Tamil Marx

தமிழ் நாடு

பஞ்சமி நிலமும், அரசியல் விளையாட்டும்; தவெகவும், விசிகவும்-குத்தூசி

பஞ்சமி நிலமும், அரசியல் விளையாட்டும்; தவெகவும், விசிகவும்-குத்தூசி
  • PublishedOctober 9, 2026

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) MLA கே. மாரிமுத்து எழுப்பிய கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாட்டில் பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்கத் தமிழக அரசு விரைவில் ஒரு சிறப்பு ஆணையத்தை அமைக்கும் எனச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதில் பிரச்சனை என்ன என்றால் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) MLA மாரிமுத்து வைத்த கோரிக்கை என்பது “வாரியம்” அமைக்க வேண்டும் என்பதாகும், ஆனால் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு கூறியது “ஆணையம்” அமைக்கப்படும் என்பது. இங்கு தான் மிகப் பெரிய பிரச்சனையே இருக்கிறது, அது என்ன என்பதைப் புரிந்து கொள்ளுவதற்கு முன்னர், பஞ்சமி நிலங்கள் பற்றிய ஒரு சுருக்கமான வரலாற்றைப் பார்த்து விடுவோம்.

பஞ்சமி நிலம் வரலாறு

பஞ்சமி நிலம் என்பது “வரலாற்றில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் நில உரிமையை உறுதி செய்வதற்காக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிலங்களைக் குறிக்கும்”. இந்நிலங்கள், உரிய பயனாளிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், அவற்றை பிறருக்கு மாற்றுவதில் கட்டுப்பாடுகள் இருப்பதும் அதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான நிலச் சட்டத்தை நிறுவி, அரசாணை எண் 1010/10-A (வருவாயை-ப் பிறப்பித்தது). இந்தச் சட்டத்தின் கீழ்,  தலித் (பஞ்சமா) குடும்பங்களைச் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்துவதற்காக, 1892 மற்றும் 1934க்கு இடையில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் படிப்படியாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது .

மாவட்டம் ரீதியாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவு (ஏக்கரில்)

▪️ வடாற்காடு – 56,560

▪️தென்னாற்காடு – 22,968

▪️செங்கல்பட்டு – 5,683

▪️கோயம்புத்தூர் – 9, 003

▪️மதுரை – 6,748

▪️நீலகிரி- 27

▪️இராமநாதபுரம் – 5,703

▪️சேலம் – 9,456

▪️தஞ்சாவூர் – 980

▪️திருநெல்வேலி – 4,386

▪️திருச்சிராப்பள்ளி – 6,782.

ஆதாரம்: அரசாணை எண் 3218-இல். 21.12.1931.பொதுப்பணி மற்றும் தொழிலாளர் துறை. இப்படி வழங்கப்பட்ட நிலங்களே பஞ்சமி நிலங்கள் என அறியப்பட்டன.

அவற்றில் தலித் மக்களை விவசாயம் செய்யவிடாமல் மிராசுதாரர்களும், சாதியவாதிகளும், அரசியல்வாதிகளும்  பல்வேறு வழிகளில் இடையூறு செய்தனர். அப்படி தடுக்கப்பட்டதால் விவசாயம் செய்யமுடியாமல் கிடந்த நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிறரால் அபகரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் கொடுக்க பட்டது, சுதந்திரத்துக்கு பிறகு பஞ்சமி நிலங்கள் தலித்களிடம் இருந்து சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டது. அதை மீட்க சட்டப் போராட்டங்களும், களப் போராடங்களும் நடந்த வண்ணமே இருந்தது/இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் கரகத்தஹல்லி கிராமத்தில் இருந்த 3.39 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்த கே. பழனியப்பன் என்பவர் ஆக்கிரமித்துக்கொண்டான். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அவரிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க தருமபுரி கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பிறர் கைப்பற்ற உரிமையில்லை என உறுதியாகத் தெரிவித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் ஆணை ஒன்றை அனுப்பியது. (அரசாணை எண் ஜி-1/4868/90 நாள் 15.7.1991) அந்தந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க அதில் அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் 85,744.01 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் கண்டறியப்பட்டன. அதில் 10,922.54 ஏக்கர் நிலம் பிறரது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என அரசு தெரிவித்தது. ஆனால் தொடர்ந்து சரியான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. அதன் பிறகு தான் பஞ்சமி நிலம் மீட்க போராட்டங்கள் வேகம் எடுக்கத் தொடங்கின.பஞ்சமி நில மீட்புப் போராளிகள் ஜான் தாமஸ், ஏழுமலை இருவரும் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டார்கள். செங்கல்பட்டு மாவட்டம் காரணை என்னும் கிராமத்தில் சுமார் 633 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆதிக்க சாதி ஆட்கள் கையில் இருந்தது. அதில் 4.5 ஏக்கர் நிலம் கைப்பற்றபட்டு உழுது அந்த மக்கள் தங்கள் உரிமையை நிலை நாட்டினர். இதை பொறுத்து கொள்ள முடியாத ஆதிக்க சாதி வெறியர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறை,ஆளும் அதிமுக அரசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும் அவர்களால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையையும் அகற்றினர், போராடிய மக்களும் கைது செய்தனர்.

இதற்கு நியாயம் கேட்டு அக்டோபர் 10 ஆம் தேதி செங்கல்பட்டு துணை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரம் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரண்டு பஞ்சமி நில மீட்புப் போராளிகள் கொல்லப்பட்டனர். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதிமுக, திமுக செய்த கண் துடைப்பு வேலைகள்

எஸ்.டி. சோமசுந்தரம் குழு (S.D. Somasundaram Committee) அதிமுக அரசால் அமைக்கப்பட்டது, அந்த குழு பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆதிக்க சாதி கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கண்டறிந்தது. நிபந்தனைகள் மீறி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசினார். அதன் பிறகு ஆட்சிகள் மாறியதால் அந்த விஷயம் கிடப்பில் போடப்பட்டது. அதே போல 2011 திமுக ஆட்சி முடியும் தருவாயில் ஓய்வு பெற்ற “நீதிபதி மருதமுத்து” தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது, ஆட்சி மாறியது மீண்டும் கிடப்பில் போடப்பட்டது. இதற்கு இடையில் பஞ்சமி நில போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் பல இடத்தில் தங்கள் போராட்டங்களால் பல நூறு ஏக்கர் நிலங்களை மீட்டு அவற்றை உரிய மக்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

பஞ்சமி நிலம் குறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புகள் 

நீதிபதி கே.சந்துருவின் தீர்ப்பு:

(VGP Prem Nagar Minvariya Kudiyirupor Sangam Vs The State Of Tamil Nadu, Dt  07.11.2008, High Court of Madras)  ”தலித் மக்களுக்கு அரசாங்கத்தால் ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை அதன் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. ஆனால் அதன்பிறகு அதை விற்பதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், உரிய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தடை ஆணை பெற்ற பிறகே அந்த நிலம் வாங்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டு மனைகளாக பிரித்து விற்கப்பட்டிருக்கிறது’ எனவும் வாதிடப்பட்டது.

ரெவென்யூ போர்டின் நிலை ஆணை 15-ஐயும், 1941 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையையும் (G.O.Ms.2217, Rev. d.1.10.41)  விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். 10 ஆண்டுகளுக்குள் விற்கக்கூடாது, அதன்பிறகு தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டும்தான் விற்கவேண்டும். அப்படி வேறு எவரேனும் அதை வாங்கியிருந்தால் எந்தவித இழப்பீடும் தராமல் அந்த நிலத்தை அவரிடமிருந்து அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம்’ என்பதே பஞ்சமி நிலங்களுக்கான நிபந்தனை என விரிவாக விளக்கமளித்தார் நீதிபதி கே. சந்துரு. இந்த வழக்கை மேற்கோள் காட்டி நீதிபதி பிரபா ஶ்ரீ தேவனின் தீர்ப்பும், நீதிபதி ஹரி பரந்தாமன் தீர்ப்பும் மற்ற வழக்குகளில் இருந்தது.

2026-இல் தவெக – விசிக செய்யும் அரசியல்

பஞ்சமி நிலத்தை தலித் அல்லாத எவர் வாங்கினாலும் செல்லாது என “2008, 2010 மற்றும் 2012” ஆகிய மூன்று ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து மீட்பது தொடர்பாகத் தமிழக அரசு 1991 ஆம் ஆண்டே தெளிவாக  அரசாணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது. எனவே பஞ்சமி நிலங்களை மீட்பதற்குத் தனியே ஒரு அரசாணையோ, நீதிமன்றத் தீர்ப்போ இனி தேவையில்லை. அரசாங்கத்துக்கு தேவைப்படுவதெல்லாம் அரசியல் உறுதி மட்டும்தான்.

ஆனால் புதிதாக வந்திருக்கும் தவெக அரசாங்கமும் பழைய திராவிட கட்சிகளைப் போலவே ஆணையம் அமைக்கப்படும் என்று ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த அமைச்சரை வைத்தே சொல்லியிருக்கிறது. “ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்திற்கு” போடப்பட்ட KN பாஷா ஆணையம் எவ்வளவு நாள் தள்ளி போகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதே வேலையைத் தான் சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசும் செய்கிறார் என்பது பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் ஒரு பின்னடைவே ஆகும்.

அரசாங்கத்திற்கு தேவை அரசியல் உறுதி மட்டுமே

பஞ்சமி நிலப் பாதுகாப்பு இயக்கம் இது வரை 72142 ஏக்கர் பஞ்சமி நிலங்களை கண்டறிந்து உள்ளது, “மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி” (CPIM) மற்றும் “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி” (TNUEF) பல ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டுத் தந்திருக்கிறது. திருவண்ணாமலை அருங்குனத்தில் பஞ்சமி நிலத்தை மீட்டு உழுது பட்டியலின பயனாளியிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. உத்திரமேரூர் அருகே 38 ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்பு என இது போன்ற தமிழகம் எங்கும் இன்றும் தொடர்ந்து போராடங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.

ஒரு அரசு செய்ய வேண்டிய இந்தப் பணிகளை அரசு சாராத இயக்கங்கள் செய்யும் போது, எந்தவொரு அரசும் இதை எளிதாகவே செய்ய முடியும். அதற்கு அந்த அரசுக்குத் தேவை “கொள்கை உறுதி” மட்டுமே, அது இந்த தவெக அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்லும்.

 

எழுதியது : குத்தூசி

Books referred:

பஞ்சமி நிலம் (மாற்கு அய்யா)

பஞ்சமி நிலம் வரலாறு ( VCK ரவிக்குமார் MP)

விகடன் Source Articles.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *