Tamil Marx

கட்டுரைகள் தொழிலாளர் போராட்டங்கள்

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 2 – சிவக்குமார்

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 2 – சிவக்குமார்
  • PublishedMay 16, 2025

பகுதி – 2 

5. தொழிலாளர்கள் முதலாளிகளின் உற்பத்திக்குள் அமர்த்தப்படுதல்

முதலாளியே அதாவது நமது எடுத்துக்காட்டில் முகேஷ் அம்பேனியே உற்பத்தியில் ஈடுபட்டால் போதுமா? போதாது என்று நமக்குத் தெரியும். அவர்கள் நூல் உற்பத்தியிலும், கச்சாப் பொருட்களை வாங்குவதற்கும், நூலை விற்பதற்கும் தேவையான மனிதர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்.

அதற்காக, அதாவது, அவர்கள் தொழிலாளர்களின் உழைக்கும் ஆற்றலை சந்தையில் வாங்க வேண்டும். இந்த உழைக்கும் ஆற்றலை உழைப்புச் சக்தி (labour power) என்கிறோம். இன்றைய உலகில் ஒரு மனிதரை ஒட்டுமொத்தமாக வாங்குவது தடை செய்யப்பட்டது. அப்படி வாங்கி விட்டால் அவர் அடிமை ஆகி விடுகிறார். மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அவரது உழைக்கும் ஆற்றலை வாங்குவது சட்டப்படியானது.

எனவே, அந்த உழைக்கும் ஆற்றல் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் தங்களது உழைப்புச் சக்தியை விற்று கிடைக்கும் பணத்தை வைத்துதான் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தேவையான பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளும் நிலைமை இல்லை. அதாவது, அதற்குத் தேவையான நிலம், தொழிற்சாலை, கச்சாப் பொருட்கள் முதலானவற்றை வாங்கத் தேவையான பணம் அவர்களிடம் இல்லை. தாமே ஏதோ ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கும் நிலைமையிலும் அவர்கள் இல்லை. அதற்கும் உற்பத்திக்கருவிகளும் கச்சாப்பொருளும் தேவை. இவ்வாறு தமது உழைப்புச் சக்தியை விற்று வாழ்க்கை நடத்த வேண்டியிருப்பவர்களைத்தான் தொழிலாளர்கள் என்கிறோம்.

எனவே, தொழிலாளர் உழைப்பதற்கான தமது ஆற்றலை (உழைப்பை அல்ல) சந்தையில் விற்க வருகிறார். அதனை முதலாளிகள் வாங்குகிறார்கள். உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார்கள். தொழிலாளர் தமது உழைப்புச் சக்தியை செலவிடும்போது அது உழைப்பாக வெளிப்படுகிறது. ஆனால், சந்தையில் பணவுடைமையாளரான முதலாளியும் பணம் இல்லாமல் உற்பத்திச் சக்தியை மட்டும் வைத்திருக்கும் தொழிலாளியும் சந்திக்கும்போது உழைப்பு நடைபெறவில்லை. உழைப்புச் சக்தி என்ற பொருளை விற்பதற்கான பேரம்தான் நடைபெறுகிறது.

இந்த உழைப்புச் சக்திக்கும் ஒரு மதிப்பு உண்டு, சந்தையில் ஒரு விலை உண்டு. கத்தரிக்காயைப் போல, ஒரு பேருந்துப் பயணத்தைப் போல, ஒரு செல்பேசியைப் போல இன்னும் ஆயிரக்கணக்கான பல பொருட்களையும் சேவைகளையும் போல உழைப்புச் சக்தி என்ற சரக்கும் மதிப்பைக் கொண்டுள்ளது.

உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதனை உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனைத்து வகையான உழைப்பையும் அனைத்து வகையான பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பையும் பொறுத்தது. அதன் அடிப்படையில் அதற்கு ஒரு விலை அமைகிறது.

நாம் ஏற்கனவே பார்த்தது போல, அந்த மதிப்பில் தொழிலாளி தன்னைத் தானே பராமரித்து மீண்டும் மீண்டும் வேலைக்கு வரவும் தனது குடும்பத்தைப் பராமரித்து தமக்கும் பின்னரும் உழைப்புச் சந்தைக்கு ஆள் வருவதை உறுதி செய்யவும் தனது வேலைக்குத் தேவையான பயிற்சி, திறமைகளைப் பெறுவதற்கும் செலவிட்ட உழைப்பு அனைத்தையும் உள்ளடக்கியது.

உழைப்புச் சக்தியின் மதிப்பு நாள் கணக்கிலோ வாரக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ கணக்கிடப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாட்கூலி, வாரக் கூலி, மாதச் சம்பளம், ஆண்டு வருவாய் என்று பல வழிகளில் அழைக்கிறோம். நாம் மேலே பார்த்தது போல அது வெவ்வேறு வேலைகளுக்கு வெவ்வேறாக இருக்கலாம். எளிமையை முன்னிட்டு அது ஒரு நாளைக்கு ரூ 1,200 அல்லது ஒரு மாதத்துக்கு ரூ 30,000 என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகை குறிப்பிட்ட அளவிலான பொருட்களின் மதிப்பை, அதாவது அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் உழைப்பின் அளவைக் குறிக்கிறது.

தொழிலாளர்கள் தமது உழைப்புச் சக்தியை விற்பவர்களாக இருக்கிறார்கள். அதை வாங்குபவர்கள் முதலாளிகள்.

6. முதலாளித்துவ உற்பத்தி: பொருட்களின் வாங்கல்விற்றல்

ஒரு முதலாளியின் கையில் பணம் குவிந்திருப்பதால் அவர் உற்பத்திக்குத் தேவையான இயந்திரங்களையும் கச்சாப் பொருட்களையும் சந்தையில் வாங்குவிக்கிறார் (வாங்கும் மேலாளர்கள் மூலம்). ஒரு தொழிற்சாலையை கட்டுவிக்கிறார் (கட்டுமான மேலாளர்கள் மூலம்). தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை வாங்குவிக்கிறார் (மனித வளத் துறை ஊழியர்கள் மூலம்). இந்த ஒவ்வொரு வேலைக்கு அவரிடம் வேலை செய்ய ஊழியர்கள் இருக்கின்றனர், அவர்களும் தமது உழைப்புச் சக்தியை விற்பவர்கள்தாம்.

இவ்வாறு, தனது பணத்தில் உற்பத்திக்குத் தேவையான புறப் பொருட்களையும் உற்பத்தியை நடத்தும் மனித ஆற்றலையும் வாங்கிய முதலாளி உற்பத்தியை நடத்துவிக்கிறார் (உற்பத்தி மேலாளர்கள் மூலம்). அதில் ஏதோ ஒரு பயனுள்ள பொருளை (எடுத்துக்காட்டு : நூல்) உற்பத்தி செய்விக்கிறார். அதை மேற்பார்வையிட, கண்காணிக்க, ஒழுங்குபடுத்த பலரை வேலைக்கு வைத்திருக்கிறார்.

முதலாளி எல்லாப் பொருட்களையும் சந்தையில் வாங்கிய போது அவற்றின் மதிப்புக்கு ஈடான விலை கொடுத்தார் என்று வைத்துக் கொள்வோம் (பல நேரங்களில் அப்படி நடப்பதில்லை, விலைகள் மதிப்பை விட மேலே அல்லது கீழே ஏறி இறங்குகின்றன என்றாலும், ஏற்ற இறக்கங்கள் ஒன்றையொன்று சரிக்கட்டிக் கொள்கின்றன). மூலப் பொருட்கள் உற்பத்திப் பொருளுக்குள் போய் விடுகின்றன, பிற துணைப் பொருட்களும் உருமாறிப் போகின்றன. இயந்திரம் தேய்ந்து போகிறது. அவற்றின் மதிப்பெல்லாம் உற்பத்திப் பொருளோடு சேர்கின்றன. அதாவது, அவற்றைப் பயன்படுத்த வைப்பதன் மூலம் முதலாளி பயனுள்ள உற்பத்திப் பொருளை உற்பத்தி செய்கிறார், அதைச் சந்தையில் விற்கப் போவதால் அதற்கு மதிப்பு உண்டு. அதை விற்று அவர் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

7. உபரிமதிப்பின் உற்பத்தி

ஒரு தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பாக ரூ 1,200 கூலியாகக் கொடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்தில் தமது உழைப்பின் மூலம் சேர்க்கும் புதிய மதிப்பு ரூ 300 என்று வைத்துக் கொள்வோம். ஒரு மணி நேரத்தில் 1 கிலோ பஞ்சை 1 கிலோ நூலாக மாற்ற முடிகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது உற்பத்தியாகும் நூலின் மதிப்பில், மூலப் பொருட்கள் (பஞ்சு), இயந்திரங்களின் தேய்மானம் (கதிர்) ஆகியவை கடத்தும் மதிப்போடு கூடவே, தொழிலாளர்கள் தங்களது உழைப்பால் சேர்க்கும் புதிய மதிப்பும் (1 மணி நேரத்தில் ரூ 300) சேர்கிறது.

இந்தப் புதிய மதிப்பில் ஒரு பகுதி தொழிலாளிக்குக் கூலியாகத் தருவதாக முதலாளி ஏற்றுக் கொண்ட தொகை (ரூ 1200). தொழிலாளி 4 மணி நேரம் வேலை செய்து 10 கிலோ பஞ்சை 10 கிலோ நூலாக மாற்றும்போது ரூ 1,200 புதிய மதிப்பை இந்த 10 கிலோ நூலில் சேர்த்திருப்பார். இந்த மதிப்பு அவருக்குக் கூலியாகக் கிடைக்கவுள்ள பணத்துக்குச் சமம். அதைக் கொண்டு அவர் வாங்கும் பொருட்களின் மதிப்புக்குச் சமம். அதாவது, அவற்றை உற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பின் அளவுக்குச் சமம். அந்த உழைப்பை அந்தந்தப் பொருட்களை உற்பத்தி செய்த பல்வேறு வகை தொழிலாளர்கள் செலுத்தியுள்ளார்கள்.

ஆனால், தொழிற்சாலையில் வேலை நேரம் 8 மணி நேரமாக இருக்கிறது. எனவே, ஒரு தொழிலாளி 8 மணி நேரத்தில் 20 கிலோ பஞ்சை 20 கிலோ நூலாக மாற்றுவார். தொழிலாளர் தமக்கு வரவிருக்கும் கூலிக்குச் சமமான அளவு 4 மணி நேரம் உழைத்து 10 கிலோ நூலை உற்பத்தி செய்வதோடு நிற்காமல் இன்னும் கூடுதல் 4 மணி நேரம் உழைத்து மொத்தம் 20 கிலோ நூலை உற்பத்தி செய்கிறார். தனக்குக் கொடுக்கப்பட்ட கூலியை விட இரண்டு மடங்கு மதிப்பை நூலில் சேர்க்கிறார்.

இப்படி உற்பத்தியான பொருள் இப்போது முதலாளிக்குச் சொந்தம். அதில் உழைத்தத் தொழிலாளர்களுக்குச் சொந்தமில்லை. ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே தங்களது உழைப்புச் சக்தியை முதலாளிக்கு விற்று விட்டுத்தான் உற்பத்திக்குள் இறங்கினார்கள். அதுவும் முதலாளிக்கு சொந்தமான தொழிற்சாலையில் முதலாளிக்குச் சொந்தமான கருவிகளைப் பயன்படுத்தி முதலாளிக்குச் சொந்தமான மூலப்பொருட்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றியிருக்கிறார்கள். அவர்களது உழைப்பும் கூட அது நிகழும்போது முதலாளிக்குச் சொந்தமானது, ஏனென்றால் அவர்களது உழைப்புச் சக்தியின் பயனை அவர் வாங்கியிருக்கிறார். அதற்குக் காசு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

  • தொழிலாளி விற்கும் சரக்குக்குப் பெயர் உழைப்புச் சக்தி
  • தொழிலாளி உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு சமமான மதிப்பை உற்பத்திப் பொருளில் சேர்ப்பதற்கான உழைப்பு நேரம் அவசிய உழைப்பு நேரம்
  • அதற்கு மேல் தொழிலாளி உழைக்கும் நேரம் உபரி-உழைப்பு நேரம்.
  • ஒரு நாள் வேலை என்பது அவசிய உழைப்பு நேரமும் உபரி-உழைப்பு நேரமும் சேர்ந்தது. நமது எடுத்துக்காட்டில் இது 8 மணி நேரம்.
  • உபரி-உழைப்பு நேரத்தில் உற்பத்தியாகும் பொருளில் சேரும் மதிப்பு உபரி-மதிப்பு
  • உபரி-உழைப்பு நேரத்தில் உற்பத்தியாகும் பொருள் உபரி உற்பத்திப்பொருள்.

தொழிலாளர்கள் ஏன் உபரி-உழைப்பைச் செலவிட வேண்டியுள்ளது?

ஒன்று, உழைப்புச் சக்தியை விற்க வருபவர்களுக்கு வேறு வழியில்லை. அதை விற்றுத்தான் அவர்கள் பணம் ஈட்ட வேண்டியுள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது, குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டியுள்ளது.

இரண்டாவது, உழைப்புச் சக்தியை விற்ற தொழிலாளி தனது வாழ்க்கைத் தேவைக்காக வாங்க வேண்டிய பொருட்களின் மதிப்பு ஒரு நாள் அவர் வேலை செய்யும் போது உருவாக்கக் கூடிய மதிப்பை விடக் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்ந்திருக்கிறது.

இந்த இரண்டு நிலைமைகளும் முதலாளிக்குச் சாதகமாக அமைகிறது. அவர் உழைப்புச் சக்தியை வாங்குகிறார். ஒரு தொழிலாளியிடமிருந்து இல்லை, நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடமிருந்து அதை வாங்குகிறார்.

உழைப்புச் சக்தியை அதன் மதிப்புக்கு விற்ற தொழிலாளிகள் அந்த மதிப்பின் உட்பொருளான உழைப்பின் அளவுக்கு உழைத்ததும் நின்று விடத் தேவையில்லை. அதை விட அதிக நேரத்துக்கு முதலாளி அவர்களிடம் வேலை வாங்க முடியும். இந்த நிலை இருப்பதால்தான், அவ்வாறு திட்டமிட்டுதான் முதலாளி உற்பத்தியிலே இறங்கினார். மதிப்பைத் தெரிவிக்கும் (அதாவது உழைப்பைத் தெரிவிக்கும்) தனது பணத்தை மூலதனமாக அதாவது பெருக்கமடையும் மதிப்பாக (அதிகரிக்கும் பணமாக) மாற்ற முனைந்தார். மதிப்பு பெருக்கமடைய வேண்டுமென்றால் அவர் செலவழித்த பணத்தின் மதிப்பை விட அதிக மதிப்பை அவரது உற்பத்திப் பொருள் கொண்டிருக்க வேண்டும்.

இதுதான் முதலாளி வர்க்கத்தின் இலாபத்தின் தோற்றுவாய். அம்பானியை போல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முதலாளிகள் வெவ்வேறு உற்பத்தித் துறைகளிலும் சேவைத் துறைகளிலும் கூலி உழைப்பை பயன்படுத்துகிறார்கள். அதற்காக தொழிலாளர்களிடமிருந்து அவர்களது உழைப்புச் சக்தியை வாங்குகிறார்கள். அதற்கு விலையாக அதன் மதிப்பை ஊதியமாகக் கொடுக்கிறார்கள்.

 

தோழர் சிவக்குமார் மூலதன வாசிப்பு குழு 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *