சீனா பல இன தேசமாக பரிணமித்தல்-
அனைத்து மனிதர்களுக்கும் ஒரு பொதுவான தோற்றம் உண்டு என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது. நமது மூதாதையர்கள் அனைவரும் பூமியில் உள்ள ஒரே குறிப்பிட்ட பரிணாமக் கிளையிலிருந்து அதாவது ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டல காடுகளில் வாழ்ந்த மனிதக் குரங்கிலிருந்து தோன்றியவர்கள் என்பதை நிரூபித்துள்ளது. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக பரிணமித்தது, ஒரு குறிப்பிட்ட புவியியல் சூழலில் நிகழ்ந்தது. பூமியில் உயிர் ஒரே ஒரு முறை மட்டுமே தோன்றியது. மனிதக் குரங்கிலிருந்து ஒரே ஒரு முறை மட்டுமே பரிணாமம் அடைந்தனர்.
இன்றைய மனித சமூகத்தில் தேசிய இனங்கள் எவ்வளவு சிக்கலானதாகவும் பன்முகத் தன்மை கொண்டதாகவும் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு பொதுவான மூதாதையரைத்தான் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதுதான் அறிவியல். மனிதர்கள் அனைவரும் இயற்கை உலகம், விளங்கு ராஜ்ஜியம், பாலூட்டிகளின் வகுப்பு, ஹோமினாய்டு குடும்பம், ஹோமோ பேரினம் மற்றும் ஹோமோ சேபியன்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். இதுவே முழு மனித இனத்தின் பொதுவான உயிரியல் அடித்தளம். உயிரியலில் மனித இனம் என்ற கருத்து ஒருங்கிணைந்த கருத்தாகும்.
மனித இனம் ஒருங்கிணைந்த ஒன்று. ஆனால் தேசிய இனங்கள் வேறுபட்டவை. மேலும் அவை உருவாக்கிப் பரப்பும் பண்பாடுகளும் வேறுபட்டவை. தேசிய இனங்களுக்கு இடையேயான கலாச்சார வேறுபாடுகள், அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் இயற்கையை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் மற்றும் இயற்கையை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதன் விளைவாகும். உதாரணமாக, மலைக் காடுகளில் வாழும் வேட்டைக்காரர்கள் மற்றும் இடமாற்று விவசாயிகளும், ஆறுகள் மற்றும் கடலோரங்களில் வாழும் மீனவர்களும், பாலைவனப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மேய்ப்பர்களும், பரந்த சமவெளிகளில் வாழும் நிலையான விவசாயிகளும் வெவ்வேறு இயற்கை சூழல்களில் வாழும் வெவ்வேறு மனித சமூகங்கள் ஆவர்.
அவர்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும், இயற்கையின் கொடைகளைத் தழுவிப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் உயிர்வாழ்ந்து பெருகிவதற்காக அவர்களால் உருவாக்கப்பட்டவையே ஆகும். அவர்களின் வேறுபாடுகள், “பூமியில் உள்ள வெவ்வேறு மக்களிடையே இந்தச் சிரமங்கள் வேறுபட்டவையாக இருந்துள்ளன, மேலும் அவற்றை நாம் கடந்து செல்லும் விதத்தில்தான் நமது இலக்கு அடங்கியுள்ளது” என்பதைக் காட்டுகின்றன. ஒரு தேசியம் எவ்வளவு பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தாலும், அல்லது அதன் வளர்ச்சியின் நிலை எதுவாக இருந்தாலும், அதன் உருவாக்கம் மனிதப் படைப்பே ஆகும். மேலும், இந்த உருவாக்கத்தின் பன்முகத்தன்மை, ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதான ஒவ்வொரு தேசிய இனத்தின் பலமான அம்சங்களையும், அத்துடன் மனித நாகரிகத்தின் வரலாற்றின் பரப்பையும் மேன்மையையும் வெளிப்படுத்துகிறது.
