Tamil Marx

ஆசியா சர்வதேசம் மத்திய கிழக்கு

அமெரிக்க பயங்கரவாதமும் இஸ்லாமிய நாடுகளில் சோசலிசமும்

அமெரிக்க பயங்கரவாதமும் இஸ்லாமிய நாடுகளில் சோசலிசமும்
  • PublishedMarch 2, 2026

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்நாட்டின் துவக்க பள்ளி மீது குண்டு வீசி பச்சிளம் குழந்தைகள் துவங்கி பங்கரில் இருந்த மதத் தலைவர் காமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை படுகொலை செய்துள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் ஈரானை பயங்கரவாதத்தின் தாயகமாக கூறி செய்தி வெளியிடுகின்றன,. ஆனால் அதற்கு முன் வரலாறு வேறு உண்மையைச் சொல்கிறது.

போரின் போது பள்ளியின் மீதோ ஒரு நாட்டின் பள்ளி மீதோ அல்லது பொது மக்கள் பகுதிகளில் குண்டு வீசுவது சர்வதேச சட்டத்தின் படி போர்க் குற்றமாகும். இதனை குறிப்பிட்ட ஒருவர் இதே போல ஈரானின் ஏவுகணை இஸ்ரேல் பள்ளி மீது விழுந்திருந்தால் சர்வதேச ஊடகங்களும் உலக நாடுகளும் இப்படி அமைதி காக்குமா. ஒட்டுமொத்த ஈரானையும் பயங்கரவாத நாடாக முத்திரை குத்தி இருப்பார்கள் என பொறிந்திருந்தார்.

ஆம் அது சரியான வார்த்தை தானே …அமெரிக்காவும் இஸ்ரேலும் பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக செய்யும் போது கூட அவர்களை பயங்கரவாதிகள் என சொல்லாமல் இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து பயங்கரவாதம் கட்டமைக்கப்படுகிறதே ஏன?

இதற்கு அறிஞர் மைக்கேல் பரென்டி,பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்திற்கு இடையே உள்ள தொடர்பு பற்றி எழுதியவற்றை படித்தால் நாம் புரிந்து கொள்ளலாம்.

தீவிரவாதம் குறித்த பார்வையை மாற்றிய பரென்டி

மைக்கேல் பரென்டி, “தீவிரவாதம்” குறித்த மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்டுள்ள கதைகளை கேள்விக்குள்ளாக்கிய சமூக அறிஞர். தீவிரவாதத்தை மதவாத வெறிச்செயலாகவோ, சில குழுக்களின் பைத்தியக்கார வன்முறையாகவோ மட்டும் காட்டும் பார்வையை அவர் நிராகரித்தார்.

அதற்குப் பதிலாக, தீவிரவாதம் என்பது ஏகாதிபத்திய அரசியல், பொருளாதார நலன்களால் திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு நடவடிக்கைகள் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கினார். இது சமூக அறிவியல் துறையில் அவரது முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

ஏகாதிபத்தியத்தின் பயமே: மக்களின் விடுதலை உணர்வுதான்

பரென்டியின் பார்வையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படை பயம் “பாதுகாப்பு” அல்ல; மக்கள் விடுதலையும் சமூக மாற்றங்களும் தான். குறிப்பாக சோசலிசம், நில சீரமைப்பு, கல்வி, பெண்கள் விடுதலை போன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரும் போது, அது உலக முதலாளித்துவ அமைப்புக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது.

ஆப்கன் புரட்சி: மறைக்கப்பட்ட உண்மை

பலர் மறந்து விட்ட உண்மை என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் ஒரு புரட்சி நடந்தது என்பதைத்தான். 1970களில் நடைபெற்ற இந்த புரட்சி, அரசாட்சியை அகற்றி மதச்சார்பற்ற அரசை கொண்டு வந்தது. அந்ந மதச்சார்பற்ற அரசு , நில சீரமைப்பு, பெண்களுக்கு கல்வி, பொது சுகாதாரம் போன்ற வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் மத்திய ஆசியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் சமூக மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உருவாக்கின. இதுவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயமாக மாறியது.

ஆப்கன் புரட்சிக்குப் பிறகு, அந்நாட்டின் பல்கலைக்கழக மாணவர்களில் 50 சதவீதம் பெண்களாக இருந்தனர். இது பெண்கள் கல்வியில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தை வெளிப்படுத்தியது. அதே காலத்தில், ஓப்பியம் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் பாப்பி செடி உள்ளிட்டவை பயிரிட முழு தடை விதிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதகுருக்கள் (முல்லாக்கள்) மற்றும் நிலக்கிழார்களின் ஆதிக்கம் ஆப்கன் அரசாலும், ஆப்கன் மக்கள் கட்சியாலும் (PDP- Communist Party) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட முல்லாக்கள் மற்றும் பழைய மேல்தட்டு வர்க்கத்தின் அதிருப்தியை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அரசியலை திணிக்க பயன்படுத்தியது.

https://www.michael-parenti.org/article-afghanistan-another-untold-story

ஏகாதிபத்தியம் தீவிரவாதத்தை எவ்வாறு உருவாக்குகிறது?

மத்திய ஆசியாவில் மத அடிப்படை வாதிகள் ஆளும் நாடுகளில் இடதுசாரி முற்போக்கு ஆட்சி அமைவதையும் வளர்ச்சி மாற்றங்கள் நிகழ்வதையும் தடுக்க, அமெரிக்கா தனது உளவுத்துறை அமைப்புகள் மூலம் மத அடிப்படைவாதக் குழுக்களை திட்டமிட்டு வளர்த்தது.

பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற மன்னராட்சி நாடுகளுடன் இணைந்து, ஆபரேஷன் சைக்ளோன் (Operation Cyclone) என்ற பெயரில் வேலை இழந்த வேலை கிடைக்காத இளைஞர்களை இணைத்து “ஜிஹாத்” என்ற பெயரில் ஆயுதங்கள் கொடுத்து ராணுவ பயிற்சி கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டது.

பரென்டியின் வார்த்தைகளில், சொல்ல வேண்டும் என்றால் தீவிரவாதம் தற்செயலான ஒன்றல்ல; அது ஏகாதிபத்தியத்தின் அரசியலால் உருவாக்கப்படுவது. இந்த சம்பவங்கள் இரட்டை கோபுர தாக்குதல் (9/11 க்கு) நடக்கும் முன்பே நடந்தவை. அமெரிக்க செய்தித்தாள்கள் 1980 களில் பின்லேடனை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று அழைத்தன, அதுதான் பயங்கரவாதத்தை ஆதரித்த அமெரிக்காவின் பிரச்சாரம்.

தீவிரவாதிகளின் ஆயுதங்கள்: பரென்டியின் கேள்வி

“இந்த தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன?”

பாலைவனங்களிலும் குகைகளிலும் ஆயுதத் தொழிற்சாலைகள் இல்லை. ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளிலிருந்து, உளவுத்துறை அமைப்புகள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் மூலமாகவே வழங்கப்பட்டன. இதை பரென்டி வரலாற்று ஆவணங்களின் மூலம் நிரூபித்தார்.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளில் ஹெரோயின் மற்றும் போதைப்பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான போதைப் பயிர்கள் பயிரிடுவது மீண்டும் பெரிதளவிற்கு ஊக்குவிக்கப்பட்டது. ஆப்கன் போரின் போது, முஜாஹிதீன் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியளிக்க அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டாலர்களை செலவிட்டது.

இஸ்லாமிய உலகத்திலும் சோசலிசம்

அந்த காலகட்டத்தில், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய இஸ்லாமிய நாடுகள் ஏற்கனவே மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துடன் இருந்தது. ஆப்கன் புரட்சி, மத்திய ஆசியாவிலும் இஸ்லாமிய உலகத்திலும் கம்யூனிசம் குறித்த ஆர்வத்தை மக்களிடையே பரப்பத் தொடங்கியது. இதனால், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் கடும் அச்சமடைந்தன. ஏனெனில், இதன் மூலம் அவர்கள் உணவு வளங்கள் மற்றும் எண்ணெய் வளங்களின் மீதான கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்பதே அவர்களின் பயம்.

இந்த சூழலில் அமெரிக்காவின் உளவுத்துறையான CIA, சவுதி உளவுத்துறை அமைப்புகளின் உதவியுடன் “வஹாபியிசம்” என்ற புதிய சிந்தனைக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. இந்தக் கொள்கை, இளைஞர்களை தீவிரப்படுத்தவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டதாக பரென்டி குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் ஒப்புதல் வாக்குமூலம்

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய போது , பரென்டி முன்வைத்த பல கருத்துகளை உறுதிப்படுத்தும் வகையில் அவரது உரை இருந்தது.

அதாவது சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சியை தடுக்க, அமெரிக்கா முஜாஹிதீன் மற்றும் தாலிபான் போராளிகளுக்கு நிதியுதவி செய்து, பயிற்சி அளித்தது என்பதை அவர் பேஞிய போது ஏற்றுக்கொண்டார். மேலும், அமெரிக்கா தனது அரசியல் நலன்களுக்காக பாகிஸ்தானின் ISI உளவுத்துறையை பயன்படுத்தியதும், அரபு நாடுகளிலும் ஆப்கானிஸ்தானிலும் அரசியல் குழப்பங்கள் உருவாக காரணமான செயல்பாடுகள் நடந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் பயங்கரவாதத்தை வளர்க்க பில்லியன் டாலர்கள் செலவழித்தையும், இஸ்லாமிய நாடுகளை சோசலிச சிந்தனைகளிலும், சமத்துவ இஸ்லாமிய கருத்துகளிலிருந்து மடைமாற்றவும், தடுக்கவும், அந்த சிந்தனையை சலபிசம் மற்றும் வஹாபிசம் போன்ற புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன என்பதையும் ஏற்றுக்கொண்டார். இதுவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நயவஞ்சக புத்தி, கம்யூனிச சோசலிச வெறுப்பு, மக்களை பிளவு படுத்தி சுரண்ட வேண்டும் என்ற திட்டம், ஒற்றுமையுடன் கூடிய அமைதியான வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. ஹிலாரி கிளிண்டன் வழங்கிய உரை, அமெரிக்காவின் ஒப்புதல் வாக்குமூலம் தான்.

போர் பொருளாதாரமும் முதலாளித்துவமும்

பரென்டியின் பகுப்பாய்வில், முதலாளித்துவம் தனது நெருக்கடிகளை சமாளிக்க போர் பொருளாதாரத்தை பயன்படுத்துகிறது என விளக்குகிறார். ஆயுத உற்பத்தி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள், எண்ணெய் மற்றும் கனிம வளங்களின் கொள்ளை இவை அனைத்தும் போரைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபமாத்தை அள்ளித்தரும் பிசினசாக மாற்றுகின்றன. மனித உயிர்கள் அழிந்தாலும், முதலாளித்துவத்திற்கு போர் ஒரு வர்த்தகமாகவே உள்ளது.

https://youtu.be/f-M68DS4UK4?si=JFRQsVSwJ6-TjXVe

“தீவிரவாதத்திற்கு எதிரான போர்”: இன்னொரு வன்முறை

“தீவிரவாதத்திற்கு எதிரான போர்” (War on Terror) என்ற பெயரில் அமெரிக்கா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளால் நடத்தப்படும் குண்டுவீச்சுகள், பொருளாதார தடைகள், அரசியல் தலையீடுகள் லட்சக்கணக்கான பொதுமக்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன. ஆனால் இவை ஒருபோதும் தீவிரவாதம் என அழைக்கப்படுவதில்லை.

அதை உணர்த்தும் வகையில் “உண்மையான தீவிரவாதிகள் பாலைவனங்களிலும் குகைகளிலும் இல்லை; அவர்கள் கார்ப்பரேட் அலுவலகங்களிலும் மேற்கத்திய அரசுகளின் அதிகார அறைகளிலும் இருக்கிறார்கள் என பரென்டி விமர்சிக்கிறார்.”

WikiLeaks (2010) வெளியிட்ட Iraq War Logs மற்றும் அமெரிக்க தூதரக கேபிள்கள், ஈராக் போருக்குப் பிறகு அமெரிக்காவின் பொருளாதார நலன்களையும், மேற்கத்திய நிறுவனங்களின் எண்ணெய் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்த முயன்றதாக அம்பலப்படுத்தியது.

https://thetyee.ca/Blogs/TheHook/Federal-Politics/2011/05/02/Iraq-war-Alberta-wikileaks/

யூகோஸ்லாவியா முதல் சிரியா வரை – ஒரே மாதிரி

யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான், வெனிசுலா என எந்தவொரு நாடாக இருந்தாலும் நடைமுறை ஒன்றே. முதலில் பொருளாதார தடைகள், பின்னர் சமூக உறவை முறிப்பது, அதன் பின் அங்கு தீவிரவாதக் குழுக்களை உருவாக்குவது, இறுதியில் அந்நாட்டின் மீது போர் தொடுத்து இயற்கை வளங்களின் கொள்ளை அடிப்பது.

போஸ்னியா போர், யூகோஸ்லாவியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற போர்களில் பங்கேற்ற பலர், போருக்கு பின் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் சேர்க்கப்பட்டனர். இது போன்ற நிகழ்வுகள் ஈராக், சிரியா, யேமன் உள்ளிட்ட பல நாடுகளிலும் தொடர்ந்தது.

சிரியாவில் “ஆபரேஷன் டிம்பர் சைக்கமோர்” (Operation Timber Sycamore) என்ற பெயரில் மீண்டும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்கா இஸ்ரேல் ஜோர்டான் அரசுகள் பல்வேறு பயங்கரவாத ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சி அமைப்புகளுக்கு நிதி, ஆயுதங்கள், பயிற்சிகள் கொடுத்து அந்நாட்டின் அல் அசாத் அரசை 2024 டிசம்பர் 8 அன்று கவிழ்த்தது.

https://www.michael-parenti.org/article-the-rational-destruction-of-yugoslavia

https://www.chinadailyhk.com/hk/article/600216

இந்திய சூழலில் தீவிரவாதம்

இந்திய சூழலில், தீவிரவாதம் பெரும்பாலும் மத அடையாளங்களுடனும் அண்டை நாடுகளுடனும் குறிப்பாக பாகிஸ்தானை மையப்படுத்தியும் பேசப்படுகிறது. பல நேரங்களில் இது மதவாத அரசியலின் ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவின் மூத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலே இதற்கு மாறான ஒரு பார்வையை முன்வைக்கிறார்.

அவரது பார்வையில், தீவிரவாதத்தை மத அல்லது சமுதாய கோணத்தில் பார்க்கக் கூடாது. பயங்கரவாதம் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல; அது மனிதகுலத்திற்கும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் எதிரான குற்றம் என்றார்.

இந்தியச் சூழலில் ஒரு முக்கியமான உண்மையையும் அவர் சுட்டிக்காட்டினார். அதாவது நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகள், தீவிரவாதத்திற்கு எதிராக அரசுடன் இணைந்து செயல்படுவதில், பல நேரங்களில் இந்து அமைப்புகளைவிட அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக பாத்துவா

2012 ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட உலமாக்கள் மற்றும் மத அறிஞர்கள் கலந்து கொண்டு, தீவிரவாதத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எதிராக பாத்துவா (Fatwa) அறிவித்த நிகழ்வையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தீவிரவாதம் இஸ்லாமிற்கு எதிரானது என்றும், மனிதகுலத்திற்கே எதிரானது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த மாநாட்டை நடத்திய முஸ்லிம் அமைப்புகள், தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய விரும்பும் இந்து அமைப்புகள் உட்பட எந்த மத அமைப்பையும் வரவேற்கத் தயாராக இருந்தனர் என்பதையும் அவர் பாராட்டினார்.

இதனை தோவல், இந்த நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஒரு பெரிய அர்ப்பணிப்பாக விவரித்தார்.
தீவிரவாதத்தை எதிர்க்க, மத வேறுபாடுகளை கடந்து, அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படுத்துவதே உண்மையான தேசிய பாதுகாப்பு என்றதே அவரது வலியுறுத்தல்.

ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜகவினர் ஒவ்வொரு நாளும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து வன்முறை ஏவுவது, படுகொலை செய்வது என அக்கிரமங்களை செய்து வருகின்றனர்

இந்த சம்பவங்களுக்கு தூபம் போடும் வகையில் பிரதமர் மோடி , அசாம் மாநில முதல்வர் துவங்கி, பாஜகவின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அனைவரும் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஏன் வலதுசாரி அரசியல் தீவிரவாதத்தை இஸ்லாமை குறிவைத்து பேசுகிறது? ஏன் அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது? என்பதைத்தான் பரென்டி விளக்குகிறார்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு முக்கியமானதா?

இதுவரை வாசித்தவர்களுக்கு இதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அதே நேரத்தில், எல்லாவற்றும் மேலோட்டமாக மட்டும் பார்க்காமல், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கேள்வி கேட்பதிலிருந்தே அரசியல் ஆரம்பிக்கிறது. மைக்கேல் பரென்டி, தீவிரவாதத்தை தனிநபர் வன்முறையாக அல்ல, ஏகாதிபத்திய அமைப்பின் விளைவாக பார்க்கச் சொல்கிறார். “பயங்கரவாதம்” என்ற சொல்லின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளை கேள்வி கேட்காமல் உண்மையை புரிந்துகொள்ள முடியாது, இதுவே பரென்டி நமக்கு அளித்த அரசியல் பாடம்.

தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரான் – ஏமன் போரைப் பயன்படுத்துகிறது, என்ற விமர்சனத்தை அரசியல் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

பயங்கரவாதத்தை முறியடிக்கும் தொடக்கப் புள்ளி ஏகாதிபத்தியத்தையும் அதைப் பாதுகாக்கும் முதலாளித்துவ சக்திகளையும் தூக்கி எறிவதில் உள்ளன என்பதை தரவுகள் விளக்குகின்றன.

-சாகீத் பகத் சிங்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *