Tamil Marx

இளைஞர்களும் இடதுசாரிகளும்

என் கை கொடியை பிடிக்குமானால்! அது செங்கொடி மட்டுமே! – இசக்கியப்பன்

என் கை கொடியை பிடிக்குமானால்! அது செங்கொடி மட்டுமே! – இசக்கியப்பன்
  • PublishedMarch 18, 2025

உழைக்கும் வர்க்கங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெயர் இசக்கியப்பன் நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவன். இப்பகுதி ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்ததால் என்னவோ, எனக்குள்ளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் தோழர்களின் மீது ஒரு பற்று சிறுவயதில் இருந்தது.

மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக வெளியூரில் விடுதியில் தங்கி படிக்கும் பொழுது, அங்கு மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது, பொழுது போக்கிற்கு இடம் கிடையாது, படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று ஆசிரியர்கள் தலையைத் தட்டி பாடம் நடத்துவார்கள். விடுதிக்கு வந்தாலும் படிப்பு மட்டும்தான், விளையாட சென்றாலும் படிக்கிற பையனுக்கு விளையாட்டு எதற்கு என்று மட்டம் தட்டுவார்கள்.

மாதம் இருமுறை எனது தாயார் என்னை விடுதியில் பிள்ளை எப்படி இருக்கிறான் என்று பார்க்க வருவார். அப்பொழுது என் அம்மாவுடன் பக்கத்து ஊரில் உள்ள டவுன் வரைக்கும் சென்று வருவேன். வரும்பொழுது ரூ. 20 ரூபாய் மதிப்புள்ள கதை புக்குகள் வாங்கி வருவேன் ( பரமார்த்த குரு கதைகள், விக்ரமாதித்தன் கதைகள் இதுபோல ). இதுதான் மற்ற ஓய்வு எடுக்கும் போது பொழுதுபோக்கிற்காக படிக்கும் புத்தகங்கள்.

அப்பொழுதுதான் தந்தை பெரியார் ஆயிரம் வினா விடைகள் என்ற தலைப்பில் ஒரு போட்டி நடந்தது (எனது ஆறாம் வகுப்பில்) அதில் கலந்து கொண்டு பரிசும் பெற்றேன் இப்பொழுதும் அந்த சர்டிபிகேட் என்னிடம் இருக்கிறது, இதுதான் அரசியல் ஆர்வம் தூண்ட முதல் காரணம்…

காலம் இப்படி செல்லவே எனது 10 வகுப்பில் எனது பெரியப்பா மகன் “ராஜா திரவியம்” எனக்கு அரசியல் ரீதியாக கலந்துரையாட கிடைத்த முதல் நபர். அப்பொழுதுதான் தூத்துக்குடியில் 2018 மே மாதங்களில் ஸ்டெர்லைட் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணன் ராஜா அவர்களும் இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டதை என்னிடம் பகிர்ந்துள்ளார்.

அதுபோக எனக்கு நிறைய புத்தகங்கள் என்னை பார்க்கும் பொழுது பரிசளிப்பார், எனக்கு அவர் கொடுத்த முதல் புத்தகம் கோவில்பட்டி எழுத்தாளர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய அரசியல் எனக்கு பிடிக்கும் என்ற ஒரு சிறு புத்தகம்.

இந்த சிறிய புத்தகம் தான் நான் இந்த சமூகத்தை இதுவரை பார்த்த பார்வையில் இருந்து, மாற்றிப் பார்க்க வைத்தது, அரசு என்றால் என்ன ? அரசு இயந்திரங்கள் என்றால் என்ன? என்ற கேள்விகளை என்னுள் எழுப்பியது.

நான் படிக்கும் பொழுதே குடும்ப பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விக்னேஷ் ஹோட்டல் என்ற இரவு நேர கடைக்கு பகுதி நேரமாக வேலைக்கு சென்று கொண்டிருந்தேன்.

அங்குதான் அருமை தோழர் ஜோதிபாசு அவர்களை சந்தித்தேன். அந்த இரவு நேர ஹோட்டலில் தான் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இயக்க வேலைகள் பற்றி கலந்துரையாடுவார்கள், அதை நான் உன்னிப்பாக கவனித்து வந்தேன், எனக்கும் ஏற்கனவே இடதுசாரி தோழர்கள் மேல் இருந்த மதிப்பு, அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது.

2022 டிசம்பர் 3 தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று முனைகளில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். தோழர் ஜோதிபாசு என்னை அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். நானும் மிக ஆர்வமாக அந்த நடை பயணத்தில் கலந்து கொண்டேன்.

இரண்டு நாள் நடைபெற்ற அந்த நடை பயணம், இரவு நேரங்களில் தோழர்களோடு மரத்தடியில் தங்கியது, ஒன்றாக உணவருந்தியது, காலையில் மக்களிடையே பிரச்சாரங்கள் இப்படி அந்த இரண்டு நாள் மிகவும் அழகாக புரட்சிகரமாக இருந்தது. மேலும் மேலும் இயக்க வேலைகள் பார்க்க என்னை உற்சாகமூட்டியது.

அதற்கடுத்து தொடர்ந்து கட்சி எடுக்கின்ற வெகுஜன மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது, வாலிபர் சங்கம் நடத்துகின்ற போராட்டங்களை கலந்து கொள்வது இன்று தொடர்ந்து இயக்க வேலைகள் தோழருடன் இணைந்து செய்வது நன்றாக இருந்தது. ஒரு சில மாதங்களிலேயே எங்கள் பகுதியான அத்தை கொண்டான் சாலை வசதிகளாக கையெழுத்து இயக்கம் எனது தலைமையில் நடைபெறும் அளவுக்கு இயக்க வேலைகளை உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்…

வாலிபர் சங்கத்திற்கு வந்த பிறகு தான் ரத்ததானம் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது, ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு தோழருக்கு முதன்முறையாக ரத்ததானம் அளித்தேன், இன்று (16-03-2025) பொதுப் பாதைக்காக போராடிய அருமை தோழர் கோவில்பட்டி அமல்ராஜ் அவர்களது நினைவு தின ரத்ததான முகாமில் ரத்ததானம் அழித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது…

பொதுப் பாதைக்காக எங்கள் தோழர் சிந்திய ரத்தத்தை…. அவரது நினைவு தினத்தில் ரத்த தானமாக மக்களுக்கு வழங்கியதில் ஆர்ப்பரிய மகிழ்ச்சியாக இருந்தது.

என் கை கொடியை பிடிக்குமானால் அது வாலிபர் சங்கத்தின் வெண்கொடியையும், அமல்ராஜ்,அசோக் போன்ற தோழர்களால் சிவந்த செங்கொடியாக மட்டும்தான் இருக்கும்.

நன்றி !!

தோழர் இசக்கியப்பன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *