சீன தேசம்∶ ஒரு பொதுவான சொல்-அ.பாக்கியம்
சீனாவின் பல இன தேசிய சூழல் குறித்த புரிதல் ஆரம்பத்தில் புலன் சார் நிலையில் இருந்தது. இந்த புலன்சார் உணர்வை பகுத்தறிவு நிலைக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி உயர்த்தியது. ஒரு விஷயத்தைப் பற்றி நாம் முதலில் புலன்கள் மூலமாக பெறுகின்ற தகவல்கள் அதாவது பார்த்தல், தொடுதல், கேட்டல் போன்ற உணர்வுகள் ஆரம்ப நிலை மட்டுமே. அந்த தகவல்களை சிந்தனை பகுப்பாய்வு செய்வது, தர்க்கம் ஆகியவற்றின் மூலம் ஆழமாக ஆராய்ந்து உண்மையான சாராம்சத்தை புரிந்து கொள்வது புலன் சார்ந்த நிலையில் இருந்து பகுத்தறிவு நிலைக்கு உயர்த்துவது என்பதாகும். இந்தப் பின்னணியில்தான் எதார்த்தத்தில் இருந்து உண்மையை தேடுதல் என்ற கொள்கை வலியுறுத்தப்படுகிறது.
மார்க்சிய பொருள் முதல் வாதத்தின் அடிப்படையே கருத்து முதல் அல்ல. மாறாக பொருள்தான் அடிப்படை என்பதை உணர்த்துகிறது. புறநிலையில் இருக்கும் உண்மை நிலவரங்களை நமது சிந்தனைக்கும் கொள்கைக்கும் அடிப்படையாக அமைகிறது. இந்த அடிப்படையில் தான் எதார்த்தத்தில் இருந்து தொடங்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பொருளாதார அமைப்பு, வரலாற்று பின்னணி, புவியியல் சூழல் மற்றும் மக்களின் நடைமுறை தேவைகள் போன்ற புறநிலை உண்மைகளை மதிப்பீடு செய்வதாகும். இதுதான் பகுத்தறிவு நிலைநோக்கிய முன்னேற்றம்.
மார்க்சியத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான முன் நிபந்தனை என்னவென்றால் தேசிய எதார்த்தங்களில் இருந்து தொடங்கி, சீனாவின் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் புரட்சிக்கும் மற்றும் வளர்ச்சிக்கான பாதையை உறுதியாக பின்பற்றுவதாகும். எனவே பிரச்சன தீர்ப்பதற்கு மார்க்சிய இன கோட்பாட்டை சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்துவதில் சீனாவின் உண்மையான தேசியச் சூழலே தொடக்கப் புள்ளியாகவும், அடித்தளமாகவும் அமைகிறது.
எனவே சீன மயமாக்கல் என்பது வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. அது மார்க்சிய கோட்பாடுகளை சீனாவின் குறிப்பிட்ட தேசிய உண்மைகளுடன் இணைத்து புதிய கோட்பாட்டு முடிவுகளை உருவாக்கும் செயல்முறைகள் ஆகும். இதன் வழியாகத்தான் சிறுபான்மை இனங்களின் பிராந்திய தன்னாட்சி (regional autonomy for minorities) என்பது சீனாவில் மார்க்சியை இன கோட்பாட்டின் ஒரு முக்கிய படைப்பு மாற்றம் ஆகும்.
சீன வரலாற்றில் கிங் வம்ச ஆட்சியை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களும் மேற்கத்திய நாடுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்த போராட்டங்களும், அதைத்தொடர்ந்து சன் யாட் சன் தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சியும் சீனாவில் தேசிய இன உணர்வை மேலோங்க செய்தது. இக்காலத்தில் ஹான் பெரும்பான்மை தேசிய இன உணர்வு முன்னிலைப்படுத்தப்பட்டது. இதன் எதிர் விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு சன் யாட் சன் அவர்கள், சீனா ஐந்து இனக்குழுக்களின் தேசியம் என்ற கருத்தை முன் வைத்தார். சீனாவின் எதார்த்த நிலைமை இன்னும் பல இனக்குழுக்கள் இருந்தது என்பதுதான் குறிப்பான அம்சம்.
1917 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, அந்தப் புரட்சி உலகின் பல நாடுகளில் ஏற்படுத்திய தாக்கத்தை விட அருகமை நாடான சீனாவின் மீது மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1921 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. சோவியத் மாதிரி புரட்சியையும் மார்க்சிய இன கோட்பாட்டையும் சீனத்தில் பொருத்துவதற்கான முறைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிக் கொண்டது . ஆனால் தேசிய இன பிரச்சனையில் அவற்றை சீனாவில் நடைமுறைப் படுத்துகிற பொழுது மாறுபட்ட அனுபவங்களை பெற முடிந்தது குறிப்பாக 1934 ஆம் ஆண்டு துவங்கிய செம்படையின் நீண்ட அணிவகுப்பு தேசிய இனப் பிரச்சனைகளை சோதிக்கும் ஒரு களமாகவே இருந்தது. சிறுபான்மை தேசிய இனங்களின் சூழ்நிலையின் தீவிரத்தைப் பற்றி ஒரு தெளிவான புரிதலை பெறுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த அணிவகுப்பு மிகப்பெரிய பாடமாக அமைந்தது.
புதிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றிக், ஏகாதிபத்தியம் குவோமிங்டாங் ஆட்சி மற்றும் தேசிய ஒடுக்கு முறை ஆகியவற்றை எதிர்ப்பதற்காக நாட்டின் நெருக்கடியான நேரத்தில் அனைத்து தேசிய இனங்களையும் அணிதரட்டுவது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தவிர்க்க முடியாத தேர்வாக மாறியது. ஜப்பானிய ஏகாதிபத்திய வாதிகளின் ஆக்கிரமிப்புப் போரும், வடகிழக்கு மற்றும் உள் மங்கோலியாவில் அவர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டதும், சீனாவின் அனைத்து தேசிய இனங்களையும் அனைத்து வர்க்க மக்களையும் ஒரே மனதுடன் ஒன்றிணைத்து ஜப்பானியர்களை கூட்டாக எதிர்ப்பதை சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு அவசரமான பணியாக மாற்றியது.
ஜப்பானிய படையெடுப்பை எதிர்த்து போராடுவதற்கு அன்றைய தினம் ஆட்சியில் இருந்த குவோமிங்டாங் கட்சியின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகளுக்கு அந்தக் கட்சியின் தலைவரும் அதிபருமான சியாங் காய்-ஷேக் ஒத்துழைக்கவில்லை. இந்தத் தருணத்தில் சியான் சம்பவம் நடந்தேறியது. 1936 ஆம் ஆண்டு, ஜப்பானின் படையெடுப்பு அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC) தேசிய ஒற்றுமை முன்னணியை உருவாக்க அழைப்பு விடுத்தது . ஆனால், குவோமின்டாங் (KMT) தலைவர் சியாங் காய்-ஷேக், “உள்நாட்டு அமைதியை முதலில் நிலைநாட்ட வேண்டும்” என்ற கொள்கையை கடைப்பிடித்து, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார். இதனால் மனமுடைந்த குவோமின்டாங் KMT தளபதிகள் சாங் சியூ-லியாங் மற்றும் யாங் ஹு-செங் ஆகியோர், 1936 டிசம்பர் 12 அன்று சியான் நகரில் வைத்து சியாங் காய்-ஷேக்கைக் கைதுசெய்தனர். உள்நாட்டுப் போரை நிறுத்தி, ஜப்பானுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று அவர் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்
இந்த சம்பவம் ஒரு பெரிய உள்நாட்டுப் போரைத் தூண்டக்கூடும் என்ற அபாயத்தை உருவாக்கியது. இதை உணர்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, உடனடியாக அமைதியான தீர்வுக்கான கொள்கையை ஏற்றது. டிசம்பர் 17 அன்று, சௌ என்-லாய் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் சியான் வந்தடைந்தனர். அவர்கள் சாங் மற்றும் யாங் ஆகியோருடன் நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பல நாட்கள் பேச்சுக்குப் பிறகு, கீழ்க்கண்ட உறுதிமொழிகளை ஏற்குமாறு சியாங் காய்-ஷேக் வற்புறுத்தப்பட்டார். கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் கொள்கையை நிறுத்துதல். செம்படையுடன் இணைந்து ஜப்பானை எதிர்த்துப் போராடுதல். ஆட்சியில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுதல்.
இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில், சியாங் காய்-ஷேக் விடுவிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடந்து வந்த குவோமின்டாங்-கம்யூனிஸ்ட் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
குவோமின்டாங்-கம்யூனிஸ்ட் இடையே இரண்டாவது முறையாக ஒத்துழைப்பு உருவானது. இது ஜப்பானிய படையெடுப்பிற்கு எதிரான தேசிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது .
ஜப்பானியர்களை எதிர்க்க ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்குமாறு மா சே துங் கோடிக்கணக்கான சீன மக்களுக்கு அழைப்பு விடுத்தார். ஒரு “தேசிய ஐக்கிய முன்னணி” என்பது சீனாவின் அனைத்து தேசிய இனங்களையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கியப்பட்ட சக்தியாகும். இதை ஒரு ஐக்கியப்பட்ட சீன தேசம் என்று அழைக்கலாம். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் சீனாவுக்கும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான மோதலால் ஏற்பட்ட நெருக்கடி வேகமாக அதிகரித்தபோது, தேசிய இனங்களின் அணிதிரட்டல் வர்க்கங்களின் அணிதிரட்டலை விஞ்சி நின்றது. மேலும் சீனாவின் அனைத்து தேசிய இனங்களையும் உள்ளடக்கிய பரந்த அளவிலான ஜப்பானிய எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணி நிறுவப்பட்டது. சீனாவின் தேசிய இனங்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம், சீனாவின் தேசிய இனங்களின் பொதுவான தன்மை மற்றும் அவற்றின் பொதுவான நலன்கள் குறித்த சித்தாந்த மற்றும் கோட்பாட்டு விளக்கத்திற்கு தவிர்க்க முடியாமல் வழிவகுத்தது.
இந்தப் பின்னணியில் சீன தேசியம் என்றால் வரையறை என்ன? சீன தேசத்தின் எல்லை என்ன? என்ற விவாதங்கள் முன்னுக்கு வந்தன. கல்வியாளர்கள் சீன தேசம் குறித்து அடிக்கடி விவாதித்தார்கள். அந்த நேரத்தில்,மேற்கத்திய கல்வி கிழக்கில் பரவியபோது பரப்பப்பட்ட அறிவு, சீனாவின் பாரம்பரிய கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தது. மேலும் இனவியல், மானுடவியல், தேசிய வரலாறு மற்றும் எல்லைப்புற அரசியல் அறிவியல் ஆகிய துறைகள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்திருந்தன.
1937-ல், தேசிய இனங்களின் வரலாற்றாசிரியரான ஜியாங் யிங்லியாங், சீன தேசம் என்ற சொல் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார், “நாம் நம்மைப் புரிந்துகொண்டு சீனாவை புத்துயிர் பெறச் செய்ய முடியும் என்று நாம் கூறலாம். சீனாவின் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து தேசிய இனங்களைப் பற்றியும் நமக்குச் சமமான ஆழமான புரிதல் இருந்தால்தான் ஒரு தேசத்தைப் பற்றிப் பேச முடியும்.” என்றார். இக்காலத்தில் பல்வேறு தேசிய இனங்களைப் பற்றிய குறிப்புகள் தோன்றின. மேலும் குவோமின்டாங் கட்சியிலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் திட்டங்களில் தேசிய இனங்கள் குறித்து அடிக்கடி குறிப்பிடப்பட்டன. அத்துடன், சன் யாட்-சென்னின், “நம் நாட்டில் ஐந்து தேசிய இனங்கள் மட்டுமே இருப்பது எப்படி?” என்ற கூற்றும் அடிக்கடி குறிப்பிடப்பட்டது. காரணம் இவற்றை கடந்த பலதேசிய இனங்கள் வரலாறு, பாரம்பரியம், மொழி, ஆகியவற்றை உள்ளடக்கி இருந்தன. இருப்பினும் ஹான் தேசிய இனம்தான் சீன தேசம் என்ற பார்வை பரவலாக இருந்தது.
ஆனால் கல்வியாளர் ஜியாங் யிங் லியாங்கின் கண்ணோட்டம், அன்றைய சீனாவின் பல்லின அமைப்பு மற்றும் சீன தேசத்தின் பல்லின அடித்தளம் பற்றிய புரிதலில் உறுதியாக வேரூன்றியிருந்தது. மற்றொரு கல்வியாளர் ஃபெய் சியாவோடாங் “தேசிய இனங்கள் பற்றிய பிரச்சனையின் ஒரு விவாதம்” என்ற நூலில், “தேசம்” என்ற கருத்தின் உட்பொருளைப் பற்றிய ஒரு கருத்தியல் பகுப்பாய்வை மேற்கொண்டார். சீன மக்கள் வெவ்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் உடல் அமைப்புகளைக் கொண்ட வெவ்வேறு குழுக்களிலிருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் இதன் அடிப்படையில், பல தேசிய இனங்களால் ஆன அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட நாடான சோவியத் ரஷ்யாவுடன் சீனாவை ஒப்பிட்டார். சுருக்கமாக, முந்தையவர் சீன தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தினார். பிந்தையவர் அதன் பன்முகத்தன்மையை வலியுறுத்தினார். இந்த விவாதம் பெரும்பாலும் ஒருபுறம் வரலாற்றாசிரியர்களுக்கும், மறுபுறம் இனவியலாளர்கள் மற்றும் மானுடவியலாளர்களுக்கும் இடையிலான ஒரு உரையாடலாக மட்டும் இருக்கவில்லை. மாறாக இந்த உரையாடல் சீனாவை ஒரு நவீன தேசிய-அரசாக மாற்றுவதில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சீன தேசம் என்ற கருத்து குறித்த விவாதம் கல்வி வட்டாரங்களுக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. இது நாட்டின் தலைவிதி மற்றும் எதிர்காலப் போக்கைப் பாதிக்கும் ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையாக இருந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையும் நீண்ட அணிவகுப்பில் கிடைத்த அனுபவங்களை பெற்றிருந்த காரணத்தினால் சீன தேசம் பற்றியும் தேசியம் பற்றிய தெளிவான முடிவுக்கு வந்தார்கள். 1939 ஆம் ஆண்டு மாசேதுங் சீன புரட்சியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் என்ற நூலை வெளியிட்டார். அந்த நூலில் அவர் இதற்கு முன் சீன தேசம் குறித்து பேசியவர்களின் கருத்துக்களில் இருந்து அவற்றை மிஞ்சக் கூடிய வகையில் தனது கருத்தை வெளியிட்டார். சீன தேசம் குறித்த ஒரு புதுமையான விளக்கத்தை அளித்தார். சீனாவின் மக்களில் பத்தில் ஒன்பது பேர் ஹான் தேசிய இனத்தைச்சேர்ந்தவர்கள்.மங்கோலியர், ஹுய், திபெத்தியர், உய்குர், மியாவ், யி, சுவாங், சோங்ஜியா மற்றும் கொரிய தேசிய இனங்கள் உட்பட பல சிறுபான்மை தேசிய இனங்களும் உள்ளன.
இந்த இனங்கள் அனைத்தும் வெவ்வேறு கலாச்சார வளர்ச்சி நிலைகளில் இருந்தாலும் அவை அனைத்தும் நீண்ட வரலாற்றைக் கொண்டவை என்பதை மனதில் நிறுத்த வேண்டும். எனவே சீனா என்பது பல தேசிய இனங்களால் ஆன மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு என்று வரையறை கொடுத்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது. சீன தேசம் என்பது அனைத்து இனங்களையும் உள்ளடக்கியது மட்டுமல்ல இது உலகின் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அமைதியை விரும்பும் தேசமாகும். சீனா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு. சீன தேசம் என்ற சொல் அதன் எல்லைகளில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவான ஒரு சொல்லாகும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலையை தெளிவுபடுத்தியது.
சீன தேசம் மட்டுமல்ல சீன இனம் பற்றி மாசே துங் தெரிவிக்கிற பொழுது சீனா ஒரு பல்லின நாடு என்றும், சீன இனம் (Zhonghua Minzu) என்பது அனைத்து இனக்குழுக்களின் பொதுப் பெயர் என்றும் தெளிவாக வரையறுத்தார். இந்த சொல் குறிப்பிட்ட இன அல்லது கலாச்சார எல்லைகளைத் தாண்டிய பன்மை-இன, ஒருங்கிணைந்த தேசிய சமூகம் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தக் கருத்துரு, சீனாவின் எல்லைகளுக்குள் உள்ள அனைத் இது மக்களின் கூட்டு அடையாளத்தைக் குறிக்கிறது. பல்வேறு குழுக்களை ஒரு ஒருங்கிணைந்த ஒன்றாக இணைக்கிறது. இது கம்யூனிஸ்ட் கட்சியின் சீன இனம் (Zhonghua Minzu) கருத்து இறுதி வடிவம் பெற்றதைக் குறித்தது.
அ.பாக்கியம்