்கள் உலகளாவிய இடதுசாரிகளுக்குள் இறையாண்மை, திட்டமிடல், பொது சொத்துக்கள் மற்றும் சமத்துவமின்மை, பின்தங்கிய நிலை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் அரசின் பங்கு பற்றிய விவாதங்களைப் புதுப்பித்துள்ளன.
போராட்ட அலைகள்
உழைக்கும் வர்க்கமும் விவசாயிகளும் வணிகச் சுழற்சியின் ஏற்ற இறக்கம் என இரண்டையும் சந்தித்தாலும் எதிர்மறைப் பக்கத்தை மட்டுமே அவர்கள் அனுபவிக்கிறார்கள்., 2008 ஆம் ஆண்டின் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் (Third Great Depression) பிறகு தீவிரமடைந்துள்ள நீண்டகால முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக, சர்வதேச தொழிலாளர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையின் மீதான தங்களுடைய கட்டுப்பாட்டைத் தொடர்ந்து இழந்து வருகின்றனர். தொழில்மயமாகியுள்ள சில வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி விகிதங்கள் பூஜ்ஜியத்திற்கு அருகில் தேங்கிக் கிடக்கின்றன.மேலும் தெற்குலக நாடுகளில் உள்ள பெரும்பாலான ஏழை நாடுகளில் அதிகக் கடன் விகிதங்களும் பணவீக்கமும் நிலவுகின்றன. இதன் பொருள் தெற்குலக நாடுகளில் சிலவற்றை தவிர (சீனா போன்றவை) அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் நீண்டகாலப் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்கின்றனர்.
உழைக்கும் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உழைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்ததுள்ள சூழல் உலகெங்கிலும் தன்னிச்சையான போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
வெவ்வேறு தன்மையில் வெவ்வேறு நாடுகளில் உழைக்கும் மக்களைப் பாதித்துள்ள போராட்டங்களின் பட்டியல் இது,
தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டங்கள்:
வளர்ச்சி விகிதங்களை மீட்டெடுக்கவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உலகெங்கிலும் உள்ள அரசுகள் கஷ்டப்பட்டுப் பெற்ற தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முயன்றுள்ளன. இந்த மாற்றங்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களால் எதிர்கொள்ளப்பட்டது. தங்கள் வாழ்க்கையில் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடவும் இது வழிவகுத்தது. இந்த போராட்டத்தின் மிக சக்திவாய்ந்த உதாரணம் இந்தியா
அங்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் விவசாயச் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. அதில் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற 2026 பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் மிக முக்கியமானது. ஆனால் வங்கதேச ஆடைத் தொழிலாளர்கள் (பெரும்பாலும் பெண்கள்) அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளுக்காக 2018 டிசம்பர் முதல் பெருமளவிலான வேலைநிறுத்தங்களைத் தொடங்கினர்.
விவசாயிகளின் போராட்டங்கள்:
விவசாயப் பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், விவசாயத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் (agribusiness) நில அபகரிப்பு மூலம் நிலங்களை அதிகரிக்கவும், அரசின் கொள்முதல் திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சந்தைகளையும் கலைக்க முயன்றுள்ளன. 2016 முதல் பிரேசிலில் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்கத்தின் (MST) நில ஆக்கிரமிப்பானது விவசாயச் சீர்திருத்தம் மற்றும் அதன் முதலாளித்துவ எதிர்ப்புப் வடிவங்களை விவாதப் பொருளாக்கியுள்ளன. 2021 மற்றும் 2023க்கு இடையில், பெருவில் அப்புரிமாக் மற்றும் குஸ்கோவில் உள்ள விவசாய மற்றும் பூர்வகுடி சமூக மக்கள், நீர் மற்றும் விளைநிலங்களை மாசுபடுத்தும் காப்பர் சுரங்கத் திட்டங்களுக்கு எதிராக சாலைகளை முற்றுகையிட்டனர். இது சுற்றுச்சூழல் அழிவுக்கு (ecocide) எதிரான போராட்டத்தை விவசாயிகளின் போராட்டங்களுடனும் கண்ணியமான வாழ்வாதாரத்திற்கான பூர்வகுடி மக்களின் போராட்டங்களுடனும் இணைத்தது.
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு
உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் பணவீக்கம், அரசாங்கத்தின் மானியக் குறைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) திணித்த சிக்கன நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக சிலி (2019) முதல் பெரு (2020), துனிசியா (2021-22), கென்யா (2022) வரை தெற்குலக நாடுகள் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. இதில் பரஸ்பர உதவிக்கான மக்கள் உயிர்வாழ்வுக் கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதும் அடங்கும்.
முறைசாரா துறை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
கடந்த சில ஆண்டுகளாக, முறைசாரா மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இல்லாதபோதிலும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அணிதிரண்டுள்ளனர். ஜகார்த்தா, இந்தோனேசியாவில் (2020-2023), ஆன்லைன் வாடகை வாகன மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அல்காரிதம் அடிப்படையிலான ஊதியக் குறைப்புகளை எதிர்த்துப் போராடி, தங்களைத் தொழிலாளர்களாக அங்கீகரிக்கக் கோரினர்.
இதேபோல, வேலையின்மை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான எழுச்சிகள் ஏற்பட்டுள்ளன. நைஜீரியாவில் 2020 அக்டோபர் மாதம் நடந்த ‘என்ட் சார்ஸ்’ (End SARS) இயக்கமானது நாடு தழுவிய அளவில் காவல் துறை வன்முறை, ஊழல் மற்றும் பொருளாதார ரீதியிலான புறக்கணிப்புக்கு எதிராகப் இளைஞர்கள் போராட்டங்களை வழிநடத்துவதைக் கண்டது. இது இளைஞர்களின் கோரிக்கைகளை பரந்த அளவில் சமூக நீதிப் போராட்டங்களுடன் இணைத்தது.
இவற்றை எல்லாம் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, இந்தப் போராட்டங்கள் தெற்குலக நாடுகளின் போக்கை வெளிப்படுத்துகின்றன. சிதறியிருந்தாலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை, தற்காப்புத் தன்மையைக் கொண்டிருந்தாலும் புதுமையானவை, மேலும் தங்களுக்குக் கண்ணியத்தை மறுக்கும் ஒரு அமைப்பில் உழைக்கும் மக்கள் எவ்வாறு கண்ணியத்துடன் வாழ முடியும் என்ற அடிப்படை கேள்வியைக் கொண்டவை.
நிலையான மக்கள் கூட்டணிகள்
தெற்குலக நாடுகளில் இடதுசாரிகளின் எதிர்காலம், கோட்பாட்டு தூய்மையை விட, எதார்த்தமான உண்மைகளில் வேரூன்றிய நிலையான மக்கள் கூட்டணிகளை உருவாக்கும் திறனைப் பொறுத்தே அமையும். முறைசாரா தொழிலாளி, கடனாளியான விவசாயி, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நகர்ப்புற இளைஞர், புலம்பெயர்ந்த தொழிலாளி மற்றும் காலநிலை அகதி ஆகியோர் இப்போது அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளனர். இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் இருபதாம் நூற்றாண்டின் தொழில்துறை உழைப்பு மொழியில் மட்டுமே பேசும் எந்தவொரு இடதுசாரி அமைப்பும் ஓரங்கட்டப்படும். ஆனால் அதற்காக இடதுசாரிகள் வர்க்கப் பகுப்பாய்வைக் கைவிட்டு வெற்று தார்மீக மொழியை மட்டுமே பேசிவிட முடியாது. முதலாளித்துவம் சுரண்டல் மற்றும் படிநிலையின் மூலம் உலகை தொடர்ந்து ஒழுங்கமைத்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் உயிர்வாழப் போராடும் போது செல்வக் குவிப்பு மிக மோசமான அளவை எட்டியுள்ளது. பெரும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது இருந்த அதே கேள்விதான் இப்போதும் மையமாக இருக்கிறது. எதிர்காலம் யாருக்குச் சொந்தம்?
தெற்குலக நாடுகளில் சுரண்டல், அவமதிப்பு மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராக சாதாரண மக்கள் தொடர்ந்து இணைந்து அணிதிரளும் இடங்களில் எல்லாம் இடதுசாரிகள் வாழ்கிறார்கள். அது வேலைநிறுத்தங்கள், விவசாயப் பேரணிகள், எழுத்தறிவுப் பிரச்சாரங்கள், பெண்ணுரிமைக் கூட்டங்கள், இனவெறிக்கு எதிரான அணிதிரட்டல்கள் மற்றும் ஜனநாயகத் திட்டமிடல் சோதனைகளில் வாழ்கிறது. இது நினைவாக அல்ல, மாறாக சாத்தியமான வகையிலேயே நிலைத்திருக்கிறது.
பேரா. விஜய் பிரசாத்
மூன்றாவது தொடர் ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்.