Tamil Marx

கட்டுரைகள் ஸ்டாலின்

தோழர் ஸ்டாலின்- மார்க்சிய லெனினியவாதி

தோழர் ஸ்டாலின்- மார்க்சிய லெனினியவாதி
  • PublishedDecember 21, 2021

ஸ்டாலினை கைவிட்டால் மார்க்சியம் செல்லா காசுதான்!..

பகட்டுக்காக மார்க்சியம் பேசுகிறவர்களை தயவுசெய்து விட்டொழியுங்கள். அவர்கள் நம்மைவிட சத்தமாகத்தான் எல்லாவற்றையும் பேசுகிறார்கள். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்தானே என்றால், “ஆம்! அதிலென்ன சந்தேகம்?” என நம்மை அவர்கள் ஆச்சரியத்தில் வீழ்த்துவார்கள். வாங்க, அதற்காக வேலைசெய்யலாம் என்று அழைத்துப்பாருங்கள்! “அதற்கு உங்கள் வழி ஒத்துவராது” என்று கழட்டிக்கொண்டு ஓடுவார்கள். இவர்களை நீங்கள் கற்பனாவாத சோசலிஸ்டுகள் என்றுகூட அழைக்க முடியாது. காரணம், கற்பனாவாத சோசலிஸ்டுகள் கூட தங்களது நோக்கத்திற்காக அரசிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே இருப்பார்கள். நாமது பகட்டாளர்கள் செயலளவில் துரும்பைக்கூட அசைக்காத மாவீரர்கள்!

இவர்களை காந்தியவாதிகள் என்றுகூட அழைத்துவிடாதீர்கள். காந்தி சரியோ, தவறோ, ஆனால் அவர் போராட்டக்காரர். நம் பாசத்திற்குரிய பகட்டாளர்கள் ஒருவேளை சோற்றைக்கூட இழக்க விரும்பாதவர்கள்.

இவர்கள் “உங்களுக்கான வழி” என்று ஒன்றை சொல்கிறார்களே, அது என்ன வழி? ஸ்டாலினுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஸ்டாலின், உலக சுரண்டல்வாதிகள் அனைவராலும் மிகவும் வெறுக்கப்படுகிறவர். இந்த வெறுப்புதான் ஸ்டாலினின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்கான தொடக்கப்புள்ளி. ஸ்டாலின் எதற்காக வெறுக்கப்படுகிறார்? இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருக்கு மட்டுமில்லாது உலக முதலாளித்துவ அரசுகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக இருந்ததாலா? இராணுவ ரீதியாக வெல்லப்பட முடியாதவராக இருந்ததாலா? இவையெல்லாம் ஒரு சிறந்த முதலாளித்துவ இராஜதந்திரியாலும் செய்யக்கூடியவைதான்.

ஸ்டாலின் சிறப்பாக வேறென்ன செய்தாரென்றால், இவ்வளவு உலக சதிகாரர்களையும் அவர் இரசியாவின் உழைக்கும் மக்களைக் கொண்டு முறியடித்தார் என்பதாகும். உழைக்கும் மக்களால் எப்படி இவ்வளவு பெரியசாதனையை நிகழ்த்த முடிந்தது? அதுதான், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்” என்பதன் மகத்துவமாகும்.

இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் இரசியாவை உலகப்போரிலிருந்தும் ஜெர்மன் பாசிசத்திலிருந்தும் இரசியாவையும் உலகையும் மீட்டது. உலகப்போரை எதிர்கொண்டவாறே இரசியாவை தொழில் வளர்ச்சியில், மின்சார தன்னிறைவில் முன்னேற்றியது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள முரண்பாட்டை தீர்க்கும் வகையில் கூட்டுப்பண்ணை முறையை வெற்றிகரமாக்கியது. உலகின் முதல் சோசலிச சமுதாயத்தை நடைமுறையில் நிரூபித்துக் காட்டியது. உலகெங்குமுள்ள சக பாட்டளிவர்க்கங்களுக்கு செய்யவேண்டிய சர்வதேசக் கடமைகளை செழுமையாக செய்தது.

சுருக்கமாக சொல்வதென்றால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மட்டும் இல்லையென்றால், ஸ்டாலினின் மறைவுக்கு முன்பே இரசியாவை முதலாளித்துவம் மீட்டு குட்டிச்சுவராக்கியிருக்கும், அவ்வளவுதான்.

இவ்வளவு சக்திமிக்க பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? அது சுரண்டுகிற வர்க்கங்களின் மீதான கட்டுப்படுத்தலையும் உழைக்கும் மக்களுக்கான சனநாயகத்தையும் நடைமுறை படுத்துவதற்கான நிர்வாக அமைப்பு முறை. அதை நவம்பர் புரட்சிதான் கொண்டுவந்தது. தோழர் லெனின் அதை நிறுவிக்காட்டினார். ஆனால், லெனினின் குறுகிய கால பங்களிப்புக்குப் பின்னால் அதை கட்டிக்காத்து, வளர்த்தெடுத்து, உறுதிபடுத்தியது தோழர் ஸ்டாலின்.

இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் உலக சுரண்டலாளர்கள் அனைவருக்கும் சகிக்க முடியாததாக இருந்தது, அதனால்தான் அவர்கள் அனைவராலும் ஸ்டாலின் அப்படி வெறுக்கப்பட்டார் என்பதை மறந்துவிடாதிருங்கள், அப்போது உங்களுக்கு இன்னுமொரு உண்மை புரிய வரும். அதற்கான விதையை ஊன்றியதிலும் ஸ்டாலினின் பங்கு முக்கியத்துவமானது என்பதுதான் அது.

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது அரசு அதிபர் அல்லது பிரதமர், அவருடனான அமைச்சரவை சகாக்கள் ஆகியோரை முதன்மையாகக் கொண்டதல்ல. அடிப்படையில் அது, குடியிருப்பு வாரியான மக்களிடமும், ஆலைகள் வாரியான தொழிலாளர்களிடமும், பகுதி வாரியான விவசாயிகளிடமும், கல்லூரி வாரியான மாணவர்களிடமும், இளைஞர்கள், பெண்கள் என அனைவரிடமும் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். அதிகாரத்தை கீழிருந்து கட்டமைப்பதாகும்.

இந்த அதிகார குழுக்கள் எப்போது உருவாக்கப்படுகின்றன? புரட்சியின் தொடக்கத்திலிருந்து, கட்சிக்கான குழுக்களை உருவாக்குவதிலிருந்து இது தொடங்குகிறது. அப்படியானால், அப்போது அதிகாரத்திலிருக்கிற சுரண்டும் வர்க்கம் இதை எப்படி பார்க்கும்? முளையிலேயே அழித்துவிட துடிக்கும். என்றால் இந்த குழுக்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது? இரகசிய நடவடிக்கைளின் மூலம்தான் பாதுகாக்கப்பட்டது.

இரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் இரகசிய நடவடிக்கைகள் குறித்து நமக்கெல்லாம் ஒரு உண்மை நன்கு தெரியும்! புரட்சியின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அது வெற்றி அடைகிற தருவாயில் கூட தோழர் லெனின் வெளியேதான் வாழ முடிந்தது. அந்த நேரத்தில் கட்சி கட்டுவதிலிருந்து, அதை காப்பாற்றி உறுதிபடுத்துகிறது வரைக்குமான நேரடிப் பணிகளில் அதிகமாய் ஈடுபட்டது தோழர் ஸ்டாலின்தான்.

புரட்சிகர இரசியா என்பது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கொண்டது மட்டுமல்ல, அது பல்வேறு தேசிய இனங்களையும் கொண்டதாகும். “தேசிய இனங்களுக்கிடையிலான வெறுப்பும் பகையும் அவ்வளவு எளிதாக தீர்ந்துவிடாது. அதற்கான வரலாற்றுக் காரணங்கள் அவ்வளவு இருக்கின்றன” என்று தோழர் லெனின் உறுதியோடு சொல்கிறார். அவ்வளவு வெறுப்புகளுக்கிடையிலான தேசிய இனங்களை புரட்சியில் இணைத்ததில் தோழர் ஸ்டாலினின் வரலாற்றுப் பாத்திரம் சிறப்புமிக்கது. தேசிய இனங்கள் குறித்த அவரின் கோட்பாடு என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனடிப்படையில்தான் சுயநிர்ணய உரிமை என்கிற அறிவியல் வழிமுறை மதிப்புமிகுந்ததாக மாறியது.

எனவே, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கு விதையான கட்சி கட்டுவதில், அதுவும் பல்வேறு தேசிய இனங்களை அணிதிரட்டுவதில் என்று ஸ்டாலினின் வரலாற்றுப் பாத்திரம் மகத்தானது. மார்க்சியம் என்பது நூல்களுக்குள் இல்லை, அது நடைமுறைக்கானது என்று உணர முடிகிறவர்களுக்குத்தான் தெரியும் ஸ்டாலினை கைவிடுவதென்பது புரட்சிகர நடைமுறையை கைவிடுவதாகும் என்ற உண்மையும், நடைமுறையை கைவிட்டு விட்டால் மார்க்சியம் செல்லா காசுதான் என்கிற உண்மையும்.

இப்போது தொடங்கிய இடத்துக்கு வருவோம். நாம் ஏன் தொடக்கத்தில் பகட்டுக்காரர்களிடமிருந்து விலகியிருக்கச் சொன்னோம்? காரணம், பகட்டுக்கும் பாட்டாளிவர்க்க நடைமுறைக்கும் ஒட்டுமில்லை,உறவுமில்லை என்பதால்தான்.

திருப்பூர்.குணா.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *