தொழிலாளி விவசாய வர்க்க அரசா? மக்கள் குடியரசா?-அ.பாக்கியம்
சீன தேசம், சீன இனம் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான முடிவுக்கு வந்துவிட்டது. சீனாவின் பன்முக தேசிய இனத்தன்மை உறுதி செய்யப்பட்டது. சீன தேசம் என்ற சொல் சீனாவின் அனைத்து தேசிய இனங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான சொல் என்று தெளிவுபடுத்தப்பட்டதும், சீனாவின் அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட்ட ஒரு அரசு நிறுவ வேண்டும் என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பிக்கையை முன்பைவிட அதிகமான அளவிற்கு வலுப்படுத்தியது. தொழிலாளர் மற்றும் விவசாயிகள் புரட்சி என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வழிநடத்தப்பட்ட புரட்சியாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபுறம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்தை பிரதிபலித்தது.மறுபுறத்தில், லெனினிசத்தின் கொள்கைகளையும் கடைபிடித்தது. அதாவது பின் தங்கிய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்க கட்சிகள், விவசாய இயக்கத் துடன் உறுதியான உறவுகளை ஏற்படுத்தாமலும், அதற்கு திறமையான ஆதரவை வழங்காமலும், கம்யூனிச தந்திரங் களையும் கம்யூனிச கொள்கையையும் பின்பற்ற முடியும் என்று நம்புவது, ஒரு கற்பனாவாதமாக மட்டுமே இருக்கும் என்று லெனின் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
எனவே, தொழிலாளர் மற்றும் விவசாயிகள் புரட்சி ஒரு வர்க்க புரட்சியாகும். இருப்பினும் ஏகாதிபத்தியம் வலிமையாகவும், நிலப்பரப்புத்துவம் ஒடுக்கு முறைநிறைந்த தாகவும், தேசிய முதலாளித்துவம் பலவீனமாகவும், பாட்டாளி வர்க்கம் வலிமையற்ற தாகவும் இருக்கிற ஒரு நாட்டில், அது தேசிய புரட்சியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திட வேண்டி இருந்தது. அவ்வாறு செய்வது அதனுடன் இணைவதை குறிக்கும் என்றாலும் கூட, ஒரு காலனித்துவ அல்லது அரை காலனித்துவ நாட்டில் தேசிய விடுதலை இயக்கத்தில், விவசாயிகளே தேசிய இயக்கத்தின் பிரதான ராணுவமாக உள்ளனர். மேலும் விவசாயிகளின் ராணுவம் இல்லாமல் ஒரு சக்தி வாய்ந்த தேசிய இயக்கம் இல்லை என்பதையும் வலியுறுத்தினார்
இருப்பினும் சீனப் புரட்சிக்கு, குறிப்பாக ஜப்பானிய ராணுவம் சீனா மீதான படையெடுப்பை நடத்திய சூழ்நிலையில், ஜப்பானியரை எதிர்ப்பது முதன்மையான புரட்சிகர பணியாக இருந்தது. சீன தேசத்தின் விடுதலையை வெல்வதற்காக முடிந்தவரை பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை நிறுவ வேண்டிய அவசியம் இருந்தது. இதற்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அனைத்து தேசிய இனங்களின் ஆதரவும், அனைத்து வர்க்கங்களின் பங்கேற்பும் தேவைப்பட்டது. இதன் விளைவாக சீன கம்யூனிஸ்ட் கட்சி 1935இல் வாயோபு என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றிய பிரதேசங்களில் அமைக்கப்பட்ட சோவியத் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் குடியரசின் பெயரை, சோவியத் மக்கள் குடியரசு என்று மாற்றியது. அனைத்து தேசிய இனங்களையும், அனைத்து வர்க்கங்களையும் ஏகாதிபத்திய மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரட்ட இந்த மாற்றங்களை உருவாக்கினார்கள்.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் “தேசிய ஐக்கிய முன்னணிக்கு ஒரு பரந்த மற்றும் வலுவான அடித்தளத்தை வழங்குவதற்காக, சோவியத் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் குடியரசு அதன் பெயரை சோவியத் மக்கள் குடியரசு என்று மாற்றியுள்ளதாகவும், மேலும் அதன் பல கொள்கைகளையும், அதாவது சோவியத் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் குடியரசின் கொள்கைகளையும், சீனாவை ஒரு ஜப்பானிய காலனியாக மாற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளின் முயற்சியை எதிர்ப்பதற்கான சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுவதாகவும் அறிவிக்கிறது.”இந்தக் கொள்கை மாற்றம் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அதனால் நிறுவப்பட்ட சோவியத் மக்கள் குடியரசும் தொழிலாளர் மற்றும் விவசாய மக்களின் நலன்களை மட்டும் ஆதரிக்க கூடியது அல்ல, சீன தேசத்தின் அனைத்து மக்களின் அடிப்படை நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியது என்பதை வெளிப்படுத்தியது.
இதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சி காலகட்டத்தில் கட்சியின் போராட்ட இலக்கிற்கு ஒரு செழுமையான தேசிய உள்ளடக்கம் வழங்கப்பட்டது. மா சேதுங் கூறினார், கட்சி “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை மட்டுமல்லாமல், சீனாவின் தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது,” மேலும் “மக்கள் குடியரசின் அரசாங்க உறுப்பினர்களில் பெரும்பான்மை யானவர்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், ஆனால் அதில் ஏகாதி பத்திய மற்றும் நிலப்பிர புத்துவ சக்திகளை எதிர்க்கும் மற்ற வர்க்கங்களைச் சேர்ந்த உறுப்பி னர்களும் அடங்குவர்.” இது குறுமுதலாளித்துவ வர்க்கத்தினருக்கு மட்டுமல்லாமல், தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினருக்கும் கூட ஜப்பானிய எதிர்ப்புப் போராட்டத்தில் சேர்வதை சாத்தியமாக்கியது. குடியரசு என்ற கருத்தை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை சீனாவின் குறிப்பிட்ட யதார்த்தங்களுடன் ஒருங்கிணைப்பதில் கட்சியின் ஒரு முக்கியமான கோட்பாட்டுச் திருப்புமுனையையும் இது உள்ளடக்கியிருந்தது.
”சீனா ஒன்றிணைக்கப்பட வேண்டும், ஒன்றிணைப்பு இல்லாமல் வெற்றி இல்லை.” மா சேதுங் சீனாவின் ஒன்றிணைப்பு குறித்து மேலே குறிப்பிட்ட விளக்கம், ஜப்பானியர்களுக்கு எதிராகப் போரிட்ட உள்நாட்டுக் குழுக்கள் ஒன்றுபடாத சூழ்நிலையை நோக்கியதாக இருந்தது. ஒரு மக்கள் குடியரசை நிறுவுவது குறித்த அவரது மூலோபாயச் சிந்தனை, முதலில் நாட்டை ஒன்றிணைப்பது, அனைத்து சீனத் தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து ஜப்பானியர் களுக்கு எதிராகப் போரிடுவது வலுவடைந்தது.
தேசிய சுயநிர்ணயமா? பிராந்திய தேசிய சுயாட்சியா?
ஜப்பானுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி பிராந்திய தேசிய சுயாட்சியை அமுல்படுத்தக்கூடிய பணிகளில் ஈடுபட்டது. தேசிய இனங்களை சீன தேசம் என்ற ஒற்றுமையின் கீழ் அணிதிரட்டுவது மட்டுமல்ல, அவர்களுக்கான சுயாட்சியை உருவாக்கக்கூடிய பணிகளையும் செய்ய ஆரம்பித்தார்கள். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்பது சுதந்திரம் தொடர்பானது அல்ல என்பதையும் சீன சூழலுக்கு ஏற்ற வகையில் பிராந்திய சுயாட்சிகள் உருவாக்குவது என்ற யதார்த்த சூழலை அமலாக்க தொடங்கினார்கள். தேசிய சுயாட்சி என்பது ஒரு ஒன்றுபட்ட நாட்டின் கீழ் சிறுபான்மை தேசிய இனங்கள் தங்கள் சொந்த உள் விவகாரங்களை நிறுவகிக்கும் சுய ஆட்சி முறையாகும்.
சுயாட்சி கொள்கை மீது மாசேதுங் அவர்கள் அளித்திருந்த முக்கியத்துவம் என்பது ஒன்றுபட்ட நாட்டில் நிறுவுவது குறித்த அவரது சிந்தனையுடன் நெருக்கமாக தொடர்புடையதாகும். பிராந்திய தேசிய சுயாட்சி அரசை ஷான்சி-கான்சு-நிங்சியா எல்லைப் பகுதியில் முதன்முதலில் அமைத்தார்கள். 1937 செப்டம்பர் 6 அன்று, முந்தைய “சீன சோவியத் மக்கள் குடியரசு என்ற பெயரில் இயங்கி வந்ததை, பிராந்திய சுயாட்சி அமைக்கும் முடிவின்படி மறுசீரமைக்கப்பட்டு “ஷான்ஸி-கான்சு-நின்ஸியா எல்லைப்பகுதி அரசு” என்று பெயரிடப்பட்டது. லின்போசு தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது சீன வரலாற்றில் முதல் கவுண்டி(மாவட்ட) அளவிலான சிறுபான்மை இன சுயாட்சி அரசாங்கமாகும். தன்னாட்சி கொள்கையின் அடிப்படையில், ஹுய் மக்களின் விவகாரங்கள் முற்றிலும் ஹுய் மக்களால் தீர்க்கப்பட வேண்டும்” என்று கட்சி அறிவித்தது. மத சுதந்திரக் கொள்கையின் அடிப்படையில், மசூதிகளைப் பாதுகாப்போம், ஆசிரியர்களைப் பாதுகாப்போம், ஹுய் மக்களின் முழுமையான நம்பிக்கை சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்போம்” என்று அது உறுதியளித்தது. செம்படை இராணுவம் “மூன்று தடைகள் மற்றும் நான்கு கவனங்கள்” என்ற வழிகாட்டுதல்களை வகுத்தது, இதில் மசூதிகளில் தங்குவதைத் தடை செய்தல், ஹுய் மக்களின் பழக்கவழக்கங்களை மதித்தல், ஹுய்-ஹான் இன ஒற்றுமைக்கு கவனம் செலுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த நடவடிக்கைகள் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெற உதவின.அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை அரபு மற்றும் சீனம் இரண்டிலும் பொறிக்கப்பட்டிருந்தது. இது உள்ளூர் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான மரியாதையை குறிக்கிறது. இந்த நிகழ்வு “ஹுய் மக்களின் விடுதலையின் முன்னோடி” என்று பாராட்டப்பட்டது. இந்த நிகழ்வு எட்கர் ஸ்னோவின் புகழ்பெற்ற புத்தகமான “ரெட் ஸ்டார் ஓவர் சைனா” பதிவு செய்யப்பட்டது.
மற்றொரு முக்கிய நிகழ்வும் குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய மங்கோலிய ஷாமனிசத்துடன் தொடர்புடைய, செங்கிஸ் கானின் வழிபாடு மங்கோலியர்களிடையே பிரபலமான ஒரு மதமாகும். வட சீனாவில் ஜப்பானின் ஊடுருவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜப்பானிய இராணுவம் மங்கோலிய தேசியவாதத்தை ஊக்குவிக்க செங்கிஸ் கானின் வழிபாட்டைப் பயன்படுத்த முயன்றது. இதற்கு பதிலடியாக, மங்கோலிய பிரபுக்களின் வேண்டுகோளின் பேரில், சீனாவின் தேசியவாத அரசாங்கத்தின் (குவோமின்டாங்) கீழ் இருந்த மங்கோலிய மற்றும் திபெத்திய விவகார ஆணையம் (Mongolian and Tibetan Affairs Commission) நடவடிக்கை எடுத்தது. அவர்கள் செங்கிஸ் கானின் நினைவுச் சின்னங்களையும் “நடமாடும் கல்லறை” (அவரது ஆவிக்குரிய பீடமான எட்டு வெள்ளை கூடாரங்கள் – Eight White Yurts) ஜப்பானியர் மற்றும் அவர்களின் பொம்மை ஆட்சியாளரான டெங் வாங்கின் (Demchugdongrub) கட்டுப்பாட்டில் விழாமல் பாதுகாக்க, பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. டெங் வாங் செங்கிஸ் கானின் வாரிசு என உரிமை கோரியவர் மற்றும் ஜப்பானியர்களின் மங்கோஜியாங் (Mengjiang) பொம்மை அரசை வழிநடத்துபவர் ஆவார்.
1939 ஜூன் மாதம், தேசியவாத அரசாங்கம் செங்கிஸ் கானின் பீடங்களை அவர்களின் பாரம்பரிய இருப்பிடமான ஓர்டோஸ் பகுதியில் இருந்து கான்சு மாகாணத்தின் யுஜோங் மாவட்டத்தில் உள்ள சிங்லாங் மலையில் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்தது. இந்த இடமாற்றப் பயணத்தின் போது, பீடங்கள் யானானைக் கடந்து சென்றன. அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள், இராணுவத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களால் வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு மற்றும் மாவோ அஞ்சலி மலர் வளையங்களைச் சமர்ப்பித்தார்.
செங்கிஸ் கானின் கல்லறைக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் மங்கோலியர்களின் மூதாதையர் வழிபாட்டிற்கான தங்கள் மரியாதையை CPC தலைமை வெளிப்படுத்தியது. சுயாட்சிக் கொள்கை மீது மா சேதுங் அளித்த முக்கியத்துவம், ஒரு ஒன்றுபட்ட நாட்டை நிறுவுவது குறித்த அவரது சிந்தனையுடன் நெருக்கமாக தொடர்புடையதாக இருந்தது.
சீனாவின் அனைத்து தேசிய இனங்களும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் வென்றெடுக்கும் அடித்தளத்தில் ஒரு புதிய நாட்டை நிறுவுவது அவசியமாக இருந்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய சமத்துவம் மற்றும் தேசிய சுயநிர்ணயக் கொள்கையின் சாராம்சத்தை உள்ளடக்கியுள்ளன. இந்த தேசிய சுயநிர்ணயம் என்பது, மா சே துங் எப்போதும் வலியுறுத்திய தேசிய சுயாட்சி உரிமைதான். சுயநிர்ணயம் என்பது சுதந்திரம் என்று பொருளல்ல. பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் நடைபெறும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில், சிறுபான்மை தேசிய இனங்கள் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தும் போராட்டம், புரட்சியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், ஒரு ஒன்றுபட்ட நாட்டை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய சக்தியாகவும் உள்ளது.
தனது ஆழ்ந்த நுண்ணறிவின் மூலம், மா சே துங், “நாட்டின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறைகள் நடைமுறைக்கு உகந்தவை அல்ல” என்பதை உணர்ந்தார். மேலும், சோவியத் கூட்டாட்சி மாதிரி சீனாவின் யதார்த்தங்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. அவர் சீனாவின் உண்மையான சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டார். அவரது தொடக்கப் புள்ளியாக இருந்தது, மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது, தேசிய சுயநிர்ணயத்தின் பொருளில் தேசிய சுயாட்சியை அவர் இணைத்தார். “சீனாவின் எல்லைகளுக்குள் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களின் சமத்துவம் மற்றும் சுயாட்சி உரிமையை அங்கீகரிக்கவும் செய்தார். இது சீனாவின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மா-சே-துங்கின் வரலாற்று பங்களிப்பாகும். அத்துடன் தேசிய சுயாட்சி குறித்த மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை சீனாவின் தேசிய இனப் பிரச்சினையின் யதார்த்தமான சூழ்நிலையுடன் ஒருங்கிணைப்பதில் ஒரு ஆக்கப் பூர்வமான வளர்ச்சியாகவும் இருந்தது.
கூட்டாட்சி முறையும் சுயாட்சி முறையும்
இறுதியில், கம்யூனிஸ்ட் அகிலத்தால் முன்வைக்கப்பட்ட சோவியத் கூட்டாட்சி முறையை சீன கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்து, பிராந்திய தேசிய சுயாட்சியைச் செயல்படுத்தியது. லெனினின் தேசிய இனங்கள் தொடர்பான கொள்கையான, “அரசில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நிபந்தனையற்ற சமத்துவத்தையும், ஒவ்வொரு தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் நிபந்தனையற்ற பாதுகாப்பையும் நாங்கள் கோருகிறோம். பிராந்தியங்களுக்கு பரந்த சுய-ஆட்சியையும் நாங்கள் கோருகிறோம், அவை மற்ற வரையறைகளுடன், தேசிய இனத்தின் அடிப்படையிலும் வரையறுக்கப்பட வேண்டும்” என்ற லெனின் வழிகாட்டலுக்கு இணங்க இருந்தது.
1957ஆம் ஆண்டு சோவியத் கூட்டாட்சி முறை குறித்தும் சீன பிராந்திய தேசிய சுயாட்சி குறித்தும் சீன பிரதமர் சௌ என் லாய் ஒரு ஆழமான விளக்கத்தை அளித்தார். சோவியத் யூனியனும் சீனாவும் வெவ்வேறு தேசிய நிலைமைகளை கொண்டிருந்தன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த இரண்டு நாடுகளும் வெவ்வேறு வழிகளில் அதிகாரத்தை பெற்றன என்பதையும் அதில் உள்ள வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டினார். வரலாற்று வளர்ச்சி போக்கு என்பது நமது தேசிய இனங்களிடையே ஒத்துழைப்பிற்கு தேவையான நிலைமைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் இங்கு உருவான புரட்சிகர இயக்கங்கள் அதற்கான பொருளாதார அடித்தளங்களையும் ஏற்படுத்தி உள்ளன. 1949 ஆம் ஆண்டு விடுதலைக்குப் பிறகு சீன மக்கள் குடியரசு ஏற்றுக்கொண்ட பிராந்திய சுயாட்சி மூலம் சுய ஆட்சி முறை என்பது நாட்டின் சமூக நிலைமைகளுக்கு பொருத்தமானது என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது என்றும் சௌ என் லாய் விளக்கம் அளித்தார்.
மேலும் சோவியத் யூனியனும் சீனாவும் தங்கள் தேசிய இன பிரச்சனைகளை தீர்த்த வழிகள் வேறுபட்ட தன்மையுடையது. இரு நாடுகளிலும் உள்ள சுயாட்சி வடிவங்கள் பெயரில் மட்டுமல்ல கட்டமைப்பிலும் அதன் சாராம்சத்திலும் வேறுபட்டு இருக்கின்றன என்பதை தெளிவுபட உணர்த்தினார். மக்கள் சீன குடியரசு நிறுவப்பட்டவுடன் பிராந்திய தேசிய சுயாட்சி என்பது மக்கள் சீன குடியரசின் ஒரு அடிப்படை அரசியல் நிறுவனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறுபான்மை தேசிய இனங்கள் அடர்த்தியாக வாழும் சீனாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த பிராந்திய சுயாட்சி முறைகள் செயல்படுத்தப்பட்டது. பிராந்திய தேசிய சுயாட்சி முறை என்பது மார்க்சியத்தை சீனமயமாக்களின் விளைவாக ஏற்பட்ட விளைபொருளாகும். இது சீன குணாதிசயங்களைக் கொண்ட சோசலிச அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்திருக்கிறது.
அ.பாக்கியம்
அடுத்த தொடர் டிசம்பர் 2 புதனன்று வெளியாகும்