Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

சீர்திருத்தமும் பிரிவினைவாத முன்னெடுப்புகளும்-அ.பாக்கியம்

சீர்திருத்தமும் பிரிவினைவாத முன்னெடுப்புகளும்-அ.பாக்கியம்
  • PublishedJune 24, 2026

ஜின்ஜியாங் மாகாணத்தில் இனச் சிறுபான்மையினர் பெரும்பகுதியாக வாழ்வதாலும் அந்த மாகாணத்தின் புவிசார் இருப்பின் முக்கியத்துவம் கருதி சீன மக்கள் குடியரசு இந்த மாகாணத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்தது. 1949 புரட்சி வெற்றி பெற்ற பிறகு 1962 ஆம் ஆண்டு வரை ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் இன ஒற்றுமையை ஏற்படுத்தியது மட்டுமல்ல பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மாற்றி அமைத்தது. 1964 ஆம் ஆண்டு கலாச்சாரப் புரட்சி ஏற்பட்ட பொழுது சித்தாந்தங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டு அமலாக்கப்பட்டது. இதன் விளைவாக இனச் சிறுபான்மையினரின் பல்வேறு தனித்தன்மைகள் பாதிப்புக்கு உள்ளானது. அது மட்டுமல்ல கலாச்சார புரட்சியின் தொடர்ச்சியாக பொருளாதாரத்திலும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

1976 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி 1978 இல் டெங் ஷியோ பிங் தலைமையில் சீர்திருத்தமும் புதிய திறப்புக் கொள்கையும் அறிவித்தது. இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் சித்தாந்தத்தைவிட பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தனர். விவசாயம், தொழில், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய நான்கு துறைகளை நவீனமாக்கக்கூடிய முறையில் திட்டங்கள் உருவாக்கி அமலாக்கப்பட்டது. அதே நேரத்தில் ஜின்ஜியாங் மாகாணத்தில் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே போதாது என்பதையும் உணர்ந்து கொண்டு கலாச்சார கொள்கைகளை மாற்றி அமைத்தது. பொருளாதார வளர்ச்சி, இன சிறுபான்மை மக்களின் தனித்தன்மைகளை மீண்டும் நிலை நாட்டுவது, பாதுகாப்பை பலப்படுத்துவது போன்றவற்றை முக்கியத்துவம் கொடுத்து அமல்படுத்தியது.

பொருளாதாரத்தின் முயற்சிகள் 

ஜின்ஜியாங் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து இதற்கு முந்தைய பகுதிகளில் பார்த்திருக்கிறோம். இங்கு விரிவாக அது பற்றி எழுதப் போவதில்லை. மாறாக கலாச்சார புரட்சியில் ஏற்பட்ட பின்னடைவை கணக்கில் எடுத்து ஒட்டு மொத்த சீனத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்த கொள்கைகள் இனச் சிறுபான்மை பகுதிகளிலும் அதற்குரிய சிறப்புத் தன்மையோடு அமலாக்கப்பட்டது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பழுது பார்க்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த அமைப்புதான் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்திருந்தது. கலாச்சாரப் புரட்சியின் போது இதனுடைய கட்டமைப்பு சீர்குலைந்து பலவீனம் அடைந்தது. மற்றும் இனவாத போக்குகளும் ஊடுருவ ஆரம்பித்ததனால் அவற்றை கலைத்து உற்பத்தி முறைகளை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு முக்கிய அம்சம் ஜின்ஜியாங் மாகாணத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக பொருளாதார வளர்ச்சி தான் அடிப்படையானது என்பதை சீன மக்கள் குடியரசின் தலைமை முழுமையாக நம்பியதால் மாகாணத்தில் அதிகமான முதலீடுகளை செய்தனர். முதலீட்டின் முக்கியமான நோக்கமாக மாகாணத்தின் வடக்கு பகுதியில் அதிகமான அளவு வசிக்கும் ஹான் மக்களுக்கும் தெற்கு பகுதியில் அதிகமாக வசிக்கும் உய்கூர் இன மக்களுக்கும் சமத்துவம் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த முதலீடுகள் அமைந்தது. இந்த முயற்சிகள் இன சமத்துவத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றது.

அரசாங்கம் வரிகளை குறைத்தது. பருத்தி என்பது முக்கிய சாகுபடியாகும். இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் இயற்கை வளங்கள், குறிப்பாக எண்ணெய் வளங்களை பிரித்தெடுத்தல் போன்ற தொழில்களுக்கு அதிக முதலீடு செய்து வேலைவாய்ப்புகளில் உருவாக்கினார்கள். இந்த முயற்சிகள் ஹான் இன மக்களைக் கடந்து இனச் சிறுபான்மை மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தியது.

1949 ஆம் ஆண்டு புரட்சி ஏற்பட்ட பிறகு ஜின்ஜியாங் மாகாணத்தில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டது. அரசு பல மருத்துவ மையங்களை உருவாக்கியது. மாகாணத்தின் எல்லைப் புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு வெறும் கால் மருத்துவர்கள் (barefoot doctors) என்ற மருத்துவர்கள் மூலமாக சிகிச்சையை செய்தனர். இந்தப் போக்குகள் கலாச்சார புரட்சி காலத்தில் பெரும் சிதைவுக்கு உள்ளாகியது. எனவே முந்தைய நிலைமைகளை மீண்டும் மீட்டெடுக்கவும் புதிய முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் மருத்துவ சேவைக்கான இலக்கு தீர்மானிக்கப்பட்டு முன்னேற்றத்தை கண்டனர். 1998க்குள் இந்தக் கொள்கை பெரும் அளவு வெற்றி பெற்றது. 1998 ஆம் ஆண்டு 1000 மக்களுக்கு 2.7 மருத்துவர்கள் மாகாண அளவிலும் மாவட்டங்களில் சராசரியாக 1.7 என்ற அளவிலும் வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சி என்பது தேசிய சராசரியை விட அதிகமானது. தேசிய சராசரி 2.6 என்றும், மாவட்ட சராசரி 1.1 என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் சீர்திருத்த காலத்தில் ஏற்பட வேண்டிய அளவிற்கான வளர்ச்சி போதுமானதாக இல்லை. குறிப்பாக இயற்கை வளங்களை பயன்படுத்துவதும், இனச் சிறுபான்மை மக்களை நவீன உற்பத்தி முறைகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முறைகள் பரவலாக நடைபெறவில்லை. ஆகவே மீண்டும் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த ஜின்ஜியாங் உற்பத்தி மற்றும் கட்டுமான படை என்ற சிறப்பு அமைப்பை புதிய தலைமையுடன் உருவாக்கியது. இதன் மூலம் ஜிஞ்சியங் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி மொத்த உற்பத்தியில் கால்பங்கை இந்த அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தார்கள்.

இனச் சிறுபான்மை உரிமைகளை மீட்டெடுத்தல். 

கலாச்சார புரட்சியின் போது ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கும் அதன் நீட்சியாக நடைபெற்று வந்த குழப்பங்களை தீர்ப்பதற்குமான முயற்சிகளை மேற்கொண்டார்கள். தனிநபர்கள் அல்லது குழுக்கள் மீதான தாக்குதல் போன்ற கலாச்சார புரட்சியின் தொடர் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் கலாச்சார புரட்சியின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள், கட்டிடங்களின் அழிவு, சீர்குலைக்கும் கொள்கைகள் குறித்த அனைத்திற்கும் அரசு வருத்தம் தெரிவித்தது. வருத்தம் என்பது வாழ்வில் ஏற்பட்ட வடுக்களை குறைக்காது என்பதை அறிந்திருந்த சீன அரசாங்கம் இடிக்கப்பட்ட மசூதிகள் வழிபாட்டுத் தலங்கள் போன்ற கட்டிடங்களை பழுது பார்த்துக் கொடுப்பதும், மீண்டும் கட்டிக் கொடுக்கக்கூடிய பணிகளையும் செய்தார்கள். 1990 ஆம் ஆண்டுக்குள் இந்த மாகாணத்தின் முக்கிய நகரமான கஷ்கர் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் புதுப்பிக்கப்பட்டும், புதிதாக கட்டியும் கொடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் சடங்குகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிடுவது தடை செய்யப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் கொண்டுவரப்பட்டன. புனித நூல்களை அச்சிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டது மட்டுமல்ல மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளக்கூடிய முறைகளையும் அமலாக்கினார்கள்.

உய்கூர் மக்களின் இசை, நடனம், கவிதை, வரலாறு, இலக்கியம் தொடர்பான வெளியீடுகளில் உள்ளூர் அதிகாரிகள் தலையிடவோ தடை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று 1980 களின் முற்பகுதியில் உய்கூர் மொழி உச்சரிப்புகளுக்கு லத்தீன் மற்றும் சிரில்லிக் ஒலிகளை பயன்படுத்தினர். இது அம்மக்களிடம் பரவலாக எடுபடவில்லை. 1980 களுக்குப் பிறகு சீர்திருத்த கொள்கையின் தொடர்ச்சியாக அரபு மொழி ஒலி உச்சரிப்புகளுக்கு மாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது. சுருக்கமாகச் சொன்னால் டெங் ஷியோ பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி கலாச்சார புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்த இனச் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது மட்டுமல்ல இனங்களுக்கு இடையிலான பதட்டங்கள் குறைந்தது பள்ளிகளும் கல்லூரிகளும் இயல்பு நிலைகளுக்கு திரும்பின.

இனச் சிறுபான்மை தொடர்பான சட்டங்களும் அவர்களின் தனித்தன்மையில் பாதுகாப்பதற்கான கொடுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் அந்த மக்களை மேம்படுத்துவதில் ஒன்றுபட்ட சீனம் என்ற உணர்வை உருவாக்குவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த சுதந்திரமான பல உரிமைகளை மத தீவிரவாத சக்திகளும் பிரிவினைவாத சக்திகளும் ஏகாதிபத்திய மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் சீனாவில் பயங்கரவாதத்தை அரங்கேற்றினார்கள். இதற்கு சர்வதேச அரசியல் மாற்றங்களும் காரணமாக அமைந்தது. இதனால் ஜின்ஜியாங் மாகாணத்தை பிரிவினை ஏற்படுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டது. ஒரு சில அமைப்புகள் வேறுபெயர்களில் உயிர் பெற்றது.

பிரிவினைவாத அமைப்புகளின் தோற்றம் 

1970 ஆம் ஆண்டுகளில் சீன சோவியத் எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையில் உறவுகளில் மோதல்கள் உருவாகின. ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள இனச் சிறுபான்மையினர் அவர்களின் கலாச்சார அடையாளங்கள் சோவியத் பகுதியில் வசிக்கும் மக்களுடனும், துருக்கிய இஸ்லாமிய மக்களின் அடையாளங்களுடனும் சில ஒற்றுமைகள் இருந்தன. இதனால் பிரிவினை சக்திகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தில் கொண்டது. 1979 ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் நுழைந்த பிறகு நிலைமை இன்னும் பதட்டமாகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாத பாதிப்புகள் வந்துவிடும் என்பதை கவனத்தில் கொண்டு சீன அரசாங்கம் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தியது. இந்தப் பதட்டமான சூழல் சீன சோவியத் இரு நாடுகளுக்கும் ராணுவத்துக்கான நிதிச் சுமையை ஏற்படுத்தியது. எனினும் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பதட்டங்களை தனித்து மத்திய ஆசிய நாடுகளுடன் சீனா வர்த்தகத்தை மேம்படுத்தியது.

1989 மற்றும் 91 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் நிலைமைகளை மேலும் சிக்கலாகியது. சோவியத் யூனியனில் கோர்பசேவ் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தேசிய இனங்களின் மோதல்களும் எழுச்சியும் அதிகமாகியது. இது சோவியத் யூனியன் சிதைவுக்கு காரணமாகி தேசிய இனங்களின் அடிப்படையில் பல நாடுகள் உருவாவதற்கு வழி வகுத்தது. 1989 ஆம் ஆண்டு சீன அரசை கவிழ்ப்பதற்காக அமெரிக்க ஆதரவுடன் தியானன்மென் சதுக்கத்தில் பெரும் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா கிழக்கு ஆசிய நாடுகள் மீது குறிப்பாக ஈராக் மீது ஒருதலை பட்சமான தாக்குதலை நடத்தியது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை போல் சீனாவையும் வீழ்த்தி விட வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட களம் என்பது இனச் சிறுபான்மையினர் அதிகமாக வாழக்கூடிய எல்லைப்புறத்தில் அமைந்த ஜின்ஜியாங் மாகாணமாகும்.

சீனாவில் இருந்து புரட்சிக்குப் பிறகு வெளியேறியவர்களையும் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறியவர்களையும் அமெரிக்கா பயன்படுத்தி பல அமைப்புகளில் உருவாக்கியது. 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் உலக உய்கூர் இளைஞர் காங்கிரஸ் (WUYC) என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதை உருவாக்கியதில் ஓமர் கனத் என்பவரும், டோல்குன் ஈசா என்பவரும் முக்கிய பங்காற்றினார்கள். ஓமர் கனத் என்பவர் 1971 ஆம் ஆண்டு சீனாவை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அங்கிருந்து 1979இல் துருக்கிக்குச் சென்று அங்கிருந்து 1999இல் அமெரிக்காவில் குடியேறினார். இதேபோன்று ஈசா என்பவர் 1994 ஆம் ஆண்டு சீனத்தை விட்டு வெளியேறினார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடங்கி நடத்தி வந்த ரேடியோ ஃப்ரீ ஆசியான் என்ற வானொலி அமைப்பில் மூத்த ஆசிரியராக கனத் என்பவர் 1999 முதல் 2009 வரை பணியாற்றினார்.

உலக உய்கூர் இளைஞர் காங்கிரஸும், கிழக்கு துர்க்கிஸ்தான் தேசிய காங்கிரஸும் இணைந்து 2004 ஆம் ஆண்டு உலக உய்கூர் காங்கிரஸ் (WUC) என்ற பெரிய அமைப்பை ஜெர்மனியின் முனிச் நகரில் உருவாக்கினார்கள். இதன் தொடக்கத் தலைவராக எர்கின் அல்ப்டேகின் பொறுப்பேற்றார். இவர் சீனாவில் புரட்சியை அடக்கிய கோமிங்தான் கட்சியைச் சேர்ந்தவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். ஜின்ஜாங்கில் உய்கூர் மக்களுக்கும் மற்ற இனத்தவருக்கும் ஒற்றுமை ஏற்படுத்துவதை கடுமையாக எதிர்த்தவர். சிஐஏவின் நீண்டகால ஏஜெண்டாக இருந்தார். 1970 மற்றும் 80களில் உய்கூர் பிரிவினைவாத சக்திகளை ஒன்றிணைப்பதற்காக சி ஐ ஏ விற்கு உதவி செய்தவர். 14 ஆவது தலாய்லாமாவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பவர்.

இந்த அமைப்புகள் போதாது என்று 1998 ஆம் ஆண்டு உய்கூர் அமெரிக்க சங்கம் (UAA) என்ற அமைப்பை அமெரிக்காவில் உருவாக்கினார்கள். இதற்கு சீனாவில் இருந்து ஓடிவிட்ட ருஷான் அப்பாஸ் துணைத் தலைவராக பணியாற்றியது மட்டுமல்ல ரேடியோ ஃப்ரீ ஏசியா என்ற அமெரிக்க வானொலிக்கு செய்தியாளராகவும் பணியாற்றினார். 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் முதல் உய்கூர் வெளிநாட்டு மாணவர் மற்றும் அறிஞர்கள் சங்கத்தை இணைந்து உருவாக்கினார். இந்த அப்பாஸ் என்பவர் அமெரிக்காவால் கியூபாவின் அருகில் உள்ள தீவில் நடத்தப்படும் குவாண்டநமோ சிறைச்சாலையில் மொழியியல் துறையிலும், மொழிபெயர்ப் பாளராகவும் பணியாற்றினார்.

அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட உய்கூர் அமெரிக்க சங்கத்திற்கு அமெரிக்கா பகிரங்கமாக நிதிஉதவி வழங்கி வருகிறது. உலகில் ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் தேசிய ஜனநாயக நிதியகத்தை அமெரிக்கா நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் நிதி உதவியுடன் உய்கூர் மனித உரிமைகள் திட்டத்தை உருவாக்கினார்கள். சீனாவிலிருந்து 1995 இல் அமெரிக்காவில் குடிபுகுந்த நூரி துர்கெல் என்பவர் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கினார்.சீன எதிர்ப்பு நடவடிக்கையில் இவர் தீவிரமாக ஈடுபட்டதால் 2020 மே மாதம் அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் ஆணையராக மாறினார். இது சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று பிரச்சாரம் செய்யும் அமைப்பு மட்டுமல்ல உய்கூர் பகுதியில் மததுவேஷத்தை உருவாக்கி கலவரத்தையும் ஏற்படுத்தியது.

இந்தக் காலத்தில் 2020 மே 29 அன்று அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிதியகம் 2004 ஆம் ஆண்டு முதல் உய்கூர் பிரிவினைவாத குழுக்களுக்கு 8,75,8300 டாலர் நிதி வழங்கியதாக பெருமிதம் கொள்கிறது. உய்கூரில் ஜனநாயக மீட்பு என்ற பெயரால் அனைத்து அமைப்புகளுக்கும், பிரிவினைவாத தீவிரவாத செயல்களுக்கும், அமெரிக்காவில் தேசிய ஜனநாயக நிதியகத்திலிருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (ETIM) மற்றும் துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி(TIP) 1990 களில் ஹாசன் மாஹ்சூம் என்பவரால் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு இக்குழுவின் பெயர் துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சி என்று மாற்றப்பட்டது. ஜின்ஜியாங் பகுதியை சீனாவில் இருந்து பிரித்து அங்கு ஒரு சுதந்திரமான இஸ்லாமிய அரசை உருவாக்குவதே இவர்களின் முதன்மையான இலக்கு. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் தாராளமான உதவிகள் கிடைக்கின்றது. இந்த அமைப்பு தாலிபன்கள், அல்-கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. மத்திய கிழக்கு மற்றும் சிரியா போர்களிலும் இவர்களின் போராளிகள் பங்கேற்று உள்ளனர். சீன அரசு இவ் அமைப்புகளை தனது நாட்டின் மிக முக்கிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆக கருதுகிறது. ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் இவற்றை தீவிரவாத அமைப்பு என்று பட்டியலிட்டுள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தையும், உய்கூர் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதன் மூலமும் சீனத்தை துண்டாடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளின் ஜனநாயக மீட்பு, மத சுதந்திரம் என்ற போர்வையில் நடைபெறக்கூடிய அல்லது நடைபெற்ற வன்முறைகளை அடுத்த தொடரில் பார்ப்போம்.

 

அ.பாக்கியம்

 

அடுத்த தொடர் ஜூலை 1 புதனன்று வெளியாகும்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *