வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பும் உன்னதமான நட்பும்.
மனதை உருக்கும் நட்பை குறித்து பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு.ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம்,தனது விஞ்ஞானத்தை படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள்,இரண்டு போராட்ட வீரர்கள். அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள பழங்கதைகளை எல்லாம் மிஞ்சக் கூடியதாக இருந்தது -லெனின்.
பெர்லினில் ராணுவ சேவையை முடித்து வீடு திரும்பிய ஏங்கெல்ஸ், தந்தையின் கட்டளையை மீற முடியாத காரணத்தால் 1842 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். அங்கே அவர் தனது தந்தையாரின் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே தந்தையின் கட்டளை. நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டதானது, இங்கிலாந்தில் தொழில் புரட்சியை வேகமாக தூண்டிவிட்டிருந்தது. முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடு ஜெர்மனியை விட மிகத் தெளிவாக இங்கிலாந்தில் தெரிந்தது.
அலுவலக வேலை போக மீதி நேரங்களை இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தோடு செலவிடுவதையே அதிகமும் விரும்பினார் ஏங்கெல்ஸ். அதேநேரத்தில் இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி போராடி வந்த சார்டிஸ் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் பணியை துவக்கினார். எப்போதும் இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்தின் மீது அளவுகடந்த அன்பும்,பரிவும் கொண்டிருந்த ஏங்கெல்ஸ் தான் எழுதிய ”பிராட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற புத்தகத்தை இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்திற்கு அர்ப்பணித்தார். பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்திற்கு விடுத்த அறிக்கையில் அவர் பின்வருமாறு எழுதினார்.
உங்களை உங்களுடைய இல்லங்களில் காண, உங்களது அன்றாட வாழ்க்கையை பார்க்க, உங்களது நிலைமையையும்,தேவைகளையும் பற்றி உங்களுடன்பேச,உங்களை அடக்கி ஆள்வோரின் சமுதாய அரசியல் ஆட்சிக்கு எதிராக நீங்கள் தொடுக்கும் போராட்டத்தை காண நான் விரும்புகிறேன். நான் மேற் குடியினரையும், விருதுகளையும் முதலாளித்துவ மதுபானங்களையும் ஒதுக்கிவிட்டு எனது ஓய்வு நேரங்களை உண்மையான தொழிலாளர்களுடன் கலந்து பழகுவதற்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக அர்ப்பணித்தேன். இதை பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமை கொள்கிறேன்.
பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஏங்கெல்ஸை, ஐரோப்பிய புரட்சி, தத்துவ வாதியாக,நாத்திகனாக மாற்றியது என்றால் இங்கிலாந்து, அவரை பெரும் புரட்சிக்காரனாக மாற்றியது. தினம் தினம் லண்டன், லீட்ஸ், மான்செஸ்டர் போன்ற நகரங்களில் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் அலைந்து திரிந்து அவர்களின் வாழ்நிலையை ஆய்வு செய்தார்.
சார்டிஸ் இயக்கத்தோடு தொடர்பு..
உலகிலேயே முதலாவதான பரந்த, உண்மையான, வெகுஜன அரசியல் ரீதியாக, வடிவமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம்.!
என்று லெனின் பின்னாட்களில் வர்ணித்த சார்டிஸ் இயக்கத்தில் தீவிரமாக பங்காற்றினார். இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜூலியன் கார்ணி என்பவர் பதிப்பாசிரியராக இருந்த சார்டிஸ் பத்திரிக்கையான Northern Star எனும் பத்திரிகையில் பணியாற்ற தொடங்கினார். இங்கிலாந்து பாட்டாளி வர்க்கத்திற்கு, ஜெர்மன் தத்துவங்களையும் பிரஞ்ச் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கருத்துக்களையும் பத்திரிகையின் மூலமாக சுருக்கமாக வரைந்து கொடுத்தார். ஜெர்மானிய தத்துவங்களையும், பிரஞ்ச் கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கருத்துக்களையும் குறித்து எழுதும்போது அதன் பலவீனங்களையும், அதேபோது உலக கலாச்சார களஞ்சியத்திற்கு அவர்கள் ஆற்றிய பயன்மிக்க விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.அதுமட்டுமல்லாமல் ஹெகலியவாதத்தில் இருந்து முறித்துக்கொண்டு பொருள்முதல் வாதியாக இந்த காலகட்டத்தில் அவர் மாறி வந்தார். அதை மெய்ப்பிக்கும் விதமாக கார்லைல் எழுதிய ”கடந்த காலமும் நிகழ்காலமும்” என்ற நூலுக்கு விமர்சனம் எழுதிய ஏங்கெல்ஸ் பொருள்முதல்வாத, நாத்திக கண்ணோட்டங்களில் இருந்து விலகிச் சென்று புதுச்சமயம் ஒன்றை தோற்றுவிப்பதற்கான முயற்சியை திரு. கார்லைல் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார்..
வர்க்க பார்வை:
இங்கிலாந்து அரசியலை கூர்ந்து கவனித்து வந்த ஏங்கெல்ஸ் நடக்கும் போராட்டங்களுக்கு காரணம் பல்வேறு வர்க்கங்களின் பொருளாயத நலன்களே என்றும், அந்தந்த வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை குறித்தும் வர்க்கப் பகுப்பாய்வு செய்து வந்தார். அப்போது தொழிலாளர்களின் கூட்டு உணர்வை வெளிப்படுத்தும் கோட்பாடுகளைக் கொண்ட கட்சி என்று சார்டிஸ்டுகளை வர்ணித்தார்.

பிரிட்டனில் நிலவுகின்ற சமுதாய உறவுகளையும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்க்கையையும், போராட்டத்தையும், ஆய்வு செய்து ”இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை” என்ற தலைசிறந்த நூலை எழுதி முடித்தார். அதில் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் நிலைமை, அவர்களின் போராட்ட குணம், அவர்களிடையே ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கருத்துக்கள், (குறிப்பாக ராபர்ட் ஓவனின் கற்பனாவாத சோசலிச கருத்துகள்) தொழிலாளர் இயக்கத்தின் போராட்ட வடிவங்கள், போன்றவை குறித்து ஆழமான ஆய்வை மேற்கொண்ட ஏங்கெல்ஸ், சார்டிச இயக்கத்தின் சட்டபூர்வமாக புரட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை சாடுகிறார். எனவே சோசலிசத்தையும் தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைப்பது, கற்பனாவாத சோசலிசமாக இருந்த ஒன்றை விஞ்ஞான சோசலிசமாக மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்து சேரும் இடத்தில் அவர் கம்யூனிஸ்ட் ஆக மாறி இருந்தார்.
வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு.
1844 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் மான்செஸ்டர் நகரத்தை விட்டு தனது சொந்த நாட்டுக்கு கிளம்புவது என முடிவு செய்த ஏங்கெல்ஸ் போகும் வழியில் பாரிஸில் வசித்துவந்த காரல் மார்க்சை சந்தித்தார். மார்க்சையும் ஏங்கெல்ஸையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைத்த,நட்பிற்கு இலக்கணமாக இன்றுவரை திகழும், வரலாறு போற்றும் சந்திப்பாக அந்த பத்து நாட்கள் உறவு என்பது இருந்தது. ஏற்கனவே காரல் மார்க்சை பற்றி ஏங்கெல்ஸ், பெர்லினில் இளம் ஹெகலியவாதிகளிடம் பழகும்போது அறிந்திருந்தார். அதே போல ஏங்கெல்ஸை குறித்து காரல் மார்க்ஸ் தான் பணியாற்றிய பத்திரிகையின் மூலம் தெறிந்து வைத்திருந்தார். ”ரைனிச் பத்திரிகையில்” ஏங்கெல்ஸ் எழுதிய சில கட்டுரைகளை காரல் மார்க்ஸ் பதிப்பாசிரியரக இருந்த போது வெளியிட்டிருந்தார். அப்போது ஏங்கெல்ஸ் குறித்து தனிக்கவனம் கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் மார்க்ஸ் மிகவும் புரட்சிகரமான கட்டுரைகளை மட்டுமே வெளியிட்டு வந்த நேரத்தில் ”சுதந்திர மாணவர்கள்” என்ற குழுவினர் எழுதும் எந்த கட்டுரையையும் ”ரைனிச் பத்திரிகையில்” வெளியிட மறுத்து வந்த நிலையில் அதே குழுவில் இருந்த ஏங்கெல்சின் கட்டுரைகளை மட்டும் அவர் வெளியிட்டார். காரணம் ஏங்கெல்ஸ் அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சின் கருத்துகளோடு ஒதுப்போவதாக மாறியிருந்தார்.

காரல் மார்க்சும்,ஏங்கெல்சும் ஒருவரையொருவர் தங்களது அரசியல்,பொருளாதார தத்துவார்த்த எழுத்துகளின் வழியே அறிந்து வைத்திருந்தார்கள். தனது பத்திரிகையின் பிரிட்டிஷ் நிருபராகும்படி மார்க்ஸ் ஏங்கெல்ஸை கேட்டுக்கொள்ளும் அளவிற்கு ஏங்கெல்ஸ் மார்க்சின் அரசியலோடு ஒத்திருந்தார்.இருவரும் நண்பர்களாக மாறாத காலத்திலேயே அவர்களுடைய கருத்துகள் ஒரே மாதிரி இருந்தது அன்றைய அரசியல் தத்துவார்த்த தளத்தில் முக்கியமானதாக இருந்தது. 1842- ஆம் ஆண்டு ஏங்கெல்ஸ் எழுதிய ஒரு கட்டுரையில்
வெறும் அரசியல் சீர்திருத்தங்கள் மட்டும் போதாது என்ற முடிவிற்கு வந்து, கூட்டு சொத்து உரிமையின் அடிப்படையில் நிகழும் சமூக புரட்சியின் விளைவாகத்தான் தமது சூட்சமமான கோட்பாடுகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு வந்து சேரும் என்று இளம் ஹகலிய இடதுசாரிகள் அறிவிக்கிறோம் என்று எழுதிய போது அதில் காரல்மார்க்ஸ் பெயரையும் ஏங்கல்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
பெர்லினிலிருந்து தனது தந்தையின் வற்புறுத்தலால் இங்கிலாந்திற்கு சென்ற போது கொலோன் நகரில் சில நாட்கள் இருந்த ஏங்கெல்ஸ் அங்கே ‘ரைனிச் பத்திரிகையின்’ ஆசிரியராக பணியாற்றி வந்த காரல் மார்க்சை சந்தித்தார். இந்த சந்திப்பை மார்க்ஸ் மேம்போக்கான சந்திப்பாகத்தான் கருதினார்.அதற்கு காரணம் “சுதந்திர மாணவர்கள்” என்ற குழுவில் ஏங்கெல்ஸ் இருந்ததால்தான். பொதுவாக இந்தக் குழுவில் இருந்தவர்கள் “தத்துவஞானம் மற்றும் மதம்” பற்றிய ‘சூட்சும கருத்துகளை’ கொண்டிருந்ததும், கம்யூனிசம் குறித்து மேம்போக்காக பேசக் கூடியவர்களாகவும் இருந்தததால்தான். ஆனால் ஏங்கெல்ஸ் இங்கிலாந்தில் வாழ்ந்த போது முரணற்ற முழு கம்யூனிஸ்டாக மாறிப்போனார்.அதனால்தான் பாரிஸ் சந்திப்பு என்பது இருபெரும் தத்துவவாதிகளின், கம்யூனிஸ்டுகளின், போராட்டக்காரர்களின், பாட்டாளி வர்க்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கை கொண்டவர்களின்,ஒட்டுமொத்தத்தில் இரு புரட்சியாளர்களின் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருந்தது. அதன் பிறகு இருவரின் கூட்டுப்பணி என்பது தொடங்கியது. ஐரோப்பிய கண்டத்து பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர்களாக மாறினார்கள்.விஞ்ஞான கம்யூனிசம் என்னும் எழில்மிகு மாளிகையின் கருங்கல் அடித்தளமான “மார்க்சியத்தை” தோற்றுவித்தார்கள்.
விஞ்ஞான கம்யூனிசத்தை வகுத்தளிப்பதில் மார்க்ஸ் வகித்த பாத்திரத்தையும் தனது பங்கு குறித்தும் ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்:
மார்க்சுடன் 40 ஆண்டுகளாக கூட்டாக பணிபுரிந்த காலத்திலும் சரி அதற்கு முன்பும் சரி அத்தத்துவத்தின் அடித்தளங்களை அமைப்பதில் அதைவிட குறிப்பாக அத்தத்துவத்தை விவரித்து விளக்குவதில் எனக்கு ஓரளவுக்கு தனிப் பங்கு இருந்ததை நான் மறுக்க முடியாது. ஆனால் அதன் தலையாய அடிப்படை கோட்பாடுகளில் மிகப் பெரும் பகுதி (குறிப்பாக பொருளாதாரத் துறையையும் வரலாற்றுத் துறையையும் சேர்ந்தவை அவை) எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை பற்றிய இறுதியான,கூரிய வரையறுப்பும் மார்க்சையே சேரும். நான் ஆற்றிய பணியை -ஒருவேளை இரண்டு மூன்று தனித்துறைகளில் நான் புரிந்த பணி நீங்கலாக – நான் இல்லாமலே மார்க்ஸ் எளிதாக செய்திருப்பார். ஆனால் மார்க்ஸ் சாதித்திருப்பதை நான் சாதித்திருக்க மாட்டேன். எங்கள் எல்லோரையும்விட மார்க்ஸ் உயரே நின்றார். வெகு தொலைவுக்குப் பார்த்தார். மேலும் விரிவான, விரைவான பார்வையை பெற்றிருந்தார். மார்க்ஸ் ஒரு மேதை. நாங்கள் எல்லோரும் அதிகபட்சமாக சொன்னால் திறமைசாலிகளே. அவரில்லாமல் இந்தத் தத்துவம் இன்று இருப்பது போல் இவ்வளவு தூரம் வந்து இருக்காது எனவே அது அவருடைய பெயரைத் தாங்கி இருப்பது சரியே.
ஏங்கெல்ஸ் இல்லையென்றால் மார்க்ஸ் இல்லை. ஆனால் எப்போதும் ஏங்கெல்ஸ், மார்க்சை தன்னைவிட ஒருபடி மேலே வைத்துதான் பார்ப்பார். அப்படியான அவர்களின் வாழ்க்கை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்ததாகும்.கடைசியாக ஏங்கெல்ஸை பற்றி மார்க்ஸ் கூறிய வார்த்தைகளோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்வோம்.
“அவர் ஒரு உண்மையான கலைக்களஞ்சியம்,பகலிலும் இரவிலும்,எந்த நேரத்திலும்,எந்த ஒரு மனநிலையிலும் வேலை செய்யும் வல்லமை படைத்தவர்.அசுர வேகத்தில் விசயங்களை கிரகித்து எழுதக்கூடியவர்.” – மார்க்ஸ்
முந்தைய கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும் இளம் ஹெகலியவாதியாக ஏங்கெல்ஸ்