சீன இனங்களும் தேசமும்
சீனாவின் நாகரீகம் பல மூலங்களிலிருந்தும் பல நீரோட்டங்களிலும் வேரூன்றி உள்ளது. சீனா நீண்ட வரலாற்றை கொண்ட பழங்கால கிழக்கத்திய நாகரீகம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒரு தொடர்ச்சி இன்று வரை உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு மேலான அதன் வளர்ச்சியில் சீனா பலபிராந்திய மாற்றங்களையும், வம்ச மாற்றங்களையும் கண்டது. பல்வேறு அரசியல் சிதைவுகளை சந்தித்தாலும் சீனாவின் ஒற்றுமை என்பது ஒரு பொதுப் போக்காக வரலாற்றில் இருந்தது. சீனாவில் இனங்களின் உருவாக்கம் குறித்து கீழ்க்கண்ட சில அம்சங்களை அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். புதிய கற்கால பண்பாடுகளின் பரவல்காலத்தில் பல இனக்குழுக்கள் சேர்ந்தும் பிரிந்தும் புதுவகையான இனக் குழுக்கள் உருவானது. யாங்சாவோ பண்பாடும், அதனால் தோற்றுவிக்கப்பட்ட லாங்ஷான் பண்பாடும் படிப்படியாக ஷியா அல்லது ஹுவாக்சியா இனக் குழுவாக மாறியது. தாவென்கோ பண்பாடும், அது தோற்றுவித்த ஷான்டாங் லாங்ஷான் பண்பாடும் அடிப்படையில் படிப்படியாக கிழக்கு யி இனக் குழுவாக மாறியது. ஹேமுடு, மாஜியாபாங், லியாங்ஷு, டாக்சி மற்றும் குஜியாலிங் பண்பாடுகள், மற்ற தெற்கு புதிய கற்காலப் பண்பாடுகளுடன் சேர்ந்து, படிப்படியாக தெற்கு மான் இனக் குழுவாக மாறின. சீன மக்கள் பொதுவாக சீனாவின் ஐந்து திசைகளில் இருந்து, அதாவது கிழக்கிலிருந்து யி மக்கள், தெற்கிலிருந்து மான், மேற்கி லிருந்து ரோங், வடக்கிலிருந்து டி, மற்றும் மையப்பகுதி யிலிருந்து ஹுவா என ஐந்து திசைகளில் இருந்து வந்த மக்கள் என்பதை பதிவிட்டு வந்துள்ளனர்.
சீனாவில் சீனாவின் பெரும் ஒருங்கிணைப்பு என்ற செயல்முறை அதாவது பல இனங்கள் ஒன்றிணைந்த நிகழ்வுகள் நான்கு முக்கிய கட்டங்களாக நடைபெற்றதை வரலாற்று ஆசிரியர்கள் குறிக்கிறார்கள். அவை கின் மற்றும் ஹான் வம்சங்கள், சுய் மற்றும் டாங் வம்சங்கள், யுவான் வம்சம் மற்றும் சிங் வம்சம் போன்றவை ஆகும். இவை சீன வரலாற்றில் இனங்களின் இணைவு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான முக்கிய கட்டங்களாகும். இவை சீனத் தேசத்தின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அழியாத பங்களிப்புகளை வழங்கியுள்ளன.
இருப்பினும் சீனாவில் தேசிய உணர்வு என்ற உள்ளடக்கம் மேலோங்கிய காலகட்டம் என்பது 1840 முதல் 1949 வரையிலான நூற்றாண்டுகளின் அவமானத்தை சந்தித்த அந்த காலகட்டமாகும். மஞ்சு இனம் சீனாவை ஆக்கிரமித்து சுமார் 260 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. இக்காலத்தில் மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாடுகள் சீனாவில் அபினியுத்தம் துவங்கி பல்வேறு விதமான சமமற்ற ஒப்பந்தங்களில் சீன மக்களை வேட்டையாடினார்கள். இந்த காலகட்டத்தில் சீன தேசம் என்ற உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்தது. குறிப்பாக ஹான் மக்கள் “உண்மையான சீன நாகரிகத்தை” பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மஞ்சு மக்கள் புல்வெளி நாடோடிகளாக இருந்து, இந்த உன்னதமான கலாச்சாரத்தை மாசுபடுத்தியதாகவும் அல்லது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் வாதிடப்பட்டது. சன் யாட்-சென் போன்ற புரட்சியாளர்கள் ஆரம்பத்தில் “மஞ்சுகளை விரட்டி, சீனத்தை மீட்டெடுங்கள்” என்ற முழக்கத்தைப் பயன்படுத்தினர். “மஞ்சு ஆட்சி அகற்றப்பட்டால், சீனா மீண்டும் வலுவடையும்” என்று அவர்கள் நம்பினர். இந்தக் கருத்து, ஹான் இனத்தின் மேன்மையை வலியுறுத்தியது, இது நவீன மேற்கத்திய இனக் கோட்பாடுகளால் (Social Darwinism) பாதிக்கப்பட்டது. அதன்படி, பலவீனமான மஞ்சு இனம் வெளியேற்றப்பட வேண்டும், மேலும் “உயர்ந்த” ஹான் இனம் மேற்கத்தியர்களுடன் போட்டியிட வேண்டும்.
பின்னர், சன் யாட்-சென் இந்தக் கருத்தை மாற்றி, “ஐந்து இனங்கள் ஒன்றாக” ஹான், மஞ்சு, மங்கோலிய, ஹுய், திபெத்திய என ஒரு பன்முக இன தேசத்தைக் கட்டமைக்க விரும்பினார். இது, இன மோதலைக் காட்டிலும் “ஒருங்கிணைப்பு” மற்றும் “நவீன தேசிய அடையாளத்தை” உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இருப்பினும், இந்த ஆரம்ப “ஹான் மேன்மை” கருத்து, பிந்தைய கிங் காலத்திலும், 1911 சின்ஹாய் புரட்சியிலும் மிகவும் செல்வாக்கு செலுத்தியது. இந்தப் பின்னணியில் 1911 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு புரட்சி காலத்தில் தேசிய இனத்தின் தன்மைகள் எவ்வாறு இருந்தது என்பதை பார்ப்பதும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டு நீண்ட அணிவகுப்பிற்கு பிறகு தேசிய இனங்கள் குறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டங்களும் வேறுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.
1911 இல் சன் யாட் சன் தலைமையில் நடைபெற்ற குடியரசு புரட்சி கிழக்குலகத்திற்கும், சீனாவிற்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்திய ஒரு புரட்சியாகும். 2000 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவை ஆட்சி செய்த நிலபிரபுத்துவ முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சீனா தனது கடுமையான வறுமையில் இருந்தும், பலவீனத்திலிருந்தும், மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் இடைவிடாத கொடுமைகளிலிருந்தும், விடுபடுவதற்கு இந்தப் புரட்சி உதவியது. ஒருங்கிணைந்த அரசு மற்றும் ஒரு தேசத்தின் பாதையில் பயணிக்கவும் சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை தொடங்கவும் இந்த புரட்சி வழி வகுத்தது. இந்தப் புரட்சி நிலபிரபுத்துவ முடியாட்சியிலிருந்து ஒரு நவீன தேசிய அரசுக்கான மாற்றம் தொடங்கியது என்பது மட்டுமல்ல, சீன மக்களின் நிலை இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, மக்கள் “குடிகள்” என்பதில் இருந்து ஒரு தேச-அரசின் உரிமைகளையும், கடமைகளையும் கொண்ட “குடிமக்கள்” அல்லது “தேசத்தவர்கள்” (nationals) என்ற நிலைக்கு மாற்றம் அடைந்தனர். தேசிய ஒற்றுமைக்கு அடிப்படையான தேசிய இன உணர்வையும் உருவாக்கியது.
“கிங் வம்சத்தை வீழ்த்து, மஞ்சூக்களை வெளியேற்று” என்பதுதான். சன் யாட்-சென் தலைமையிலான 1911 புரட்சியானது ஒரு சீன தேசிய-அரசை உருவாக்குவதற்கான தொடக்கமாக இருந்தது. ஒரு தேசிய விடுதலை இயக்கத்தைத் தொடங்குவதற்கும் ஒரு தேசிய-அரசை உருவாக்குவதற்கும் தேசியவாதம் மிகவும் சக்திவாய்ந்த அறிவுசார் உந்துதலாக இருந்தது. ஒரு நவீன தேசிய-அரசை நிறுவுவதற்கான பல முன்மொழிவுகளில், மஞ்சூக்களை வெளியேற்றி சீனாவை மீட்டெடுப்பது மற்றும் ஹான் தேசிய இனம் பெரும்பான்மையாக இருந்த 18 மாகாணங்களின் அடிப்படையில் சீனாவை மறுசீரமைப்பது என்ற இனவாத சிந்தனையும் ஒன்று.
இந்த ஹான் இனம் சார்ந்த் தேசிய முன்னெடுப்புகள் பாதகமானபல விளைவுகளை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாகாணங்கள், உள் மங்கோலியா, சின்ஜியாங் மற்றும் திபெத் ஆகிய பகுதிகள் சீனாவிலிருந்து பிரிந்து செல்லும் நிலையை உருவாக்கின. மேலும், பல தேசிய இனங்கள் இணைந்து சீனாவை உருவாக்கிய வரலாற்றிற்கு முரணான, சகிப்புத்தன்மையற்ற ஒரு பார்வையாக ஹான்இன தேசியவாதம் இருந்தது. உண்மையில், இந்த இனவாத-தேசியவாத அரசியல் முன்மொழிவு சீனாவை ஒரு நவீன நாடாக மாற்றுவதில் எந்தவிதமான நேர்மறையான பயனும் அளிக்கவில்லை. மாறாக, ஜப்பான், பிரிட்டிஷ் பேரரசு மற்றும் ஜார் மன்னரின் ரஷ்யா ஆகியோர்கள் மற்றஇனங்களின் வேற்றுமையை பயன்படுத்தி துண்டாட நினைத்தனர்.
டிசம்பர் 1911 இல், வெளி மங்கோலியாவின் பிரபுக்கள் தனிநாட்டின் சுதந்திரத்தை அறிவித்தனர். அதன் பிறகு விரைவில், ஜார் மன்னரின் ரஷ்யாவின் உதவியுடனும் தூண்டுதலுடனும் உள் மங்கோலியாவில் உள்ள ஹுலுன் புயிர் “சுதந்திரத்தை” அறிவித்தது. ஜனவரி 1913 இல், 13வது தலாய் லாமா லாசாவில் திபெத்திய “சுதந்திரத்தை” அறிவித்தார். இது திபெத்தை சீனாவிலிருந்து பிரித்து ஒரு பிரிட்டிஷ் காலனியாக மாற்றும் முயற்சியில் பிரிட்டிஷ் பேரரசு திபெத்திற்குள் மேற்கொண்ட ஊடுருவல்களின் விளைவாகும். அதே நேரத்தில், ஜார் மன்னரின் ரஷ்யா சின்ஜியாங்கிற்குள் ஊடுருவி, வடக்கு சின்ஜியாங்கை ஆக்கிரமிக்கும் முயற்சியில் அல்தாய் போரைத் தொடங்கியது. மங்கோலியா, திபெத் மற்றும் சின்ஜியாங் ஆகியவற்றை சீனாவிலிருந்து பிரிக்கும் இந்த அச்சுறுத்தல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலைமைகள் பலஇன தேமாக இருக்கவேண்டும் என்று கருதிய தேசியவாதிகளின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த அச்சுறுத்தல் குடியரசை தேசிய இனம், அரசு மற்றும் நாட்டின் பிரதேசம் குறித்த புதிய யோசனைகளை உருவாக்க கட்டாயப்படுத்தியது.
1911 புரட்சியின் போது, சன் யாட்-சென் அவர்களைப் பிரதிநிதியாகக் கொண்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் தலைவர்கள், கிங் வம்சத்தை வீழ்த்துவதற்கான புரட்சி என்பது ஒரு இன-தேசியவாதப் புரட்சி மட்டுமல்ல, “முடியாட்சியை அகற்றுவது ஒரு அரசியல் புரட்சி” என்பதை உணர்ந்தனர். கிங் வம்சத்தின் ஊழல்களைக் கண்ட சன் யாட்-சென், ஒரு ஹான் சீனரே பேரரசரானாலும், அந்த வகையான அரசாங்கமும் தூக்கியெறியப்பட வேண்டும் என்று பேசினார். புரட்சியின் நோக்கம் மஞ்சூரியர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல சீன தேசம் அமைவதும் இணைந்த துதான் என்றனர்.
1912 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று, சன் யாட்-சென், சீனக் குடியரசின் தற்காலிகத் தலைவர் என்ற முறையில் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு, “நாட்டின் அடித்தளம் அதன் மக்களே, அந்த மக்களில் ஹான், மஞ்சூரியர், மங்கோலியர், ஹுய் மற்றும் திபெத்தியர் ஆகியோர் அடங்குவர். ஹான், மஞ்சூரியர், மங்கோலியர், ஹுய் மற்றும் திபெத்திய மக்கள் அனைவரும் ஒரே மக்கள். இதுவே தேசிய ஒற்றுமை என்றார். ஐந்து தேசிய இனங்களின் குடியரசு, சீனாவின் அனைத்து தேசிய இனங்களின் யதார்த்தத்தையும் சமமாகவும் புறநிலையாகவும் பிரதிபலிக்கவில்லை என்றாலும், ஹான் தேசிய இனம் பெரும்பான்மையாக இருந்த 18 மாகாணங்களைக் கொண்ட ஒரு நாடாக சீனாவை உருவாக்கும் வரம்புகளையும் கடந்தும், ஹான் இனம் மட்டும்தான் என்ற குறுகிய மனப்பான்மையையும் அது கடந்து சென்றது ஒரு முன்றேற்றமாகும.சீனத் தேசிய இனத்தைப் பற்றிய தற்போதைய கருத்தை உருவாக்குவதில் இது ஒரு முக்கியமான முன்னோக்கிய படியாக அமைந்தது. சீனாவின் அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றிணைத்து சீனாவைக் கட்டியெழுப்புவதிலும், அனைத்து சீனத் தேசிய இனங்களும் தாய்நாட்டுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், ஏகாதிபத்திய சக்திகளின் படையெடுப்புகளையும் சிதைப்புகளையும் எதிர்க்கவும் தூண்டுவதிலும் இது ஒரு நேர்மறையான பங்கைக் கொண்டிருந்தது.
அரசியல் மாற்றங்கள் நிலைகளை மாற்றி அமைத்து. 1911 ஆம் ஆண்டு சன் யாட் சன் தலைமையில் குடியரசு புரட்சி வெடித்த பொழுது, கிங் வம்ச அரசிலிருந்து பல மாகாணங்கள் சுதந்திரத்தை அறிவித்தது. இதன் விளைவாக சிங்வம்ச அரசாங்கம் யுவான் ஷிகாய் என்ற படைத்தளபதியை பிரதமராக நியமித்தது. புரட்சியை அடக்குவதற்கான புதிய ராணுவத்தை பயன்படுத்த அதிகாரத்தை அவருக்கு வழங்கியது. சீனாவில் வடக்கு தெற்கு என்ற இந்த மோதலில் யுவான் ஷிகாய் ஒரு குடியரசு உருவாவதை ஆதரித்தார். எனவே அவர் மன்னர் பதவிவிலக வேண்டும் வலியுறுத்தினார். 1912 பிப்ரவரி 12 அன்று கிங்வம்ச கடைசி மன்னரும் பதவி விலகுவதாக அறிவித்தார். சீன முடியாட்சி முறையாக முடிவுக்கு வந்தது. நாட்டு ஒற்றுமை கருதி சன் யாட் சன் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுத்து யுவான் ஷிகாய் ஒட்டுமொத்த பிரதமராக இருந்தார். ஆனால் அவர் மீண்டும் முடியாட்சியை நிலை நிறுத்தக்கூடிய முறையில் 1915 ஆம் ஆண்டு முடியாட்சி ஹோங்சியான் வம்சம் என்ற பெயரில் நடைபெறும் என்று அறிவித்தார். இதனால் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக 1916 இல் யுவான் ஷிகாய் பதவியை இழந்தார்.
அதைத் தொடர்ந்து சீனா தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போர் பிரபுக்களால் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆளப்பட்டது. இக்காலம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மோதல்களுடன் இடைவிடாத சண்டைகள் நடந்தன. இதனால் 1920 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கணிசமான மாகாணங்கள் சுயாட்சி வழங்க வேண்டும், கூட்டாட்சி முறை ஏற்படுத்த வேண்டும் என்றும் போராட ஆரம்பித்தார்கள். சிச்சுவான், ஹுபே, குவாங்டாங் அல்லது வேறு சில மாகாணங்களின் மக்கள் சுயராஜ்யம் கோரி எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாகாணங்களுக்கு கணிசமான சுயாட்சியை வழங்கும் ஒரு கூட்டாட்சி முறைக்கு பரவலான ஆதரவு இருந்தது.
1920 இல் ஐந்து தேசிய இனங்களின் குடியரசுபற்றிப் பேசுகையில், சன் யாட்-சென், “இந்த ‘ஐந்து தேசிய இனங்கள்’ என்ற சொல் மிகவும் பொருத்தமற்றது.நம் நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் உள்ளன.” அவரது கட்சியின் தவறுகள் அவரை சுயபரிசோதனை செய்யத் தூண்டின சீனா ஒரு “இனத் தேசியவாதத்தை” (ethnic nationalism) அல்ல, மாறாக ஹான், மங்கோலியர், திபெத்தியர், மஞ்சு மற்றும் முஸ்லிம்கள் (உய்குர்கள் போன்றோர்) உள்ளிட்ட அனைத்து இனக்குழுக்களையும் இணைக்கும் ஒரு “குடிமை தேசியவாதத்தை” (civic nationalism) வளர்க்க வேண்டும் என்று சன் நம்பினார். நிச்சயமாக, சன் யாட்-சென் தலைமையிலான 1911 புரட்சியால் ஒரு ஜனநாயகக் குடியரசை உருவாக்க முடியவில்லை, மாறாக அது இராணுவ சர்வாதிகாரம், முடியாட்சியின் மறுசீரமைப்பு, உள்ளூர் பிரிவினைவாதம், போர்ப்பிரபுக்களின் போர் மற்றும் வடக்கு-தெற்குப் பிளவு ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
உலகலாவிய மாற்றங்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதாவது சீனாவில் நடைபெற்ற 1911 ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு உலக அளவில் தேசியவாத எழுச்சி தொடங்கியது. அதே நேரத்தில் மேற்கு ஐரோப்பாவில் இருந்த முதலாளித்துவ நாடுகள் தங்களின் தேசிய அரசுகளை உருவாக்கும் பணியை பல்வேறு வடிவங்களில் செய்து முடித்து இருந்தார்கள். மேற்கு உலகத்தில் தோன்றிய தேசிய இனப் பிரச்சனைகள் குறித்து இக்காலத்தில் தோழர்களின் கீழ்க்கண்ட இரு கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தேசிய வாழ்வும் தேசிய இயக்கங்களின் எழுச்சியும் அனைத்து தேசிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களும் தேசிய அரசுகளின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அதே நேரத்தில் வெறும் வல்லரசுகளால் காலனி மயமாக்கப்பட்டு பிரிக்கப்பட்டிருந்த ஆசியாவின் பகுதிகள் முழுவதும் தேசிய இயக்கங்கள் எழுந்தன. ஆசியாவில் எழுந்த தேசிய இயக்கங்கள் தேசிய அரசியலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனது உலகளாவிய தேசிய இயக்கங்களின் எழுச்சியும் காலனித்துவத்திற்கு எதிரான எழுச்சியும் சீனாவிலும் புதிய சிந்தனையும் மாற்றத்தையும் உருவாக்கியது.
1911 புரட்சிக்குப் பிறகு சீனா எதிர்கொண்ட இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு ஒரு நவீன தேசிய-அரசை உருவாக்கத் தொடங்குவதற்கு ஒரு புதிய உத்வேகத்தைப் பெற்ற காலமாகும். இந்த புதிய உத்வேகம் மார்க்சியம் ஆகும், இது 1917-ல் ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து சீனாவிற்கு வந்தது. அது ஒருபோதும் வெற்றிபெறாத சீனப் புரட்சிக்கு ஒரு புதிய உயிர்ச்சக்தியை அளித்ததுடன், ஒரு நவீன தேசிய-அரசை உருவாக்குவதற்கான பாதையை ஆராயும் ஒரு புதிய வரலாற்றைக் கொண்ட ஒரு புதிய கட்டத்தைத் திறந்தது.
அ. பாக்கியம்