Tamil Marx

இந்தியா கட்டுரைகள்

இந்தியாவைக் சூறையாடத் துடிக்கும் அம்பானி-மஸ்க் – சேது சிவன் 

இந்தியாவைக் சூறையாடத் துடிக்கும் அம்பானி-மஸ்க் – சேது சிவன் 
  • PublishedOctober 10, 2026

இந்தியாவின் பெரும் பணக்காரர்களால் ஸ்டார்லிங்க் சேவைகள் இந்தியாவிற்குள் நுழைய விடாமல் தடுக்கப்படுவதாகவும், தாங்களே சந்தையை ஏகபோகமாகக் கட்டுப்படுத்த அந்தப் பணக்காரர்கள் விரும்புவதாகவும் முகேஷ் அம்பானியை மறைமுகமாகக் குறிப்பிட்டு எலான் மஸ்க் அண்மையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த இந்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, “இந்தியாவில் ஏகபோகம் எதுவும் இல்லை” என மறுத்துள்ளார். இந்தியாவில் கார்ப்பரேட் ஏகபோகத்தை அரசு அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய் என்ற போதிலும், இந்தியா மீது பகிரங்கக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய எலான் மஸ்க்கை மயிலிறகால் வருடிக்கொடுக்கும் வகையில்தான் மோடி அரசின் அறிக்கை அமைந்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை மட்டுமன்றி, அவரது நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்கின் பெயரைக் கூடக் கண்டன அறிக்கையில் குறிப்பிடத் துணிவின்றி, மஸ்க்கின் பெயரே இலாமல் இந்திய அரசு தனது விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தச் சூழலில்தான், எலான் மஸ்க் தனது அடுத்த பதிவில், “அன்பிற்குரிய அம்பானி அவர்களே, நீங்கள்தான் இந்தியாவின் உண்மையான தலைவர் என்பதை உணராமல் இருந்ததற்கு எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்”* என்று நக்கலாக மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அரசுகளை ஆட்டிப்படைக்கும் பெருமுதலாளிகள்

எலான் மஸ்க் சுட்டிக்காட்டியிருப்பது கசப்பான உண்மைதான். இந்தியாவின் பிரதமராக மோடி இருந்தாலும், அரசின் அனைத்துத் திட்டங்களும் கொள்கைகளும் அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலைகளை வளர்த்துவிடும் வகையிலேயே அமைந்துள்ளன. குறிப்பாக, அவர்களுக்காகவே வேலை செய்யும் ஒரு முகவராகத்தான் மோடி செயல்பட்டு வருகிறார்.

‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் ஒரு காட்சியில், பிரதமர் அலுவலகத்தில் நின்று கொண்டு, “இந்தியாவுக்கு நான்தான் சி.இ.ஓ” என கதாநாயகன் பேசும் வசனம் வெறும் திரையரங்கக் கைதட்டலுக்கானது அல்ல; இன்றைய இந்தியாவின் யதார்த்த நிலைமை அதுதான். பெரும் பணக்காரர்கள்தான் இந்திய அரசின் கொள்கை முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதற்கு மஸ்க் வார்த்தைகளே சான்று. இந்தச் சூழலில்தான் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ மற்றும் முகேஷ் அம்பானியின் ‘ஜியோ’ இடையேயான அதிகார மோதல் தற்போது வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மஸ்க் ஒன்றும் யோக்கியன் அல்ல

முதலில், இந்தியாவில் ஏகபோகம் நிலவுகிறது; அதைத் தடுத்து சமமான போட்டிச் சூழலை உருவாக்க வேண்டும்” என்று பேசும் அளவுக்கு எலான் மஸ்க் ஒன்றும் யோக்கியமான மனிதர் அல்ல. அவர் தனது நிறுவனங்கள் மூலமாக உலகம் முழுவதையும் சுரண்டி வரும் நிதி மூலதன ஏகபோகத்தின் அடையாளம்.

உலக நாடுகளுக்கு மத்தியிலும், அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியச் சந்தை என்பது மாபெரும் லாபத்தை எடுக்க ஏதுவான இடம். எனவே, உள்ளூர் முதலாளிகளும் உலக முதலாளிகளும் நமது சந்தையைப் பயன்படுத்தி லாபத்தை அடைய துடிக்கிறார்கள். இந்த மோதல் இந்திய மக்களின் நலனுக்கானது அல்ல; மாறாக, இந்தியச் சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் இரு ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கப் போட்டியே ஆகும்.

மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவை, இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் நுழையத் தடை செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், அவரது உலகளாவிய நிறுவனத்தின் ஏகபோக வெறியையே வெளிப்படுத்துகிறது. இந்தியா போன்ற மாபெரும் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதன் மூலம், லாபத்தை ஈட்டவே அவர் விரும்புகிறாரே தவிர, தொலைதூரப் பின்தங்கிய பகுதிகளுக்கு இணையம் வழங்குவது அவரது நோக்கம் அல்ல.

தொழில்நுட்பம் பெயரில் ஆபத்தான ஆயுதம்

அதேபோல, மஸ்க்கின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் என்பது ஒரு ஆபத்தான அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு நாட்டின் அரசாங்கத்தையே கவிழ்க்க முடியும். மக்கள் போராட்டங்களின் போது அரசுகள் வழக்கமான இணைய சேவையை முடக்குவது போல, செயற்கைக்கோள் வழி இயங்கும் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை எளிதில் முடக்க முடியாது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடத்த வேண்டும் வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவாக மஸ்க் போராட்டத்தை தீவிரப்படுத்த இணையம் கொடுத்து உதவினார்.

ஸ்டார்லிங்க் போன்ற சொந்த செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை ஒவ்வொரு நாட்டு அரசும் சுயசார்புடன் உருவாக்கிக் கொள்வதுதான் அந்தந்த நாட்டின் இறையாண்மைக்கு நல்லது. சீனா, ரஷ்யா போன்ற அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை நேரடியாக எதிர்கொள்ளும் நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தைச் சொந்தமாக வைத்துள்ளன.

இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்கத் தேவையான தலைசிறந்த மனிதவளமும், பி.எஸ்.என்.எல் (BSNL), இஸ்ரோ (ISRO) போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், நிதி ஆதாரமும் உள்ளன. ஆனால், அவற்றை மேம்படுத்திப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, மக்கள் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, மீண்டும் முதலாளிகளின் காலில் விழும் அரசாகத்தான் மோடி அரசு இயங்குகிறது.

அம்பானியின் ஏகபோகமும் ஜியோவின் வளர்ச்சியும் 

மறுபுறம், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், தொடக்கத்தில் இலவசங்கள் மற்றும் குறைந்த கட்டணங்கள் மூலம் போட்டி நிறுவனங்களைச் சந்தையிலிருந்து வெளியேற்றி (Predatory Pricing), இந்தியத் தொலைத்தொடர்புச் சேவைகளில் ஒரு மாபெரும் ஏகபோகத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கு ஆட்சியிலிருக்கும் பாஜக அரசாங்கத்தின் ஆதரவும், கொள்கை முடிவுகளும் அவருக்குச் சாதகமாக மாற்றப்பட்டதும் அம்பானியின் பெருமளவிலான மூலதனக் குவிப்புக்கு உதவின.

சர்வதேச அளவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. உக்ரைன் போரின் போது போர்முனைத் தொடர்புகளைத் தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப மஸ்க் கட்டுப்படுத்தினார். மேலும், செயற்கைக்கோள் அலைக்கற்றையை (Satellite Spectrum) ஏலம் விடாமல், நிர்வாக ரீதியாக நேரடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஸ்டார்லிங்க் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தங்களது உலகளாவிய ஏகபோகப் பலத்தைப் பயன்படுத்தி இந்தியச் சந்தையை எளிதாகக் கைப்பற்றுவதற்கான ஒரு கார்ப்பரேட் உத்தியாகும். அதிகக் கட்டணம் கொண்ட ஸ்டார்லிங்க் சேவை, இந்தியாவின் எளிய மற்றும் ஏழை மக்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. சந்தையைக் கைப்பற்றி பெருமளவிலான லாபத்தை அமெரிக்காவிற்குச் சுருட்டிச் செல்வதே மஸ்க்கின் ஒரே இலக்கு.

‘டேட்டா’ எனும் புதிய எண்ணெய்

தொலைத்தொடர்புத் துறை சர்வதேச அளவில் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. மக்களின் தரவுகள் (Data) தான் இன்று முதலாளித்துவ உலகின் புதிய பண்டமாக உருவாகியுள்ளன.

“தரவுதான் புதிய எண்ணெய், அதை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியதில்லை” (“Data is the new oil and India does not need to import it”) என்று 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ மாநாட்டில் அம்பானி பேசியதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். டிரம்ப்பும் தரவுகளை எண்ணெய் என்று தான் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் நிலத்தடியில் மூலப்பொருளாகக் கிடைப்பது போல, நாம் செய்யும் ஒவ்வொரு ஆன்லைன் தேடல், பொருள் வாங்குவது, பயணங்கள், சமூக வலைத்தளப் பயன்பாடு என அனைத்தும் மூலத் தரவுகளாகச் சேகரிக்கப்படுகின்றன. கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பது போல, இந்தத் தரவுகளை ‘Data Analytics’ மற்றும் ‘Artificial Intelligence’ (AI) மூலம் பகுப்பாய்வு செய்து, வணிகத்திற்குத் தேவையான முடிவுகளை எடுத்து பெருநிறுவனங்கள் லாபம் கொழிக்கின்றனர்.

உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான், மெட்டா (ஃபேஸ்புக்) போன்ற பெருநிறுவனங்களின் வெற்றிக்கு அடிப்படை இந்தத் தரவுகள்தான். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தினசரி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் அழைப்பு விவரங்கள், இணையப் பயன்பாடு, இருப்பிடம் போன்ற பல்வேறு தரவுகளைப் பெறுகின்றன.

​2026 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் இணையப் பயனாளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 109 கோடியை தாண்டியுள்ளது. ​இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 74.7% பேர் தற்போது இணையத்தை தீவிரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.நம் நாட்டில் தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 6 மணிநேரம் 49 நிமிடங்கள் இணையத்தில் செலவிடுகிறார்கள். 2026 தரவுகளின்படி, ஒரு நபரின் சராசரி மாதாந்திர டேட்டா பயன்பாடு 25.51 GB ஆக உயர்ந்துள்ளது.

இதன் பின்னணியில்தான், இன்று அம்பானி இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாகத் தனது ‘ரிலையன்ஸ்’ சாம்ராஜ்யத்தை மாற்றியுள்ளார்; பாஜக அரசு அதற்கு முழுத் துணையாக நின்றுள்ளது. முகேஷ் அம்பானியின் நோக்கம் வெறும் மொபைல் சேவை வழங்குவது மட்டுமல்ல; JioPhone, JioMoney, JioTV, JioCinema, Reliance Retail, Network18 போன்ற அனைத்து சேவைகளின் வழியாக இந்தியர்களின் அன்றாட டிஜிட்டல் வாழ்வை முழுமையாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாகும்.

இறுதியாக, மஸ்க் – அம்பானிக்கு இடையேயான இந்தப் போட்டி இந்திய மக்களின் பணத்தையும், வரிப்பணத்தையும் யார் கொள்ளையடிப்பது என்பதை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. மக்கள் பயன்பாட்டைக் காட்டிலும், நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, உலகளாவிய மூலதனத்தை அதிகரிப்பதே இவர்களது முதன்மையான திட்டமாக இருக்கிறது.

 

-சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *