டிஜிட்டல் முதலாளித்துவத்தின் புதிய உழைப்பு முறை:கிக் பொருளாதாரம் – சம்சீர் அகமது
21ஆம் நூற்றாண்டில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்களில் ஒன்று கிக் பொருளாதாரத்தின் (Gig Economy) வளர்ச்சி. தொழிற்புரட்சிக்குப் பிறகு உருவான பாரம்பரிய வேலை உறவுகள்—நிரந்தர வேலை, மாத ஊதியம், ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றிலிருந்து விலகி, செயலிகள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாக வேலை வழங்கப்படும் புதிய பொருளாதார அமைப்பு உருவாகியுள்ளது.
இந்த மாற்றம் வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவு மட்டுமல்ல. இது உலக முதலாளித்துவத்தின் புதிய கட்டமாகும். உற்பத்தி, விநியோகம் மற்றும் சேவைத் துறைகளில் தொழிலாளர் செலவுகளைக் குறைத்து, வேலை தொடர்பான அபாயங்களை தொழிலாளர்களின் மீது தள்ளி, தரவு மற்றும் அல்காரிதம் மூலம் உழைப்பை கட்டுப்படுத்தும் புதிய பொருளாதார வடிவமாக கிக் பொருளாதாரம் வளர்ந்துள்ளது.
இன்று இந்தியாவில் உணவு விநியோகம், டாக்ஸி சேவைகள், லாஜிஸ்டிக்ஸ், வீட்டு சேவைகள், மென்பொருள் வேலைகள், வடிவமைப்பு, உள்ளடக்க உருவாக்கம், ஆலோசனை சேவைகள் என பல துறைகளில் கிக் வேலைவாய்ப்புகள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இந்த வளர்ச்சி ஒருபுறம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினாலும், மறுபுறம் வேலை பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
கிக் பொருளாதாரம் என்றால் என்ன?
ஒரு நிறுவனம் தொழிலாளரை நிரந்தர ஊழியராக நியமிக்காமல், செயலி அல்லது இணைய தளம் மூலம் வேலை வழங்கி, செய்த வேலையின் அடிப்படையில் மட்டுமே ஊதியம் வழங்கும் முறை கிக் பொருளாதாரம் எனப்படுகிறது.
இந்த அமைப்பில் தொழிலாளர்கள் பெரும்பாலும் “பார்ட்னர்கள்”, “சேவை வழங்குநர்கள்”, “சுயதொழிலாளர்கள்” போன்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர். ஆனால் அவர்கள் வருமானம், வேலை நேரம், மதிப்பீடு, ஊக்கத் தொகை மற்றும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் நிறுவனத்தின் அல்காரிதம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் Swiggy, Zomato, Uber, Ola, Urban, Company, Amazon Logistics, Flipkart Logistics, Porter போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்த துறையை சார்ந்தவைதான்.
இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கிக் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2020–21 ஆம் ஆண்டில் சுமார் 77 லட்சம் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. 2029–30 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பத்து ஆண்டுகளுக்குள் கிக் தொழிலாளர் எண்ணிக்கை மூன்று மடங்கிற்கும் அதிகமாக உயரும். நகர்ப்புற இளைஞர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், பட்டதாரிகள் மற்றும் பகுதி நேர வருமானம் தேடும் மக்கள் ஆகியோரே இந்த துறையின் முக்கிய உழைப்புச் சக்தியாக உள்ளனர்.
கிக் சந்தையின் உலக வளர்ச்சி
கிக் பொருளாதாரம் இந்தியாவில் மட்டுமல்ல. உலகளாவிய பொருளாதார அமைக்காக மாறியுள்ளது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் கிக் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.உலகளாவிய கிக் பொருளாதாரத்தின் சந்தை மதிப்பு தற்போது நூற்றுக்கணக்கான பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. பல்வேறு சந்தை ஆய்வுகளின் படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சந்தை ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பை அடையக்கூடும்.
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு, மலிவு மற்றும் விரைவான இணைய சேவைகள், நகர்ப்புறமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனங்களின் நிரந்தர ஊழியர் செலவைக் குறைக்கும் முயற்சிகள் உடனடி சேவைகளுக்கான நுகர்வோர் தேவை முதலியவை இந்த சந்தை வளர காரணமான உள்ளன.
யார் இந்த சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள்?
கிக் பொருளாதாரத்தின் பின்னால் உலகின் மிகப்பெரிய நிதி மூலதன சக்திகள் உள்ளன. SoftBank, Prosus, Accel, Tiger Global, Sequoia Capital போன்ற உலகளாவிய முதலீட்டு நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை இந்த துறையில் முதலீடு செய்துள்ளன.
இவர்களின் நோக்கம் வெறும் சேவை வழங்குவது அல்ல. எதிர்கால நுகர்வு சந்தைகள், தரவு சந்தைகள் மற்றும் நகர்ப்புற சேவை அமைப்புகளை கட்டுப்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
முதலீட்டாளர்களின் பார்வையில் கிக் பொருளாதாரம் மிகவும் கவர்ச்சிகரமானது. காரணம், பாரம்பரிய நிறுவனங்கள் போல ஊழியர் நலன்கள், ஓய்வூதியம், அலுவலக வசதிகள், சமூகப் பாதுகாப்பு போன்ற செலவுகளை ஏற்க வேண்டிய அவசியம் இங்கு குறைவாக உள்ளது.
பெருகும் லாபம்
இந்திய கிக் பொருளாதாரத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான Swiggy 2025 நிதியாண்டில் ₹23,561 கோடி வருவாயை ஈட்டியது. இருப்பினும், சந்தை விரிவாக்கம் மற்றும் போட்டி காரணமாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பையும் பதிவு செய்தது. Zomato (தற்போது Eternal குழுமம்) 2025 நிதியாண்டில் ₹20,243 கோடி வருவாயையும் சுமார் ₹527 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்தது.
உலகளவில் Uber நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் 52 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வருவாயையும் 10 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட நிகர வருமானத்தையும் பதிவு செய்தது.இந்த புள்ளிவிவரங்கள் ஒரு முக்கிய உண்மையை காட்டுகின்றன. ஆரம்ப கட்டத்தில் முதலீட்டாளர்கள் இழப்பை ஏற்கத் தயாராக இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் நோக்கம் உடனடி லாபம் அல்ல; சந்தையை கைப்பற்றி பின்னர் ஏகபோக சக்தியாக மாறுவதுதான்.
தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து எவ்வாறு லாபம் உருவாகிறது?
கிக் நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்ப தளங்கள் என்று கூறினாலும், அவற்றின் வருவாய் முழுமையாக தொழிலாளர்களின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டது.ஒரு டெலிவரி பணியாளர் தினமும் பல ஆர்டர்களை டெலிவரி செய்கிறார். ஒவ்வொரு ஆர்டரிலிருந்தும் நிறுவனம் கமிஷன், சேவைக் கட்டணம், விளம்பர வருவாய், உறுப்பினர் கட்டணம், தரவு சார்ந்த வருவாய் போன்ற பல வழிகளில் வருமானம் ஈட்டுகிறது.
ஆனால் டெலிவரி செய்வதற்கான வாகனம், அதற்கான பெட்ரோல், ஆர்ட்டர்களை பெறுவதற்கான மொபைல், அதற்கான இணையம், பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றை தொழிலாளியே ஏற்கிறார். இது உற்பத்திச் செலவின் ஒரு பகுதியை நிறுவனத்திலிருந்து தொழிலாளர்களின் மீது மாற்றும் செயல்முறையாகும்.
டிஜிட்டல் காலத்தின் உபரி மதிப்பு
கார்ல் மார்க்ஸ் விளக்கிய உபரி மதிப்பு கோட்பாடு கிக் பொருளாதாரத்தில் புதிய வடிவில் வெளிப்படுகிறது. பாரம்பரிய தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி கருவிகள் முதலாளியின் சொத்தாக இருந்தன. இன்று டிஜிட்டல் காலத்தில் அல்காரிதம், தரவு மற்றும் தளங்கள் உற்பத்தி கட்டுப்பாட்டின் மையமாக மாறியுள்ளன.
Uber-க்கு பெரும்பாலான கார்கள் சொந்தமில்லை. Swiggy-க்கு பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் சொந்தமில்லை. Zomato-க்கு டெலிவரி வாகனங்கள் சொந்தமில்லை. ஆனால் இந்நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை கட்டுப்படுத்துகின்றன.
இதனால் மார்க்ஸ் கூறிய “உற்பத்தி கருவிகளின் உரிமை” என்ற கருத்து இன்று “தரவின் உரிமை” மற்றும் “அல்காரிதத்தின் கட்டுப்பாடு” என்ற வடிவில் மறுவடிவம் பெற்றுள்ளது.
சமூகப் பாதுகாப்பின் நெருக்கடி
கிக் தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரச்சனை சமூகப் பாதுகாப்பின்மையாகும்.பெரும்பாலான தொழிலாளர்களுக்கு PF இல்லை, ESI இல்லை, ஓய்வூதியம் இல்லை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை இல்லை, மருத்துவக் காப்பீடு போதுமானதாக இல்லை, மகப்பேறு பாதுகாப்பு இல்லை, விபத்து பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதாவது வேலை மூலம் உருவாகும் வருமானம் நிறுவனத்துக்கு கிடைக்கிறது; ஆனால் வேலை தொடர்பான அபாயங்கள் தொழிலாளியின் மீது தள்ளப்படுகின்றன.
அல்காரிதம் மூலம் கட்டுப்படுத்தப்படும் உழைப்பு
கிக் பொருளாதாரத்தின் தனித்துவமான அம்சம் அல்காரிதமிக் மேலாண்மை (Algorithmic Management) ஆகும். ஒரு மனித மேலாளர் அல்ல; ஒரு மென்பொருள் தொழிலாளியின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. எந்த ஆர்டர் கிடைக்கும்? எவ்வளவு ஊக்கத் தொகை கிடைக்கும்? யாருக்கு முன்னுரிமை? யார் தண்டிக்கப்படுவார்? யாரின் கணக்கு முடக்கப்படும்? என்பதனை அல்காரிதம்கள் தீர்மானிக்கின்றன. இதனால் தொழிலாளர் தனது முதலாளியை நேரடியாக அறியாத நிலையிலும், முதலாளியின் கட்டுப்பாட்டில் வாழும் நிலை உருவாகிறது.
உலக நாடுகளின் அனுபவம்
கிக் பொருளாதார வளர்ச்சியுடன் பல நாடுகள் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.பிரிட்டனில் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்த்தை தொடர்ந்து Uber ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஸ்பெயினில் Rider Law” மூலம் டெலிவரி தொழிலாளர்களை ஊழியர்களாக அங்கீகரிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்களுக்கு அதிக சமூகப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்கும் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அனுபவங்கள் ஒரு உண்மையை காட்டுகின்றன, தொழில்நுட்ப வளர்ச்சி தவிர்க்க முடியாதது; ஆனால் தொழிலாளர் உரிமைகள் இல்லாத தொழில்நுட்ப வளர்ச்சி சமூக சமத்துவமின்மையை தீவிரப்படுத்தும்.
இந்திய தொழிலாளர் சந்தை எங்கு செல்கிறது?
அடுத்த பத்து ஆண்டுகளில் கிக் வேலைகள் உணவு விநியோகம் மற்றும் டாக்ஸி சேவைகளைத் தாண்டி பல துறைகளில் விரிவடையக்கூடும். ஆசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணக்காளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள், ஊடகப் பணியாளர்கள், மருத்துவ ஆலோசகர்கள் போன்ற துறைகளும் கிக் மயமாகும் வாய்ப்பு உள்ளது.
இதன் விளைவாக நிரந்தர வேலை வாய்ப்புகள் குறைந்து, ஒப்பந்த வேலைகள் அதிகரிக்கலாம். தொழிற்சங்கங்களின் சக்தி குறையலாம். வருமான ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடையலாம்.
இடதுசாரி மாற்றுத் திட்டம்
இடதுசாரி அணுகுமுறை தொழில்நுட்ப முன்னேற்றத்தை எதிர்ப்பதல்ல. அதன் பலன்கள் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம்.
இதற்காக கிக் தொழிலாளர்களுக்கு ஊழியர் அந்தஸ்து வழங்குதல், குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம், PF, ESI, ஓய்வூதிய திட்டங்களில் இணைத்தல், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு, தொழிற்சங்க உரிமைகளை உறுதி செய்தல், அல்காரிதம் வெளிப்படைத்தன்மை, பிளாட்ஃபார்ம் நிறுவனங்களிடம் சமூகப் பாதுகாப்பு நிதி வசூலித்தல், தொழிலாளர் கூட்டுறவு டிஜிட்டல் தளங்களை உருவாக்குதல், தரவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் பொது கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
கிக் பொருளாதாரம் வெறும் புதிய வேலைவாய்ப்பு முறை அல்ல; அது உலக முதலாளித்துவத்தின் டிஜிட்டல் கட்டமாகும். இந்த அமைப்பு கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினாலும், அதே நேரத்தில் வேலை பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளை பலவீனப்படுத்துகிறது.
இன்றைய கிக் பொருளாதாரத்தின் மைய முரண்பாடு ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டும் என்றால் “லாபம் தனியாருக்கு; அபாயம் தொழிலாளிக்கு” என கூறலாம்
எனவே எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விவாதத்தின் மையக் நோக்கமே இந்த சமூகத்தில் புதிதாக உருவாகும் செல்வம், உற்பத்தித் திறன், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பலன்கள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். அதுவே உண்மையான கேள்வியாகும். அந்தக் கேள்விக்கான பதில்தான் எதிர்கால தொழிலாளர் அரசியலையும் சமூக நீதியையும் தீர்மானிக்கும்.
கட்டுரையாளர்: சம்சீர் அகமது, மாநில செயலாளர் SFI