இனப் பிரச்சனையின் மார்க்சிய கோட்பாட்டை மாற்றியமைத்த சித்தாந்த மதிப்பீடு-அ.பாக்கியம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய சுயநிர்ணய உரிமை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய கருத்துக்களை சீனாவில் கைவிட்டு ஒருங்கிணைந்த பல்லின அரசை உருவாக்கும் பாதையில் உறுதியாகப் பயணிக்க தொடங்கியது என்பது எந்த விதத்திலும் மார்க்சியத்தின் அடிப்படையான இன கோட்பாட்டு கொள்கையை புறந்தள்ளியது ஆகாது. குறிப்பிட்ட சூழலில் வர்க்கங்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்திய சீன கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வரலாற்று காலக்கட்டங்களிலும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிகளை அமைத்தது. எனவே வர்க்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது மார்க்சிய கோட்பாட்டோடு இணைந்த ஒன்றாகும். மார்க்சியத்தை வறட்டுத்தனமாக, புத்தக வடிவில் கையாளுகின்றவர்களுக்கு இந்த நடைமுறை சார்ந்த சூழலோடு பொருத்துவது மார்க்சியத்தின் எதிர்கோட்பாடுகளாகவே புரிந்து கொள்ளப்படும். இது குறித்த ஒரு விரிவான மதிப்பீட்டை சீன கம்யூனிஸ்ட் கட்சி செம்படையின் நீண்ட அணிவகுப்பு காலத்தில் நடைபெற்றதை பரிசீலனை செய்து மதிப்பீடு செய்துள்ளது.
மார்க்சியம் முன்வைக்கும் இனம் தொடர்பான அடிப்படை கோட்பாட்டு விதிகள், மறுக்க முடியாத, அறிவியல் பூர்வமான, செல்லுபடியாகதக்க தன்மையை கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிய முடியும். இருந்த போதிலும் இந்த அறிவியல் பூர்வமான செல்லுபடியாகதக்ககூடிய தன்மை என்பது எந்த ஒரு காலகட்டத்திலும், எந்த ஒரு தேசத்திற்கும், நாட்டிற்கும், இனத்திற்கும் எந்தவித மாற்றமும் இன்றி அமுலாக்க கூடிய திறன் வாய்ந்தது என்று உருவாகவில்லை. இதற்கு மாற்றாக, மார்க்சியத்தின் முக்கிய இன கோட்பாடுகள் அவற்றின் உள்ளடக்கங்கள் இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பொதுவான விதிகளுடனும், மனித சமூக வளர்ச்சி விதிகளுடனும் ஒத்துப் போகின்றன என்பதுதான் மிக முக்கியமானது. காரல் மார்க்சின் ஃபெடரிக் எங்கல்சு தெரிவித்துள்ளது போல் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப, அல்லது நடைமுறை எதார்த்தங்களுக்கு ஏற்ப பொருத்திக் கொள்வதற்கான புதுமையான அம்சங்களையும், பரிணாம முயற்சி களையும் இக்கோட்பாடுகள் அனுமதிக்கின்றன.
எனவே மார்க்சியம் என்பது ஒரு செயல்பாட்டுக்கான தத்துவம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தாங்கள் உருவாக்கிய கோட்பாடுகள் ஒருபோதும் கோட்பாட்டு சூத்திரத்துக்குள் அடங்கி விடக் கூடாது என்றும், மாறாக அது ஆழமான ஆய்வுக்கு தொடக்கப் புள்ளியாகவும், ஆராய்ச்சியாளர் களுக்கான வழிமுறை சட்டகமாகவும் செயல்பட்டது என்பதையும், தொடர்ந்து அவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் காரல் மார்க்சின் ஃபெடரிக் எங்கல்சு கருதியது மட்டுமல்ல அதைத்தான் அவர்கள் விரும்பினார்கள். கம்யூனிஸ்ட் அறிக்கையின் 1872 ஜெர்மன் பதிப்பின் முன்னுரையில், அதன் பொதுவான கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு “எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும், அந்தந்த காலகட்டத்தில் நிலவும் வரலாற்றுச் சூழ்நிலைகளை” பொறுத்தது என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் குறிப்பிட்டனர். இது அவர்களின் சொந்த வார்த்தைகளில், கோட்பாடு மாறும் சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்பதற்கான முதன்மையான ஆதாரமாகும்.
மார்க்சிய சித்தாந்தத்தின் இந்த செயல்பாட்டு சூத்திரத்தை புரிந்து கொண்டுதான் செம்படையின் நீண்ட அணிவகுப்பின்போது இனம் தொடர்பான கோட்பாட்டை எளிதான முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி கையாள முடிந்தது. அதாவது இயந்திரத்தனமாக பின்பற்றுவதில் இருந்து சீனாவின் நடைமுறைச் சூழலோடு ஒருங்கிணைத்து மற்றும் ஒன்றினைத்தல் என்ற அடிப்படையிலும் இவற்றை பொருத்தினார்கள். இந்தப் பொருத்தப்பாடு சீனப் புரட்சியின் வெற்றியை நோக்கி சரியான பாதைக்கு அழைத்துச் சென்றது.
உலகின் பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் போலவே, 1917 இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சீனாவின் புரட்சிகர இயக்கத்தில் மார்க்சியம் முக்கியமான பங்களிக்கும், அதற்காக வழிகாட்டும் என்ற தன்மையை சீனாவில் இருந்த முற்போக்கு சிந்தனை கொண்ட அறிஞர்கள் உணர்ந்தனர். 1917 ஆம் ஆண்டு ரஷ்ய அக்டோபர் புரட்சி ஒரு முக்கிய ஊக்கியாக செயல்பட்டது. அது சீன முற்போக்கு அறிஞர்கள் தங்கள் பார்வையை மேற்கிலிருந்து ரஷ்யாவிற்கு திருப்பவும், இறுதியில் மார்க்சியத்தைத் தேர்வு செய்யவும் காரணமாயிற்று. இந்த தேர்வு தற்செயலானதல்ல; மாறாக, பல்வேறு மீட்புத் திட்டங்களின் தோல்விக்குப் பிறகு, ஆழ்ந்த சிந்தனை மற்றும் நடைமுறை ஆய்வின் முடிவில் அவர்கள் எடுத்த முடிவாகும். இது நேரடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பிற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்து 1921 இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட போது ரஷ்ய புரட்சியிலிருந்து கற்றுக் கொள்வதை அவசியமானது என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
அக்டோபர் புரட்சிக்கு முன்னர், மார்க்சின் கோட்பாடுகள் சீனாவிற்கு சிதறிய முறையில் வந்தடைந்திருந்தாலும், அவை அதிக கவனத்தைப் பெற்றிருக்கவில்லை. அக்டோபர் புரட்சியின் வெற்றியே, மார்க்சியக் கோட்பாடு கோட்பாட்டிலிருந்து உண்மையான சக்தியாக மாறுவதை சீன முற்போக்குவாதிகள் காணச் செய்து, அதை முறையாகவும் உணர்வுபூர்வமாகவும் பரப்பும் பணியில் ஈடுபட வைத்தது. மாவோ சேதுங் பின்னர் கூறியது போல்: “அக்டோபர் புரட்சியின் ஒரு குண்டு வெடிப்பு, எங்களுக்கு மார்க்சிய-லெனினிசத்தைக் கொண்டு வந்தது.”
இந்த ரஷ்யாவில் இருந்து கற்றுக் கொள்வது என்ற முடிவுகள் இனப்பிரச்சினைகள் தொடர்பான கட்சியின் ஆரம்ப கால முடிவுகளில் ரஷ்யாவின் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலேயே சீன கம்யூனிஸ்ட் கட்சியும் புரிந்து கொண்டது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆரம்ப கட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் இன கோட்பாடுகள் மற்றும் நடைமுறை அனுபவங்களை மாதிரிகளாக கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. சோவியத் ஒன்றியத்தால் நிறுவப்பட்டு, மூன்றாம் அனைத்துலகத்தின் (Comintern) மூலம் செல்வாக்கு செலுத்தப்பட்ட லெனினின் இனக் கோட்பாடுகள், காலனித்துவ மற்றும் அரை-காலனித்துவ கிழக்கு நாடுகளுக்கு பொருந்தும் என்று கருதப்பட்டன. சோவியத் ஒன்றியத்திற்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து மூன்றாம் உலக, புரட்சிகர இயக்கங்களுக்கு இந்தக் கோட்பாடுகள் பொருத்தமானது என்று தீவிரமாக வலியுறுத்தப்பட்டது.
1922 ஆம் ஆண்டு ஷாங்காய் நகரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸில், மங்கோலியா, திபெத் மற்றும் சின்ஜியாங் (அப்போது “ஹுய் பகுதிகள்” என அழைக்கப்பட்டது) ஆகியவை “ஜனநாயக சுயாட்சி குடியரசுகளாக” அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு “சீன கூட்டாட்சி குடியரசில்” இணைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது. இது சோவியத் ஒன்றியத்தின் கூட்டமைப்பு கட்டமைப்பை தெளிவாக பிரதிபலித்தது. இதேபோல், 1934 ஆம் ஆண்டு “இனத் தன்னுரிமை” (self-determination) உரிமையை வலியுறுத்தும் ஒரு அரசியலமைப்பு வரைவு, இனக் குழுக்களுக்கு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து சுயாதீன நாடுகளை அமைக்கும் உரிமை வரை வழங்கியது. கீழ்கண்ட அடிப்படையில் அந்த தீர்மானம் இருந்தது.
1934 ஆம் ஆண்டு “சீன சோவியத் குடியரசின் அரசியலமைப்பு வரைவு” இடம்பெற்ற இனக் கொள்கை குறித்த விதிகள், “சீன சோவியத் அரசாங்கம், சீனாவில் உள்ள சிறுபான்மை இனங்களின் தன்னுரிமை உரிமையை அங்கீகரிக்கிறது; இது, அவ்வினங்கள் சீனாவிலிருந்து பிரிந்து தனித்துவமான சுயாதீன நாடுகளை அமைக்கும் உரிமை வரை வழங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மங்கோலியர், திபெத்தியர், ஹுய் (முஸ்லிம்) மக்கள், மியாவோ, லி, கொரியர் போன்ற சிறுபான்மை இனங்களுக்கு முழுமையான தன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்கள் “சீன சோவியத் கூட்டமைப்பில்” இணையலாம் அல்லது விலகி தங்கள் சொந்த தன்னாட்சி பகுதிகளை அமைக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தக் கொள்கை ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தின் விளைபொருளே தவிர, மாறாத ஒன்றல்ல. புரட்சிகர நடைமுறைகள் மற்றும் சீனாவின் தேசிய உண்மைகள் பற்றிய புரிதல் ஆழமடைந்ததைத் தொடர்ந்து, இந்தக் கொள்கை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டது. (https://chat.deepseek.com/a/chat/s/cb751f42-b05f-4065-9986-faf00bac48d3)
மேற்கண்ட முடிவுகள் அனைத்தும் சீனப் புரட்சியை முன்னெடுப்பதில் தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்தனர். இதன் மூலம் கடினமான அனுபவங்களை கற்றுக்கொண்ட பிறகு சீன புரட்சிக்கு சீனாவின் யதார்த்த நிலைமைக்கு ஏற்ற வகையில் மார்சிய லெனினியத்தை பயன்படுத்த வேண்டும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுத்தது. புரட்சிகரமான வெற்றியின் உண்மையான திறவு கோல் எங்கே இருக்கிறது என்றால், மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை சீனாவின் குறிப்பிட்ட நடைமுறைச் சூழலுடன் ஒருங்கிணைத்து ஒன்றிணைப்பதில் தான் உள்ளது என்பதை படிப்படியாக கண்டறிந்து கொண்டது.
இந்தக் கோட்பாட்டின் முதல் நடைமுறை களமாக செம்படையின் நீண்ட அணிவகுப்பு அமைந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு பரிசோதனை களம் அமையவில்லை. நீண்ட அணி வகுப்பு நடைபெறுவதற்கு முன்பு இன கோட்பாடுகளை நாட்டின் நடைமுறைச் சூழலுடன் ஒருங்கிணைப்பதற்கான சரியான பாதையை சீன கம்யூனிஸ்ட் கட்சி கண்டறியவில்லை. நாட்டின் சூழலுக்கு ஏற்ற வகையில் சொந்த இன கோட்பாட்டையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வடிவமைத்திருக்கவில்லை.
நீண்ட அணிவகுப்பின் போதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி முதன்முறையாக இனச் சிறுபான்மையினுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது அதன் மூலம் சீனாவின் இனச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் எதார்த்தமான நிலைமைகளைப் பற்றி ஆழமான புரிதலை பெற்றது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய இனக் கோட்பாடுகளை சீனப் புரட்சிகரப் போராட்டத்தின் நடைமுறை மற்றும் இன விவகாரப் பணிகளுடன் படிப்படியாக ஒன்றிணைத்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்று பகுப்பாய்வு செய்யாமல் முடிவுகள் எடுப்பதில்லை. “பகுப்பாய்வு இல்லாமல் முடிவு இல்லை” (No investigation, no right to speak) என்பது மாவோ சேதுங் அவர்களின் பிரபலமான கூற்று. இது புறநிலை யதார்த்தத்தில் இருந்து தொடங்கும் பொருள்முதல்வாத அணுகுமுறையை வலியுறுத்துகிறது. முடிவுகளை அமல்படுத்தும்போதும் தொடர்ந்து ஆய்வு செய்தல்” என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) செயல்பாட்டு முறையின் மிக அடிப்படையான பண்புகளில் ஒன்றாகும். இது மார்க்சியத்தின் “நடைமுறை உண்மைக்கான அளவுகோல்” (Practice is the sole criterion for testing truth) என்ற கோட்பாட்டின் நேரடி பிரதிபலிப்பாகும்.
எந்தவொரு கொள்கை அல்லது முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பு, அந்தந்த நேரத்திலும் இடத்திலும் உள்ள குறிப்பிட்ட சூழ்நிலைகள், முரண்பாடுகள் மற்றும் மக்களின் தேவைகள் ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியம். இது மேலோட்டமான பார்வையோ அல்லது உள்ளுணர்வோ அல்ல; முறையான கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், மற்றும் பலதரப்பட்ட கருத்துகளைச் சேகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும்.
இந்த அடிப்படையில் இனச் சிறுபான்மையினரின் குறிப்பான அவர்களது சிக்கல்கள் குறித்து உறுதியான பகுப்பாய்வுகளை மேற்கொண்டது மட்டுமல்ல, வெவ்வேறு இனப் பகுதிகளுக்கு செல்கிற பொழுது அங்குள்ள நடைமுறைச் சூழல்கள், இனப் பகுதிகளின் பண்புகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற வகையில் இலக்குச் சார்ந்த இனக் கொள்கைகளை உருவாக்கினார்கள். தொடர்ந்து சூழ்நிலைகள் மாறுகின்றபோது அதற்கேற்ற வகையிலும் மாற்றங்களையும் செய்து கொண்டனர். எந்த ஒரு முடிவுகளும் தானாக அமலாகி விடாது என்பதை அனைவரும் அறிந்ததுதான். ஆனாலும் எண்ணற்ற இடர்பாடுகளுக்கு இடையில் செம்படையின் தளபதிகளும், வீரர்களும் இந்த இனக் கொள்கைகளை தங்களின் நடைமுறைப் பணிகளில் தீவிரமான முறையில் அமலாக்கினார்கள்.
தொடர்ந்து இனச் சிறுபான்மை பகுதியில் செம்படை மேற்கொண்ட அணிவகுப்பு என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இனக் கொள்கைகளை தொடர்ந்து செம்மைப்படுத்திக் கொள்ளவும் ஒரு செயல்முறை வடிவமாக அமைத்துக் கொள்வதற்கு வழிவகுத்தது. இவ்வாறு செயல்முறையில் இறங்குகிற போதுதான் சோவியத் நாட்டின் இனக் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் முந்தைய நடைமுறையில் இருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் விடுவித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக சீன நாட்டின் தேசியச் சூழல்கள், சிறுபான்மை இன மக்களின் எதார்த்தமான நிலைமைகளில் இருந்து மார்க்சிய கோட்பாட்டை வளர்த்தெடுத்தது, இதன் மூலம் நாட்டின் உண்மையான இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அடித்தளத்தை அமைத்தது.
செம்படையின் நீண்ட அணிவகுப்பின்போது வகுக்கப்பட்ட இனக் கொள்கைகளும், ஆய்வுகளும், இன விவகாரப் பணிகளில் பெறப்பட்ட அனுபவம் அனைத்தும் மார்க்சிய பொருள்முதல்வாத இயங்கியல் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது யதார்த்தங்களில் இருந்து உண்மையை தேடுதல்(seeking truth from fats) என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. இந்த வகையில் மார்க்சிய பார்வையை சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன தேசிய சூழலுடன் ஒருங்கிணைத்து நிலை நிறுத்தியது. அதாவது இந்த காலகட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இன கோட்பாடுகளும், கொள்கைகளும் படிப்படியாக புத்தக வழிபாடு, மற்றும் வறட்டுத்தனமான பிடிவாத கொள்கையிலிருந்து மாற்றமடைந்தது.
இதே காலகட்டத்தில் நடைமுறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலத்தின் செல்வாக்கில் இருந்து விடுபட்டது. இதன் மூலம் சீனாவின் தேசிய நிலைமைகளுக்கும், அதன் இனக்குழுக்களின் குறிப்பிட்ட யதார்த்தங்களுக்கும் ஏற்ற வகையில் இனப் பிரச்சனைகளுக்கான ஆய்வை நடத்துவதற்கும் சரியான அணுகு முறையை ஆராயும் பாதையில் பயணிக்க தொடங்கியது. மார்க்சியத்தால் இனப் பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற சரியான கூற்றை கோட்பாட்டு அளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் உறுதிப்படுத்தியது. இது எதார்த்தங்களில் இருந்து உண்மையை தேடுதல் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்ததை குறிக்கிறது. அதே நேரத்தில் மார்க்சிய இன கோட்பாட்டின் சீனமயமாக்களையும் வளர்ச்சியையும் நடைமுறையிலும் கோட்பாட்டு அளவில் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் பணியை சீன கம்யூனிஸ்ட் கட்சி சிரமேற்று செய்து கொண்டு வந்தது.
அ.பாக்கியம்.