இனக்கோட்பாட்டில் இயங்கியலின் பொருத்தப்பாடு-அ.பாக்கியம்
ஆரம்ப கட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீது அகிலத்தின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவு இருந்தது. எனவே மார்க்சிய கோட்பாட்டின் விளக்கங்கள் அனைத்தும் சூத்திரங்களாக மட்டும் வகைப்படுத்தப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் இனப் பிரச்சனைகளை முதன்மையான வர்க்க பகுப்பாய்வின் கண்ணோட் டத்தில் மட்டுமே பார்த்தது. அதாவது வர்க்க பகைமைதான் இன உறவுகளை பாதிக்கும் அடிப்படையான கருவும், வெளிப்பாடுகளும் ஆகும் என்று முடிவு செய்தனர்.
இந்தக் கண்ணோட்டத்தில் பல்வேறு இனக் குழுக்களைப் பற்றி மதிப்பீடு செய்கிற பொழுது, உழைக்கும் மக்களும் அவர்களின் ஆளும் வர்க்கங்களும் எதிர் எதிராக நிற்பதாக வரையறுத்தனர். இனக்குழுக்களில் பூர்வீகத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள், லாமாக்கள் போன்றவர்கள் ஆளும் வர்க்கமாக வகைப்படுத்தப்பட்டார்கள், அவர்கள்தான் உற்பத்தி சாதனங்களை கட்டுப்படுத்த கூடியவர்களாகவும், சிறப்பு சலுகைகளை அனுபவிக்க கூடியவர்களாகவும் இருந்தனர். இந்த அடிப்படையில் அவர்கள் சுரண்டும் வர்க்கமாக வகைப்படுத்தப்பட்டு புரட்சியில் ஒழித்துக் கட்ட வேண்டிய இலக்குகளாக குறி வைக்கப்பட்டனர்.
ஆனால் மேற்கண்ட கோட்பாட்டு வரையறைகளுடன் செயல்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது செம்படையின் நீண்ட அணிவகுப்பை தொடங்கி இனக்குழுக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்ற பொழுது நிலைமை வேறுவிதமாக இருந்தது. இனச் சிறுபான்மை சமூகங்கள் சிக்கலான அமைப்புகளாக இருந்தன. வர்க்கப் பகைமைகளும், முரண்பாடுகளும் புறநிலையாக இருந்த போதிலும் வர்க்க உணர்வு செயலற்றதாகவே இருந்தது. இதனால் புரட்சி மற்றும் மக்களாட்சி(சோவியத்) போன்ற சொற்களின் கருத்துக்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும் இனச் சிறுபான்மை அடித்தட்டு மக்களின் புரட்சிகர விழிப்புணர்வு தங்களின் சொந்த இன ஆளும் மேட்டுக்குடியினரை எதிர்த்து ஒன்றிணையும் நிலைக்கு இன்னும் உயரவில்லை என்று சீனக் கட்சி அறிந்து கொண்டது. இன்னும் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால், இந்த சிறுபான்மை மக்கள் குழுக்களில் சிலவற்றில் நிலவிய சூழல்கள் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என்பதை அறிந்தார்கள்.
இனச் சிறுபான்மை மக்களிடம் வர்க்க உணர்வைவிட படிநிலை முறைகளில் உணர்வுகளும், மத உணர்வுகளும் கணிசமான அளவு மேலோங்கி இருந்தது. இனச் சிறுபான்மை மக்களை ஆளும் மேட்டுக்குடியினர், தங்களின் உள்ளூர் சமூகங்கள் அல்லது இனக்குழு மக்களிடம் அளவற்ற கௌரவமும், செல்வாக்கும், அம்மக்களை அணிதிரட்டும் சக்தியையும் பெற்றிருந்தார்கள். இந்த மேட்டுக் குடியினர் பொதுவாக கணிசமான ஆயுதப் படைகளையும் அமைத் திருந்தார்கள். சமூக வளங்களையும் கட்டுப்படுத்தினார்கள். இதைவிட அதிகமாக மதம் மற்றும் பிற வழிகள் மூலம் கீழ்மட்ட மக்கள் மீது ஆன்மீக கட்டுப்பாட்டை செலுத்தி சாதாரண மக்களிடையே மேட்டுக்குடியினர் ஒரு நீண்ட கால பிரமிப்பையும், மரியாதையையும் வளர்த்து வைத்திருந்தனர்.
மேற்கண்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பகுதியில் வர்க்க ஒடுக்கு முறையை வீழ்த்துவதற்கும் அம்மக்களை விடுதலை செய்ய முக்கியத்துவம் கொடுப்பது அல்லது வர்க்க போராட்டத்தின் மூலம் ஆளும் மேட்டுக்குடியினரை எதிர்க்குமாறு உழைக்கும் மக்களே அழைப்பதோ எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டது. அத்தகைய அணுகுமுறை ஒன்று படக்கூடிய சக்திகளை புரட்சியின் பகைவர்களாக மாற்றும் அபாயத்தையும் கொண்டிருந்தது. இந்த சூழலில் செம்படை மேட்டுக்குடியினரை அடக்குவது அந்த இனப் பொதுமக்களிடம் வரவேற்பை பெறாது என்பதை அறிந்து கொண்டார் கள்.
இந்த இனப் பகுதிகளை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கும் இனச் சிறுபான்மை மக்களை புரட்சிக்கு ஆதரவாக வென்றெடுப் பதற்கும் முதலில் மேட்டுக்குடியினரின் புரிதலையும் ஆதரவையும் பெறவேண்டிய அவசியம் செம்படைக்கு ஏற்பட்டது. மேட்டுக் குடியினரின் செல்வாக்கை பயன்படுத்தி கீழ்மட்ட வகுப்பினரை சென்றடைந்து இறுதியில் அனைத்து சிறுபான்மை மக்களின் ஆதரவையின் பெற வேண்டும் என்று முடிவு செய்தார்கள். மற்றொரு முக்கியமான பிரச்சனை மேட்டுக்குடியினர் எதிர் கொண்டார்கள்.
அதாவது இன மற்றும் மத மேட்டுக்குடியினரின் சில பேர் குவோமிந்தாங் (KMT) மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் நீண்டகாலமாகச் சுரண்டப்பட்டு வந்தனர். அவர்களுக்கும், இந்தச் சுரண்டலை எதிர்ப்பதற்கான நடைமுறைத் தேவையும் விருப்பமும் இருந்தது. அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து இருந்தனர். மேலும் ஒரு பகுதியினர் குறிப்பிட்ட அளவு புரட்சிகர, முற்போக்கான ஆற்றலையும் கொண்டிருந்தனர். “பெரும் ஹான் பேரினவாதத்தில்”(Great Han chauvinism) ஊறியிருந்த குவோமிந்தாங் (KMT) கட்சியின் இன ஒடுக்குமுறைக் கொள்கைகளின் அமலாக்கம், சிறுபான்மை உயரடுக்கினருக்கும் கேஎம்டி-யின் ஆளும் அரசுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
சிறுபான்மை இன உயரடுக்கினரின் சில உறுப்பினர்கள் குவோமிண்டாங் போர்ப்பிரபுக்களுக்கு எதிராக தங்கள் மக்களை திரட்டி ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நபர்கள் புரட்சிகர உணர்வையும், அபிலாஷைகளையும் தெளிவாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஜப்பானிய ஏகாதிபத்தியம் தனது ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியதால், இந்த உயரடுக்கு பிரிவினர் பொருளாதாரச் சுரண்டலுக்கும், அரசியல் அடக்குமுறைக்கும் உள்ளானார்கள். இது படிப்படியாக அவர்களின் நிலப்பிரபுத்துவ சலுகைகளை அரித்துத் தின்றது. தங்களின் சொந்த நலன்களையும், அந்தஸ்தையும் பாதுகாப்பதற்காக, உயரடுக்கினரின் சில உறுப்பினர்கள் ஜப்பானுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்தனர் அல்லது அதில் பங்கேற்றனர்.
இது ஒரு குறிப்பிட்ட அளவு முற்போக்குத்தன்மையை வெளிப்படுத்தியது. இது இந்த உயரடுக்குகளை ஐக்கிய முன்னணியில் இணைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறைக் வெளிப்படுத்தியது. மேலும் அவர்களுக்கும் செம்படைக்கும் இடையிலான அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கியது. இவ்வாறு, நீண்ட அணிவகுப்பின் போது இன மற்றும் மதத் தலைவர்கள் தொடர்பான தனது ஐக்கிய முன்னணி இலக்குகளை செம்படை மாற்றியமைத்தது. இனப் பிராந்தியங்களின் தனித்துவமான சமூகக் கட்டமைப்புகளாலும், செம்படையின் மூலோபாய இடமாற்றத்தின் நடைமுறைத் தேவைகளாலும் இந்த மாற்றம் தேவைப்பட்டது.
நீண்ட அணிவகுப்பின் போது சீன கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்து வந்த ஐக்கிய முன்னணி இலக்குகளில், மேட்டுக்குடி யினரையும் உள்ளடக்கிய மாற்றம் என்பது மார்க்சிய அடிப்படைக் கொள்கைகளுக்கும் சீனாவின் இனப் பகுதிகளின் உண்மையான நிலைமைகளுக்கும் ஒத்துப் போவதாக இருந்தது. குறிப்பிட்ட இனச் சிறுபான்மை மக்கள் வாழக்கூடிய பகுதியில் செம்படை நுழைந்தவுடன் இனம் மற்றும் மதம் சார்ந்த உயிரடுக்கு பிரிவினர் மீதான தனது அணுகு முறையையும், நடைமுறைகளையும் செம்படை மாற்றி அமைத்தது. இது வர்க்கம் தொடர்பான மார்க்சியக் கோட்பாடுகளை மாற்றி விட்டதாக தோன்றும். உண்மையில் அவ்வாறு நடக்கவில்லை. மார்க்சியத்தின் பொருள்முதல்வாதம் என்பது புறநிலையிலிருந்து அகநிலைக்குச் செல்கிறது என்றும், இருப்பு தான் உணர்வை தீர்மானிக்கிறது என்றும் கூறுகிறது. இந்த விதிதான் இங்கு செயலாக் கம் பெற்றது.
நீண்ட அணிவகுப்பின் போது மிகவும் குறைந்த காலத்தில் பல விஷயங்களை கையாள வேண்டிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், இனச் சிறுபான்மையில் இருக்கக்கூடிய அடிமட்ட மக்களின் வர்க்க உணர்வையும், புரட்சிகர விழிப்புணர்வையும், முழுமையாக ஏற்படுத்துவது சாத்தியமானதாகவும்,எதார்த்தமானதாகவும் இருக்காது என்பதை அறிந்து கொண்டனர். இந்தப் பின்னணியில் ஒரு வர்க்க போராட்டத்தை அவசரமாக தொடங்கினால் அடித்தட்டு மக்களிட மிருந்து ஆதரவை பெற முடியாது. அதே நேரத்தில் மேட்டுக்குடி யினரையும் பகைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிகழ்வு செம்படையை பலவீனப்படுத்தி புரட்சிக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவித்திருக்கும் என்பதை மதிப்பீடு செய்தனர். அப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தால் அவை மார்க்சிய பொருள்முதல் வாதத்துடன் அடிப்படையில் பொருந்தாத ஒரு இடதுசாரி சந்தர்ப்பவாத செயலாக மட்டும் தான் அமைந்திருக்கும் என்று மதிப்பீடு செய்தனர்.
நீண்ட அணிவகுப்பின் போது இனப் பகுதிகளுக்குள் நுழைந்த பிறகு, செம்படை அந்த குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ப, நடைமுறைச் சிக்கல்களைப் பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப செயல்பட்டது. இன மற்றும் மதக் குழுக்களின் உயர் மட்டத்தினர் பெரும் மதிப்பையும், மக்கள் மத்தியில் ஆழ்ந்த செல்வாக்கையும் கொண்டிருந்தனர் என்ற யதார்த்தத்தை உணர்ந்த தலைமை, தனது வர்க்கப் போராட்ட உத்தியை உறுதியாக மாற்றியமைத்தது. இந்த உயர்மட்டத்தினருடன் ஒத்துழைப்பை ஏற்படுத்தி, மக்கள் ஆதரவைப் பெற அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தியது. இதன் மூலம், “இருத்தலே உணர்வை நிர்ணயிக்கிறது” என்ற அடிப்படை மார்க்சியப் பொருள் முதல்வாதக் கோட்பாட்டை அவர்கள் திறம்படச் செயல்படுத்திக் காட்டினர்.
எனவே, நீண்ட அணிவகுப்பு காலத்தில் இன மற்றும் மதக் குழுக்கள் தொடர்பான ஐக்கிய முன்னணிப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றமானது, சரியான கோட்பாடு நடைமுறையை வழிநடத்தியதற்கான ஒரு முடிவாக அமைகிறது. இது அடிப்படை மார்க்சிய அறிவு மற்றும் ஆய்வு முறைகளுடன் இணங்கிச் செல்வது மட்டுமல்லாமல், “உண்மையை யதார்த்தங்களிலிருந்து தேடுதல்” (Seeking Truth From Facts) என்ற அணுகுமுறையின் மூலம் அக்கோட்பாடுகளை மேலும் வளர்த்தெடுப்பதாகவும் உள்ளது என்று மதிப்பிட்டனர்.
மனித சமூக வளர்ச்சியின் வரலாற்று அனுபவங்களை தொகுத்து , தனக்கு முன்பு ஆய்வு செய்தவர்களின் ஆய்வுகளையும் உள்வாங்கிக் கொண்டு, வர்க்க உறவுகளில் உள்ளார்ந்திருக்கும் முரண்பாட்டுத் தன்மையை காரல் மார்க்ஸ் ஆக்கப்பூர்வமாக விளக்கினார். அதில் வர்க்கப் போராட்டத்திற்கு அடிப்படையான காரணம், வெவ்வேறு வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பட்ட நலன்களே என்றும் முடிவுக்கு வந்தார். இந்த வர்க்க மோதல்களின் இயங்கு நிலையிலிருந்து வர்க்க அடிப்படையான சமூகங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது என்று கூறினார். மார்க்சிய பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்படையில் வர்க்க போராட்டம் அல்லது மோதல் என்பது வர்க்க உறவுகளின் ஒரு அம்சம் மட்டுமே என்பதையும், ஒற்றுமை என்பது சமமான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்சம் என்பதையும் வெளிப்படுத்துகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், வர்க்கங்களின் போராட்டத் திற்கும் ஒற்றுமைக்கும் இடையிலான இயங்கியல் உறவை மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இறுதியான வீழ்ச்சி குறித்த தனது பகுப்பாய்வின் மூலம், வர்க்க உறவுகளின் ஒற்றுமை மற்றும் போராட்டத்திற்கு இடையிலான ஊடாடலே எதிர் வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பட்ட இயக்கத்தை உந்துகிறது என்றார். சமூகப் பரிணாம வளர்ச்சியும் முன்னேற்றமும் இந்த வர்க்க இயக்கத்துடன் இணைந்தே நடைபெறுகின்றன என்பதையும் அவர் உணர்த்துகிறார். ஒற்றுமையே மோதலுக்கான அடித்தளமாகும். இரண்டு எதிரெதிர் கூறுகள் ஒரே அமைப்பில் இணைந்திருக்காவிட்டால், அவற்றுக் கிடையே மோதல் ஏற்பட வாய்ப்பே இல்லை. எடுத்துக்காட்டாக, உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதல், அவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பில் இணைந்திருக்கும்போதுதான் சாத்தியமாகிறது. இதன் மற்றொரு அம்சமாக மோதலே ஒற்றுமையை மாற்றுகிறது. தொடர்ந்த மோதலின் காரணமாகவே, ஒற்றுமையின் அடிப்படையிலான சமநிலை உடைந்து, பழைய பண்பு புதிய பண்பாக மாறுகிறது. இந்த மாற்றமே வளர்ச்சியாகும். “முழுமையான, நிபந்தனையற்ற மோதல்” மற்றும் “ஒப்பீட்டு ரீதியான, நிபந்தனைக்குட்பட்ட ஒற்றுமை” ஆகிய இரண்டின் கலவையே, நிகழ்வுகளின் இயக்கத்தை உந்தித் தள்ளி, அவற்றை மேலும் உயர்ந்த நிலைக்கு உந்திச் செல்கிறது. இதுவே இயங்கியலின் மிக அடிப்படையான மற்றும் சக்திவாய்ந்த புரிதலாகும். வர்க்க உறவுகளில் உள்ள உள்ளார்ந்த ஒற்றுமை இல்லாவிட்டால், வர்க்கச் சமூகமே இருக்க முடியாது என்று மார்க்சிய இயங்கியல் பொருள்முதல் வாதம் கூறுகிறது. அத்தகைய சமூகத்தில் உள்ள இரண்டு அடிப்படை வர்க்கங்களுக்கு இடையிலான உறவு ஒற்றுமை மற்றும் போராட்டம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. சமூக அமைப்பிற்குள் இருக்கும் இந்த முரண்பட்ட மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய சக்திகள், மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கூட்டாக முன்னெடுத்துச் செல்கின்றன.
முரண்பாடு மற்றும் ஒற்றுமை ஆகிய இரண்டையும் கொண்ட வர்க்க உறவுகளின் இருமுனைத் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, சோசலிசப் புரட்சி நடத்துவதற்கும், கட்டுமானத்திற்கும ஏற்ற வகையில் தனது செயல்முறை முழுவதும் ‘ஐக்கிய முன்னணி’ பணிக்கே தொடர்ந்து முன்னுரிமை அளித்தது. வர்க்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்குச் சிறப்புக் கவனம் செலுத்திய அக்கட்சி, பல்வேறு வரலாற்று காலகட்டங்களிலும் பரந்த ஐக்கிய முன்னணிகளை அமைத்தது. இதன் மூலம் புரட்சிகர சக்திகளை இயன்றவரை ஒன்றிணைத்த அதே வேளையில், விரோத சக்திகளைத் திறம்படத் தனிமைப்படுத்தியது. இத்தகைய அணுகுமுறையே சீனப் புரட்சியின் இறுதி வெற்றிக்கும், தேசிய கட்டுமானப் பணிகளின் சீரான முன்னேற்றத்திற்கும் அரசியல் உத்தரவாதமாக அமைந்தது.
வர்க்க மோதல் மற்றும் வர்க்க ஒற்றுமைக்கு இடையிலான இயங்கியல் உறவைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில், இன மற்றும் மதக் குழுக்களின், உயர் மட்டப் பிரிவினருடன் கூட்டணி அமைக்கும்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் கொள்கைரீதியான நிலைப்பாட்டைக் கைவிடவோ அல்லது கண்மூடித்தனமாகச் சமரசம் செய்துகொள்ளவோ இல்லை. மாறாக, ‘ஒற்றுமை மற்றும் போராட்டம்’ ஆகியவற்றை இணைக்கும் கொள்கையையே அது தொடர்ந்து கடைப்பிடித்தது. ஏகாதிபத்திய மற்றும் குவோமின்டாங் (Kuomintang) பிற்போக்கு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து அமைதியின்மையைத் தூண்டிய இனச் சிறுபான்மையினரின் பிற்போக்குத்தனமான உயர் மட்டப் பிரிவினருக்கு எதிராக அது உறுதியான போராட்டங்களை நடத்தியது.
அதே வேளையில், புரட்சிகர நிலைப்பாட்டில் தடுமாற்றம் கண்டவர்கள் விஷயத்தில், கட்சி விமர்சன மற்றும் எதிர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருந்தாலும், அவர்களுடனான ஒத்துழைப்பு அல்லது அவர்களை நடுநிலையாக்குதல் (neutralization) என்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடைத்தபோதெல்லாம் அவற்றை பயன்படுத்தினார்கள். அக்காலகட்டத்து ஆவணங்களில், ஐக்கிய முன்னணியை உருவாக்குவதே இலக்காக இருந்தாலும், பழங்குடித் தலைவர்கள் மற்றும் *துசி* (பரம்பரை உள்ளூர் தலைவர்கள்) போன்றவர்கள் விஷயத்தில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள் மிகவும் தாராளமானவையாக இருந்தபோதிலும், வெவ்வேறு இனக்குழுக்களுக் குள் நிலவும் வர்க்கப் படிநிலைகள் மற்றும் குறிப்பிட்ட யதார்த்த நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை வடிவமைகத்தனர்.
இன சிறுபான்மை மக்களிடம் வர்க்கப் போராட்டம் நிலவியதை அங்கீகரித்து வளர்த்தெடுத்தன. இனக்குழுவைச் சேர்ந்த கிராமத் தலைவர்கள், உயர் நிலையில் இருந்த லாமாக்கள், சக்தி வாய்ந்த உள்ளூர் இன தலைவர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கும் குவாமிங்தான் கட்சியின் ஹான் அதிகாரிகளுக்கும் இருந்த சட்ட விரோத கூட்டுகளையும், அவர்கள் சொந்த மக்களின் நலன்களுக்கு இழைத்த துரோகத்தையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அம்பலப்படுத்திக் கொண்டே இருந்தது. இதன் மூலம் தேவையான இடங்களில் மக்களே சட்ட விரோதக் கூட்டில் இருந்த உயர்குடி பிரிவினரின் சொத்துக்களை கைப்பற்றி மறு விநியோகம் செய்தனர்.
ஆயினும், இச்செயல்முறை முழுவதும், புரட்சிகர உணர்வு கொண்ட அந்த இனத் தலைவர்கள், லாமாக்கள் மற்றும் கிராமத் தலைவர்களுடன் ஒத்துழைப்பதற்கான—அல்லது குறைந்தபட்சம் அவர்களின் நடுநிலையான நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கான—வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டே செய்தனர். இன மற்றும் மதச் சமூகங்களின் உயர் மட்டத்தினருடன் கூட்டணிகளை அமைப்பதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) ‘ஒற்றுமை மற்றும் போராட்டம்’ ஆகியவற்றை இணைக்கும் கொள்கையைக் கடைபிடித்ததுடன், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருடனும் இணைய முயன்றது என்பது தெளிவாகிறது. இது மார்க்சிய வர்க்க உறவுகளில் உள்ள போராட்டம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் இயங்கியல் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது. நடைமுறையை வழிநடத்த மார்க்சியப் பொருள்முதல்வாத இயங்கியலைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சுயமாகப் பயன்படுத்தியதற்கும், அதன் மூலம் அக்கோட்பாட்டின் உண்மையை அனுபவபூர்வமாக உறுதிப்படுத்தியதற்கும் இது ஒரு வெற்றிகரமான உதாரணமாகத் திகழ்கிறது.
அ.பாக்கியம்
அடுத்த கட்டுரை நவம்பர் 10 புதனன்று வெளியாகும்