காங்கிரஸ் ஆட்சியின் Operation Green Hunt முதல் பாஜக ஆட்சியின் Operation Kargar வரை
ஆதிவாசிகளின் குரல்
ஆதிவாசிகளின் கவிதை இப்படி இருக்கும்:
“கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே
நாங்கள் இங்கே இருந்தோம்.
நாங்கள் பிறந்து
ரொம்ப காலத்திற்குப் பிறகுதான்
கடவுள்கள் பிறந்தார்கள்.
மனிதர்களின் மத்தியிலிருந்துதான்
அவர்கள் பிறந்தார்கள்.
நாங்கள்
கடவுள்களுக்கு
முன்பிறந்தவர்கள்”
இதை இப்போது சொல்லக் காரணம் இருக்கிறது. இந்த நாட்டின் பூர்வகுடிகள், இந்த நாட்டின் மண் வளத்தையும் மனிதவளத்தையும் கட்டிக் காப்பவர்கள் இன்று வளர்ச்சி என்ற பெயரில் வேட்டையாடப்படுகிறார்கள்.
Operation Green Hunt முதல் Operation Kargar வரை
காங்கிரஸ் அரசு Operation Green Hunt என்ற பெயரில் நக்சல்களை வேட்டையாடியது. இப்போது Operation Kargar என்ற பெயரில் பாஜக அரசு நக்சல்களை வேட்டையாடுகிறது. இந்த இரண்டு ஆப்ரேஷனும் வனப்பகுதியில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டி அதைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்து மண்ணின் மக்களையே அகதியாக மாற்றும் திட்டம் மட்டுமே.
ஊடகத்தின் மௌனம் – ஒரு சோகமான உண்மைக்கதை
பெரும்பாண்மையான மக்களுக்கு ஆதிவாசிகள் எந்த விதமான ஒடுக்குமுறைகளைச் சந்திக்கிறார்கள் என்பது தெரியாமலே இருக்கிறது. இங்குத் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கூட ஓரளவுக்குச் செய்தி விவாதங்களுக்குள் வருகின்றன. ஆனால் ஆதிவாசிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எந்தச் செய்தி சேனலிலும் எந்தப் பத்திரிக்கையிலும் ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வருவதில்லை.
ஒரு சில சமூக செயற்பாட்டாளர்கள், ஒரு சில செய்தியாளர்கள் மட்டுமே ஆதிவாசிகள் பற்றிய செய்திகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அவர்களும் இந்தக் கார்ப்பரேட் அரசாங்கங்களால் விரட்டப்படுகிறார்கள். அங்கு தங்கிச் செய்தி சேகரிக்க முடியாத அளவுக்குக் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையும் துணை ராணுவப்படையினரும் பத்திரிக்கையாளர்களை ஒடுக்குகின்றன.
வளம் நிறைந்த மாநிலம் வறுமையில் மக்கள்
ஆதிவாசிகளின் மீது அதாவது நம் சொந்த நாட்டு மக்கள் மீது ஒரு அறிவிக்கப்படாத போரை Operation Kargar மூலம் இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் கனிம வள உற்பத்தியில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட முப்பதாயிரம் கோடி வருமானம் இருக்கும். இரும்பு மற்றும் தகரம் போன்ற பொருட்கள் இருப்பில் நாட்டில் மூன்றாவது பெரிய மாநிலம். இந்தியா தயாரிக்கும் ஒட்டுமொத்த ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்தியாவில் நிலக்கரி அதிகம் இருக்கும் மாநிலத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது சட்டீஸ்கர். ஒட்டுமொத்தமாக நாட்டின் 15 சதவீத கனிம வளங்கள் சட்டீஸ்கர் மாநிலத்திலிருந்து வருகின்றன.
கனிம வளங்களின் விவரம்:
- தகரத்தாது 38%
- Bauxite 20%
- இரும்புத்தாது 18%
- நிலக்கரி 17%
- Dolomite எனப்படுகிற calcium magnesium carbonate 11%
- வைரம் 4%
இவை ஒட்டுமொத்த இந்திய உற்பத்தியில் சட்டீஸ்கர் மட்டும் பங்களிப்பு செய்கிறது.
மாநிலத்தின் சோகமான நிலை:
ஆனால் இந்த மாநிலத்தை இந்திய அரசு எப்படி நடத்துகிறது என்று இந்திய அரசாங்கம் தரும் தரவுகளே சொல்கிறது:
- மனித வளர்ச்சிக் குறியீட்டில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்களில் 26வது மாநிலமாக இருக்கிறது சட்டீஸ்கர்.
- சட்டீஸ்கரில் மூன்றில் ஒரு வீட்டிற்குத்தான் குடிநீர் வசதி உள்ளது.
- சட்டீஸ்கர் வறுமைக் குறியீடு நாட்டின் சராசரியிலிருந்து இரண்டு மடங்கு அதிகம்
மூன்றில் ஒரு சட்டீஸ்கர் குழந்தை பள்ளிப் படிப்பைக் கைவிடுகிறது
40% குழந்தைகள் வளர்ச்சி குன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள்
இப்படி வளங்கள் நிறைந்த மாநிலத்தை இந்தியாவின் ஆளும் வர்க்கம் எவ்வளவு கேவலமாக நடத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் பொதுச்சமூகம் விவாதிக்கவே இல்லை. இந்தியாவின் நான்காவது தூணான பத்திரிக்கைகள் அமைதி காக்கின்றன.
கார்ப்பரேட் சூறையாடல்
இந்தக் கனிம வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கும் இந்திய கார்ப்பரேட்களுக்கும் கூறுபோட்டு விற்க, 2003 இல் இருந்து 2018 வரை மட்டும் 272 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுமார் $16.5 billion முதலீடு வரும் என்று போடப்பட்டது. பெரும் மக்கள் போராட்டங்கள் இருந்ததால், அதில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கெடுபிடியில் போடப்பட்டது.
அமித்ஷாவின் அறிவிப்பும் நக்சல் பிரச்சனையும்
இந்தப் போராட்டங்களையும் மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்கா உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்கிறார்: “மார்ச் 31-க்குள் இந்தியாவை நக்சல் இல்லா நாடாக மாற்றுவேன்” என்று.
நக்சல்கள் ஏன் உருவாகிறார்கள்? தன் சொந்த நாட்டு மக்களையே ஒடுக்கும் பண்ணையார்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தங்களுடைய அதிகாரபலத்தை ஏழைக் கூலி விவசாயிகளிடமும் ஆதிவாசி மக்களிடமும் பயன்படுத்தும் போது தான்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் அல்லது வெளிநாடுகளில் வாங்கும் துப்பாக்கிகள் எதிரி நாட்டு ஆட்களைச் சுட பயன்படுத்தப்படுகிறதோ இல்லையோ, சொந்த நாட்டு மக்கள் மீது மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாவோயிஸ்ட் இயக்கத்தின் பின்னணி
கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா மாவோயிஸ்ட் உடைய ஆயுதப்படைதான் PLGA எனப்படுகிற பீப்பிள்ஸ் லிபரேஷன் கொரில்லா ஆர்மி. இது இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு.
நக்சல்பாரி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு இடத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இந்திய-நேபால் எல்லையில் நக்சால்பரி பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம் கோடியாரி. நக்சல்பாரி எழுச்சியின்போது இந்தக் கிராமம் புரட்சி நடவடிக்கைகளில் மையமாக இருந்தது.
மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கிட்ட தட்ட மாவோவை ஒரு கடவுளாகவே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த குழுக்களுக்கு ஒரு சில பரிந்துறைகளை கொடுத்தது.
1) மாவோவின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய எழுத்துகளை இந்திய நிலைமைகளுக்குப் பொருத்துவது ஏற்புடையதல்ல.
2) சீனாவின் தலைவர் எங்கள் தலைவர் என்று நீங்கள் கூறுவது தவறாகும். நாம் இருவரும் சகோதரக்கட்சிகள். ஒரே கட்சியல்ல.
3) விவசாயிகள் அரசியல் அதிகாரத்துக்கு மட்டுமே போராட வேண்டும், நிலம் என்பது பொருளாதாரப் பிரச்சினை என்ற உங்கள் பார்வை சரியல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகும்
4) நீங்கள் குறிப்பிடும் தனிநபர் அழித்தொழிப்பு என்பது கெரில்லா யுத்தம் அல்ல.
5) வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்லர் என்பது போன்ற உணர்ச்சிகரமான முழக்கங்கள் சரியல்ல.
Operation Kargar – மனித உரிமை மீறல்கள்
“Operation Kargar” என்ற பெயரில் சட்டீஸ்கர் பாஸ்டர் மாவட்டத்தில் நடப்பது மனித உரிமைக்கு அப்பாற்பட்ட செயல்கள். மக்கள் வசிக்கும் பகுதிகளில் கேம்ப் என்ற பெயரில் ஒரு லட்சம் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதிநவீன ஆயுதங்கள், Drones என்று ஒரு எதிரி நாட்டுடன் சண்டையிடும் அளவுக்கு ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கிறது பாஜக அரசு.
ஏற்கனவே வேறு இடங்களில் இதே போல காவல்துறை , துணை ராணுவம் குவிக்கப்பட்ட இடங்களில் எப்படியான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பது நமக்குத் தெரியும்.
உதாரணத்திற்கு: காஷ்மீர், மச்சா, Indravelli Massacre, Hashimpura Massacre, கூடங்குளம் வன்முறை என்று பல.
பொதுமக்களுக்கு பாதிப்புகள்
நம்முடைய பொதுப் புத்தியில் ஒன்று பதுங்கியிருக்கிறது: “காவல்துறை உங்கள் நண்பன்”, “ராணுவ வீரர்கள் நம் எல்லைக் காக்கும் சாமிகள்” என்று. ஆனால் உண்மையோ நிலையோ மிகவும் கொடூரமான விசங்களை ககாட்டியுள்ளன. தன் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிப்பதும், பச்சிளம் குழந்தை, பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் வேட்டையாடுவதும் என்பது பாஸ்டர் மாவட்டத்தில் தினந்தோறும் நடக்கும் ஒன்று.
பல பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுச் சாவடிக்கப்படுகின்றனர். பாஸ்டர் மாவிலப் பெண்கள் சொல்வது: “எங்களைச் சுட்டுக் கூடக் கொன்றுவிடுங்கள். தயவுசெய்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை மட்டும் செய்யாதீர்கள். இந்தக் கொடுமைகளை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்றார்கள்.
ஆதிவாசிகளின் கோரிக்கை
அங்கு உள்ள ஆதிவாசிகள் கேட்பது ஒன்றே ஒன்றுதான்: “இந்த ஊருக்கு ரோடு போடுங்கள், பள்ளிக்குச் செல்ல; எங்க ஊருக்கு ரோடு போடுங்கள், சந்தைக்குச் செல்ல; எங்க ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதாருங்கள். ஆனால் நீங்கள் ரோடு போடுவது எங்கள் நிலங்களைப் பறிக்க, எங்கள் பண்பாட்டைப் பறிக்க, எங்களை அகதிகளாக மாற்றத்தான்.”
நக்சலிசம் மாவோயிசம் சாகசவாதத்தின் விளைவுகள்
நக்சலிசம் மாவோயிசம் இந்த இரண்டும் மக்களைக் காக்க வந்ததாக எண்ணிக்கொண்டு மக்களை பலிகொடுக்கத்தான் செய்திருக்கிறது. காரணம், இந்திய நிலைமைகளைச் சரியாக மார்க்சிய ரீதியில் ஆராயாமல் சாகசவாதத்தில் இறங்கியதால்தான்.
CPI (ML) சாரு மஜுந்தார் ஒரு முறை சொன்னார்: “வர்க எதிரிகளின் ரத்தத்தைக் கையில் நனைக்காதவன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியாது” என்று கூறினார். அங்கே தொடங்கியது அவர்கள் சாகசவாதம். மாவோவைத் தங்களுக்கு ஏற்றார்போல வளைத்துக்கொண்டு உடனடி புரட்சியில் இறங்கினார்கள்.
மாவோவின் உண்மையான கருத்து
மாவோ சொன்னது: “நாம் கம்யூனிஸ்ட்கள் விதைகள் போன்றவர்கள், மக்கள் மண் போன்றவர்கள். நாம் எங்குச் சென்றாலும், நாம் மக்களுடன் ஒன்றிணைய வேண்டும், அவர்கள் மத்தியில் வேரூன்றி மலர வேண்டும்” என்று கூறுவார். ஆனால் நக்சல் பாரி இயக்கத்தின் போக்கு மக்களிடம் விலகித் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டது. மக்களிடம் செல்லாமல் காட்டிற்குச் சென்றது. நக்சல்பாரி இயக்கங்கள் மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது.
பல பிரிவுகளாகச் சிதறல்
நக்சல் இயக்கம் ஆரம்பித்த 5 ஆண்டுகளில் பல குழுக்களாக, பல பிரிவுகளாக மாறிப்போனதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த அராஜகவாதப் போக்கு மட்டுமே. இந்தியாவைப் பற்றிய, இந்திய அரசைப் பற்றிய எந்த விதமான ஆய்வும் இல்லாமல் குருட்டுத்தனமான போக்கில் “ஆயுதம்தான் தீர்வு” என்று போன சாகசவாதிகளாக மாறினர்.
காலம் செல்லச்செல்ல தீவிர இடதிலிருந்து தீவிர இடதுசாரி எதிர்ப்பு அராஜகவாதத்தில் சுருங்கினர். 1970 செப்டம்பரில் CPI (ML) முதல் மாநாட்டில் சாரு மஜூந்தார் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971-இல் சத்திய நாராயண சிங் குழு தனியாகப் பிரிந்து வந்து அவர்கள் ஒரு CPI (ML) பிரிவைத் தொடங்கினர். அதன் பின்பு Ashin Chatterjee மற்றும் சந்தோஷ் ராணா பல்வேறு காரணங்கள் சொல்லிப் பிரிந்து வந்தார்கள். 1972 சாரு மஜுந்தார் இறந்த பிறகு இன்னும் பல குழுக்களாக மாறியது. சாரு மஜுந்தார் பிரிவினர் என்று சில குழுக்களும், சாரு மஜுந்தார் எதிர் பிரிவினர் என்று சில குழுக்களும் பிரிந்தார்கள்.
சாரு ஆதரவு குழுக்கள்:
- CPI (ML)-Vinod Mishra group
- CPI(ML)-People’s War group
- CPI(ML)-CRC(Venu group)
- CPI(ML) Second Central Committee groups (Pro Lin Biao)
சாரு எதிர்ப்பு குழுக்கள்:
- CPI(ML)-SN Singh group
- CPI(ML)-C. Pulla Reddy group
- CPI(ML)-COC groups
- OCCR (Kanu Sanyal)
- UCCRI (ML)-(Nagi Reddy DV Rao)
- Maoist Communist Center
- Liberation Front
- CPI(ML)-Central Team
என்று சிதறிப்போனது. அதனால் மாவோயிஸ்ட்களால் மக்களை ஆங்காங்கே ஒரு சில கிராமத்தில் அணி திரட்ட முடிந்ததே தவிர, ஒட்டுமொத்தமாக அணி திரட்ட முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
கடந்த இருபது ஆண்டுகளாக சுமார் 180 மாவட்டங்களில் இருந்த மாவோயிஸ்ட்கள் இப்போது சுருங்கி கிட்டத்தட்ட வெறும் 50 மாவட்டங்களுக்குள் சுருக்கப்பட்டனர் அல்லது சுற்றி வளைக்கப்பட்டனர் என்று சொல்லலாம்.
Operation Karga நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை அழைப்பு
“April 2nd 2025 அன்று CPI Maoist மத்திய குழு “Operation Karga” நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு மாவோயிஸ்ட்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தது”. CPI Maoist செய்தி தொடர்பாளர் அபய் குறிப்பிடும்போது, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிஷா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த 15 மாதங்களில் மட்டும் 400 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
மாவோயிஸ்ட் கொலைகளின் புள்ளிவிவரங்கள்
South Asia Terrorism Portal தகவலின்படி, “2025 இல் இதுவரை மட்டும் 140 மாவோயிஸ்ட்களும், 2024 இல் 235 மாவோயிஸ்ட்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்”. இவ்வளவு கொலைகளும், இவ்வளவு மனித உரிமை மீறல்களும் அனைத்தும் கனிம வளத்திற்கும் அதைச் சுரண்டி பெரும் லாபத்தை அடையப் போகும் காரப்பரேட் நிறுவனங்களுக்காகத் தான்.
ஐ.நா சபையின் இரட்டை நிலைப்பாடு
ஐக்கிய நாடுகள் சபை (UNO) மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வனத் தினமாக அனுசரித்து, காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், மாறிவரும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறது. ஆனால் UNO ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அங்கு பல ஆண்டுகளாக அந்தக் காட்டைக் காப்பாற்றிவந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்கள்தான் காடுகளைக் காப்பவர்கள் என்று அங்கீகரிக்க வேண்டும். இந்த மாதிரி மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது கேள்வி கேட்க வேண்டும். ஏகாதிபத்திய நாடுகளின் உள்ளங்கையில் இருக்கும் UNOவிற்கு இதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.
மோசமடையும் பஸ்தார் மாவட்ட நிலைமை
நாளுக்கு நாள் Bastar மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அமித் ஷா மாவோயிஸ்ட்கள் இன்னும் கொஞ்சம் நாளில் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்று சொல்லும்போது, அப்பாவி ஆதிவாசி மக்கள்தான் பெருந் திரளாகக் கொல்லப்படுகின்றனர்.
கனிமவள ஏலமும் ஆதிவாசி பகுதிகளும்
முதல்கட்ட ஏலம் நவம்பர் 2023இல் நடைபெற்றதாக சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. “சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குறிப்பிடும்போது, கிராஃபைட், tungsten, vanadium, cobalt போன்ற வளங்கள் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சுமார் 30 லட்சம் கோடி அளவிற்கு கனிம வளங்கள் எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்”.
இந்த மாநிலங்களின் பெயர் சொல்லும்போதே நமக்குத் தெரிகிறது, இவை அனைத்தும் ஆதிவாசி மக்கள் பரவலாக வாழும் மாநிலங்கள் என்று. இதில் சத்தீஸ்கரில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கோடி வருவாய் மத்திய அரசு பெற்றிருக்கிறது.
மதுரையில் tungsten திட்டத்திற்கு எதிரான போராட்டம்
மதுரையில் tungsten எடுக்கும் திட்டம் இப்போது பெரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களாலும், இடதுசாரி மற்றும் ஜனநாயக அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடியதாலும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
மாவோயிஸ்ட்களின் அரசியல் அணுகுமுறையின் குறைபாடுகள்
மாவோயிஸ்ட்கள் மக்களிடம் துப்பாக்கி கொடுத்தார்களே தவிர, அவர்களை அரசியல்படுத்த முயற்சிக்கவில்லை. துப்பாக்கி முனையில் சுதந்திரம் கிடைக்கும் என்ற அராஜகவாதக் கருத்தைப் பரப்பி, மோசமான அரசியல் முடிவுகளால் ஒரு பெரும் ரத்த ஆறு ஓட அவர்களும் காரணமாகிவிட்டனர்.
காங்கிரஸ்-பாஜகவின் ஒரே பொருளாதாரக் கொள்கை
காங்கிரஸ்-பாஜக வேறு வேறு கட்சிகளாகத் தோன்றினாலும், பொருளாதாரக் கொள்கையில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு அடிபணிந்த அரசுகளாகத்தான் இருக்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள கார்பொரேட் முதலாளிகளுக்கும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சொந்த நாட்டு மக்களைக் கொன்றுகுவிக்கிற ஒரு வேலையைத்தான் இரண்டு அரசுகளும் செய்கின்றன.
We will liberate the country from the Maoist movement and hand over the country’s wealth to the india என்று மத்திய அரசு சொல்கிறது, ஆனால் இன்று இந்திய அரசு யாருக்கான அரசாக இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும் Hindutuva – corporate கூட்டு களவாணி ஆக இருக்கிறது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் 77 சதவீத செல்வங்களை வைத்து இருக்கிறார்கள் என்று OxFam அறிக்கை சொல்கிறது. இந்திய மக்களை இந்திய முதலாளிகளுக்கும் சர்வதேச முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்று கொண்டு இருக்கிறது எதேச்சதிகார பாஜக அரசு.
சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், இன்று ஆதிவாசிகள் தங்கள் அடையாளம் மற்றும் உரிமைகள் மீது மிகப்பெரிய தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். சுரங்கங்கள், அணைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் போன்றவற்றின் பெயரால்.
ஆதிவாசி மக்களின் நிலங்கள், நீர், காடுகள் மற்றும் இயற்கை வளங்களை கையகப்படுத்துவதற்கு கார்ப்பரேட் அரசு சார்பு கொள்கைகள் உதவுகின்றன. மத்திய இந்தியா முழுவதும், வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பழங்குடியினர் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இந்த தருணத்தில் அனைவருக்கும் ஒன்றை நாம் நியாபகம் படுத்த வேண்டும் இந்தியாவின் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒரு பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர்.
Operation Black Forest:
ஏப்ரல் 21,2025 அன்று Operation Black forest ஆரம்பிக்க பட்டது, முற்று முழுவதுமாக சட்டிஸ்கர் ஆரம்பித்து தெலுங்கானா வரை உள்ள அனைத்து நக்சல்பாரிகளையும் கொன்று குவிக்க ஆரம்பிக்கப்பட்டது இந்த ஆபரேஷன்.
என்ஜினீயர் நம்பலா கேஷவ் ராவ்(அ) பசவுராஜு கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா மாவோயிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் மற்றும் 27 நக்சல்பாரிகள் மே 21ஆம் தேதி கொல்லப்பட்டார்கள். பிரதமர் மோடி ஆரம்பித்து பல ஊடகங்கள் வரை இச்செய்தியை கொண்டாடி மகிழ்ந்தனர். தாங்கள் சரணடைய தயார் என்று சொன்ன பிறகும் இப்படியாப்பட்ட தாக்குதலை இந்திய ஆளும் வர்கம் செய்து இருக்கிறது.
பேச்சுவார்த்தை தான் ஓரே தீர்வு:
இதை கண்டித்து அனைத்து இடது சாரி சக்திகளும் CPI, CPI(M), CPI(ML) ஒரே குரலில் இந்த மனித உரிமை மீரலை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர், கடந்த ஜூன் 2 முதல் மாநிலம் தழுவிய அளவில் போராடி கொண்டு இருக்கின்றனர்.
நக்சல்பாரிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் இந்திய அரசு ஆதிவாசி மக்களை கொன்று குவிக்கிறது.இந்த மனித உரிமை மீரலை தடுக்கவும் ஆதிவாசிகளின் காடுகள் ஆதிவாசிகளுக்கே சொந்தம் என்ற முழக்கத்தை ஜனநாயக சக்திகள் முன்னெடுக்க வேண்டும். ஜனநாயக சக்திகள் வாய் மௌனித்து இருக்கும் இந்நேரத்தில் இந்த பிரச்சரத்தை இடது சாரிகள் இந்த முழுக்கத்தை பிரச்சாரம் மூலமும் போராட்டங்கள் மூலமும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இன்று ஆதிவாசிகள் மீது நடத்த படுகிற தாக்குதல் என்பது அத்துடன் நிற்காது நாளை அந்த காடுகளை, அந்த கனிம வளங்களை அழித்து ஒழித்த பின் கிராமங்கள் பக்கமும் நகரங்கள் பக்கமும் தான் இந்த அரச பயங்கரவாதம் திரும்பும். ஆதிவாசிகளையும் காடுகளையும் காப்பாற்றுவது என்பது நமது கடமை. அதை ஜனநாயக போராட்டங்கள் மூலமாக பெரும் திரலான மக்களை அரசியல் படுத்துவதன் மூலமே நிகழும்.
“ஆதிவாசி மக்களின் முக்கிய முழக்கம் “ஜல், ஜங்கல், ஜமீன்” (जल, जंगल, जमीन), அதாவது “நீர், காடு, நிலம்”. அதை அவர்களுக்கு மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல். அதை ஆதிவாசி மக்களுக்கு கிடைக்க பெரும் திரலான மக்கள் இயக்கம் தான் நம் முன் இருக்கும் ஒரே தீர்வு”.
கட்டுரையாளர் தோழர் குத்தூசி
References:
⚫ நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல ( இரா. முருகவேள்)
⚫ Operation Kagar (The combined assault of corportaization, militarization and Hindutuva, Revolutionary writer’s association (Virasam)
⚫ நக்சல்பாரி கதைகள் (இரா. பாரதி நாதன்)
⚫ Maoist Road Blog Spot.
⚫ Blood on our Hands, Cover Story Frontline.