குரேசியாவில் ஊடக ஊழியர்கள் போராட்டம்
பாலஸ்தீன பத்திரிகையாளர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை கண்டித்து குரேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் (SNH) பெரும் போரட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
“தொழிற்சங்கங்கள் தான் தொழிலாளர்களின் சக்தியாக விளங்குகிறது என்பதை ஏற்றுக்கொண்டு, நம் கண் முன் நடக்கும் பயங்கர குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று குரேசிய பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்ட அறைகூவலில் தெரிவித்துள்ளது.
தற்போது காசாவில் ஒரு மோசமான இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்கள் குரல் எழுப்ப வேண்டும். பொதுமக்களிடையே கருத்தை உருவாக்குவதில் அவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் முக்கிய ஊடகங்கள் பாலஸ்தீனர்களின் மீதான வன்முறையை போதிய அளவு பேசுவதில்லை. அல்லது அதுபற்றி பேசாமல் அமைதியாக உள்ளன. ஒரு இனப்படுகொலை அரங்கேறும் போது அமைதியாக இருப்பது போர் மற்றும் ஆக்கிரமிப்பை இயல்பான விசயமாக மாற்றும் செயலாகும்.
இந்த நிலையானது இனப்படுகொலை தொடர்ந்து நடைபெறுவதற்கும். பாலஸ்தீன மக்களின் அழிவுக்கும் வழிவகுக்கும். இந்த விசயத்தில் அமைதியாக இருப்பதும், நடுநிலையாக இருப்பதும் இந்த குற்றத்தை மறைக்க உடந்தையாக இருப்பதற்கு சமம் தான்.
இந்த போரட்டத்தின் போது பேசிய தொழிற்சங்க தலைவர்கள் காசாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது, ஒட்டுமொத்த பத்திரிகை சுதந்திரத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்தும். காசாவில் என்ன நடக்கிறது இஸ்ரேல் என்ன கொடுமைகளை செய்கிறது என்ற உண்மை அந்த பகுதியை தாண்டி வெளியே வரக்கூடாது என்பதற்காக இது நடத்தப்படுகிறது.
அதே போல வெளிநாட்டு பத்திரிகையாளர்களை காசாவிற்குள் நுழைந்து விடாமல் தடுப்பதன் மூலமாக இஸ்ரேல் ராணுவம் கருத்து சுதந்திரத்தையும், மக்களின் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற உரிமையையும் தடுக்கிறது. உண்மைக்கான குரல்களாக உள்ள பத்திரிகையாளர்கள் குண்டுகளாலும் பட்டினியாலும் படுகொலை செய்யப்படுவதை நாம் நேரில் காண்கிறோம் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் பாலஸ்தீன மக்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு ஆதரவானது மட்டுமல்லாமல் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சமூக பொறுப்பு உள்ளது என்பதையும் நினைவுப்படுத்துகிறது. அதாவது தவறுகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு சக்தியாக தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டும் என்பதை இப்போரட்டம் காட்டுகிறது.
சமீப மாதங்களில், குரேஷியாவில் உள்ள பத்திரிகையாளர்களின் தொழிற்சங்கங்கள் காசாவில் உள்ள பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைத்து தாக்கப்படுவதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அவற்றில் ஒன்று, உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட 200 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் உருவப்படங்களை சேமிக்க கூட்டு முயற்சி செய்து வருகின்றனர். போராட்டங்களின் போது அவர்களின் உருவப்படங்களை ஏந்தி பேரணியும் செல்கின்றனர்.