Tamil Marx

தமிழ் நாடு

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி – தரமா? தராசா? – சைலஸ்

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி – தரமா? தராசா? – சைலஸ்
  • PublishedNovember 19, 2026

உயர்கல்வித்துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களைத் தனியார் தொடங்கும் நடவடிக்கையினைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கல்வியைப் பொதுக்கல்வி முறையிலிருந்து விடுவிக்க வலியுறுத்தும் தேசிய கல்விக்கொள்கையின் அங்கமே தனியார் பல்கலைக்கழகச் சட்டம். 2024-2026 வரையிலான காலங்களில் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்திலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றுள் இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரளமும் விதிவிலக்கல்ல.

தனியார் பல்கலைக்கழகச் சட்டம் சொல்வது என்ன?

பல்கலைக்கழக மானியக்குழு (UGC) 2003-ம் ஆண்டே தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் மற்றும் மேலாண்மை தொடர்பான விதிமுறைகளை வகுத்தளித்திருந்தது. அதில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் மாநிலங்களின் சட்டத்துக்கு உட்பட்டும், உயர்கல்வியை வணிக நோக்கில்லாமல், தரமான கல்வியை வழங்குவதை மட்டுமே இலக்காக கொண்டிருக்க வேண்டுமென கூறியிருக்கிறது. மேலும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அதன் கீழ் இணைப்புக் கல்லூரிகளை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்றும் மாணவர் சேர்க்கை, கல்விக்கட்டணம் மற்றும் உதவித்தொகைகள் போன்றவைகளை வழங்குவதில் மானியக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டுமெனவும் வரையறுத்துள்ளது.

தமிழ்நாட்டில் முதன்முதலாக அதிமுக ஆட்சி காலத்தில் 2019-ம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் பல்கலைக்கழகங்களைத் தனியார் நிறுவுவதற்கான வரம்புகளாக 100 ஏக்கர் நிலம் கொண்டிருக்கவேண்டும்; 50 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக (Endowment Fund) செலுத்த வேண்டும் போன்ற விதிமுறைகளை இந்த சட்டம் கொண்டிருந்தது. இச்சட்ட அமலாக்கத்திற்குப் பிறகு 8 தனியார் பல்கலைக்கழகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதோடு, புதிதாகச் சில சரத்துகளையும் சேர்த்துத் திமுக அரசு சட்டமாக முன்மொழிந்தது.

அரசு கல்வி நிறுவனங்களைத் தாரைவார்த்த சட்ட திருத்தம்

அவற்றில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதில் உள்ள வரம்புகளான நில அளவை 100 ஏக்கரிலிருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் முறையே 18, 25, 50 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் என்று வகைப்படுத்தியது. இன்னும் ஒருபடி மேலே போய் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளைக் பல்கலைக்கழகங்களாக (Brownfield Universities) நிறுவிக்கொள்ளலாம் என்று புதிய சரத்தைச் சேர்த்திருந்தது. இது பல தலைமுறைகளாக உருவாக்கப்பட்ட அரசின் சொத்துக்களை, மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கை என்று இடதுசாரி கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கடும் எதிர்ப்புகளையடுத்து அதனைக் கடந்த திமுக அரசாங்கம் திரும்ப பெற்றது.

தற்போது தவெக அரசாங்கம் தனது முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் அவசர அவசரமாக குரல் வாக்கெடுப்பின் மூலம் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தம் 2026-யை நிறைவேற்றியிருக்கிறது. தமிழ்நாடு ஆளுனர் மிக வேகமாக அதற்கு ஒப்புதலும் வழங்கியிருக்கிறார். இடதுசாரி கட்சிகள், பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே விவாதமே இல்லாத கட்டத்திலும் ஆரம்ப நிலையிலேயே இச்சட்ட திருத்தத்தை எதிர்த்திருக்கிறார்கள். 2026 சட்ட திருத்தம் சொல்வது என்னவென்றால், சென்னை போன்ற பெருநகரத்தில் 12 ஏக்கர், பிற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 18 ஏக்கர் மற்றும் பேரூராட்சி, ஊராட்சிப்பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் போதுமென்கிறது. மேலும் வைப்புத்தொகையையும் 50 கோடியிலிருந்து 25 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது. மேலும், இச்சட்டத் திருத்தம் ஏற்கனவே இயங்கி வருகின்ற சிவ்நாடார் பல்கலைக்கழகம், சாய் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்றிற்கும் பொருந்துமெனக் குறிப்பிட்டுள்ளது.

அரசின் பொருத்தமில்லா வாதம்

தமிழ்நாடு அரசின் அவசரகதியிலான இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் (SFI) மாநிலம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைகழகங்களில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தினை நடத்தியது. கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசின் முடிவில் மாற்றமேதுமில்லை. மாறாக பொருத்தமில்லாத வாதத்தையும், மாநில அரசு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை மறுத்தும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.விஸ்வநாதன் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழ்நாட்டு மாணவர்கள் பலரும் ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற வெளிநாட்டு பல்கலைகழகங்களை நோக்கி செல்வதால், பெரும் அன்னிய செலாவணி வீணாகிறது. நம் மாநிலத்திலேயே அப்படியான பல்கலைக்கழகங்களை உருவாக்கவே இந்த சட்டத் திருத்தம் என்கிறார்.

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் அதைத் தனியார் வந்துதான் செய்ய வேண்டுமா? என்பதே கேள்வி. உயர்கல்வியில் இந்திய சராசரியைவிட கூடுதலான விகிதத்தையும், தரமான மாணவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கியது மாநிலப் பல்கலைக்கழகங்கள்தான் என்பதை மறந்து அமைச்சரே பேசுவதென்பது அபத்தம்.

மேலும், மேற்கோள் காட்டுகின்ற ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைத் தனியார் யாரும் நிர்வகிக்கவில்லை. அந்தந்த நாடுகளின் நிதி பங்களிப்பிலேயே தன்னாட்சி நிறுவனங்களாக அவை செயல்பட்டு வருகின்றன. அதன்மூலமே தரமான கல்வியைப் பலருக்கும் வழங்கி வருகிறது. ஆகவே அமைச்சரின் கவித்துவச் சொற்றொடரான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் போன்ற முன்மாதிரி என்பது உண்மையல்ல. மேலும் “தனியார் பல்கலைக்கழகங்கள் வணிக நோக்கத்தில் செயல்பட மாட்டார்கள் என்னை நம்புங்கள்” எனக்கூறுபவர், அவர்களை கட்டுப்படுத்துவதற்குச் சட்டத்தில் ஏதேனும் வழிவகைகளைச் செய்திருக்கிறாரா? என்று பார்த்தால் அதற்கான சுவடுகளே இல்லை.

தனியார் பல்கலையின் உண்மை நிலை என்ன?

நாட்டிலேயே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக திகழும் 69% இட ஒதுக்கீடுத் தனியார் பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படுமா? ஏற்கனவே இயங்குகின்ற தனியார் பல்கலைக்கழகங்களின் சூழலை ஆராய்ந்து பார்த்தால் இல்லை என்பதே வெளிப்படை. உள்ளூர் மாணவர்களைவிட, வெளிமாநில மாணவர்களே தனியார் பல்கலைக்கழகங்களில் அதிகம் படித்து வருகிறார்கள். கல்வி கட்டணங்கள் ஒரு பருவத்திற்கு (Semester) லட்சத்தில்தான் தொடங்குகின்றன. அதுபோக சேர்க்கை கட்டணம் (Admission Fee) ரூ.20 ஆயிரம் என்று தனியார் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்திருக்கின்றன.

பொதுவாகக் கல்வி கட்டணம் என்பது ஒரு கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே கட்டணமாக இருக்க வேண்டுமென்பதே மானியக்குழுவின் (UGC) விதிமுறை. ஆனால் +2 மதிப்பெண்கள் வாரியாக வட்டிக்கணக்கில் கல்வி கட்டணத்தைத் தனியார் பல்கலைக்கழகங்கள் வசூலித்து வருகின்றன. இதுபோதாது என்று கல்வி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 5% உயர்த்தப்படுகின்றன. இந்த சூழல் மாநிலத்தின் சாதாரண, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் தரமான கல்வியைப் பெறுவதை வாசற்படியிலேயே தடுத்து நிறுத்துகின்றது. இதுவே தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்கள் கல்விச்சேவை வழங்குகின்ற லட்சணம். இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமும், உயர்கல்வித்துறையும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்ற சூழலில் அமைச்சர், “நான் உறுதியளிக்கிறேன் நம்புங்கள்” என்கிறார்.

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விச்சூழல்

சிறந்த உட்கட்டமைப்பு, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி வழங்கப்படுவதாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. பெருவாரியான பல்கலைக்கழகங்களில் தகுதியற்ற நபர்களை நிர்வாகம் தொடங்கி பேராசிரியர்கள் வரை நியமனம் செய்கிறார்கள். எவ்வித கல்விச் சுதந்திரமும் இந்த பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. அரசின் கொள்கைகளை, பாரபட்சமான நடவடிக்கைகளை விமர்சித்ததற்காக மாணவர்கள், பேராசிரியர்கள் எனப் பலரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகள் பலவற்றையும் தனியார் பல்கலைக்கழகங்கள் காற்றில் பறக்கவிட்டிருக்கின்றன. மாநிலத்தில் தற்போதுள்ள பல தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விப்படிப்புகளானது சந்தைக்குத் தேவையான தொழில், வர்த்தக நோக்கிலேயே தொடங்கப்பட்டுள்ளன. புதிய சிந்தனைகளின் வழியாகப் படைப்புகளை மீளுருவாக்கம் செய்யும் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், தத்துவவியல், மானுடவியல் மற்றும் மொழியியல் போன்ற Humanities படிப்புகளைத் தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்குவதில்லை.

அரசின் பிடிமானத்தைத் தளர்த்தும் காங்கிரஸ் அரசாங்கம்

2024-2026 வரையிலான காலங்களில் கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் சட்டமன்றத்திலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அதில் இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரளமும் விதிவிலக்கல்ல. அம்மாநிலத்தில் 2025-ம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன் சரத்துகள் பல அரசின் கட்டுப்பாட்டில், விதிமுறைகளின்படி இயங்க தனியார் பல்கலைக்கழகங்களை இடது ஜனநாயக அரசு நிர்பந்தித்தது. உதாரணமாக கேரளத்தில் உள்ளூர் மாணவர்களுக்கு 40% சேர்க்கை, இட ஒதுக்கீடு, கல்வி கட்டண நிர்ணயம் மற்றும் மாணவர் பேரவை தேர்தல், சிண்டிகேட், செனட் போன்ற நிர்வாக அடுக்குகளில் பேராசிரியர், மாணவர்களின் ஜனநாயகத்தன்மையை அச்சட்டம் உறுதி செய்திருந்தது. ஆனால் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்த சரத்துக்களையும் காவு வாங்கி தனியாருக்குச் சாதகமாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

அரசு பல்கலைக்கழகங்களின் அவல நிலை

தமிழ்நாட்டின் பல மாநில பல்கலைக்கழகங்கள் நாட்டிலேயே சிறந்த உயர்கல்வி நிறுவனங்களாக திகழ்வதோடு, தரமான ஆராய்ச்சி மாணவர்களையும் உருவாக்கி வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு அவற்றின் நிலைமையைப் பலப்படுத்துவதை விடுத்து கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை. போதுமான நிதி வழங்காத நிலையில் பல்கலைக்கழகங்கள் நெருக்கடியினைச் சந்தித்து திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் ‘பட்டம்’ உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மறுபுறம் பேராசிரியர்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் ஆகியன வழங்க இயலாத அவல நிலையில் மாநில பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 10 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமயும், பணி உயர்வு வழங்கப்படாமையும் ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையைச் சீர்குலைத்திருக்கிறது. அடிப்படையான இந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய வேண்டிய மாநில அரசாங்கம் தன் பொறுப்பைத் துறந்து தனியார் பல்கலைக்கழகங்களுக்குச் சாமரம் வீசுவென்பது மக்கள் விரோத முடிவுகளுக்கே இட்டுச்செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வார்கள்.

 

கட்டுரையாளர்: தே. சைலஸ் அருள்ராஜ், இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர்.

Written By
tamilmarxorg