Tamil Marx

தமிழ் நாடு தொழிலாளர் போராட்டங்கள்

தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்

தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்
  • PublishedMarch 4, 2025

TNSTC ஊழியர்கள் கூறுகையில், தனியார் மினிபஸ்கள் மற்றும் பிரீமியம் பஸ்களை ஒப்பந்தம் செய்வது அரசாங்க கண்காணிப்பைக் குறைக்கும், வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் மற்றும் சேவை தரத்தை பாதிக்கும் என்று கூறுகின்றனர்..

2024 தீபாவளியில் தனியார் பேருந்துகள்

தமிழ்நாடு அரசு 2024 தீபாவளியின் போது அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் என்று அறிவித்தபோது, பொதுமக்கள் இந்த முடிவை வரவேற்றனர். விடுமுறை நாளில் உருவாகும் பயணிகள் கூட்டத்தை சமாளிக்கவும், சுமூகமான பயணத்தை உறுதி செய்யவும் வகையில் உள்ளது என இந்த முயற்சியை மக்கள் வெகுவாக பாராட்டினர். ஆனால் இதனுடைய சாதகப் பாதக விளைவுகளை மக்கள் அறியவில்லை. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) 18 ஆண்டுகள் பணியாற்றிய பேருந்து கண்டக்டர் ஜகதீஷ், இது வரவிருக்கும் தனியார் மையம் சார்ந்த விஷயங்களின் ஒரு சுவடு மட்டுமே என தெரிவித்தார்.

மேலும் அப்போது அரசு பேருந்துகளை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை எனவும் தனியார் பேருந்துகள் அதிகமாக இருக்கும் வகையில் அவர்கள் கவனம் செலுத்தினர், அதே நேரத்தில் சில அரசு பேருந்துகள் காலியான இருக்கைகளுடன் இயக்கப்பட்டன,” என்று ஜகதீஷ் ஃப்ரன்ட்லைனிடம் அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.

2024 தீபாவளியின் போது, 430 தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டன. இதில் 327 பேருந்துகள் சென்னையிலிருந்தும், 103 பேருந்துகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இயக்கப்பட்டன.

தனியார் பேருந்துகளால் பாதிப்புகள்

ஜகதீஷ் இந்த பேருந்துகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு நலன்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்த தற்காலிக ஏற்பாடு இறுதியில் அரசு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு நெருக்கடியை உருவாக்க்கும் என்று எச்சரித்தார். மேலும் பேருந்துகள் தரமான நிலையில் இல்லை மற்றும் அதற்கான காப்பீடுகள் (insurence) செய்யப்படுவதில்லை. உட்கட்டமைப்பை சரி செய்தாலே அரசு போக்குவரத்து லாபகரமானதாக இயங்கும். அரசு பேருந்துகளை றும் இருக்கையோடு இயக்கி அந்த வழித்தடங்களை தனியாருக்கு அளிக்கும் போக்கை அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. இருப்பினும், தீபாவளி சமயத்தில் முன்னெடுத்த நடவடிக்கை “வெற்றிகரமானது” என்று  கூறிக்கொண்ட அரசு,  அதே நடவடிக்கையை மீண்டும் அமல்படுத்தியது.

ஒப்பந்த பேருந்துகளை 953 ஆக அதிகரித்தது. இதில் 498 பேருந்துகள் சென்னையிலிருந்தும், 455 பேருந்துகள் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இயக்கப்பட்டன.  தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கான கட்டணம் ஒரே மாதிரியாக இருந்தாலும், போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த மாற்றத்தின் நீண்டகால தாக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். தொழிற்சங்கங்கள் ஒப்பந்த தனியார் பேருந்துகளுக்கான உயர் செயல்பாட்டு செலவாக கி.மீ.க்கு ரூ.51.25 ரூபாய் கொடுப்பதை  விமர்சித்துள்ளன. அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு அரசின் முயற்சிகள்

ஃப்ரன்ட்லைனுடன் இதழுக்கு பேட்டி கொடுத்த அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் கே. பானிந்திரா ரெட்டி ,  “ஒரு மாநில போக்குவரத்துக் கழகம் ஒரு பேருந்தை இயக்கும்போது, 1 கி.மீ.க்கு குறைந்தது ரூ.60 செலவாகும் என்றார். கூடுதல் பேருந்துகளைப் பயன்படுத்தினால், இந்த செலவு கி.மீ.க்கு ரூ.80 ஆக உயரும். முன்பு, ஊருக்குபோகும் மக்கள் பேருந்துக்காக காலை 4 மணி வரை காத்திருப்பார்கள். 2024 தீபாவளி மற்றும் 2025 பொங்கல் ஆகிய விடுமுறை நாட்களில் நாங்கள் ஊருக்கு செலும் பயணிகளின் பேருந்து தேவையை இரவு 1 மணிக்குள் பூர்த்திசெய்துவிட்டோம் என்றார்.

இதே நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த முன்னெடுப்பின் பின் மற்றொரு காரணம் இருப்பதாக வாதிட்டனர். ஒரு பெயர் சொல்ல விரும்பாத MTC தொழிற்சங்க தலைவர் கூறினார்:  கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்தபோது, நெருக்கடியான சூழலில் நகரத்தின் பல டிப்போக்களில் இருந்து MTC பேருந்துகளை விரைவாக மாற்றிவிட முடியும். தற்போது  நகரத்திற்கு வெளியே கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, அவை வருவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. புதிய பேருந்து முனையம் குறித்த பொதுமக்களின் அதிருப்தி ஏற்கனவே அதிகமாக இருப்பதால், அரசு தீபாவளியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு  ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு

திருச்செந்தூரைச் சேர்ந்த ஒரு மாநில போக்குவரத்துக் கழக (STU) ஓட்டுநர் சொன்னார், பழனி போன்ற நகரங்களில் தைப்பூசம் போன்ற விழாக்காலத்தில் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து பேருந்துகள் சிறப்பு தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்த நகரத்திற்கு திருப்பி விடப்படும். போக்குவரத்துக் கழகத்திற்கு திருவிழா கூட்டத்தை நிர்வகிக்கும் விஷயத்தில் கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் சிறப்பு நிகழ்வுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை அமர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளன என்று அரசு அதிகாரிகளும் சொல்லியுள்ளனர்.

மக்கள் கூட அதனை விரும்பலாம், இது போக்குவரத்து கழகத்திற்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தும். பெண்களுக்கான இலவச பயணத்திட்டத்தால் பேருந்து கட்டண வசூல் குறைகிறது. இதற்கு கிளை மேலாளர்கள் தொழிலாளர்களை கேள்வி கேட்டு அழுத்தம்  வருகின்றனர் என்றும், தனியார் மினி பஸ்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் லாபமற்ற MTC பேருந்து பாதைகள் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.  தற்போது சென்னையில் MTC பேருந்துகள் நாளொன்றுக்கு சராசரியாக 30 இலட்சம் பயணிகளுக்கு சேவை செய்கின்றன

சென்னையில் உள்ள சில பாதைகள் சாதாரண பேருந்துகளுக்கு மிகவும் குறுகலானவை. இவற்றை நாங்கள் கண்டறிந்து அங்கு மினிபஸ்களை இயக்குவோம். தனியார் மினிபஸ்கள் சேவையற்ற பாதைகளில் மட்டுமே இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை

வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால் தனியார் நிறுவனங்கள் பேருந்துகளை இயக்க மாட்டார்கள். அதே போல அவர்கள் இயக்கினால் தொழிலாளர்களுக்கு வேலையில் பாதுகாப்பு இருக்காது. மேலும் முக்கியமான பாதைகளில் பேருந்துகள் இயக்கவில்லை என்றால் பயணிகளால் அவர்களை கேள்வி கூட கேட்க முடியாது என தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருண்மொகம் ராமலிங்கம் ( AITUC)  தெரிவித்தார்.

இணைத்து தனியார்மயமாக்கும்  DMK – AIADMK

கடந்த இருபது ஆண்டுகளாக DMK மற்றும் AIADMK அரசுகள் பொதுச் சேவைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சி தான் இதுவும். உதாரணமாக சென்னையில் திடக்கழிவு மேலாண்மையை தனியார்மயப்படுத்தும் சமீபத்திய நடவடிக்கை அதற்கு உதாரணமாகும். இது இந்தியா முழுவதும் நவ தாராளமய பொருளாதார கொள்கையை கடைபிடிக்ககூடிய ஆட்சிகளின் வெளிப்பாடாகும்.

2002-ல், AIADMK அரசு மாநில போக்குவரத்துக் கழகங்களை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்தது, ஆயிரக்கணக்கான தொழிலளர்கள் வேலையிழக்கும் அபாயம் உருவானது.

2002-03 பட்ஜெட்டில், நிதியமைச்சர் சி. பொன்னையன் STU-களின் நிதி நிலை பற்றி குறிப்பிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகள் மற்றும் சேவைகளை தனியார்மயமாக்க திட்டமிட்டார். ஆனால் இந்த திட்டம் நிறைவேறவில்லை.  2018-ல், AIADMK மீண்டும் தனியார்மயமாக்கல் முயற்சிகளை முன்னெடுத்தது. ஒரு GO மூலம், ஊழியர்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கான விதிமுறைகளை நிர்ணயித்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை.  2021-ல், DMK அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு, 2022-ல் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்யும் முயற்சியைத் தொடங்கியது. இது தனியார் மயமாக்கலுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

2023-24 போக்குவரத்துத் துறை கொள்கைக் குறிப்பில், DMK அரசு Gross Cost Contract (GCC) மொத்த செலவு ஒப்பந்த முறையை அறிமுகப்படுத்தியது. இதில் நிதி பற்றாக்குறை உள்ள மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்த அல்லது விரிவுபடுத்த பொது-தனியார் கூட்டு முயற்சிகள் (PPP) மூலமாக ஒரு வழியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டது. GCC-இன் முக்கிய நன்மையாக STU-களின் மூலதனச் செலவு குறைவதைக் குறிப்பிட்டது. இந்த மாதிரியில், STU போக்குவரத்து வலையமைப்பு மற்றும் வருவாய் வசூலை நிர்வகிக்கிறது.

அதே நேரத்தில் தனியார்கள் பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிபவர்கள் என  போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்துகிறது.

கூடுதல் முதன்மை செயலாளர் ரெட்டி கூறியதாவது: 500-க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள் ஏப்ரல்-மே மாதங்களில் வரவுள்ளன. இதில் 100-200 ஏசி பேருந்துகளும்  அடங்கும். இது GCC கீழ் இயக்கப்படும். (அரசுத்தரப்பில்) மின்சார பேருந்துக்கான தொழில்நுட்பம் இன்னும் வளர்சியடையாததால் தான் இங்கு மொத்த செலவு ஒப்பந்த முறையில் தனியாருக்கு வாய்ப்பாக அமைகின்றது.

IC இன்ஜின் பேருந்துகளில் மட்டுமே பயிற்சி பெற்ற தமிழ்நாடு போக்குவரத்து  ஊழியர்கள் இந்த புதிய பேருந்துகளை பராமரிப்பதில் சிரமப்படலாம். மேலும் மின்சார பேருந்துக்கான ஓட்டுநர்களை வழங்குப்போகும் தனியார் நிறுவனங்கள்  மாநில அரசாங்கத்தின் இடஒதுக்கீடுக் கொள்கைகளைப் பின்பற்ற தேவையில்லை.

தனியார்மயமும் நிதி பிரச்சனைகளும்

சிஐடியு உடன் இணைந்த அகில இந்திய சாலை போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவரான  ஆறுமுக நயினார் கூறியதாவது:  “GCC திட்டத்தை , இந்தியாவில் (ஹைப்ரிட் &) எலக்ட்ரிக் வாகனங்களின் விரைவான தத்தெடுப்பு மற்றும் உற்பத்தி  (The Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles in India – FAME)-இந்தியா திட்டத்துடன் இணைத்து பார்க்க வேண்டும்.

மத்திய அரசு 2015-ல் FAME 1 மற்றும் FAME 2 என்ற இரண்டு கட்டங்களில் மின்சார வாகன ஊக்கத்தொகை திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் மின்சார பேருந்துகளை நேரடியாக வாங்காமல், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடகைக்கு எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதை ஆதரித்து AIADMK அரசு 2020-ல் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளை திருத்தியது. புதிய விதி 288 (A) அறிமுகப்படுத்தப்பட்டது. இது தேசியமயமாக்கப்பட்ட பாதைகளில் தனியார் பேருந்துகளை அனுமதிக்கிறது.

2021-ல் DMK அரசு அதிகாரத்துக்கு வந்தபோது, போக்குவரத்துக் கழகங்களில் அதிக ஊழியர்கள் இருந்தனர்.  2023 ஜூனில், போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம்  வாங்கிய லஞ்சப் புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் ஜூனியர் அசிஸ்டண்டுகள் போன்ற பதவிகளுக்கு சட்டவிரோதமாக நியமனங்கள் நடந்துள்ளது எனவும் அதற்காக விண்ணப்பதாரர்களிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2013-க்குப் பிறகு நியமனங்கள் எதுவும் நடக்கவில்லை, என்று தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.  2020 மே மாதம் , COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு ஓய்வூதிய வயதை 58-இலிருந்து 59 ஆக உயர்த்தியது, பின்னர் 2021-ல் 60 ஆக உயர்த்தியது. புதிய வயது கொள்கையின் அடிப்படையில் அதிக ஊழியர்கள்  ( Retirement ) 2022 மே மாதம் ஓய்வு பெற்றனர்.

தொழிற்சங்க தலைவர் நயினார் கூறியதாவது,  2022-ல் அதிகமான ஊழியர்கள் ஓய்வு பெற்றதால் 17,700 காலியிடங்கள் உருவானது. தற்போது மொத்த காலியிடங்கள் 30,000 ஆக உள்ளன.

முதன்மை செயலாளர் கே. பானிந்திரா ரெட்டி காலியிடங்கள் மற்றும் பணி நியமனங்களுக்கு இடையே ஒரு இடைவெளி உள்ளது என கூறினார்.எண்ணிக்கையை நாங்கள் மறுக்கவில்லை எனவும் தற்போது 1,25,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், மேலும் 1,08,000 முதல் 1,10,000 வரை ஊழியர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இயக்கபடாத பேருந்துகள்

தொழிற்சங்கங்கள் கூறியதாவது, தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக முழுமையான எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கப்படவில்லை. பல பேருந்துகள் பராமரிப்பு பணி  செய்வதற்காக நிறுத்தப்பட்டுள்ளன.  இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோட் டிரான்ஸ்போர்ட்டில் ஆண்டுதோறும் 1,000 பேர் ஓட்டுநர் பயிற்சியில் பட்டம் பெறுகிறார்கள். அவர்கள் நிரந்தர வேலைகளில் அமர்த்தப்பட்டால், அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமனம் செய்வது இடைத்தரகர்களுக்கு மட்டுமே லாபம் அளிக்கும்.

2021-22 திருத்தப்பட்ட பட்ஜெட்டை முன் வைத்தபோது, அப்போதைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டது என்னவென்றால்  “COVID-19 தொற்றுநோய்க்கு முன்பே, அரசு பேருந்துகளில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 2010-2011 ல் 20.836 மில்லியனிலிருந்து 2019-20-ல் 13.142 மில்லியனாக குறைந்துள்ளது. அருகிலுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணம் இருந்தும் இது நடந்துள்ளது.  இன்று, பயணிகள் எண்ணிக்கை 17.6 மில்லியனாக உள்ளது (2024-25 கொள்கைக் குறிப்பின்படி). மாநில போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளுக்கான செலவுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன.

4 ஆண்டுகளாக பிரச்சனைகளை சரிசெய்யாத திமுக அரசு

இந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொண்ட போதிலும், DMK அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் இவற்றைத் தீர்க்க போதிய அளவில் எதையும் செய்யவில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

2024 டிசம்பர் மாத CAG, அறிக்கையில், எட்டு STU-களின் தணிக்கையின் அடிப்படையில், 2017-18 முதல் 2021-22 வரை தொடர்ச்சியான நஷ்டங்களைப் பதிவு செய்துள்ளது. இதன் மொத்த நஷ்டம் ரூ.48,478 கோடி. பேருந்து எண்ணிக்கை 22,517-இலிருந்து 20,304 ஆக குறைந்துள்ளது.  தற்போது நஷ்டம் ரூ.70,000 கோடியாக உள்ளது.  2022-ல், செலவு மற்றும் வருவாய் இடையே உள்ள இடைவெளியைப் பற்றி ஆய்வு செய்ய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. ஆனால் அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவில்லை. இந்த இடைவெளி கணக்கீட்டில் ஒரு கிலோ மீட்டருக்கான வருவாய், லிட்டருக்கான கிலோ மீட்டர் மற்றும் மாறக்கூடிய செலவுகள் (தேய்மானம் உட்பட) போன்ற அளவுகோல்கள் அடங்கும்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கை

தொழிற்சங்க தலைவர் நயினார் கூறியதாவது, “அனைத்து போக்குவரத்து கழகங்களும் இந்த அளவுகோல்களில் அதிகபட்ச வரம்பை எட்டியுள்ளன. தினசரி வருவாய்-செலவு இடைவெளி ரூ.16 கோடி (2023 கணக்கீடுகள்). கழகங்கள் மாதத்திற்கு ஏறத்தாழ ரூ.500 கோடி கேட்டுள்ளன.

பிப்ரவரி 13-ல், CITU மற்றும் AITUC தொழிற்சங்கங்கள் நடத்திய மாநில அளவிலான போராட்டத்தில், ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் எனவும் 30,000 காலியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. திருவிழாக்களின் போது தனியார் மினி பஸ்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்க அரசு முன்வைத்த திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  2021 தேர்தல் வாக்குறுதியில் DMK பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த உறுதியளித்திருந்தது.  அதன்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி பிரச்சினைகள்

போக்குவரத்துத் துறை வாங்கிய கடன்கள் காரணமாக ஈட்டப்படும் ஒவ்வொரு 100 ரூபாயில் 12 ரூபாய் வட்டி கட்டுவதற்காகவே செலவாகிறது. அரசாங்கமோ போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய மறுக்கிறது. இதனால் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. ஓய்வூதியம் கொடுக்கப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களின் பணத்தை (ரூ.15,000 கோடிக்கும் மேல்) டெபாசிட் செய்வதற்குப் பதிலாக, அரசு அதை நடைமுறை செலவுகளுக்கு பயன்படுத்தியுள்ளது என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டின.

தொழிலாளர்களின் ஓய்வூதிய நலன்களுக்காக 2023 மார்ச் இல் ஒதுக்கப்பட்ட ரூ.3,500 கோடி செலுத்தவில்லை. அகவிலைப்படி ஒன்பது ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. மதுரை உயர் நீதிமன்றம், 2024 செப்டம்பர் 10 இல் கொடுத்த தீர்ப்பில், அடிப்படை ஓய்வூதியத்துடன், ஓய்வூதியதாரர்கள் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட அகவிலைப்படிக்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டது.

அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது AIADMK அரசு 2015-ல் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தியது. அனைத்து பாக்கிகளையும் ஒரே சமயத்தில் செலுத்துவது கடினம். நிதி நிலைமை சீரானதும், நாங்கள் இதைச் செய்வோம் என்றார்.

ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி, அரசுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்கின்றனர். தனியார்மய முயற்சி தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய பலன்களை கொடுக்காதது போன்ற போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தின் மோசமான பிரச்சினைகளை காட்டுகின்றன. இது அரசுப் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை சிதைத்து விடும்.

 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து துறையில் நடைபெறும் தனியார் மயத்தை பற்றி பிரண்ட்லைன் இணையத்தில்  பத்திரிகையாளர் சித்தார் முரளிதரன்  எழுதிய இக்கட்டுரை தோழர் தீபக் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது.

மொழிபெயர்ப்பிள் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது மேலும் கட்டுரை எடிட் செய்யப்பட்டுள்ளது.

-தமிழ் மார்க்ஸ்

 

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *