ஐக்கிய முன்னணியின் இலக்குகளைச் சீரமைத்தல்
இன மற்றும் மதக் குழுக்கள் தொடர்பான ஐக்கிய முன்னணியின் இலக்குகளைச் சீரமைத்தல் என்பது மிகமுக்கியமாக குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. நீண்ட அணிவகுப்புக்கு முன்பு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி கொள்கையின் இலக்குகள் அடித்தட்டு மக்களை மட்டுமே மையமாகக் கொண்டிருந்தன. அந்தந்த இனக் குழுக்களுக்குள் இருந்த உயர்தட்டு பிரபுக்கள் மற்றும் மதத் தலைவர்கள் போன்ற ஆளும் வர்க்கத்தினரால் இழைக்கப்பட்ட சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக அம்மக்களை ஒன்றிணைப்பதே அக்கட்சியின் பணியாக இருந்தது. நீண்ட அணிவகுப்பின் போது, கட்சி தனது ஐக்கிய முன்னணி கொள்கையின் வரம்பை மாற்றியமைத்து மிக முக்கிய முடிவாகும். இந்த மாற்றத்தின் வாயிலாக இன மற்றும் மதச் சமூகங்களின் உயர்தட்டினரையும் ஒன்றிணைக்கும் கொள்கையைக் கடைப்பிடித்தது. சுன்யி (Zunyi) மாநாட்டிற்குப் பிறகு, இனப் பிரச்சினைகள் தொடர்பான கட்சியின் கோட்பாடுகளும் கொள்கைகளும் யதார்த்த நிலைக்கு ஏற்ப அமைந்திருந்தன.
இனச் சிறுபான்மையினர் தொடர்பான அடுத்தடுத்த ஆவணங்கள், உயர்தட்டினரை இலக்காகக் கொண்ட ஐக்கிய முன்னணிப் பணியை ஒரு முக்கிய அங்கமாகக் கருதின. தேசிய விடுதலைப் போரில் பங்கேற்பதிலிருந்து உயர்தட்டுப் பிரிவினர் தடுக்கப்பட மாட்டார்கள் என்று அவை தெளிவாகக் கூறின. மேலும் அவர்களை ஒன்றிணைப்பதற்கான குறிப்பிட்ட கொள்கைகளையும் முன்மொழிந்தன—அதாவது, இனச் சிறுபான்மையினரிடையே உள்ள உள்ளூர் கொடுங்கோலர்களைத் தாக்காமல் இருத்தல். இனப் பகுதிகளில் தேவையான பொருட்களைப் பெறும்போது பறிமுதல் செய்வதற்குப் பதிலாக வாங்குதல், கடன் பெறுதல், நிதி திரட்டுதல் ஆகியவற்றைச் சார்ந்திருக்க வேண்டும். (அரசியல் துறையின் அனுமதியின்றி எந்த பொருளையும் உயர்தட்டினரிடமிருந்து பறிமுதல் செய்வது தடை செய்யப்பட்டது) மதத் தலைவர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்தல், லாமா (Lamaist) மடாலயங்களின் சொத்துக்களைப் பாதுகாத்தல், லாமாக்களைத் துன்புறுத்துவதையோ அல்லது அவமதிப்பதையோ தடுத்தல் போன்றவை இந்த குறிப்பான ஆணையில் அடங்கும்.
மாற்றி அமைக்கப்பட்ட இன மற்றும் மதரீதியான ஐக்கிய முன்னணியின் இலக்குகளைச் நிறைவேற்றும் நடைமுறையில் இறங்கினார்கள். கட்சி மற்றும் செம்படையின் தலைவர்கள் கொள்கை வகுப்பாளர்களாக மட்டுமல்லாமல், அவற்றைச் செயல்படுத்து பவர்களாகவும் இருந்தனர். இன மற்றும் மதச் சமூகங்களின் முக்கியப் பிரமுகர்களிடையே ஐக்கிய முன்னணிப் பணிகளை அவர்கள் நேரில் மேற்கொண்டனர். நிங்ஷியாவின் (Ningxia) சிஜி கவுண்டியில் (Xiji County), மாவோ சேதுங் மற்றும் வாங் ஜியாசியாங் போன்ற செம்படைத் தலைவர்கள் ஷான்ஜியாஜி மசூதியில் இருந்த *அஹோங்*கை நேரில் சந்தித்துப் பேசினர். சீட்டா (Xita) கிராமத்தில், மாவோ சேதுங் மற்றும் பெங் டெஹுவாய் ஆகியோர் உள்ளூர் மதத் தலைவரான மா சீட்டாவுக்கு (Ma Xita) கடிதம் எழுதினர். அதைத் தொடர்ந்து, செம்படை அப்பகுதி வழியாகச் சென்றபோது நூற்றுக்கணக்கான ஹுய் மக்களைத் திரட்டி அவர் அவர்களை வழிநடத்திச் சென்றார்.
ஆகஸ்ட் 15, 1935 அன்று, செம்படையின் 25-வது படைப்பிரிவு கான்சு (Gansu) மற்றும் நிங்ஷியா எல்லைப் பகுதியில் ஹுய் மக்கள் வசிக்கும் பகுதியான ஜிங்லாங் (Xinglong) நகருக்குள் நுழைந்தது. ஒரு வலுவான தளத்தை அமைத்து புதிய செயல்பாட்டுக் களத்தைத் திறப்பதற்காக, அரசியல் ஆணையர் வு ஹுவான்சியன் (Wu Huanxian) உள்ளூர் *அஹோங்*கள் மற்றும் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினார். இதில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நாட்டைப் பாதுகாப்பதில் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செம்படையின் கொள்கைகள் மற்றும் நடத்தை விதிகள் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. மத மற்றும் இனத் தலைவர்களின் கவலைகளைப் போக்குவதற்காக, செம்படையின் 25-வது படைப்பிரிவின் தலைவர்கள் உள்ளூர் மசூதிக்கு நேரில் சென்று பரிசுகளையும், “ஹுய் மற்றும் ஹான் சகோதரர்கள் ஒரே குடும்பம்” என்று பொறிக்கப்பட்ட ஒரு நினைவுப் பலகையையும் வழங்கினர். இன வழக்கங்களுக்கு ஏற்ப, மசூதியின் *அஹாங்* செம்படை வீரர்களை அன்புடன் உபசரித்தது, பின்னர் பதிலுக்கு இராணுவத்திற்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் பிற பரிசுகளை வழங்கினாகள்.
1936 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், அதன் தெற்கு நோக்கிய முன்னேற்றம் தடைபட்ட பிறகு, செம்படை நான்காவது முன்னணி இராணுவம் கார்சே (கான்சி) வந்தடைந்தது. மிகப்பெரும் இராணுவ தளபதிகளில் ஒருவர் ஜு தே உள்ளூர் பைலி லாமாசரிக்குச் சென்று மதத் தலைவர் கெடா லிவிங் புத்தாவை நேரில் சந்தித்து, திபெத்திய மக்களின் சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான காரணத்திற்கு பங்களிக்குமாறு அவரை வலியுறுத்தினார். ஜு தே யால் ஈர்க்கப்பட்டு வழிநடத்தப்பட்ட லிவிங் புத்தா கெடா, செம்படைக்கு ஆதரவளிப்பதற்காக திபெத்திய துறவிகளையும், பொதுமக்களையும் ஒழுங்கமைத்து வழிநடத்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார். அவர்கள் தானியங்களையும் பொருட்களையும் வழங்கினார்கள். ஏராளமான காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
ஏப்ரல் 1936 இல், செம்படை நான்காவது முன்னணி இராணுவம், வடமேற்கு காங்கில் உள்ள தேகே தலைவரின் பிரதிநிதியான சியா கே தாவோ டெங்குடன் ஒரு ஆக்கிரமிப்பு அல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. “டெகே தலைவர்” (Dege Tusi) என்பது டெக் (德格) பகுதியின் உள்ளூர் பாரம்பரிய தலைவர் ஆவார். இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், காந்த்சி திபெத்திய தன்னாட்சி மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று பிரதேசமான டெக்கின் பரம்பரை ஆட்சியாளராவார். “திபெத்திய மக்களுக்குப் புத்துயிர் அளிப்பதும், சியாங் கை ஷெக் கவிழ்ப்பதும்” என்ற பொதுவான இலக்கில் இரு தரப்பினரும் உடன்பட்டனர். டெகே தலைவர் செம்படைக்காகத் தானியங்கள், கால்நடைகள் மற்றும் குதிரைகளைத் திரட்டி வழங்கினார். அதற்குப் பதிலாக செம்படை துப்பாக்கிகளையும் வெள்ளி டாலர்களையும் வழங்கியது.
மே 1936 இல், தெற்கு காங், பா’ஆன் கவுண்டியில் உள்ள ரென்போ லாமா மடாலயத்திடமிருந்து செம்படை இரண்டாம் இராணுவப் படைப்பிரிவு தடைகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டது. 1936 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஹே லோங் மற்றும் ரென் பிஷி தலைமையிலான செம்படையின் இரண்டாவது முன்னணி இராணுவம், சிச்சுவான் பகுதியில் உள்ள ரென்போ கோயிலை அடைந்தது. கோயில் லாமாக்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததால், இராணுவம் கோயிலைச் சுற்றி வளைத்தது. அப்போது, ரென்போ கோயிலின் ஒரு முக்கிய மற்றும் மதிப்புமிக்க லாமாவான லாபோவை செம்படை அணுகியது. ஹே லோங் மற்றும் ரென் பிஷி இருவரும் லாபோவை நேரடியாகச் சந்தித்து, செம்படையின் நோக்கங்களையும் மதச் சுதந்திரக் கொள்கைகளையும் விளக்கினர். ஹே மற்றும் ரென் ஆகியோரின் நேர்மையால் ஈர்க்கப்பட்ட லாபோ, ரென்போ கோயிலின் தலைமைத் துறவிக்கு திபெத்திய மொழியில் ஒரு கடிதம் எழுதி, அமைதியான பேச்சுவார்த்தைக்கு வழிகோலினார். இதன் விளைவாக, கோயில் செம்படைக்கு உணவு, கால்நடைகள் மற்றும் மருந்துகளை விற்கச் சம்மதித்தது, மேலும் செம்படை அவற்றிற்கு பணம் செலுத்தியது. லாபோ லாமா ஹே லோங்கிற்கு மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டு, கான்சி (Ganzi) வரை செம்படையுடன் பயணித்து உதவினார். இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஹே லோங் பிரிந்து செல்லும்போது லாபோவிற்கு ஒரு விலையுயர்ந்த தந்தக் குழாயைப் பரிசளித்தார். துரதிர்ஷ்டவசமாக, லாபோ லாமா திரும்பும் பயணத்தில் குவோமின்தாங் படைகளால் பேரில் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களுக்காக செம்படையால் நிறுவப்பட்ட இன தன்னாட்சி அரசுகள், இனத் தலைவர்கள், லாமாக்கள், இமாம்கள் உட்பட உயர் மட்டத்தைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்களைத் தங்கள் நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டன. பூயேய் தலைவர் லூ ருய்குவாங் மற்றும் கியாங் இனத் தலைவர் ஆன் டெங்பாங் போன்ற சிறுபான்மை இனத் தலைவர்களின் புரட்சியில் தீவிரப் பங்கேற்பு, இன மற்றும் மதக் குழுக்கள் தொடர்பான தனது ஐக்கிய முன்னணியின் இலக்குகளைச் சரிசெய்வதிலும், உயர் மட்டத்தினரைத் தன் பக்கம் வென்றெடுப்பதிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வெற்றி முதன்மை உதாரணமாகத் திகழ்கிறது.
இனக்கல்வி, இனக் கலாச்சார மரபுகள்,மொழிகளைப் பாதுகாத்தல்
நீண்ட அணிவகுப்பின்போது இனச் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற பொதுவான முடிவுகளில் இருந்து குறிப்பான நடவடிக்கைகளுக்காக வழிகாட்டுதலை உருவாக்கினார்கள். இனச் சிறுபான்மையினருக்கான பிரத்தியேகமான பள்ளிகளை நிறுவ வேண்டும். கட்டாய கல்வியை வழங்க வேண்டும். அந்தந்த இன மொழிகளிலும் அவர்களின் எழுத்து வடிவங்களிலும் கற்பித்தலை அடிப்படையாக கடைபிடிக்க வேண்டும். மடாலயங்களுடன் இணைக்கப்பட்டிருந்த பள்ளிகளை பிரிக்க வேண்டும். இனச் சிறுபான்மை மக்களுக்கான ராணுவ பயிற்சி மையங்கள் மற்றும் சிறப்பு பள்ளிகளை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செம்படையின் நீண்ட அணி வகுப்பின் போது இனச் சிறுபான்மை மக்களின் பழக்கவழக்கங்களை மதிப்பதும் பாதுகாப்பதும் அவசிய்ம் என்று வலியுறுத்திய போதிலும் வாழ்க்கைக்கு ஒத்துவராத தீய பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கும், சீர்திருத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்கள். மேலும் செம்படை தளபதிகளையும், அதன் வீரர்களையும் தாங்கள் செல்லக்கூடிய பகுதியில் உள்ள சிறுபான்மை இனத்தினரின் மொழிகளையும், எழுத்துக்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
மேற்கண்ட குறிப்பான முடிவுகளை அமுலாக்கம் செய்வதற்காக ஆய்வுகளை நடத்துவதற்கும், சிறுபான்மை இனப் பகுதிகளின் பழக்கவழக்கங்களை அறிந்து கொள்வதற்கும், பொருளாதார நிலைமைகளை புரிந்து கொள்வதற்கும், குழுக்களை அனுப்பி அவர்கள் மூலம் “நிலைமை அறிக்கைகள்” என்ற அறிக்கைகள் பெற்று குறிப்பான விஷயங்களை அணுகினார்கள். பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளுக்கும், எழுத்து முறைகளுக்கும், அவர்களின் பழக்கவழக்கங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் என்பதை செம்படை அமைப்பின் ஒழுங்குமுறை விதிகளில் சேர்க்கப்பட்டு கட்டாயம் கடைபிடிக்க வேண்டியதாயிற்று. செம்படையின் அனைத்து தளபதிகளும், வீரர்களும் இந்த விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முதலாவதாக, இனச் சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் விளம்பரப் பணிகளை மேற்கொள்ளும் போது சீன மொழியையும், எந்தப் பகுதியில் இருக்கிறோமோ அந்தப் பகுதியில் இனச் சிறுபான்மை மொழியையும் எழுத்து முறைகளையும் பயன்படுத்தி விளம்பரப் பணிகள் செய்யப்பட்டன.
இரண்டாவதாக செம்படையின் உதவியுடன் நிறுவப்பட்ட சோவியத் அரசுகளுக்கு (மக்கள் அரசுக்கு) உள்ளூர் மொழிகளில் பெயர் சூட்டப்பட்டது உதாரணமாக திபெத்திய மொழியில் கெலெடேஷா குடியரசு என்று பெயர் சூட்டப்பட்டது. ஹான் படைவீரர்களை திபெத்திய எழுத்து முறைகளை கற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காக செம்படையின் நான்காவது முன்னணிபடை பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இக்காலத்தில் சீன திபெத்திய சொற்களஞ்சியங்களை செம்படை தொகுத்தது. சிறுபான்மை மொழிகள் மீது மரியாதை செலுத்தக்கூடிய விஷயங்களை எளிதில் மக்கள் மனதில் பதியும் படியாக பாடல்களை செம்படையினர் உருவாக்கினார்கள்.
மூன்றாவதாக இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்த *தொங்சி* என்று அழைக்கக்கூடிய மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இன சிறுபான்மையினரிடையே மொழிபெயர்ப்பு திறமையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது குவோமிந்தாங்கின் பிற்போக்குத்தனமான ஆட்சி முறை எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறான மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடவடிக்கையாக இருந்தது. குவோமிந்தாங்கின் ஆட்சி இனச் சிறுபான்மையினர் தங்கள் சொந்த மொழிகளையும், எழுத்து முறைகளையும் பயன்படுத்துவதை தடை செய்திருந்தது. அவர்கள் பயன்படுத்திய எழுத்துக்களையும் மொழிகளையும் மிருகங்களின் மற்றும் பறவைகளின் கூக்குரல்கள் அல்லது காட்டுமிராண்டித்தனமான பேச்சுவழக்கு என்று குவோமிந்தாங்கின் ஆட்சியாளர்கள் இழிவு படுத்தினார்கள். இந்த சூழலில் செம்படையினர் இனச் சிறுபான்மை சமூகங்களின் மொழி, எழுத்து முறை, கல்வி வழங்குதல், ஆட்சி முறைகளுக்கு உள்ளூர் பெயர்களை சூட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிறுபான்மை மக்களை தங்கள் பக்கம் ஈர்த்தனர். இது போன்ற நடவடிக்கைகள் செம்படை புரட்சியின் போக்கை மாற்றுவதற்கு ஒரு நேர்மறையான பங்களிப்பை செய்து கொண்டிருந்தது.
அ.பாக்கியம்