Tamil Marx

தமிழ் நாடு

அது தீபத்தூண் அல்ல, ஆங்கிலேயர் நட்ட சர்வே கல் தான்

அது தீபத்தூண் அல்ல, ஆங்கிலேயர் நட்ட சர்வே கல் தான்
  • PublishedNovember 24, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில், சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல் தூணில் நவம்பர் 24 கார்த்திகை தீப நாளில் “ஒருமுறை மட்டும்” தீபம் ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. அந்தத் தூண் “தீபத்தூண்” அல்ல,ஆங்கிலேயர்காலப் பெரும் முக்கோணவியல் அளவைத் (Great Trigonometrical Survey (ஜிடிஎஸ்)) தூண் என்பதை நிறுவ, மாநில அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு முன்வைத்துள்ளதாக கூறப்படும் முக்கிய ஆவணம், 98 பக்கங்கள் கொண்ட ஓர் அறிவியல் அறிக்கை. “தமிழ்நாட்டில் பெரும்முக்கோணவியல் அளவை நிலையங்களின் ஆவணப்படுத்தல்” என்ற அந்த அறிக்கையின் சுருக்கப் பதிப்பு பலஉண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது

யார் தயாரித்தது?

தமிழ்நாடு அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறையும் தொல்லியல் துறையும் இணைந்து இந்தஅறிக்கையைத் தொகுத்துள்ளன. வருவாய், வனத் துறைகளும் இதில் பங்கேற்றன. நில அளவைத் துறைஇயக்குநர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாநிலம் முழுவதுமுள்ள மண்டல துணை இயக்குநர்கள், நில அளவைஆய்வாளர்கள், சர்வேயர்கள், வனக் காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தொல்லியல் அலுவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் காடுகளிலும் மலை உச்சிகளிலும் ஏறி இந்தக் களப்பணியைச்செய்துள்ளனர். தொல்லியல் துறையின் கல்வி, ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் கா.ராஜன் உள்ளிட்டோர்முன்னுரை எழுதியுள்ளனர். முழு அறிக்கை ஐந்து தொகுதிகளில், 1,800 பக்கங்களுக்கும் மேல் நீள்கிறது; 484நிலையங்களின் விரிவான பட்டியல் அதில் உள்ளது.

இந்தியாவை அளந்த முக்கோணங்கள்

1802 ஏப்ரல் 10 அன்று, கர்னல் வில்லியம் லாம்ப்டன் சென்னை பரங்கிமலையில் (செயின்ட் தாமஸ் மவுண்ட்)இந்த அளவைப் பணியைத் தொடங்கினார். பரங்கிமலைக்கும் பெரும்பாக்கத்துக்கும் இடையே 12 கி.மீ.அடிக்கோடு அளக்கப்பட்டது. ஒரு டன்னுக்கும்அதிக எடை கொண்ட பிரம்மாண்டமான “தியோடலைட்” கருவியுடன், 78° தீர்க்கரேகை வழியாக, சுமார் 2,400 கி.மீ. நீளத்துக்கு முக்கோணங்களின் வலைப்பின்னல் அமைக்கப்பட்டது. 1841-இல் ஜார்ஜ் எவரெஸ்ட் தலைமையில் அது இமயம் வரை நீண்டது; எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டதும் இதன் மூலம்தான். 1818-இல் இதற்கு “பெரும் முக்கோணவியல் அளவை” என்று பெயரிடப்பட்டது.

இந்த அளவையின் அடிப்படை, உயரமான இடங்களில் அமைக்கப்பட்ட “நிலையங்கள்”. மலைகளில் அமைந்த முதன்மை நிலையங்களில், 10 முதல் 16 அடி சதுர மேடை மீது, 3 முதல் 4 அடி விட்டமும் 1 முதல் 14 அடி உயரமும் கொண்ட திடமான கல் கட்டுமானத் தூண்கள் கட்டப்பட்டன. கருவியைப் பொருத்தும் தூணின் மேல்பகுதியில், புள்ளியைச் சுற்றி ஒரு வட்டம் கொண்ட “நிலையக் குறி” பொறிக்கப்பட்டது. அதே குறி தூணின் அடியில் பாறை மீதும் வெட்டப்பட்டது. சில இடங்களில், தூணுடன் சேர்ந்து முக்கோணம் அமைக்கும்படி அருகிலுள்ள பாறைகளில் மேலும் இரண்டு கட்டுப்பாட்டுப் புள்ளிகள் பொறிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் நிலையங்கள் “சென்னை நீள்வரிசை” (எண் XXVII), “சென்னை நெடுக்கு மற்றும் கடற்கரை வரிசை” (எண் XXVIII) ஆகியவற்றைச் சேர்ந்தவை.

தமிழ்நாடு முழுவதும் 484 நிலையங்கள்

பழைய வரைபடங்களையும் ஆவணங் களையும் எண்ணிமப்படுத்தி, ஒவ்வோர் இடத்துக்கும் நேரில் சென்று, டிஜிபிஎஸ், ட்ரோன் அளவை, ஜிஐஎஸ் தொழில்நுட்பங்கள் மூலம் இருப்பிடங்களை உறுதி செய்துள்ளனர். முதல் கட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 210 முதன்மை, 274 துணை நிலையங்கள் என 484 நிலையங்கள் நேரில் ஆவணப்படுத்தப்பட்டன. இவற்றில் 267 மலைகளில், 217 சமவெளிகளில் உள்ளன. திருநெல்வேலியில் 35, தூத்துக்குடியில் 33, இராமநாதபுரத்தில் 32, திண்டுக்கல்லில் 28, மதுரையில் 10 உட்பட 37 மாவட்டங்களில் இவை பரவியுள்ளன.

மலை உச்சிகளில் உள்ள 63 கல் தூண்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மேல்பகுதியின் வடிவத்தையும் அறிக்கை வகைப்படுத்துகிறது: சிலவற்றில் புள்ளியுடன் வட்டம், சிலவற்றில் கிண்ணக் குழி, சிலவற்றில் குவிந்த அல்லது குழிந்த பரப்பு. “மேலே துளை கொண்ட தூண்கள்” என்ற வகையில், கொடைக்கானல் பங்களா, பாலகொண்டராய துர்க்கம், செல்லகுட்டப்பட்டி, கங்கன்கிரி, விக்கிரமங்கலம், குன்னத்தூர் ஆகியவற்றுடன் திருப்பரங்குன்றமும் இடம்பெற்றுள்ளது. 200 மில்லி எண்ணெய்கூடப் பிடிக்காத அந்தக் குழியை “தீபம் ஏற்றும் இடம்” என்று சொல்வது ஏன் அபத்தமானது என்பதற்கு இதுவே விடை: அது தியோடலைட் கருவியைப் பொருத்துவதற்கான குழி; இதே அமைப்பு தமிழ்நாட்டின் பிற மலைகளிலும் உள்ளது.

அளவைத் தூண்கள் ‘வழிபாட்டுத்’ தூண்களானது எப்படி?

அறிக்கையின் மிக முக்கியமான கண்டறிதல் இதுதான். 63 கல் தூண்களில் சுமார் 19 இன்று எண்ணெய் விளக்குத் தூண்களாகப் பயன்படுகின்றன; சுமார் 19 வழிபாட்டில் உள்ளன; சுமார் 19 கோவில்களுக்குள் வந்துவிட்டன. மொத்தமுள்ள 484 நிலையங்களில் சுமார் 67, பெருமாள், ரங்கநாதர், வெங்கடாசலபதி, சிவன், விநாயகர், முருகன் போன்றதெய்வங்களுக்கும், மாரியம்மன், பேச்சியம்மன், பொலேரம்மன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்குமானவழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ளன, அல்லது அவையாகவே மாற்றப்பட்டுவிட்டன. மேற்குத்தொடர்ச்சி மலையில் சில தூண்கள் கருட ஸ்தம்பங்களாகவே மாறியுள்ளன. பரங்கிமலையிலும் கொடைக்கானலிலும் தேவலயங்களுக்கு அருகிலும், கீழக்குயில்குடியில் சமணச் சின்னங்கள் அருகிலும்நிலையங்கள் உள்ளன.“தர்காவும் முருகன் கோவிலும்” உள்ள இடங்களாக அறிக்கை குறிப்பிடுவது இரண்டே: திருப்பரங்குன்றமும்பிரான்மலையும்.

அதாவது, ஆங்கிலேய அளவையாளர்கள் உயரமான, தொலைவிலிருந்து தெரியும்இடங்களை நிலையங்களாகத் தேர்ந்தெடுத்த னர்; பெரும்பாலும் அவை ஏற்கெனவே மலைக்கோவில்கள் இருந்த இடங்கள். பிற்காலத்தில் இந்த விபரங்கள் தெரியாமல், அறியாமல் பல தூண்கள் மீது மக்கள் விளக்கேற்றத் தொடங்கினர், மஞ்சள்–குங்குமம் பூசினர், கோவில் களுக்குள் இணைத்துக்கொண்டனர். அளவைத் தூண் எண்ணெய்த் தூணாவது பிற்காலமாற்றம்; தூணின் தோற்றம் அல்ல. திருப்பரங்குன்றம் அளவைத் தூணை “பழங்காலத் தீபத்தூண்” என்று இப்போது வலிந்து சொல்வது, மற்ற சில இடங்களில் ஏற்பட்ட இந்தப் பிற்காலமாற்றத்தையே “தொன்மை” என்று காட்டும் முயற்சி. இந்த வாதம் ஏற்கப்பட்டால், தமிழ்நாட்டின் 484 நிலையங்களும், நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான அளவைத் தூண்களும் புதிய மத உரிமைக் கோரிக்கைகளுக் கான களங்களாகும் அபாயம் உள்ளது.

“சிக்கந்தர்மலை”: ஆங்கிலேயர் பதிவேட்டில் பதிவான பெயர்

திருப்பரங்குன்றம் குறித்து அறிக்கை தனியாக ஆறு படங்களை ஒதுக்கியுள்ளது. முதல் வியப்பு: 1899-இல் வெளியான “பெரும் முக்கோணவியல் அளவைச் சுருக்கம்” நூலின் 29-ஆவது தொகுதியில், இந்த மலையின் நிலையங்கள் பதிவாகியுள்ள பெயர் “திருப்பரங்குன்றம்” அல்ல, “சிக்கந்தர்மலை”. அங்கே இரண்டு துணை மலை நிலையங்கள் உள்ளன: “சிக்கந்தர்மலை எண் 1” (h.s.), “சிக்கந்தர்மலை எண் 2” (h.s.). இப்போது சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள தூண்தான் “சிக்கந்தர்மலை எண் 1” என்று அறிக்கையின் வரைபடம் குறிக்கிறது. இரண்டாவது நிலையம், தர்காவுக்கு அருகில் புள்ளியுடன் வட்டக் குறியுடன் பாறையில் உள்ளது.

அறிக்கையின் ட்ரோன், டிஜிபிஎஸ் அளவைப்படி, தூணும் (“ஜிடி தூண்”), தர்கா அருகிலுள்ள நிலையமும் (“ஜிடி நிலையம்”), பாறையில் பொறிக்கப்பட்ட வட்டக் குறியும் (“ஜிடிஎஸ்புள்ளி”) ஒரு முக்கோணத்தை அமைக்கின்றன. தூணிலிருந்து நிலையம் 59.23 மீட்டர்; தூணிலிருந்து வட்டக் குறி 41.79 மீட்டர்; வட்டக் குறியிலிருந்து நிலையம் 44.78 மீட்டர். குன்னத்தூர், கே.டி.பாளையம் போன்ற பிற மலைகளில் காணப்படும் அதே அமைப்பு இது: ஒரு தூண், அதைச் சுற்றிப் பாறையில் பொறித்த கட்டுப்பாட்டுப் புள்ளிகள்.

மீனாட்சியம்மன் கோவிலை நோக்கிய கோணம்

அறிவியல் ரீதியாக மறுக்க முடியாத சான்று இங்கேதான் உள்ளது. ஒரு அளவை நிலையத்திலிருந்து பிற நிலையங்களுக்கான திசைக்கோணங்கள் பதிவேட்டில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். 1899 பதிவேட்டின்படி, “சிக்கந்தர்மலை எண் 1” நிலையத்தி லிருந்து கூத்திப்பாறைக்கு 8° 29’ 6”, பெருமாள்மலைக்கு 130° 14’ 23”, பொன்னுருக்கி மலைக்கு 168° 0’ 46”, “மதுரைக் கோவிலு”க்கு (மீனாட்சியம்மன்கோவில்) 230° 10’ 36”. “சிக்கந்தர்மலை எண் 2” நிலையத்திலிருந்து கூத்திப்பாறை, கோபால்சாமி மலை, சதுரகிரி, நாகமலை ஆகியவற்றுக்கான கோணங்களும் பதிவாகியுள்ளன.இன்றைய டிஜிபிஎஸ், ட்ரோன் அளவையில், இப்போதுள்ள தூணின் இருப்பிடத்தி லிருந்து அளந்த கோணங்களும் தொலைவுகளும், 127 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் பதிவேட்டின் மதிப்புகளுடன் துல்லியமாகப் பொருந்துகின்றன. அறிக்கை தெளிவாகவே முடிவு சொல்கிறது: “இந்த மதிப்புகள், சிக்கந்தர்மலையில் நிறுவப்பட்டுள்ள தூணும், அதனுடன் தொடர்புடையதாகப் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள புள்ளியுடன் கூடிய வட்டக் குறிகளும் ஒரு அளவைத் தூணே என்பதைக் காட்டுகின்றன.” சிக்கந்தர்மலையுடன், மல்லிப்பட்டு, மருகல்தலை, கே.டி.பாளையம், தேவத்தூர், தோகைமலை, குன்னத்தூர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு நிலையங்களிலும் இதேபோல் அளந்த மதிப்புகள் பதிவேட்டுடன் பொருந்தியுள்ளன. அதாவது,ஆங்கிலேயர் பதிவேடும் இன்றைய அளவையும் ஒன்றையொன்று உறுதிப்படுத்துகின்றன.

உண்மையான தீபத்தூண் எது?

அறிக்கையின் படங்கள் இன்னொன்றை யும் தெளிவாகக் காட்டுகின்றன. மலை உச்சியில் “ஜிடி தூண்”, “ஜிடி நிலையம் (தர்கா அருகில்)”, “வட்டப் புள்ளி” ஆகியவை ஒரு பக்கம் குறிக்கப்பட்டுள்ளன.அவற்றிலிருந்து தொலைவில், கோவில் கட்டடங்களுக்கு மேலே உள்ள பாறை முகட்டில், “தீபத் தூண் (கல்வெட்டுடன்)” தனியாகச் சிவப்புக் குறியில் காட்டப் பட்டுள்ளது. அதன் புகைப்படத்தில் மாலையும் குங்குமமும் தெரிகின்றன. நூறாண்டுகளாகத் தீபம் ஏற்றப்படும் மரபான இடமும், ஆங்கிலேயர் அளவைக்காக நட்ட தூணும் வெவ்வேறுஇடங்கள் என்பதை அரசின் சொந்த அளவையே நிறுவுகிறது.

உண்மையைப் பாதுகாப்பது யார் பொறுப்பு?

நூறாண்டுகளில் 12 வழக்குகளில் ஒருமுறைகூட இடம்பெறாத “தீபத்தூண்” என்ற சொல், 2025-இல் ஒரு வழக்கில் புகுத்தப்பட்டு, ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் தீர்ப்பில் மட்டும் 39 முறை இடம்பெற்றது. அதற்கு எதிராக, இப்போது மாநிலத்தின் இரண்டு அறிவியல்துறைகள், நூற்றுக்கணக்கான பணியாளர் களின் களப்பணி, 1899 ஆங்கிலேயர் பதிவேடு,இன்றைய டிஜிபிஎஸ், ட்ரோன் அளவை ஆகியவை ஒரே உண்மையைச் சொல்கின்றன: அது சிக்கந்தர்மலை எண் 1 அளவைத் தூண்.இந்த அறிக்கை “காலனியகால அறிவியல் மரபின் மௌனச் சின்னங்கள்” என்று இந்தத் தூண்களைவர்ணிக்கிறது. அந்த மௌனச் சின்னங்களை மதவெறி அரசியலின் கருவிகளாக மாற்ற அனுமதித்தால், அதன் விளைவுதிருப்பரங்குன்றத்தோடு நிற்காது. அறிவியல் ஆதாரங்களுக்கும், நூறாண்டுத் தீர்ப்புகளுக்கும் மதிப்பளித்து, உச்சநீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்என்பதே நியாயமான எதிர்பார்ப்பு.

 

நன்றி தீக்கதிர்

இந்த கட்டுரை 24/நவ/2026 அன்று தீக்கதிரில் வெளியானது. தலைப்பு மட்டும் தமிழ் மார்க்ஸ் ஆசிரியர் குழுவால் எடிட் செய்யப்பட்டுள்ளது.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *