Tamil Marx

கட்டுரைகள் சர்வதேசம்

எல்லை தாண்டி போராட்டக் குரல்களை ஒடுக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக கண்காணிப்பு

எல்லை தாண்டி போராட்டக் குரல்களை ஒடுக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக கண்காணிப்பு
  • PublishedJuly 26, 2025

அமெரிக்காவிற்குள் எழும் போராட்டக் குரல்களை ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்காக, அமெரிக்க அரசு தனிநபர்களின் தனியுரிமைக்குள் எல்லை தாண்டி தலையிடுகிறது. இதற்காக விசா விதிகளைப் புதிதாக மாற்றியுள்ளது. ஜூன் 23 அன்று, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது டிவிட்டர் எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், F, M அல்லது J வகை குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும், அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன், தங்கள் சமூக ஊடக கணக்குகள் அனைத்தின் தனியுரிமை அமைப்புகளையும் பொதுவில் வைக்க வேண்டும் அதாவது தனிப்பட்ட கணக்கை (private account ) அனைவரும் பார்க்கும் வகையில் பொதுக்கணக்காக வைக்க வேண்டும் எனக் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடக சரிபார்ப்பு ஏன்?

இந்த புதிய விதியின்படி, அமெரிக்காவில் படிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். விசா வழங்குவதற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் மாணவர்களின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் – ஜனநாயகவாதிகளா, இடதுசாரிகளா, வலதுசாரிகளா, மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்களா, அமெரிக்காவை விமர்சிப்பவர்களா என்பதை சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி ஆராய்வார்கள். ஒருவேளை அந்த மாணவர்கள் அமெரிக்காவிற்குச் சென்ற பிறகு ஏதாவது போராட்டத்தில் ஈடுபடலாம் என சந்தேகித்தால், அவர்களுக்கு விசா ரத்து செய்யப்படலாம்.

ஜனநாயகக் குரல்களை நெரிக்கும் பின்னணி

அமெரிக்க நகரங்கள், பல்கலைக்கழகங்கள் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த மாணவர் போராட்டங்களும், இஸ்ரேலுக்கு எதிராக மாணவர்கள் எழுப்பிய கண்டன குரல்களை தொடர்ந்துதான் அமெரிக்கா இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேலுடன் உறவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அதனைத் துண்டிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து போராட்டக்குரல் எழுப்பினர்.

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்களில், இந்திய மாணவர்கள் காசாவிற்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தினர். இதில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி பல நாட்டு மாணவர்களும் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், அந்தப் பல்கலைக்கழகம்தான் நாடு முழுவதும் போராட்டம் பரவக் காரணம் எனக் குற்றம் சாட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான நிதியையும் வெட்டினார்.

மேலும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய இந்திய மாணவர்களை நாடு கடத்தினார். ரஞ்சனி சீனிவாசன் என்ற இந்திய ஆய்வு மாணவி பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரது விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அந்த மாணவி தன்னைத்தானே கனடாவுக்கு நாடுகடத்திக் கொண்டார். அதேபோல, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தனது கல்லூரி மேடையில் பேசியதற்காக மெகா வெமூரி என்ற மாணவியை மாசாசூட்ஸ் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது எனத் தடை விதித்தது. இத்தகைய சூழலில்தான் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

அமெரிக்காவிற்கு வரும் இந்திய மாணவர்கள் இத்தகைய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள், ஆதரிக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அரசு மேற்கொள்கிறது. மேலும், தீவிர வலதுசாரியாகவும் பழமைவாதியாகவும் உள்ள டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளார்களா என்பதையும் அவர்களால் இந்த நடவடிக்கை மூலமாக சரிபார்க்க முடியும்.

கண்காணிப்பின் விவரம்

அமெரிக்க விசாக்களுக்கான சமூக ஊடகச் சரிபார்ப்பு முறை 2019 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் இருந்தாலும், இந்த புதிய அறிவிப்பானது வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்குப் படிப்பதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ செல்லும்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக அளவிலான கண்காணிப்பை எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

தற்போதைய வழிகாட்டுதலில், விண்ணப்பதாரர்கள் Reddit, Instagram, Tumblr, X (ட்விட்டர்), Facebook, LinkedIn, Threads, Bluesky, YouTube, அத்துடன் Rednote, TikTok போன்ற பல சீன சமூக ஊடகத் தளங்களில் தாங்கள் வைத்துள்ள கணக்குகளைத் தங்கள் விசா விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது.
இதன் பொருள், அந்த நபர் தனிப்பட்ட முறையில் பதிவேற்றிய பதிவுகள், பதில்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், கடந்தகால கருத்துகள், டேக் செய்யப்பட்ட படங்கள், பதிவுகள், ஸ்டேட்டஸ் அப்டேட்கள், மற்றும் எதையெல்லாம் “லைக்” செய்துள்ளார், அந்தப் பதிவுகளின் உள்ளடக்கம் என்ன என்று அனைத்தையும் அமெரிக்க அரசு அதிகாரிகள் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்துவிட வேண்டும். இதற்காக, விசா விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் பட்டியலிடக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகக் கணக்குகளை எவ்வளவு காலம் தனிப்பட்ட கணக்காக இல்லாமல் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் நேரம் முதல், அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு குடியேற்றச் சரிபார்ப்புகளை முடிக்கும் வரை தங்கள் கணக்குகளைப் பொதுவில் வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விண்ணப்பதாரர்கள் எப்போது தங்கள் கணக்குகளை மீண்டும் தனிப்பட்ட கணக்குகளாக மாற்றலாம் என்பதை அறிய, தங்கள் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் அல்லது சேர்க்கை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

அபாயமும் சவால்களும்

இந்தத் தொந்தரவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள சமூக ஊடக கணக்குகளை முழுவதுமாக நீக்கி (delete) விடலாம் எனத் தோன்றலாம். ஆனால், சில நிறுவனங்கள் பயனர்களால் நீக்கப்பட்ட கணக்குகளையும் பல வாரங்கள் அல்லது மாதங்களுக்குச் செயலில் தான் வைத்திருக்கின்றன. இதன் காரணமாக, சரிபார்ப்பு செயல்முறை தொடங்கும் போது அவர்களின் சமூக ஊடக கணக்குகள் அகப்படலாம். இது விசா விண்ணப்பம் ரத்து செய்யப்படும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சமூக ஊடக கணக்குகளைப் பொதுவில் வைப்பதன் மூலம் பல்வேறு தனியுரிமை, தணிக்கை மற்றும் பாதுகாப்பிற்கான அபாயங்கள் உருவாகும். அமெரிக்காவில் படிப்பதற்காக விண்ணப்பிக்கும் பல இந்திய மாணவர்கள் பொதுவாக உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் சிறார்களாகவும் பெண்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு, தங்கள் சமூக ஊடக கணக்குகளை தனிப்பட்டதாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது. பொதுவில் வைக்கும் போது, அது சிறார்கள், பெண்கள் கணக்கை ஹேக் செய்து ஆன்லைன் மூலம் மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தல் செய்வது, மிரட்டிப் பணம் பறிப்பது, தேவையற்ற நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுப்பது போன்ற டிஜிட்டல் பாதுகாப்புக் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.

கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்பும்

அமெரிக்க அரசாங்கத்தின் ஆபத்து நிறைந்த இத்தகைய புதிய சமூக ஊடகச் சரிபார்ப்பு முடிவை தனியுரிமை வல்லுநர்கள், ஜனநாயக அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் அணுகுமுறை எதேச்சதிகார ஆட்சியின் அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. விசா விண்ணப்பதாரர்கள் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் அந்த நடைமுறையையே புறக்கணிக்கலாம்.
ஆனால், விசா ரத்து செய்யப்படும் என்பதால் மாணவர்களின் கல்விக் கனவு கேள்விக்குறியாகும். எனவே, மாணவர்கள் இதை எந்த அளவுக்குச் செய்வார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா இந்த ஆபத்தான நடைமுறையைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

– சேது சிவன்

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *