Tamil Marx

ஆசிரியர்குழு இந்தியா

யுஜிசியின் புதிய விதிமுறைகளால் பிரச்சனையா?

யுஜிசியின் புதிய விதிமுறைகளால் பிரச்சனையா?
  • PublishedJanuary 29, 2026

ஜனவரி 13 அன்று நாட்டின் உயர்கல்விக்கான ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு உட்பட அனைத்து வகையான பாகுபாடுகளையும் கையாள்வதற்கான விதிமுறைகளை அறிவித்தது.

அதாவது மதம், இனம், பாலினம், பிறந்த இடம், சாதி (பட்டியல் பழங்குடி மற்றும் ஓபிசி பிரிவினரும் இந்த பாதுகாப்பு விதிகளில் உள்ளடங்குவார்கள்) அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படும் பாகுபாடுகளை, குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் அல்லது இவர்களில் எவருக்கேனும் எதிராக ஏற்படும் பாகுபாடுகளை ஒழிப்பது மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முழுமையான சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த விதிமுறைகளானது 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக தற்கொலைக்குள் தள்ளப்பட்ட ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோரின் தாய்மார்கள் தாக்கல் செய்த மனுவின் பேரில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்டன.

தற்போது இந்த விதிமுறைகள் பொதுப்பிரிவினருக்கு பாதிப்பை உருவாக்கும் என சாதிய மற்றும் இந்துத்துத்துவா அமைப்புகள் புதிய பிரச்சனையை கிளப்பி வருகின்றன. இவ்விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உ.பியில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் பரேலி நகர நீதிபதி ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

வரவேற்க தகுந்த அறிவிப்பா?

இந்த அறிவிப்பானது பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகளை அகற்றக் கோரி மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பல ஆண்டுகளாக முன்னெடுத்த தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும்.

குறிப்பாக, ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் ‘நிறுவனப் படுகொலைக்குப்’ பிறகு, போதுமான பாதுகாப்பு வழிமுறைகளைக்கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, இந்த விதிமுறைகள் வரலாற்றுச் சூழலை அங்கீகரிக்கும் வகையில் ‘ரோஹித் வெமுலா’ பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும்.

இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அமலாக்கம் என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் மக்களின் நியாயமான போராட்டங்கள் அழுத்தத்தின் விளைவாக பாஜக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பல முக்கிய அறிவிப்புகள் செயலுக்கு வரவில்லை. அல்லது முறையாக அமலாக்கப்படுவதில்லை. “சொல்வது ஒன்று செய்வது ஒன்று” என்ற போக்கு பாஜக ஆட்சியில் தொடரும் நிலையில் யுஜிசி விதிமுறைகள் முறையாக அமலாகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு எழுந்துள்ளது.

அதிகரித்த சாதி பாகுபாடுகள்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாக யுஜிசி தரவுகளே தெரிவிக்கின்றன. உயர்கல்வியில் சேரும் பட்டியல் சாதி (SC) மாணவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக இருந்தாலும், அதே சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களின் பங்களிப்பு வெறும் 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதாவது பாஜக அரசு பட்டியல் பழங்குடி ஓபிசி பிரிவுகளை சேந்த பேராசியர் பணியிடங்களை நிரப்பாமல் விட்டு வருகின்றது.

தற்போதைய சம வாய்ப்பு மையங்கள் (EOC) மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகள் தன்னாட்சி அதிகாரம் இன்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிடியில் இருப்பதால், அவற்றின் நடுநிலைமை சிதைக்கப்பட்டுள்ளது என்பதே எதார்த்தம். ஜனநாயகத்தன்மை கொண்ட சீர்திருத்தம் தேவை புதிய விதிமுறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரையும் உள்ளடக்கியது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இக்குழுக்களுக்குத் துணைவேந்தர்களே தலைமை தாங்குவது என்பது நடைமுறையில் ஒருதலைப்பட்சமான போக்கை உருவாக்கும்.

பாரபட்சமற்ற வகையில் அமைய வேண்டும்

மாறாக, இக்குழுக்களில் நடுநிலையான நீதித்துறைப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகத்தால் நியமிக்கப்படாமல், பட்டியல் சாதி, பழங்குடி, இதர பிற் படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவர் பிரதிநிதிகள் ‘தகுதி’ என்ற பெயரில் நியமிக்கப்படாமல், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ரோஹித் சட்டமே தீர்வு யுஜிசி விதிமுறைகள் ஒரு தொடக்கமே தவிர, முழுமையான தீர்வல்ல. பல்கலைக்கழக நிர்வாகத்திலிருந்து சுதந்திரமான ஒரு சட்டப்பூர்வக் குழுவை உருவாக்குவதுடன், சமூகப் புறக்கணிப்பு மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்றவற்றைத் தெளிவான குற்றங்களாக வரையறுக்கும் ‘ரோஹித் சட்டம்’ (Rohith Act) இயற்றப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தான் ‘நிரபராதி’ என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பை (Burden of Proof) ஏற்கச் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமைய வேண்டும்.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *